23.10.24

Astrology - ஆனாலும் வரும்!

Astrology -  ஆனாலும் வரும்!

”செந்தமிழ் தேன் மொழியாள்  
நிலாவெனச் சிரிக்கும் மலர்க் கொடியாள்”

என்று பிரபலமான பாடல் ஒன்றின் பல்லவியில் எழுதிய கவியரசர், அதே பாடலின் சரணத்தில் இப்படி எழுதியிருப்பார்:

கண்களில் நீலம் விளைத்தவளோ
அதைக் கடலினில் கொண்டு கரைத்தவளோ
பெண்ணுக்குப் பெண்ணே பேராசை கொள்ளும்
பேரழகெல்லாம் படைத்தவளோ!

என்னவொரு வர்ணனை பாருங்கள்.

அதே வர்ணனை ஜோதிடம் தெரிந்தவர்களுக்கும் பொருந்தும். நன்கு ஜோதிடம் தெரிந்தவர்களைப் பலரும் விரும்புவார்கள். ஜோதிடத்தின் கவர்ச்சி அது!

உங்களுக்கு ஜோதிடம் தெரியும் என்றால், நண்பர்களும், உறவினர்களும், மற்றவர்களும் உங்களை விடமாட்டார்கள். மொய்த்து விடுவார்கள். பிய்த்து விடுவார்கள்.

அந்தக் காலத்தில் ஜோதிடம் என்பது குடும்பத் தொழிலாக இருந்தது. இப்போது அப்படியில்லை. பழைய புராதண நூல்கள், ஏடுகள் எல்லாம் வடமொழியில் இருந்து மொழிபெயர்க்கப்பெற்று நூல்களாக வந்துவிட்டன. ஆர்வம் உள்ளவர்கள் யார் வேண்டுமென்றாலும் கற்றுக் கொள்ளலாம்.

கற்றுக்கொள்வது முக்கியமில்லை. கற்றுக் கொண்டதை மனதில் தக்க வைப்பதுதான் முக்கியம். முயன்றால் அதுவும் சாத்தியமே! திரும்பத் திரும்பப் படித்தால் மனதில் தங்காதா என்ன?

தொழிலாகச் செய்யாவிட்டாலும், இன்று பலருக்கும் ஜோதிடம் தெரியும். பொழுதுபோக்காக அதைச் செய்பவர்கள் பலர் இருக்கிறார்கள்.

சரி, ஜோதிடம் யாருக்கு சுலபமாக வரும்? அல்லது சுலபமாக மனதில் குடிகொள்ளும்? அதற்கான கிரக அமைப்பு என்ன?

அதை இன்று பார்ப்போம்!
---------------------------------------------------------------
1. குரு 5ஆம் வீடு அல்லது 9ஆம் வீட்டில் இருப்பதோடு, அவைகளில் ஒன்று அவருடைய சொந்த வீடாக இருக்கும் நிலைமை.
2. 5ஆம் வீட்டு அதிபதி அல்லது 9ஆம் வீட்டு அதிபதி என்னும் நிலையில், குரு பகவான் லக்கினத்தில் அமர்ந்திருக்கும் நிலைமை.
3. 5ஆம் வீடு அதன் அதிபதியின் பார்வையில் இருக்கும் நிலைமை.
4. 5ஆம் வீடு குருவின் நேர் பார்வையில் இருக்கும் நிலைமை.
5. 5ஆம் வீடு ஒரு உச்ச கிரகத்தின் பார்வையில் இருக்கும் நிலைமை.
6. 5ஆம் வீட்டிலிருந்து, அதன் பன்னிரெண்டாம் வீட்டில் சனி இருக்கும் நிலைமை.
7. ராகு அல்லது கேது கோணங்களில் அமர்ந்திருப்பதோடு, குருவின் பார்வையைப் பெற்றிருக்கும் நிலைமை

இந்த அமைப்புக்களில் ஒன்று இருப்பவர்களுக்கு ஜோதிடம் கைகொடுக்கும்.
குரு நுண்ணறிவிற்கு (keen intelligence) அதிபதி. 5ஆம் வீடு நுண்ணறிவிற்கான வீடு. அதை மனதில் வையுங்கள்!
அதே போல புத்திநாதன் புதனுக்கும் ஜோதிடத்தில் முக்கிய பங்கு உண்டு. அதை இன்னொரு நாளில் பார்ப்போம்!

அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com