31.8.24

Astrology: ரகளையான ராகு மகா திசை


Astrology:  ரகளையான ராகு மகா திசை!

ரகளை என்றால் தகராறு, கலாட்டா என்று பொருள்படும். ஆகவே தகராறான ராகு திசை என்று நீங்கள் வைத்துக்கொள்ளலாம். நீங்கள் நீண்ட பயணம் செல்லும்போது பயணிக்கும் வாகனம் வழியில் தகராறு செய்தால் பயணம் எப்படி இருக்கும்? நினைத்துப்பாருங்கள்!

சென்ற  பதிவில்  கேது மகா திசையைப் பற்றிப் பார்த்தோம்

ஜாதகத்தின் பலன்களை சம்பந்தப்பட்ட கிரகங்களின் காலத்தில்தான் பெறமுடியும். திருமணம் என்றாலும் சரி மரணம் என்றாலும் சரி சம்பந்தப்பட்ட கிரகங்களின் காலங்களில்தான் நடக்கும்.

மகாதிசைகளும் (Major Dasas) அதன் புத்திகளும் (sub Periods) ஒரு ஒழுங்கு முறையில் வந்து போகும். ஆகவே அவை வரும்வரை பொறுத்திருக்க வேண்டியதுதான். நம் அவசரத்திற்கெல்லாம் ஒன்றும் ஆகாது.

இன்று ராகு மகா திசையைப் பற்றிப் பார்ப்போம்!

புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு ராகு மகாதிசை அநேகமாக வராது. சுமார் 100 ஆண்டுகாலம் வாழ்ந்தால் வரலாம். அதுபோல வேறு சில நட்சத்திரக்காரர்களுக்கும் வராது.

அவர்கள் காலரைத் தூக்கிவிட்டுக்கொண்டு, ஆகா நான் தப்பித்துவிட்டேன் என்று மகிழ முடியாது. ஒவ்வொரு மகாதிசையிலும் ராகு புத்தி வரும் அல்லவா? அவற்றை எல்லாம் கூட்டிப் பாருங்கள். மொத்தம் 6480 நாட்கள் (18 ஆண்டுகள்) வரும். அப்போது ராகு திசை தன்னுடைய வேலையைக் காட்டும். கணக்கு சரியாக இருக்கும்.

சரி ராகு திசையிலும் எல்லா ஆண்டுகளுமே மோசமாக இருக்குமா என்றால், அதில் வரும் குரு புத்தி,  புதன் புத்தி, சுக்கிர புத்தி (மொத்தம் 8 ஆண்டுகள்) ஆகியவைகள் நன்றாக இருக்கும். எப்போது நன்றாக இருக்கும்? அந்த 3 கிரகங்களும் ஜாதகத்தில் கேந்திர, அல்லது திரிகோண அதிபர்களாக இருந்து நல்ல இடத்தில் இருந்தால் வரும். அதை விட்டு அவர்கள் 6, 8 12ஆம் இடங்களில் இருந்தால் வராது ஊற்றிக் கொண்டு விடும்!

உதாரணத்திற்கு ராகு மகாதிசையின் துவக்க புத்தியான அதன் சுய புத்திக்கு உரிய பலனை ஒரு பாடல் மூலம் விளக்கியுள்ளேன்

காணவே ராகுதிசை வருஷம்பதினெட்டு
    கனதையுள்ள ராகுவினில் ராகுபுத்தி
தோணவே மாதமது முப்பத்திரெண்டு
    துகையான நாளதுவும் பனிரெண்டாகும்
யேனவே சத்துருவால் நிபந்தனையோடும்
    யெண்ணமுள்ள மனைவியரும் யிருந்தவிடம்பாழாம்
போனவே பழம்பொருளும் சேதமாகும்
    பெலமான நோயதுவும் கூடிக்கொல்லும்

கொல்லும் என்றால் பயப்படவேண்டாம். உங்களைத் துன்பப் படுத்துபவரைப் பற்றிக் குறிப்பிடும்போது, சாகடிக்கிறான்டா’ என்று சொல்வீர்கள் இல்லையா? அது போன்ற செயல்தான் இதுவும்!

தெய்வ வழிபாடு செய்ய வேண்டும். தாக்குப் பிடிக்கும் சக்தி கிடைக்கும்.

நன்மைகளும் தீமைகளும் கலந்ததுதான் மகாதிசைகள். அதை மனதில் வையுங்கள்!

அன்புடன்,
வாத்தியார்


வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com