17.2.23

Astrology எட்டேகால் லட்சணமும் எமன் ஏறும் வாகனமும்!


Astrology எட்டேகால் லட்சணமும் எமன் ஏறும் வாகனமும்!

ஒவ்வொன்றாக வருவோம். முதலில் எட்டேகால் லட்சணத்தை எடுத்துக்கொள்வோம். எட்டேகால் லட்சணம் என்றால் என்னவென்று தெரியுமா? 

தமிழின் எண் வடிவத்தைக் கீழே கொடுத்துள்ளேன். தமிழில்  ‘அ’ என்று எண்ணால் குறிபிட்டால் எட்டு என்று பொருள். ‘வ’ என்ற எழுத்திற்கு கால் (1/4) என்று பொருள் எட்டேகால் என்பதை ‘அவ’ என்று குறிப்பிடுவார்கள். எட்டேகால் லட்சணம் என்றால் அவலட்சணம் என்று பொருள்படும்

ஒரு பையனோ அல்லது பெண்ணோ அழகில்லாமல் இருந்தால், அவலட்சணமாக இருக்கிறான் அல்லது இருக்கிறாள் என்று சொல்லாமல் எட்டேகால் லட்சணம் என்பார்கள்.
எங்கள் பகுதியில் (காரைக்குடியில்) சற்றுக் கெள்ரவமாகச் சொல்வார்கள். உள்ளதுபோல இருக்கிறான் அல்லது இருக்கிறாள் என்று சொல்வார்கள். நாம அதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

எமன் ஏறும் வாகனம் என்பது எருமை மாட்டைக் குறிக்கும். படு சுட்டியாக இருக்கும் பையனைக் கிராமப் புறங்களில் ‘எமப் பயலாக’ இருக்கிறான் என்பார்கள். எமன் கொண்டு போவதைப் போல அசந்தால் பையனும் கொண்டு போய்விடுவான் என்று பொருள். சற்று மந்தமாக இருக்கும் பையனை எமன் ஏறும் வாகனம்போல பையன் இருக்கிறான் என்பார்கள்.

வாரியார் சுவாமிகள் சொல்வார்கள்  “இன்று எல்லோரும் எருமைப் பாலத்தான் குடிக்கிறார்கள். அதனால் தெருவில் பொறுப்பில்லாமல் எருமைகள் போலதான் நடந்து போகிறார்கள். வாகனங்களுக்கு வழி விட்டு ஒதுங்குவதில்லை”

மாடுகளிலும் பலவகை உள்ளன. உழுகின்ற மாடு, வண்டி மாடு. கோயில் மாடு என்று அவற்றையும் வகைப்படுத்தலாம். அவற்றைப் பற்றி சுவாரசியமாக எழுதலாம். அதைப் பின் ஒரு நாளில் எழுதுகிறேன். இப்போது பாடத்தைப் பார்ப்போம்

சனீஷ்வரன் சில வீடுகளில் இருக்கும்போது அழகான தோற்றத்துடன் இருப்பார். உதாரணம் துலாம் வீடு. அது அவருக்கு உச்ச வீடு. அங்கே இருக்கும்போது ஃபுல் மேக்கப்புடனும், பட்டு வேஷ்டி சட்டையுடனும், கையில் ஆறு பவுன் தங்க பிரேஸ்லெட்டுடனும், கழுத்தில் தங்கச் சங்கிலியுடனும் அழகாகக் காட்சியளிப்பார். மேஷத்தில் இருக்கும்போது சுய ரூபத்துடன் இருப்பார். எண்ணெய் தேய்த்துக் குளித்துவிட்டு வரும் பெண்ணைப்போல சுயரூபத்துடன் இருப்பார். அது அவருக்கு நீச வீடு.

அவர் அவலட்சணமாகக் காட்சியளிக்கும் வீடு ஒன்றும் உள்ளது. அது என்ன வீடூ?

எட்டாம் வீடு அது!

அதுதான் ஜாதகத்தில் உள்ள எட்டாம் வீடு

எட்டாம் வீட்டிற்கும் சனிக்கும் உள்ள உறவைப் பற்றி 4 பக்கங்களுக்கு விவரமாக எழுதலாம். எழுதியிருக்கிறேன், மேல்நிலைப் பாட வகுப்பில் (classroom2013) நேற்றுதைப் பதிவிட்டுள்ளேன். அதை இங்கே கொடுத்தால், பதிவிட்ட ஒரு மணி நேரத்திற்குள்ளாக, அதாவது துவைத்த ஈரம் காயுமுன்பாகவே அதைச் சுருட்டி எடுத்துக்கொண்டு ஓடிவிடுவார்கள். இணையத்தில் அத்தனை நல்லவர்கள் திரிகிறார்கள். ஆகவே இங்கே காயப் போடவில்லை. மேல் நிலைப் பாடங்கள் அடுத்த ஆண்டு புத்தகமாக வரும் அப்போது அனைவரும் படிக்கலாம்.

உங்களுடைய மேன்மையான தகவலுக்காக அதில் உள்ள சில விதிகளை (Rules) மட்டும் சுருக்கிக் கொடுத்துள்ளேன்!
---------------------------------------------------------------------------------------------------
எட்டில் சனி அமர்ந்து, தன்னுடைய மூன்றாம் பார்வையாக பத்தாம் வீட்டைப் பார்ப்பது நல்ல அமைப்பல்ல! அப்படி அமையப் பெற்ற ஜாதகன் பலவிதமான சோதனை களையும், தடைகளையும் தன்னுடைய வேலையில் அல்லது தொழிலில் சந்திக்க நேரிடும்.

அத்துடன் வேலை ஸ்திரமில்லாமல் இருக்கும். ஸ்திரமில்லாமல் என்றால் என்னவென்று தெரியுமா? Instability என்று பொருள்.

எந்தத் துறையென்றாலும், ஜாதகனுக்கு அது பிடித்தமில்லாமல் போகும். கவலை அளிப்பதாக இருக்கும்.

எத்தனை திறமை இருந்தாலும், எத்தனை திறமையை வேலையில் காட்டினாலும், அந்த வேலையில் கிடைக்கும் சொற்ப வருமானத்தை வைத்து, அதன் மேல் வெறுப்பும் கூடவே இருக்கும். வேலைக்குத் தகுந்த ஊதியம் இல்லாவிட்டால், எப்படிப் பிடிப்பு வரும்? வெறுப்புத்தானே வரும்!

பத்தாம் வீட்டில் அதிகமான பரல்கள் இருந்தாலும், அல்லது பத்தாம் வீட்டுக்காரனின் பார்வையிலும் அந்த வீடு இருந்தாலும், அல்லது சுபக்கிரகங்களின் பார்வையில் அந்த வீடு இருந்தாலும், மேற்சொன்ன பலன்கள் இல்லாமல் நல்ல பலன்கள் நடைபெறும். அதையும் மனதில் கொள்க!


அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++


வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com