30.8.22

lesson No.33 Lesson on 10th House


✴️✴️✴️✴️✴️
Star Lessons
Lesson number  33
New Lessons
பாடம். எண் 33

இன்று பத்தாம் வீட்டைப் பற்றிய பாடம்

பத்தாம் வீடு!

ஜோதிடத்தின் முக்கியமான பகுதி இதுதான். அதுபோல கடினமான பகுதியும் இதுதான்.

பத்தாம் வீடு, ஒருவரின் ஜாதகத்தில், ஜாதகர் தன் வாழ்க்கையில் செய்ய இருக்கும் தொழிலை அல்லது வேலையைக் குறிப்பிடுவதாகும். 

பார்வைகளை, அந்த இடத்தில் வந்தமரும் கிரகங்களை, அதிபருடன் சேர்கின்ற அல்லது கூட்டணி போடுகின்ற கிரகங்களை, அதேபோல கர்மகாரன் சனீஷ்வரனின் நிலைமை ஆகியவற்றைப் பொறுமையாக அலசுவதன் மூலம் ஒருவரின் ஜீவனத்திற்கான வழியை அறியலாம். இதில் அஷ்டகவர்க்கம் பெரும் உதவியாக இருக்கும்.

முதலில் ஒருவனுக்கு வேலை உண்டா இல்லையா அல்லது தொழில் செய்வானா என்று பார்ப்பதற்கும், அல்லது தொழில் ஸ்தானம் முழுமையாகக் கெட்டிருந்தால் வேலை வெட்டிக்குப் போகாமல் ஊரைச் சுறிவிட்டு வந்து வீட்டில் நன்றாகச் சாப்பிட்டுவிட்டு உறங்கும் சுகவாசியாக இருப்பானா என்று பார்ப்பதற்கு இந்த வீடு உதவி செய்யும். உத்தியோகத்தில் அல்லது வேலையில் எந்த அளவிற்கு ஒருவன் உயர்வான் என்று பார்ப்பதற்கும், எந்த வயதில் உயர்வான் என்று பார்ப்பதற்கும் இது உதவும். எந்த தசா புத்தி காலத்தில் மேன்மை அடைவான் அல்லது கீழே விழுவான் என்று பார்ப்பதற்கும் உதவும்.

இந்த ஜோதிடக் கலையை நிர்மானித்த முனிவர்கள் வாழ்ந்த காலத்தில் இருந்த வேலை வாய்ப்புக்களும், தொழில்களும் மிகச் சிலவே. பின்னாட்களில் வந்த ஜோதிட மேதைகள் தங்கள் அனுபவத்தால் எழுதி வைத்து விட்டுப்போன ஏராளமான f குறிப்புக்களும் உள்ளன. அவை அனைத்தையும் ஒருவன் கற்றுத் தேர்ந்திருந்தாலும், இன்றைய காலகட்டத்தில் உள்ள வேலை வாய்ப்புக்களை வைத்து ஒரு குறிப்பிட்ட வேலையை, ஜாதகனுக்காகச் சொல்வது இயலாது.

ரயில்வேயில் வேலை கிடைக்கும் என்று ஒருவனுக்கு எப்படிச் சொல்ல முடியும்? அல்லது நீ கனரக வாகனம் ஓட்டும் வேலைக்குச் செல்வாய் என்று எப்படிச் சொல்ல முடியும்? அரசு வேலை என்று சொல்லலாம். அவ்வளவுதான் அரசுத்துறையில், ஆயிரம் வேலைகள் உள்ளன!. 

உடல் உழைப்பு வேலை என்று சொல்லலாம். உடல் உழைப்பிலும் ஆயிரக்கணக்கான வேலைகள் உள்ளன.

நீ வியாபாரம் செய்து பொருள் ஈட்டுவாய் என்று சொல்லலாம். எந்த வியாபாரம் என்று எப்படிச் சொல்ல முடியும்?

மருத்துவத் துறையில் வெற்றி பெறுவாய் என்று சொல்லாம். மருத்துவத் துறையில்தான் எத்தனை பிரிவுகள் உள்ளன? டாக்டரும் மருத்துவத் துறைதான், மருந்து உற்பத்தி செய்பவரும் மருத்துவத் துறைதான், மருத்துவமனை வைத்திருப்பவரும், மருந்துக் கம்பெனி விற்பனைப் பிரநிதியும் மருத்துவத் துறைதான்.

கலைத்துறையில் எத்தனை பிரிவுகள் உள்ளன? சுக்கிரனும் ராகுவும், அல்லது சுக்கிரனும், புதனும் அல்லது ராகுவும், புதனும் எந்த ஜோடி சம்பந்தப்பாட்டாலும் கலைத் துறையில் சிறப்படைய முடியும். ஆனால் கதை வசனம், இயக்கம், இசை, நடிப்பு என்று அதில் எத்தனையோ பிரிவுகள் இருக்கின்றன இல்லையா?

ஆகவே உயர்வைச் சொல்ல முடியுமே தவிர உயர்வு அடையும் காலத்தைச் சொல்ல முடியுமே தவிர, வேலையை மிகத்துல்லியமாகக் குறிப்பிட முடியாது. அதை நினைவில் வையுங்கள்.

இதன் தொடர்ச்சி நாளை வெளிவரும்
பொருத்திருங்கள்

அன்புடன் 
வாத்தியார்
--------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com