20.5.22

விமர்சனம் என்றால் சுப்புடு தான்!



விமர்சனம் என்றால் சுப்புடு தான்!

நண்பர் அன்பு பதிவிட்டதை இங்கு பகிர்கிறேன் 👇🏻👇🏻

*சுப்புடு  The Terror*

பர்மாவிலுருந்து அகதியாக கால்நடையாக இந்தியா வந்தவர் மத்திய அரசின் எழுத்தராக பணி புரிந்து ஓய்வு பெற்றவர். டெல்லியில் தட்சின பாரத் சபா என்று ஒன்றில் தீவிரமாக ஈடுபட்டவர். அதன் மூலமாக சங்கீத கச்சேரிகளுக்குச் சென்று சங்கீத விமர்சனங்கள் செய்ய ஆரம்பித்து அதில் தன் முத்திரையைப் பதித்த இவர் முறையாக சங்கீதம் பயின்றவர் இல்லை என்பது ஆச்சரியமான விஷயம்.

“ சுற்றளவைச் சற்று குறைத்தால் உலகைச் சுற்றலாம்” என்று ஶ்ரீ வித்யாவின் நடனத்தை விமர்சித்து எம்.எல்.வி யின் கோபத்துக்கு ஆளானார்.  என் நாட்டியத்தை விமர்சிக்காமல் என் இடுப்பை விமர்சிப்பதா என்று ஶ்ரீ வித்யா கோபப்பட்ட பொழுது 
“ நீ பாடினால் நான் ஏன் இடுப்பை விமர்சிக்கப் போகின்றேன். ? ஆடினால் இடுப்பை பற்றிபேசவேண்டியதாகிவிடுகின்றது என்றவர் சுப்புடு.
இன்னொரு பிரபல பாடகர் ( செம்மங்குடி ) பற்றி இவர் சொன்னது “ காதிலும் கம்மல் . குரலிலும் கம்மல்.” ஒரு திரைப்படப் பாடலை விமர்சிக்கும் பொழுது “கேதாரம் சேதாரமாகி விட்டது”

ஒரு சீசன் முழுவதும் சோபிக்காத ஒரு வித்வானுக்கு better luck next time “ என்று ஒரே வரியில் விமர்சித்தவர்.

Dogs and Subbudu are not allowed என்று போர்ட் எழுதிய சபாக்களும் உண்டு.

வீணை பாலச்சந்தருக்கும் இவருக்கும் ஏழாம் பொருத்தம். வாய்ப்பு கிடைத்தால் என்னைக் கொலை செய்ய கூட முயற்சிப்பார் “ என சுப்புடு அவரை விமர்சிப்பார்.  
வார்த்தை ஜாலத்தில் படுசுட்டி சுப்புடு. ஒரு சமயம் செம்மங்குடி சீனிவாச ஐயர் "சுப்புடு என்னைத் தாக்குவது பற்றி எனக்குச் சந்தோஷம். அவர் தாக்கும்போதெல்லாம் எனக்கு நிறையக் கச்சேரி வாய்ப்புக்கள் வருகின்றன" என்று கிண்டலாகச் சொன்னார். அடுத்து மேடையேறிய சுப்புடு, "செம்மங்குடிதான் எவ்வளவு அழகாகப் பேசுகிறார்! அவர் தொடர்ந்து மேடைகளில் பேசலாமே? ஏன் பாடுகிறார்?" என்று சீண்டினார். “ அவர் தன்னைமறந்து பாடுவதில் எனக்கு ஆட்சேபனை இல்லை . ஆனால்  ராகத்தை மறப்பதுதான் சங்கடம் “ - இதுவும் அவரைப்பற்றிய விமர்சனம்தான்.
சுதா ரகுநாதன், பாம்பே ஜெயஸ்ரீ, சௌம்யா, சஞ்சய் சுப்ரமணியம், உன்னிகிருஷ்ணன், வயலின் ஏ. கன்யாகுமரி உள்ளிட்டோரை அவர்களின் இளவயதிலேயே அடையாளம் காட்டியவர் சுப்புடுதான். "நானும் கிட்டத்தட்ட 65 வருஷங்களாக இசையைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். ஆனால் இந்த மாண்டலின் சீனிவாசைப் போல் ஒரு அவதார புருஷனைக் கண்டதுமில்லை. கேட்டதுமில்லை. என்னால் அவனது இசை மேதாவிலாசத்தை ஆய்வு செய்யவோ, எடை போடவோ இயலவில்லை" என்று மனமாரப் பாராட்டியிருகிறார்.

“ எனக்குத் தெரிந்து நல்ல தமிழ் திரை இசைப்பாடல் “ சங்கீத ஜாதி முல்லை “ ( காதல் ஓவியம் “) என பாராட்டியுள்ளார்.
“அந்த வித்வான் நன்றாகப் பாடுவதெல்லாம் சரிதான். ஆனால் 'தாயே நீ இரங்காய்' என்று பாடும்போது ஏன் 'இறங்காய் என்று பாடுகிறார்? அம்பாள் என்ன மரத்தின் மேலா ஏறிக் கொண்டிருக்கிறார்? ஒருவேளை அவர் வீட்டுத் தோட்டத்தில் இருந்த மாமரத்தில் பக்கத்துவீட்டுப் பையன் மாங்காய் பறிக்கிறான் போலிருக்கிறது. நீ இறங்காவிடில் பல்லை உடைச்சிடுவேன் என்று சொல்கிற மாதிரி கொஞ்சம்கூட பாவம் இல்லாமல் இருந்தது. இந்த அதிகப்பிரசங்கத்தை இத்துடன் முடித்துக் கொள்கிறேன்" என்று எழுதியிருந்தார். 

அதைப் பார்த்த ஆசிரியர் கல்கி, "உங்கள் அதிகப்பிரசங்கம் ஜோரைய்யா. மேலும் மேலும் எழுதுங்களைய்யா!" என்று பதில் கடிதம் எழுதி ஊக்குவித்தார். அதுமுதல் விகடனில் இசை விமர்சனம் வெளியானது. அடுத்து கல்கி, சதாசிவத்துடன் இணைந்து "கல்கி" இதழை ஆரம்பிக்கவே அதிலும் சுப்புடுவின் கைவரிசை தொடர்ந்தது. கல்கியையே மானசீக குருவாகக் கொண்டார் சுப்புடு.
================================================================
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
====================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com