25.3.22

தேசத்தை ஈர்த்த தமிழன் - கண்ணதாசன்*  


தேசத்தை ஈர்த்த தமிழன் - கண்ணதாசன்*
 
*ஊராண்டு நாடாண்டு*
* உயர்வான மேதைகளின்*
* உள்ளத்தை ஆண்ட மனிதன்*
 
*உடலாண்டு மனம் ஆண்டு*
* ஒரு தொண்ணூற்றைந்தாண்டு*
* உலகத்தில் வாழ்ந்த அறிஞன்*
 
*சீராண்டு வேதாந்த*
* சித்தாந்த மெய்ஞானம்*
* சேர்த்தாண்ட ஞானமுனிவன்*
 
*தெளிவோடு பலவாண்டு*
* தென்னாட்டு மாந்தர்க்குத்*
* தெய்வத்தை சொன்ன கலைஞன்*
 
*நூறாண்டு வாழாது*
* ஐந்தாண்டு குறைவாகி*
* நோயாண்டு மாண்ட தெனவோ?*
 
*நுவலரிய பொருள்கள் தரும்*
* வலிமைமிகு கீதையெனும்*
* நூலாண்ட பரந்தா மனே !*
 
*ஊராட்சி என்றாலும்*
* நகராட்சி என்றாலும்*
* ஒழுக்கத்தை வேண்டும் ஒருவன்*
 
*ஒருபோதும் தன் கட்சி*
* நிருவாகத் தலையீட்டை*
* ஒப்புக் கொள்ளாத தலைவன்*
 
*சீரான அரசாட்சி*
* சிலகாலம் செய்தாலும்*
* திறமாகச் செய்த புனிதன்*
 
*தென்னாட்டு மாந்தர்தம்*
* திறமைக்கு சான்றாகி*
* தேசத்தை ஈர்த்த தமிழன்*
 
*தேராத நூலில்லை*
* தெளியாத பொருளில்லை*
* சென்றோடி விட்ட தெனவோ?*
 
*செழுமை மிகு பொருள்கள்தரும்*
* அழகு மிகுகீதையெனும்*
* தேர்தந்த பரந்தா மனே !*
 
*வாழ்வாங்கு வாழ்வாரைத்*
* தெய்வத்துள் வைக்குமொரு*
* வையத்து வாழு மனிதா*
 
*வையத்துள் இராஜாஜி*
*வாழ்வுக்குச் சான்றாக*
* வாழ்வொன்று எங்கும் உளதா?*
 
*ஊழோங்கி உயிர்வாங்கி*
* உடல்கூடென் றானாலும்*
* உள்ளத்தைக் காலம் வெலுமோ?*
 
*ஒருகோடி வருடங்கள்*
* ஓடட்டும்; அவர்சொன்ன*
* உரைகூட ஓடிவிடுமோ?*
 
*தாழாத பணியென்றும்*
* தமதென்ற இராஜாஜி*
* தருமங்கள் வாழும் தினமே !*
 
*தனது நிகர் இல்லாத*
* இனியதொரு கீதையெனும்*
* தாய்தந்த பரந்தா மனே !*
 
*மாபார தத்தினிலும்*
* இராமாயணத்தினிலும்*
* மனமார மூழ்கி நீந்தி*
 
*மனநீதி பொய்யாது*
* மறைநீதி அகலாது*
* வாழ்ந்தார்க்கு ஆத்ம சாந்தி*
 
*பூபாரம் ஏற்றானை*
* புகழ்ப்பாரம் கொண்டானை*
*பொழுதென்றும் வாழ்த்து மனமே!*
 
*பொய்யாத மானிடர்கள்*
* இவர்போல சிறிதேனும்*
* பொன்னாட்டில் வருக தினமே !*
 
*கோபாலன் ஆவிக்கு*
* மாறாத அமைவொன்று*
* குறையாது தருக வரமே !*
 
*குணமுடைய பொருள்கள் தரும்*
* நலமுடைய கீதையெனும்*
* கொடைதந்த பரந்தா மனே !*
 
*- கண்ணதாசன்*
---------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்’
==========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com