23.3.21

சுஜாதாவின் EVM. (Electronic Voting Machine)



சுஜாதாவின் EVM. (Electronic Voting Machine)

29.8.99 தேதியிட்ட ஆனந்த விகடனில் வெளிவந்த சுஜாதாவின் கற்றதும் பெற்றதும் தொடரிலிருந்து ஒரு பகுதி...

நான் வோட்டுப் போடத் தவறுவதே இல்லை. அதுவும் இந்த முறை வோட்டுப் போடுவது என் வாழ்வில் ஒரு நீண்ட எலெக்ட்ரானிக் பயணத்தின் நிறைவு.

சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் சில நகரத் தொகுதிகளில் எலெக்ட்ரானிக் வோட்டு இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. இதன் உருவ அமைப்பில், பாரத் எலெக்ட்ரானிக்ஸில் முக்கியப் பங்கு எடுத்துக்கொண்டவன் என்கிற தகுதியில் எனக்குத் தனிப்பட்ட திருப்தி. இந்தப் பயணம் பல வருடங்களுக்கு முன் கேரளாவில் பரூரில் துவங்கியது.

முதன்முறையாக ஐம்பது இயந்திரங்களை, ஒரு தொகுதியின் பகுதியில் சோதனை முயற்சியாகப் பயன்படுத்தினோம். அதை எலெக்ட்ரானிக்ஸ் நுண்ணணுவியலுக்குக் கிடைத்த வெற்றியாக ஒரு கட்டுரையில் எழுதியிருந்தேன். ஆனால், இதன் முழு அறிமுகத்துக்கு இத்தனை தாமதமாகும் என்று எதிர்பார்க்கவில்லை. காரணம், அரசியலும் நீதிமன்றங்களும்தான். எல்லாத் தேர்தலிலும் தோற்றவர் எப்போதும் தன்னைத் தவிர மற்ற எல்லாப் புறக் காரணங்களையும் கூறுவார்... அந்த முறை புதிய காரணம் ஒன்று சேர்ந்துகொண்டது. இயந்திரத்தை வைத்து இன்ஜினீயர்கள், சி.ஐ.ஏ., மைய அரசு எல்லோரும் சேர்ந்து மக்களை ஏமாற்றுகிறார்கள் என்று முதலில் எல்.டி.எஃப். கம்யூனிஸ்ட் வேட்பாளரும், அவர் வெற்றி பெற்றிட, தோற்றுப்போன யு.டி.எஃப். காங்கிரஸ் வேட்பாளரும் கேஸ் போட்டார்கள். அது கேரள உயர் நீதி மன்றத்தில் தோற்றது.

மேல்முறையீட்டில் உச்ச நீதிமன்றம் வரை மாமியார் வீட்டுக்குப் போகும் நத்தை போல ஊர்ந்து கொண்டிருக்க, இடையே சில நகர்ப்புற, பாதி நகரத் தொகுதிகளில் ஏறத்தாழ பன்னிரண்டு இடங்களில் இந்த இயந்திரத்தை உப தேர்தல்களில், தேர்தல் கமிஷனில் அப்போது செக்ரெட்டரியாக இருந்த தைரியசாலி கணேசன், ஆர்ட்னன்ஸ் உதவியுடன் பயன்படுத்தினார். சுப்ரீம் கோர்ட் இறுதியில் 'அரசியல் சட்டத்தைத் திருத்தி அமைக்காமல் இயந்திரங்களைப் பயன்படுத்தக் கூடாது' எனத் தீர்ப்பு அளித்தது (இதற்காக நான் சுப்ரீம் கோர்ட்டுக்குச் சென்று சாட்சி சொன்ன அனுபவத்தை மற்றொரு சந்தர்ப்பத்தில், என்னுடைய லீகல் அட்வைஸரைக் கலந்தாலோசித்து விட்டு எழுதுகிறேன்).

அரசியல் சட்டத்தைத் திருத்த, மக்களவைக்குத்தான் அதிகாரம் உள்ளது. மக்களவை கட்சி மாற்றம், ஆட்சிக் கவிழ்ப்பு போன்ற தேசத்துக்கு அத்தியாவசியமான விஷயங்களில் கவனமாக இருந்து, தேர்தல் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து அதை நிறைவேற்ற ஏறத்தாழ ஐந்தாண்டுகள் ஆயின. இயந்திரத்துக்குப் பச்சை விளக்கு கிடைத்தது. இப்போது ராஜஸ்தானில் நயா கா(ன்)வ் என்னும் கிராமத்தில் உள்ள ஆயிரத்து இருநூறு வாக்காளர்களும் 'அதென்ன மெஷின்... சீஸ் கியா ஹை என்கிற ஆர்வத்தினால் மட்டும் வோட்டுப் போட வருகிறோம்' என்ற செய்தியைப் படிக்கும்போது ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கிறேன்.

தேர்தல் கமிஷன் மொத்தம் ஒன்றரை லட்சம் மெஷின்கள் வாங்கி இருந்தது. ஒரு மெஷின் ஐயாயிரம் ரூபாய் என்று சுமார் எழுபத்தைந்து கோடி ரூபாய் செலவழித்து வாங்கியிருந்தவை பயன்படாமல் கலெக்டர் அலுவலகங்களிலும் தாலுகா ஆபீஸ்களிலும் உறங்கிக்கொண்டு இருந்தன. கடைசியில் ராஜகுமாரி முத்தம் கிடைத்து, ஏறத்தாழ பத்தாண்டு தூக்கத்திலிருந்து எழுந்தன.

இயந்திரங்களில் பாதி எண்ணிக்கை பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தயாரித்தவை. மீதி ஹைதராபாத்தில் உள்ள எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா என்னும் மற்றொரு மத்திய சர்க்கார் நிறுவனம் தயாரித்தவை. டிஸைன் ஒன்றுதான்... தமிழ்நாட்டில் ஹைதராபாத் இயந்திரங்களைப் பயன்படுத்துகிறார்கள். நாடு முழுவதும் பயன்படுத்த கமிஷனிடம் இருக்கும் இயந்திரங்கள் போதாது. மீண்டும் ஆர்டர் செய்து பயன்படுத்தினால் தேர்தல் முடிந்த மாலையே முடிவுகளை அறிவித்துவிடலாம். ராத்திரியே தலைவிதிகள் நிர்ணயிக்கப்பட்டு யார் சிறந்தார்கள், யார் இழந்தார்கள் என்பதெல்லாம் மறுநாள் பல் தேய்ப்பதற்குள் தெரிந்து விடும். 

இரும்பு வோட்டுப் பெட்டிகள் வேண்டாம். வாக்குச் சீட்டுகளை லட்சக்கணக்கில் அச்சடிக்க வேண்டியது இல்லை. கள்ளவோட்டு கிடையாது. செல்லாத வோட்டு கிடையாது. மின்வாரிய கரண்ட் தேவையில்லை, பாட்டரி. அடிக்கடி தேர்தல் வந்தால் பரவாயில்லை. பதினைந்து நாட்களுக்குள் ஒரு பொதுத்தேர்தல் நடத்தலாம். எத்தனையோ சௌகரியங்கள். பீகாரில் போல அதைக் கடத்திக் கொண்டு போனால் மேலே வோட்டுப் போடாதபடி தானாகவே அணைந்து கொள்ளும்.

அதை எதிர்த்தவர்கள் 'முன்னேற்ற நாடான அமெரிக்காவிலேயே பயன்படுத்த வில்லையே... நாம் என்ன அப்படி உயர்ந்து விட்டோம்...?' என்கிற ஒரு வாதத்தை முன்வைத்தது எனக்கு வியப்பாக இருந்தது. எல்லா புத்திசாலித்தனமான எலெக்ட்ரானிக் சாதனங்களும் அமெரிக்கா அல்லது ஜப்பானிலிருந்துதான் வரவேண்டும் என்கிற தாழ்வுமனப்பான்மையை நீக்கியது எங்கள் முக்கிய சாதனை.
------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
====================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com