21.12.20

உலகைப் புரட்டிப் போட்ட மார்கோனி!


உலகைப் புரட்டிப் போட்ட மார்கோனி! 

அது வரை உலகம் கம்பி வழியாகத்தான் தகவல் தொடர்பு கொண்டிருந்தது, கம்பி இல்லா தகவல் தொடர்பு சாத்தியமில்லை  என சொல்லிகொண்டிருந்தது

முதன் முதலில் கம்பி இல்லா தொடர்பு சாத்தியம் என சொன்னவர் *பிரிட்டிஷ் இந்தியாவின் ஜெகதீஷ் சந்திரபோஸ்*, இப்பொழுது அவர் வாழ்ந்த டாக்கா வங்கதேசத்திற்கு சென்றுவிட்டது

அவர் பல்துறை கில்லாடி, அப்பொழுதே இயற்பியல் துறையில் லண்டனில் பணியாற்றினார்

தகவல் தொடர்பு கம்பி இல்லாமல் சாத்தியம் என சொல்லி சில கருவிகளையும் அமைத்தார், அவரின் ஆய்வு முடிவு ஆராய்ச்சி கட்டுரைகளாக ஐரோப்பாவிலும் வந்தன, கண்டுகொள்வார் யாருமில்லை

இதனால் போஸ் தாவரங்களுக்கு உயிர் உண்டா இல்லையா எனும் ஆராய்ச்சிக்கு சென்றுவிட்டார்

தாவரங்களுக்கு உயிர் உண்டு என்பது ஆராய்ந்தா சொல்ல வேண்டும்

தமிழ் இலக்கியம் அதை ஓருயிர் என சொல்கின்றது, *பட்டு போகுதல் என்பதற்கு செத்து போகுதல்* என தமிழிலே அர்த்தம் உண்டு, பட்டினத்தார் கூட பட்டு போகும் உடல் என்பார்

ஆனால் சந்திர போஸ் கடும் ஆய்வு செய்து செடி உண்ணும், வளரும் , காதல் செய்யும், இனபெருக்கம் செய்யும், முதுமை அடையும் என்றெல்லாம் ஆய்வு செய்து கொண்டிருந்தார்

உலகமும், அடடே... தாவரங்களுக்கும் உயிர் உண்டாம், இதோ இவர் நிரூபித்துவிட்டார் என கொண்டாடி கொண்டிருந்தது

அவரின் கவனம் செடி கொடிகளில் இருக்க‌, *அந்த கம்பி இல்லா தகவல் தொடர்பு முறை இத்தாலியின் மார்கோனி கவனத்தை கவர்ந்தது, போஸை மனதிற்குள் வணங்கி ஏகலைவனாக உருவானார்.* 

மின்காந்த அலைகளை எங்கும் எப்படியும் கடத்தலாம் என்பதுதான் போஸின் தியரி, அதனை ஆண்டனாக்கள் டிரான்ஸ்மீட்டர்கள் மூலம் செய்துகாட்டினார் மார்கோனி

முதலில் 100 மீட்டர், 500 மீட்டர் என ஒலிகளை கம்பி இன்றி கடத்தினார், அதிசயம்தான் ஆனால் அன்றிருந்த சிஸ்டம் கம்பிகளை கொண்டே இயங்கியதால் இவரை தொடக்கத்தில் இத்தாலி உதாசீனபடுத்தியது

மனிதர் இங்கிலாந்து பிரான்சு எல்லைக்கு சென்றார், ஆங்கில கால்வாயின் இக்கரையில் இருந்து அக்கரைக்கு குரலை கேட்க செய்தார்

அதனை கவனித்த கப்பல் துறையினர் கப்பலில் அதனை பயன்படுத்த எண்ணினர், காரணம் கப்பல்களிடையே அல்லது கப்பல்களில் இருந்து கரைக்கு செய்திகடத்துவது அன்று சிரமமானது

மார்கோனியின் ரேடியோ முதலில் அதற்குத்தான் பயன்பட்டது, ஒருமுறை மூழ்கபோகும் கப்பலில் இருந்து காப்பாற்றுங்கள் என அலறல் கேட்க, மீட்பு கப்பல் விரைந்து வந்து காப்பாற்றிற்று

அதிலிருந்தே *மார்கோனியின் கண்டுபிடிப்பின் அவசியம் உலகிற்கு தெரிந்தது*, இத்தாலி மார்கோனியினை அங்கீகரித்து அழைத்தது

பின் அவசர கால தொடர்பாக அது பயன்பட்டது, போர் காலங்கள், பேரிடர் காலங்களில் எல்லாம் இந்தமுறை கைகொடுத்தது

பின்பு தகவல் ஊடகமாக மாறியது, ரேடியோ அலைகளால் இயங்கும் அந்த நுட்பம் ரேடியோ என்றானது

போரில் தகவல் தொடர்பே முக்கியம், அதுவரை ரேடியோ என்பது ஒரு முனை மட்டுமே அதாவது இன்றும் நாம் கேட்கும் ரேடியோ, அவர்கள் பேசுவது நமக்கு கேட்குமே அன்றி நாம் பேசுவது அவர்களுக்கு கேட்காது

இதில் சில மாறுதல்களை செய்து *ஓவர் ஓவர்*😀 என சொல்லும் குறைந்த தூர இருமுனை கொண்டவாக்கி டாக்கி சிஸ்டம் வந்தது. போர்முனையில் பின்பு அதுதான் வெற்றியினை நிர்ணயித்தது

அந்த ஆராய்ச்சிகள் எங்கெல்லாமோ சென்று இன்றிருக்கும் வைபை( Wi-Fi)  வரை வந்து நிற்கின்றது

*இதற்கெல்லாம் வித்திட்டவர் நிச்சயம் ஜெகதீஸ் சந்திரபோஸ்*, ஆனால் நீர்பாய்ச்சி அறுவடை செய்தவர் மார்கோனி

மார்கோனியின் ரேடியோ உலகை புரட்டி போட்டது, செயற்கை கோள் டிவி வரும் வரை ரேடியோவே உலகை கட்டிபோட்டு இருந்தது, 1990க்கு பின்பே ரேடியோக்களின் வீச்சு குறைந்தது

எனினும் 2000க்கு பின் அது FM எனும் பண்பலை ரேடியோவாக எழுந்துவிட்டது

இன்றும் வேலை செய்யும் அலுப்பு தெரியாமல் இருக்க, தனிமை தவிர்க்க அது ஐடி தொழிலோ , பயணமோ, கார் ஓட்டும் தொழிலோ, உணவக தொழிலோ எது என்றாலும் ரேடியோ இல்லா நிலை இல்லை

சில தொழில்கள் ரேடியோ இன்றி இயங்காது என்றாயிற்று 

ரேடியோ நிலையம் இந்தியாவில் ஆகாசவாணி என்றாயிற்று , பின் தமிழில் வானொலி என அழைக்கபட்டாலும் சென்னையில் அது ஆகாசவாணி என்றே அரசு பெயரில்ஆகாஷவாணியினை வானொலி என மாற்று என கொடிபிடித்தவர்கள்தான் பின்பு தொலைகாட்சி என வைக்காமல் டிவி என வைத்து கொண்டார்கள் அதுவும் சன் டிவி

இது தமிழக அரசியலின் இன்னொரு முகம், போகட்டும்

இன்று மார்கோனியின் பிறந்த நாள், மாபெரும் கண்டுபிடிப்பினை கொடுத்து உலகினை திருப்பிவிட்டு, அந்த கண்டுபிடிப்பு பிற்காலத்தில் ஏகபட்ட விஷயங்களை சாத்தியபடுத்த அடிப்படையான விஞஞானி பிறந்த நாள்

இன்று அவனின் கண்டுபிடிப்பு மருத்துவம் முதல், விண்வெளி, ராணுவம், ஊடகம் என பல விஷயங்களில் மானிட குலத்திற்கு வழிகாட்டுகின்றது 

அந்த மார்கோனியும் அவன் சிந்தனையினை தூண்டிவிட்ட சந்திரபோசும் மறக்க முடியாதவர்கள்

வரலாற்றினை புரட்டுங்கள். ஒவ்வொரு விஞ்ஞானியின் கண்டுபிடிப்பும் அவர்கள் காலத்தில் புறக்கணிக்கபட்டிருக்கின்றன‌. 

அணுவினை பிளக்கலாம் என ஒரு விஞ்ஞானி சொன்னபொழுது இதனால் என்ன பிரயோசனம் என கேட்டிருக்கின்றார்கள், அவனுக்கு பின் வந்தோரே அதை சாத்தியபடுத்தி இன்று அது மாபெரும் சக்தியாயிற்று

நியூட்டனின் புவி ஈர்ப்பு விசை எதற்கு என்று கூட கேட்டிருக்கின்றார்கள், இன்று ராக்கெட்டுகள் எழும்பும் பொழுதுதான் அதன் அவசியம் புரிகின்றது

பாரடே மின்சாரம் கண்டறிந்தபொழுது அதை வைத்து என்ன செய்வது என யாருக்கும் தெரியவில்லை, தேவை இல்லா விஷயம் என்றிருகின்றார்கள்

இன்று அது அல்லாது உலகம் இல்லை

ஒரு ஆராய்ச்சி அது செய்யபடும் காலத்தில் தேவை இல்லாமல் இருக்கலாம் ஆனால் அதில் சொல்லபடும் ஒரு மிக சிறிய விஷயம் கூடபின்னாளில் மாபெரும் மாற்றத்தை கொடுக்கும்

கலிலியோ காலமுதல் நியூட்டன், பாரடே, மார்கோனி என பல விஞஞானிகள் காலம் வரை விஞ்ஞான உலகம் சொல்லும் தத்துவம் இதுவே

சந்திர போசும், மார்கோனியும் அன்று செய்த விஷயங்களைத்தான் இன்று மானிட சமூகம் பயன்படுத்திகொண்டிருக்கின்றது

ரேடியோ அலைகள் பலன்கள் நிறைய இருந்தாலும் வானொலி மாபெரும் ஊடகம், ஒவ்வொருவரும் அதனால் பயன்பெற்றுகொண்டே இருப்போம்

அந்த நன்றியில் மார்கோனிக்கு ஆழ்ந்த அஞ்சலி செலுத்தலாம், அதே நேரம் அந்த போஸும் நினைக்கபட வேண்டியவர்

படித்ததில் பிடித்தது

அன்புடன்

வாத்தியார்

================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com