31.8.20

கம்ப ராமாயணம் அரங்கேறிய இடம்!


கம்ப ராமாயணம் அரங்கேறிய இடம்!

கவிச்சக்கரவர்த்தி கம்பர் தான் இயற்றிய அந்த ராமாயணத்தை ஸ்ரீரங்கத்தில் அரங்கநாதர் சந்நிதியில் அரங்கேற்ற ஆசை கொண்டார்

ஆனால் அதற்கு பல தடங்கல்கள் எழுந்தன.

தடை பல தாண்டி, அவர் ஸ்ரீரங்கம் சென்று வைணவ சமய ஆசார்யராக அப்போது வீற்றிருந்த ஸ்ரீமந் நாதமுனிகளிடம் அனுமதி கேட்டார். அவர் அனுமதியளித்த பின்னே, ஆலயத்தினுள் ஒரு மண்டபம் எழுப்பி நல்லதோர் நாளில் தம் ராமாயணத்தை அரங்கேற்ற முனைந்தார் கம்பர்.

ஆனால் அப்போதும் ஏதோ தடங்கல். கம்பர் அரங்கநாதனை மனமுருகப் பிரார்த்தித்தார். ஸ்ரீரங்கநாதப் பெருமாள் கம்பரின் கனவிலே‘ எம்மைப் பாடினாய் அன்றி நம் சடகோபனைப் பாடினாயோ? அவனையும் பாடினால்தான் உன் ராமாயணத்தை நாம் ஏற்போம்!’ என்று கூறினார்.

அதனால் கம்பர் நம்மாழ்வாரான சடகோபர் மீது நூறு பாக்களால் சடகோபர் அந்தாதியை இயற்றினார். அதன் பிறகே அவருடைய ராமாயணம், நாதமுனிகளின் முன்னிலையில், அரங்கநாதப் பெருமான் ஆலயத்தில் தாயார் சந்நிதி முன்னுள்ள மண்டபத்தில் அரங்கேறியது.

அப்போது, தாயார் சந்நிதி முன் இருந்த மேட்டு அழகிய சிங்கப் பிரான் சப்தம் எழுப்பிச் சிரித்ததாகவும் ஒரு செய்தி உண்டு. இந்த மண்டபம், இன்றும் கம்பர் ராமாயணம் அரங்கேற்றிய மண்டபம் என்று அரங்கநாயகித் தாயார் சந்நிதி முன்னால் உள்ளது.

கம்பர் தம் சடகோபர் அந்தாதியில்  ‘நம்மாழ்வாரே எனக்குக் காப்பு’ என்று சொல்லி ஒரு காப்புச் செய்யுள் படைத்து அந்தாதியைத் தொடங்கினார். அந்த துதிப்பாடல்…

தருகை நீண்ட தயரதன் தான் தரும்
இருகை வேழத்தி ராகவன் தன் கதை
திருகை வேலைத் தரைமிசைச் செப்பிடக்
குருகை நாதன் குரைகழல் காப்பதே.

-இந்தக் காப்புச் செய்யுளார் நம்மாழ்வாரின் பெருமையைப் போற்றிக் கொண்டாடுகிறார் கம்பர்.

இதன்பிறகு வைணவர்கள் நூல் இயற்றத் தொடங்கும்போது முதலில் நம்மாழ்வாருக்குத் துதி கூறும் வழக்கம் உண்டானது.

கம்பரின் சடகோபர் அந்தாதியில் நம்மாழ்வாரின் பெருமை பலவாறாகப் பேசப்படுகிறது. அதில் ஒரு சம்பவம்…

நம்மாழ்வாரின் சிறப்புகளை விருது கூறிக்கொண்டு மதுரகவியார் அவருடைய விக்கிரகத்தை எழுந்தருளச் செய்துகொண்டு வீதியுலா வருவார்.

அப்போது மதுரைச் சங்கத்தைச் சேர்ந்த மாணாக்கர்களுக்கும் அவருக்கும் வாக்குவாதம் நிகழ்ந்தது.

நம்மாழ்வாரின் பெருமையைப் பறைசாற்ற, ‘கண்ணன் கழலிணை’ என்னும் ஒரு பாசுரத்தை மட்டும் வைத்துக்கொண்டு மதுரை சங்கத்தைச் சேர்ந்த புலவர்களுடன் வாதுக்குச் சென்றார் மதுரகவியாழ்வார். அப்போது நம்மாழ்வாரின் அந்த ஒரு பாடலுக்கு சங்கப் பலகை இடம் தந்து மற்றவர்களைக் கீழே தள்ளியது (இந்த நிகழ்ச்சியை மதுரகவியாழ்வாரின் சரித்திரத்தில் விரிவாகப் பார்க்கலாம்).

இந்த நிகழ்ச்சியை கம்பர் தம் சடகோபர் அந்தாதியில் சிறப்புறக் காட்டுகிறார்.

தமிழிலக்கியத்தில் மிக மிக உயர்வான கருத்துகள் நம்மாழ்வாரின் பாசுரங்களில் பரவலாக இடம் பெற்றிருக்கின்றன.

நம்மாழ்வார் தனக்காகப் பாடாது, உலக மக்களின் நலனுக்காக எம்பெருமானிடம் அவர்கள் சார்பில் ஒரு விண்ணப்பம் செய்கிறார்…

பொய்ந்நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கமும் அழுக்குடம்பும்
இந்நின்ற நீர்மை இனியாம் உறாமை உயிர் அளிப்பான்
எந்நின்ற யோனியுமாய்ப் பிறந்தாய் இமையோர் தலைவா
மெய்ந்நின்று கேட்டருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பமே

பொருள்: பொய்யான அறிவு; தவறான ஒழுக்கங்கள்; அழுக்கான உடம்பு- இத்தகைய குணங்கள் இனி எங்களுக்கு ஏற்படாதபடியான வாழ்வினைத் தருவாய். வானவர் தலைவனே, அடியேன் செய்யும் இந்த விண்ணப்பத்தைக் கேள் என்று உலக மக்களின் சார்பில் எம்பெருமானிடம் விண்ணப்பம் வைக்கிறார்.

ஆழ்வார் ஸாதிக்கிறார், "எம்பெருமான் என்னுடன் சேர்ந்து தன்னுடைய அளவில்லாத அழகைக் காட்டி என்னை வசப்படுத்தி என் மனதில் எழுந்தருளியிருக்கிறான். அந்த அழகு எப்படியிருக்கிறது என்றால், என்னைவிட்டு பிரிந்த போது அவனுடைய திருக்கண்கள் வெளுத்திருந்தன. இப்போது என்னுடன் சேர்ந்த ப்ரீத்தியாலே பெருமாளுக்கும் என்னுடைய கண்களைப் போலவே செந்தாமரை போல சிவந்து இருக்கிறதே, இது என்ன விந்தை! என்ன விந்தை!" என்று சொல்லிக்கொண்டே ஆறுமாத காலம் மோஹித்தாராம்.

குருவடி திருவடி சரணம் !
-------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

2 comments:

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com