9.6.20

வத்தக் குழம்பு புராணம்


வத்தக் குழம்பு புராணம்

வத்தக் குழம்பு செத்த நாக்கையும் உயிர்ப்பிக்கும் என்பார் அறுசுவை ஆறுமுகக் கவிராயர்..

உணவே மருந்து மருந்தே உணவு என்னும் தமிழரின் பாரம்பரியச் சமையலின் தலைமை மருத்துவ குணம் கொண்ட குழம்பு தான் இந்த வத்தக் குழம்பு.. சுவையிலும் தனித்துவத்தில் இருப்பது இதன் பெரும் சிறப்பு.!

வத்தக்குழம்பின் மகாத்மியங்களை சொல்லத்தான் இப்பதிவே.!

#சுண்டைக்காய்_வத்தல்_குழம்பு, #மணத்தக்காளி, #பிரண்டை, #பூண்டு, #வெண்டை, #எண்ணெய்_கத்திரிக்காய்,  #கொத்தவரங்காய் போன்ற வகைகள் வத்தக்குழம்பிற்கு மிகச் சிறந்த வகைகள்..

வெற்றிலை போட்டு வைக்கும் வத்தல் குழம்பும் உண்டு.. இதில் #டாப்_1_இடம்_சுண்டைக்காய்_வத்தக்குழம்புதான்.! சிவாஜி - பத்மினி போல பர்ஃபெக்ட் ஜோடி.!

முதலில் வத்தக் குழம்பிற்கு வைக்கும் சாதம் முக்கியம்.! குழையவேக்கூடாது..
MN நம்பியார்போல மிக விறைப்பாகவும் அதே நேரம்
SV ரங்காராவ்போல கொஞ்சம் பதமாகவும் இருக்கவேண்டும்!

குழம்பை சொத சொதன்னு சோற்றில் ஊற்றாமல் பிரட்டுவதுபோல பட்டும் படாமல் பிசைவது மிகச்சிறந்த முறை ஆகும்.

அதிலும் சூடான சாதத்தில் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு பிறகு..வத்தக் குழம்பை விட்டு பிசைந்து சாப்பிட்டால்!ஆஹஹாஹா! வத்தக்குழம்பு எவ்வளவு கெட்டியாக இருக்கிறதோ அவ்வளவு நல்லது.. என் பாட்டி வீட்டில் வைக்கும் வத்தக் குழம்பு எல்லாம் அம்மியில் அரைத்த துவையல் போல ஐஸ்க்ரீமின் ஒரு ஸ்கூப் போல மிக கெட்டியாக இருக்கும்..

இதற்கு தொட்டுக் கொள்ள வெறும் சுட்ட அப்பளமே தேவாமிர்தமாக இருக்கும்.!
பூசணிக்காய் பால்கூட்டு, தயிர் பச்சடி, புடலங்காய் பருப்பு கூட்டு, வாழைத்தண்டு பருப்பு கூட்டு, இப்படி பருப்பு சேர்த்து செய்யும் எல்லா கூட்டும் வத்தக் குழம்பிற்கு பெஸ்ட் காம்போ.. அவியலும் பிரமாதமாக இருக்கும்..

வேலி பிரண்டையை உரசி என் அம்மா வைக்கும் வத்தக் குழம்பு அருமையான மருத்துவ குணம் கொண்ட ஆரோக்கியமான உணவாகும்.. அதே போல.. மணத்தக்காளி போட்டும் வைப்பார்கள் வயிற்று கோளாறுகள் ஒரே நாளில் காணாமல் போய்விடும்..

அல்சர் இருப்பவர்கள் வாரத்தில் இரு முறை சாப்பிடலாம்.. ஒரு முறை கோவை வந்திருந்த போது என் பழைய எம்.டி. சுவாமிநாதன் அவர்கள் வீட்டிற்கு சென்ற போது கொங்கு ஸ்டைல் வதங்கல் கத்திரி வத்தக்குழம்பு சாப்பிடும் பெரும் பாக்கியம் கிடைக்கப் பெற்றேன்! அடர் வயலட்டில் மேனியெங்கும் எண்ணெய் மினுமினுங்க நன்கு எண்ணெயில் வதங்கிய முழு கத்திரிக்காய்கள்.. குலாப் ஜாமூன் போல புளிக்குழம்பில் மூழ்கியிருக்க.. கூடவே சுண்டைக்காய் வத்தலும் போட்டு நான் சொன்ன துவையல் பதத்தில் மேடை(சை)க்கு வந்தது..

சாம்பாருக்கு பிறகு 4முறை வத்தக்குழம்பையே சந்திரமுகி ரஜினி போல ரிபீட்டு கேட்டு கேட்டு வாங்கினேன்.!

அடுத்து வெங்காய வத்தக்குழம்பு.. இதுவும் மருத்துவ குணம் மிக்க அஜீரணத்தை கட்டுப்படுத்தும் குழம்பு இதற்கு வடகம், பொரித்த அப்பளம், சில நேரங்களில் மாங்காய் தொக்கு என பல காம்போக்கள் உண்டு..

பாகற்காய் வத்தக்குழம்பு எனது விருப்ப உணவுகளில் ஒன்று.. கொஞ்சம் இனிப்புள்ள பரங்கிப் பூசணி, கொத்தவரங்காய், அவரை, செள செள, காய் கூட்டுகள் இதற்கு..பக்கா பொருத்தமாக இருக்கும்..

எந்த வத்தக்குழம்பாக இருந்தாலும் என்ன காய் போட்டாலும் சுண்டைக்காய் சேர்த்து போடுதல் வத்தக்குழம்பிற்கான லட்சணங்களில் ஒன்று..

இந்த வத்தக்குழம்பில் எல்லாம் இன்னொரு வசதி.. தயிர் சாதத்திற்கு இதைத் தொட்டுக் கொள்ள பிரமாதமாக இருக்கும்.. ஒரே ஒரு முறை அதை சுவைத்துவிட்டால் எப்போதும் விடமாட்டீர்கள்.!

கால மாற்றங்களில் ஓட்டல்களில் செக்கச் செவேலென இன்று ஒரு கிண்ணத்தில் வைத்து தரப்படுவதெல்லாம் வத்தக் குழம்பே அல்ல..

சீகைக்காயை அந்த காலத்தில் கரைப்பார்களே அந்தக் கலரில் இருப்பதே அக்மார்க் வத்தக்குழம்பு.

சூடான சாதத்தில் செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய் 1ஸ்பூன் விட்டு.. பிசைந்து அதை சுட்ட அப்பளத்துடன் சாப்பிடும் சுகமே சுகம்.!

இன்னூன்னு சொல்ல மறந்துட்டேனே..!

#முதல்நாள்_செய்த_வத்தக்குழம்பை_பத்துநாள்_வச்சு_வச்சு_சாப்பிட்டால்_பரமசுகம்...

ஆஹா ஓஹோ பேஷ் பேஷ்..!!!

அப்போ நாளைக்கு உங்க வீட்டில் வத்தக் குழம்பு தானே.!
------------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
==================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

2 comments:

  1. வாயூறும் வத்தக் குழம்பு அருமை ஐயா.......

    எல்லாப் பதிவுகளும் பலன் தருபவை......................



    என்றும் அன்பும் நன்றியும்............

    அன்புடன்
    விக்னசாயி.
    ======================================

    ReplyDelete
  2. /////Blogger vicknasai said...
    வாயூறும் வத்தக் குழம்பு அருமை ஐயா.......
    எல்லாப் பதிவுகளும் பலன் தருபவை......................
    என்றும் அன்பும் நன்றியும்............
    அன்புடன்
    விக்னசாயி.////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி விக்னசாயி!!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com