23.4.20

இரட்டை எழுத்து மனிதர்!


இரட்டை எழுத்து மனிதர்!

விசு.

சோ என்ற ஒற்றை எழுத்து மனிதரைப் போல விசு என்ற இந்த இரட்டை எழுத்து மனிதரையும் எனக்குப் பிடிக்கும். எழுபதுகளின் பிற்பகுதிகளில் இவரது நாடகங்கள் சிலவற்றைப் பார்த்த பொழுது விசு என்ற பிரமாண்ட கலைஞன் அதில் ஒளிந்து இருப்பது எனக்குத் தெரியவில்லை.ஆனால்  கே.பி. என்னும்துரோணருக்கு தெரிந்தது. பட்டைத் தீட்டப்பட வேண்டிய கல் இது. வைரமாய் ஜொலிக்கும் என்று.  விசுவின் நாடகத்தினைப் பட்டிணப் பிரவேசமாக்கினார். அதில் விசுவின் சினிமா பிரவேசம் வசன கர்த்தாவாக தொடங்கியது.

பட்டிணப் பிரவேசத்துக்குப் பின் ரஜினிகாந்த் நடித்த சதுரங்கம் , தில்லு முல்லு நெற்றிக்கண்.  ( K.B. தயாரிப்பு இயக்கம் ) முக்தா ஶ்ரீனிவாசன் இயக்கத்தில் அவன் அவள் அது , கீழ்வானம் சிவக்கும் ( நடிகர் திலகம் சரிதா ) படங்களுக்கு வசனகர்த்தாவாக திரைக்கு பின்னால் பயணித்தார்.

அப்பொழுதுதான் குடும்பம் ஒரு கதம்பம் படம் வெளி வந்தது. பாலச்சந்தரின் சொந்தப் படம். எஸ்.பி.எம் டைரக்ஷன். எஸ்.வி . சேகர், சுஹாசினி , பிரதாப் போன்ற மிகை நடிப்பு இல்லாத நட்சத்திரங்கள் நடித்த குடும்பப் படம் என்றுதான் குடும்பம் ஒரு கதம்பம் படத்தைப் பார்க்கப் போனேன். என் பட்டியலில் இருந்த அத்தனை பேர்களையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு என் நினைவில் நின்றவர் விசு மட்டுமே. அவரது வசனங்கள் மட்டுமே.

பைத்தியங்களுக்கு வைத்தியம் பார்க்கும் பைத்தியகார டாக்டருக்கு பைத்தியம் பிடிச்சா அவர் எந்த ஆஸ்பத்திரியில் பைத்தியங்களுக்கு வைத்தியம் பார்க்கின்ற பைத்தியக்கார டாக்டர் கிட்ட தன் பைத்தியத்துக்கு வைத்தியம் பார்ப்பான் என்ற வசனம் யாராவது ஏடாகூடமாகப் பேசினாலோ தெளிவில்லாமல் பேசினாலோ தேவை இல்லாமல் குழப்பினாலோ விசு மாதிரி பேசாதே என்று சொல்லும்படி ஒரு டிரெண்ட் செட்டானது. இந்த நீதி மன்றம் எத்தனையோ விசித்திரமான வழக்குகளை சந்தித்துள்ளது என்று ஆரம்பிக்கும் பராசக்தி வசனத்தைப் போல, நீர்தான் ஜாக்சன் துரை என்பதோ என்ற வீர பாண்டிய கட்ட பொம்மன் வசனத்தைப் போல விசுவின் வசனம் புகழ் பெற்றது. பொறுப்பே இல்லாத உபயோகமற்ற ஸ்ரீனிவாச ராகவனாக அறிமுகம் ஆன அவர் மற்றவர்களை useless fellow என்று குறிப்பிடும் மாடுலேஷன் இவர் ரேஞ் வேறு என்று புரிய வைத்தது.

எனக்கே இது விளங்கிய பொழுது பாலச்சந்தருக்கு விளங்காமலா இருக்கும் ? விசு என்னும் நாடக நடிகரை சினிமா நடிகராக , கதை வசன கர்த்தாவாக இயக்குனராக என்று அவரது அத்தனைத் திறமைகளையும் வெளிக்கொண்டு வந்தார் மணல் கயிறு என்னும் தனது தயாரிப்பில் .ஏற்கனவே அவரது தயாரிப்பில் லக்ஷ்மி இயக்கத்தில் மழலைப்பட்டாளம் படத்துக்கு வசனம் எழுதிய காரணத்தல் பாலச்சந்தர் மணல்கயிற்றினை இவரை தீரிக்க விட்டார்.  மன்னிக்கவும் இவரை இயக்கவிட்டார். உத்தரமேளூர் நாரதர் நாயுடு எட்டு கண்டிஷன் கிட்டுமணிக்கு கல்யாணம் செய்து வைத்து கலகலப்பாக்கினார். ராஜாமணி , சூர்யகோஷ் , கிஷ்மு இவர்கள் பக்க வாத்தியத்துடன் விசுவின் சினிமா கச்சேரி களைகட்டத் தொடங்கியது. ஆனாலும் இவரது  தனியாவர்த்தனத்தை மிகச்சரியான அளவில் இடம் பெறச்செய்தார். விசு என்னும் புயல் கோலிவுட்டை கலக்க தொடங்கியது.

விசுவின் குருவிற்கு எப்படி இருகோடுகளுக்குப்  பின்னர் ஒரு சறுக்கல் பத்தாம் பசலியில் வந்ததோ அப்படியே இவருடய அடுத்த படமான கண்மணிப் பூங்கா தோல்வியடைந்தது. ஆனால் விசு கலங்கவில்ல. அவர் சுதாரித்துக் கொள்ள சில மாதங்கள் தேவைப்பட மீண்டும் முக்தா ஸ்ரீனிவாசன் சிம்லா ஸ்பெஷல் படத்துக்கு வசனம் எழுத வாய்ப்பு கொடுத்தார். ( கமலுடன் இவர் பணியாற்றிய ஒரே படம் இது ) புதுக்கவிதை , நல்லவனுக்கு நல்லவன் , மிஸ்டர் பாரத் போன்ற படங்களில் ரஜினிகாந்த்துடன் வசனகர்த்தாவாக பயணித்தார். இந்த காலகட்டத்தில் இவர் தன் பலம் குடும்ப படங்கள் என்பதை உணர்ந்து திருமதி ஒரு வெகுமதி, நாணயம் இல்லாத நாணயம்  , பெண்மணி அவள் கண்மணி என்று பல படங்களில் ஜெயந்தி, கே.ஆர். விஜயா போன்றவர்களோடு ஈடு கொடுத்து நடித்து எழுதி இயக்கினார். விசு ஒரு வெற்றிகரமான இயக்குனராக காலை ஊன்றிக்  கொண்டார்.அதை உணர  இவர் இயக்கிய சிதம்பர ரகசியம், ராஜ நீதி போன்ற கிரைம் படங்களின் தோல்வி உதவியது.

ஏ.வி. எம் மோடு ரஜினிகாந்த் படங்கள் மூலமாக ஏற்பட்ட தொடர்பு இவரை சம்சாரம் ஒரு மின்சாரம் இயக்கவைத்தது. இவரது உறவுக்கு கை கொடுப்போம் என்ற நாடகத்தை ஒய்.ஜி .மகேந்திரன் நடிப்பில் கே.எஸ்.ஜி . இயக்கி பெரும் தோல்வியை அடைந்த படம். அதனையே மீண்டும் தயாரிக்கும் விருப்பத்தை இயக்கினார். ஏவிஎம் சரவணன் சம்மதிக்க சம்சாரம் ஒரு மின்சாரம் உருவானது.

லக்ஷ்மி, மனோரமா, ரகுவரன், சந்திர சேகர், டெல்லி கணேஷ்,கமலா காமேஷ் இவர்களுடன் அம்மையப்பனாக விசு நடித்து இயக்க ஜனாதிபதி பரிசு பெற்ற இப்படம்தான் விசுவின் உச்சம். இதை மிஞ்சும் ஒரு படத்தை அவரால் தர முடியவில்லை. கிளைமாக்சில் சுசிலா ( ளக்ஷ்மி ) எடுத்த முடிவை பற்றி பேசாதவர்களே இல்லை. சரி. இல்லை தவறு என்று ஒரு பட்டி மன்றம் ஒவ்வொருவர் மனதிலும் , வீட்டிலும் , பொது இடங்களிலும் நடந்தது.

இந்த படம் சினிமா தயாரிப்பவர்களுக்கு ஒரு படமானது. படம் வெற்றி பெற நல்ல கதை அவசியம். ஆனால் அது மட்டுமே வெற்றி பெற உதவாது. பொருத்தமான நடிகர்கள், திரைக்கதை , வசனம், நல்ல தயாரிப்பு நிறுவனம் , போதுமான விளம்பரம் , இசை எல்லாமே சரியான விகிதத்தில் அமைய வேண்டும் என்பதை உறவுக்கு கை கொடுப்போம் படத்தின் தோல்வியும் சம்சாரம் அது மின்சாரம் வெற்றியும் தெளிவாக்கியது. இதற்கு முன்னரே கண்ணாடி என்ற தோல்விப் படம் நெற்றிக்கண் என்னும் வெறிப்படமான போதும் விசு நிருபித்தார்.

கிரேசி மோகனுடன் விஜயுடன் கோயம்பத்தூர் மாப்பிளை, சிவாஜியுடன்   ஆனந்த கண்ணீர், கேப்டனுடன் ஊமைவிழிகள் இப்படி  பல படங்களில்    நடித்தும் இயக்கியும் , பல வெற்றிகளையும் தோல்விகளையும் சந்தித்த விசு தன் குருவைப் போலவே சின்னத் திரையின் பக்கம் திரும்பினார். ஆனால் கே.பி ஐ போல அல்லாமல் மக்கள் பிரச்சினையில் கவனம் செலுத்தும் வகையில் சன் டிவி யில் அரட்டை அரங்கம் இப்போதைய பல பேச்சு மன்றங்களுக்கு முன்னோடி. பின் சன் டீவியிலிருந்து ஜெயா டீவியில் மக்கள் அரங்கம். அதன் காரணமாக அதிமுக மூலமாக அரசியல் பிரவேசம்.

இப்படி ராஜபாட்டையாக இருந்த விசுவின் பயணம் அவரது உடல் நிலை காரணமாக தடை பட்டது. சிறு நீரக கோளாறுடன் கேன்சர் என வருடங்கள் ஓடியது. தன் மணல்கயிறின் தொடர்ச்சியாக மணல் கயிறு 2 படத்தினை சேகருக்காக எழுதினார். தன்னுடய தோல்விப் படத்தை வெற்றிப் படமாக்கியவருக்கு வெற்றிப்படத்தை மீண்டும் வெற்றி பெற செய்ய முடியவில்லை என்ற சோகத்துடன் அவரது திரைப்பட பயணம் நின்றது.

இவ்வளவு உடல் உபாதைகளுக்கு    இடையேயும் அவர் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மேடையில் நாடகங்களில் பங்கேற்றார். சென்னை ஹ்யூமர் கிளப்பில் அடிக்கடி பங்கேற்றார்.
மூன்று பெண்குழந்தைகளுக்கு தகப்பனாக பொறுப்போடு அவர் உரையாற்றினார். மிகுந்த பொருள் பதிந்த உரை . இன்றும் அது யூ ட்யூபில் இருக்கின்றது. ஜனவரி மாதம் துக்ளக் ஐம்பதாவது ஆண்டு விழாவை ஒட்டி , சோ மீது அவர் கொண்ட அன்பின் காரணமாக துக்ளக் வாச்கர்கள் குழு என்ற அமைப்பை ஜனவரி மாதம் தொடங்கி வைத்துப் பேசினார்.   பாஜாக வுடன்   தன்னை இணைத்துக் கொண்டார். யூ ட்யூப் சேனல் ஒன்றின் மூலமாக தன் திரை அனுபவங்களைத் தொடர்ந்து பகிர்ந்து கொண்டிருந்தவரின் மரணச்செய்தியை கேட்ட பொழுது வருத்தமாக இருந்தது.

நீங்க சௌக்கியமா. நான் சௌக்கியம் என்று சம்சாரம் அது மின்சாரம் வசனம் . நாங்கள் சௌக்கியம் . நீங்கள் சௌக்கியமா என்று கேட்க முடியாதபடி மரணம் ஏற்றுக்கொண்டது.

கோதாவரி. நடுல கோட்ட போடு என்று அம்மையப்பன் கர்ஜித்தது காதில் இன்னும் ஒலித்துக் கொண்டிருக்க , மரணம் உங்களுக்கும் தமிழ்ப் பட ரசிகர்களுக்கும் நடுவே தாண்டவும் அழிக்கவும் முடியாத கோட்டினை போட்டு விட்டதே என்ன செய்ய ?
-----------------------------------------------------------------------
படித்தத்தில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
===============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com