30.12.19

முதல் தரிசனம் யாருக்கு?


முதல் தரிசனம் யாருக்கு?

*திருப்பதியில் முதல் தரிசனம் யாருக்கு..?*.

"முதல் தரிசனம் யாருக்குத் தெரியுமா?"

திருமலையில் சுப்ரபாத சேவைன்னே ஒரு தரிசனம் உண்டு! விடியற்காலை சுமார் 02:30 மணிக்கு துவங்கும் சுப்ரபாதம். அதுக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு தான் நடை சாத்திக் கோவிலை மூடி இருப்பாங்க. சடக்குன்னு
அடுத்த நாளுக்காக, மீண்டும் திறந்திடுவாங்க! கோவிலில் முதல் தரிசனம் யாருக்குத் தெரியுமா?

வேதம் ஓதுபவர்களுக்கா? - இல்லை!
தமிழ் ஓதும் விற்பன்னருக்கா - இல்லை!
அரசனுக்கா? மந்திரிக்கா? - இல்லை! இல்லை!!
படித்த மேதைக்கா - இல்லை!
நேத்து உண்டியலில் எல்லாரையும் விட அதிகமாப் பணம் கொட்டினவருக்கா? - இல்லவே இல்லை!

இவர்கள் எல்லாரும் கைகட்டிக் காத்திருக்க, எங்கிருந்தோ "மாஆஆ" என்று ஒரு சத்தம்!

கூட்டம் அதிகம் இல்லை! குளிர் தென்றல் வீசுகிறது! சில பக்தர்கள் அங்கப் பிரதட்சிணம் செய்து முடிக்கிறார்கள்;

இப்போது நாம் நிற்கும் இடம் திருமாமணி மண்டபம். இரண்டு பெரிய காண்டா மணிகள் வாசலில்! அருகே நந்தா விளக்கு! எதிர்ப் பக்கம் கருடன் நிற்கிறான். அவனுடன் சேர்ந்து நாம் எல்லாரும் நிற்கிறோம்.

வாயிலைக் காக்கும் துவார பாலகர்கள் (ஜய விஜயர்கள்) இருபுறமும் காத்து நிற்கும் தங்க வாயில் (தெலுங்கில்: பங்காரு வாகிலி) மூடப்பட்டு உள்ளது.

அர்ச்சகர்கள் குடங்களில் நீருடன் நிற்கின்றனர். பூக்குடலைகள் தாங்கிக் கொண்டு இன்னும் சில பேர் காத்துள்ளனர் - யாருக்கு?

திருமலையில் ஜீயர் என்னும் வைணவத் தலைவருக்கு "பெரிய கேள்வி அப்பன்" என்ற தூய தமிழ்ப் பெயர்! ஆலய நிர்வாகத்தில் கேள்வி கேட்கும் உரிமை பெற்றவர்; ஆதலால், கேள்வியப்பன் என்ற தமிழ்ப்பெயரைச் சூட்டி, அந்தப் பதவியை உருவாக்கினார் இராமானுசர்.

அந்தக் கேள்வியப்பர் பூட்டின் சாவியைத், துவார பாலகர்கள் அருகில் வைத்து, கதவைத் திறக்க அனுமதி பெறுகின்றார்; பின்னர் அவரும் காத்துள்ளார் - யாருக்கு?

அன்னமாச்சார்யரின் பூபாளக் கீர்த்தனை தம்பூராவில் இசைக்கப்படுகிறது;
தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் தமிழ்த் திருப்பள்ளி எழுச்சியின் முதல் பாசுரமும் அப்படியே இசைக்கப்படுகிறது! - வேறு மொழிச் சத்தங்களோ, கோஷங்களோ ஏதும் இல்லை!

மணிகள் ஒலிக்கின்றன; பேரிகையும் ஊதுகோலும் சேர்ந்து ஓசை எழுப்புகின்றன; காற்றில் நெய் தீபத்தின் மணமும், பச்சைக் கர்ப்பூரத்தின் வாசனையும் மூக்கைத் துளைக்கிறது!

இதோ.....திருக்கதவம் திறக்கப்படுகிறது!
எல்லோர் கண்களும் எக்கி எக்கி, எம்பெருமானைச் சேவிக்கத்
துடியாய்த் துடிக்க...

அடச்சே!....வெள்ளைத் திரை ஒன்று போடப்பட்டுள்ளதே! நாம் காண முடியாதா? - முடியாது...முதல் தரிசனம் வேறு யாரோ ஒருவருக்கு!
- யாரப்பா அது?

ஜீயர், அர்ச்சகர்கள் எல்லாரும் உடனே ஒதுங்கிக் கொள்கிறார்கள்!
படிக்காத, பகட்டு இல்லாத ஒருவர் உள்ளே வர, எல்லாரும் வழிவிட்டு
ஓரமாக நின்று கொள்கிறார்கள்!

யாருக்கு இப்படி ஒரு மரியாதைன்னு பாக்குறீங்களா? - ஒரு மாட்டு இடையனுக்கு!

பசுவும், கன்றுமாய் ஓட்டி வரும் இடையன், பொற்கதவின் முன் வந்து
நிற்க...மெல்லத் திரையை விலக்கி....அவன் மட்டும் இறைவனை ஹா...வென்று பார்க்கிறான்! அவனுடன் பசுவும் கன்றும் இறைவனைக் காண்கின்றன!

பசுவும் கன்றுமாய், வரும் கோனாரின் முகத்தில் தான் திருமலை
அப்பன் முதலில் விழிக்கின்றான்!

இந்தப் பழக்கம் பல நூற்றாண்டுகளாய் இருந்து வரும் ஒன்று! சாதி வித்தியாசங்கள் பார்க்கப்பட்ட காலத்தில் கூட, இந்த வழக்கம்
நடைபெற்றுக் கொண்டு தான் இருந்தது.

கோ+விந்தன் = பசு+காப்போன் அல்லவா அவன்!

உயிர்கள் என்னும் பசுக்களைக் காத்து மேய்க்கும் "நல்ல மேய்ப்பன்"!
அதனால் தான் பசுவைக் காட்டி, அன்றைய பணியை, இறைவனுக்கே அறிவுறுத்திச் செல்கிறான் இந்த இடையன்!

அதற்கு அப்புறம் தான் ஜீயரும், அர்ச்சகர்களும், இன்ன பிற அடியவர்களும் ஒவ்வொருவராய் உள்ளே செல்கிறார்கள்! அனைவர் கையிலும் மங்கலப் பொருட்கள் - கண்ணாடி, விளக்கு, மலர்மாலை என்று...

கண்ணாடியைத் தூக்கிப் பிடித்து, இறைவனுக்குக் காட்டியபடியே செல்கிறார்கள்!

*"ஸ்ரீ மலையப்பன் திருவடிகளே சரணம்*.
----------------------------------------------------
படித்தேன்: பகிர்ந்தேன்!!!
அன்புடன்
வாத்தியார்
============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

9 comments:

  1. Good morning sir very useful and amazing information thanks sir vazhga valamudan

    ReplyDelete
  2. ஐயா

    எனக்கு ஒரே ஒரு முறை சுப்ரபாத தரிசனம் செய்ய வாய்த்தது. உங்கள் பதிவை படிக்கும் போது அப்படியே அந்த நிமிடங்கள் கண்முன்னே வருகிறது ஐயா.

    இந்த அழகான எழுத்துகள் தான் எங்களை போன்ற மாணவர்களை கட்டி போட்டு வைக்கிறது. உங்கள் பாணியை கடைப்பிடித்து WHATSAPPல் எங்கள் குருப்-ல் எழுதி நானும் நல்ல பெயர் வாங்கி கொள்கிறேன்.

    நன்றி

    வெ.நாராயணன்
    புதுச்சேரி

    ReplyDelete
  3. Dear sir,

    Thanks for teaching the unknown facts about Thirumalai Thirupathi.

    Thanking you,

    Yours sincerely,
    C. Jeevanantham.

    ReplyDelete
  4. /////Blogger Shanmugasundaram said...
    Good morning sir very useful and amazing information thanks sir vazhga valamudan/////

    நல்லது. நன்றி சண்முகசுந்தரம்!!!!

    ReplyDelete
  5. /////Blogger V Narayanan, Puducherry said...
    ஐயா
    எனக்கு ஒரே ஒரு முறை சுப்ரபாத தரிசனம் செய்ய வாய்த்தது. உங்கள் பதிவை படிக்கும் போது அப்படியே அந்த நிமிடங்கள் கண்முன்னே வருகிறது ஐயா.
    இந்த அழகான எழுத்துகள் தான் எங்களை போன்ற மாணவர்களை கட்டி போட்டு வைக்கிறது. உங்கள் பாணியை கடைப்பிடித்து WHATSAPPல் எங்கள் குருப்-ல் எழுதி நானும் நல்ல பெயர் வாங்கி கொள்கிறேன்.
    நன்றி
    வெ.நாராயணன்
    புதுச்சேரி//////

    நல்லது. நன்றி நாராயணன்!!!!

    ReplyDelete
  6. ////Blogger C Jeevanantham said...
    Dear sir,
    Thanks for teaching the unknown facts about Thirumalai Thirupathi.
    Thanking you,
    Yours sincerely,
    C. Jeevanantham.////

    நல்லது. நன்றி ஜீவானந்தம்!!!!!

    ReplyDelete
  7. ////Blogger kmr.krishnan said...
    very nice./////

    நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்!!!!

    ReplyDelete
  8. ஐயா வணக்கம்
    திருப்பதி கோவிலில் முதல் தரிசன தகவல் புதுமை ஐய்யா
    நன்றி
    கண்ணன்.
    .

    ReplyDelete
  9. /////Blogger Kannan L R said...
    ஐயா வணக்கம்
    திருப்பதி கோவிலில் முதல் தரிசன தகவல் புதுமை ஐய்யா
    நன்றி
    கண்ணன்.//////

    நல்லது. நன்றி நண்பரே!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com