14.10.19

கவியரசர் கண்ணதாசனும் திரைப்படத் தனிக்கையாளர்களும்!!!!


கவியரசர் கண்ணதாசனும் திரைப்படத் தனிக்கையாளர்களும்!!!!

கோபத்தில் கொந்தளித்தார்கள் சென்சார் அதிகாரிகள் !

"இல்லை . இந்த வரியை அனுமதிக்க முடியாது."

"ஏன் ?"

"கண்ணதாசன் எழுதிய அந்த வரி தவறு !"

"எப்படி ?"

"அது என்ன மதங்களை படைத்தான் என்று அவர் எழுதி இருக்கிறார் ? அதை மாற்றி எழுதித் தர சொல்லுங்கள். இல்லாவிட்டால் இந்தப் பாடலை அனுமதிக்க முடியாது."

சொன்னார்கள் கண்ணதாசனிடம்.

அது "பாவ மன்னிப்பு" படம் தயாராகிக் கொண்டிருந்த நேரம். அதற்கான பாடல்களை எழுதிக் கொண்டிருந்தார் கண்ணதாசன்.

அப்போதுதான் இந்த சென்ஸார் பிரச்சினை எழுந்தது.

சென்சார் கண்டித்து  அனுப்பிய பாடலை கண்ணதாசன் வாசித்துப் பார்த்தார்.

"பறவையை கண்டான்
விமானம் படைத்தான்
பாயும் மீன்களில் படகினை கண்டான்
எதிரொலி கேட்டான்
வானொலி படைத்தான்
எதனைக் கண்டான் மதம்தனைப் படைத்தான்."

கண்ணதாசன் சொன்னார்: "நான் சரியாகத் தானே எழுதி இருக்கிறேன். சென்சாரிடம் போய் சொல்லுங்கள்."

சென்ஸார் மறுத்தது : "இல்லை. மதங்களை கடவுள் உருவாக்கினார். மனிதன் அல்ல."

கண்ணதாசன் சிரித்தார் :

"இது என்ன வேடிக்கை ? சிவனோ விஷ்ணுவோ வந்து இந்து மதத்தை உண்டாக்கினார்களா ? அல்லது அல்லாஹ் வந்து இஸ்லாமிய மதத்தை உருவாக்கினாரா ? இல்லையென்றால் பரமபிதா வந்து கிறிஸ்தவ மதத்தை படைத்தாரா ? கடவுள்கள் பெயரை சொல்லி , மனிதர்கள் உருவாக்கியதுதானே அத்தனை மதங்களும் ? அதைத்தானே நான் எழுதி இருக்கிறேன் ?"

சென்ஸார் திகைத்தது.ஆனாலும் ஈகோ தடுத்தது."இல்லை இல்லை. ஏற்றுக் கொள்ள முடியாது. மாற்றத்தான் வேண்டும்."

கண்ணதாசன் தலையில் அடித்துக்கொண்டு , இப்படி மாற்றி எழுதிக் கொடுத்தார்:

"எதனைக் கண்டான் பணம்தனைப் படைத்தான்."

Accepted.

படத்தில்தான் சிவாஜி இப்படிப் பாடுவார். ஆனால் ஒரிஜினல் இசைத் தட்டில் 'மதம்தனை படைத்தான்'என்ற வார்த்தைதான் இருக்கிறது.

கண்ணதாசன் அடுத்த பாடலை எழுதப் போய் விட்டார்.

"பாலிருக்கும் பழமிருக்கும்
பசியிருக்காது
பஞ்சணையில் காற்று வரும்
தூக்கம் வராது."

ஆனால் இங்கும் பிரச்சினை வந்தது.
சென்ஸார் சீறியது."அய்யய்யோ அபச்சாரம். என்ன இது கண்ணதாசன் இப்படி எல்லாம் எழுத ஆரம்பித்து விட்டார் ?"

அப்படி என்ன எழுதி இருந்தார் கண்ணதாசன் ?

"காதலுக்கு ஜாதியில்லை மதமும் இல்லையே
கண்கள் பேசும் வார்த்தையிலே பேதமில்லையே
வேதமெல்லாம்  காதலையே மறுப்பதில்லையே
அது வேதம் செய்த குருவை கூட விடுவதில்லையே."

இந்த கடைசி வரியை கட் செய்யச் சொன்னார்கள்  சென்ஸார் அதிகாரிகள்.

இப்போது பதிலுக்கு சீறீனார் கண்ணதாசன் :  "என்னய்யா இது ? மந்திரங்களில் சிறந்தது காயத்ரி மந்திரம். அதை எழுதிய விஸ்வாமித்திரரையே காதல் விடவில்லையே ? அதைத்தானே நான் எழுதி இருக்கிறேன்? என்ன ஆனாலும் சரி. எவர் சொன்னாலும் சரி.இதை நான் மாற்ற மாட்டேன்."

இப்போது படக் குழுவினர் கெஞ்சினார்கள்: "நீங்கள் சொல்வது சரிதான் கவிஞரே , ஆனால் படம் வெளி வர வேண்டுமே ?"

வேறு வழியின்றி வேத வரிகள் மாறின :

"வேதமெல்லாம்  காதலையே மறுப்பதில்லையே
அது மேகம் செய்த உருவம் போல மறைவதில்லையே."

பாவ மன்னிப்பு வந்தது. பாடல்களும் ஹிட் ஆனது.

ஆனால் சென்ஸார் கண்களில் மண்ணைத் தூவி , 'பாவமன்னிப்பு' படப் பாடலில் , இந்த ஒரு வரியை மட்டும் மாற்றாமல் அப்படியே விட்டு விட்டார் கண்ணதாசன்.

"மனிதன் மாறிவிட்டான்
மதத்தில் ஏறிவிட்டான்."

இப்படி அனுபவங்கள் அடிக்கடி ஏற்பட்டதால்தானோ என்னவோ , ஒருமுறை இப்படி எழுதி இருந்தார் அவர் :

"நான் இறந்த பிற்பாடு என்னையே நான் விமர்சனம் செய்துகொண்டால் இப்படித்தான் சொல்வேன்:

முட்டாள்களிடையே வாழ்ந்துகொண்டிருந்த கெட்டிக்காரனொருவன் கெட்டிக்காரர்களோடு  பழகத்தொடங்கி முட்டாளாக  செத்துப் போனேன்.” ---கண்ணதாசன்
===============================================================
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

3 comments:

  1. Good morning sir excellent words by kavignar amazing thanks sir vazhga valamudan sir

    ReplyDelete
  2. ////Blogger Shanmugasundaram said...
    Good morning sir excellent words by kavignar amazing thanks sir vazhga valamudan sir////

    நல்லது. நன்றி சண்முகசுந்தரம்!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com