22.4.19

சென்னையின் வரலாறைத் தொகுத்த மாமனிதர்!!!!


சென்னையின் வரலாறைத் தொகுத்த மாமனிதர்!!!!

*சென்னை வரலாறைத் தொகுத்த எஸ்.முத்தையா காலமானார் - மாநகரின் ஒவ்வொரு இடமும் முத்தையாவின் நினைவுகளை சேர்த்தே இனி சுமக்கும்*

உலகின் 30வது பெரிய மாநகரமாக கருதப்படுகிறது சென்னை. இந்த சென்னை மாரகருக்கான வரலாறு, அதன் தோற்றம், வளர்ச்சி போன்றவை குறித்த சரியான பதிவுகள் எதுவும் இல்லாமல் இருந்த நிலையில், சென்னை மாநகரின் வரலாறைக் காலமுறைப்படி தொகுத்த வரலாற்றுப் பதிவர்தான் எஸ். முத்தையா. அவர் நேற்று முன்தினம் சனிக்கிழமை காலமானார். பொதுமக்களின் அஞ்சலிக்கு பின் சென்னை மயிலாப்பூரில் இன்று (திங்கட்கிழமை -ஏப்ரல் 22) அவரது இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. அவரது மறைவுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

 ‘மெட்றாஸ்’ (சென்னையின் அந்நாளைய பெயர்) மாநகரின் ஆண்களும் பெண்களும் செய்த சாதனைகளையும், அவர்கள் எதில் முன்னோடிகளாக விளங்கினார்கள் என்பதையும் தேடித்தேடி பெருமை பூரிக்க முத்தையா பதிவு செய்தார். இன்று சென்னை தினம் என ஆகஸ்ட் மாதம் நாம் கொண்டாட காரணமாக இருந்தவரே இந்த முத்தையா தான்.

சென்னை மாநகரின் ‘முதல்முறை’ சாதனைகளையும் அவர் விடவில்லை. இப்போது சமூகவலைதளங்களில் சென்னையைப் பற்றி பகிரப்படும் பல்வேறு தகவல்களை மிகுந்த சிரமப்பட்டு சேகரித்து, சரிபார்த்து, யாராவது கூடுதல் தகவல்களைத் தந்தால் அதையும் சேர்த்து, ஏதேனும் திருத்தம் தேவைப்பட்டால் அதையும் செய்து ஒளிரச் செய்தார் முத்தையா.

இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த நகருக்கென்று தனி வரலாறு எழுதப்படவில்லையே என்று கவலைப்பட்ட முத்தையா அதையே மிகச் சிறப்பாக புதிய பாணியில் காலப்போக்கில் செய்துமுடித்தார்.

பள்ளத்தூரில் சுப்பையா செட்டியார்-சிட்டாள் ஆச்சி இணையரின் மகனாக 1930 ஏப்ரல் 13-ல்பிறந்தார் முத்தையா. பிரிட்டீஷ் ஆட்சி காலத்தில் இலங்கையின் கொழும்பு நகர முதல்வராக இருந்த என். எம். சுப்பையா செட்டியார் என்பவரின் மகன்தான் இந்த முத்தையா. அன்றைய சிலோன் (இலங்கை) மற்றும் அமெரிக்காவில் இவர் கல்வி பயின்றார்.

சர்வதேச உறவுகளில் முதுகலைப் பட்டம் பெற்று இலங்கை திரும்பிய முத்தையா, ‘டைம்ஸ் ஆஃப் சிலோன்’ நாளிதழில் பத்திரிகையாளராகச் சேர்ந்தார்.

அங்கு 17 ஆண்டுகள் பணிபுரிந்துவிட்டு 1968-ல் இந்தியா திரும்பி சென்னையைத் தனது வாழிடமாகக் கொண்டார். டிடிகே நிறுவனத்தின் ‘டிடிமேப்ஸ்’ என்ற வரைபட நிறுவனத்தில் பணியில் அமர்ந்தார்.

1981-ல் ‘மெட்ராஸ் டிஸ்கவர்ட்’ என்ற புத்தகத்தை எழுதினார். சென்னைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு சென்னையில் உள்ள முக்கிய இடங்கள், நிறுவனங்கள், நினைவுச் சின்னங்கள், கலைக்கூடங்கள், நூலகங்கள், அருங்காட்சியகங்கள், உணவகங்கள் குறித்து மிகச் சுவையாகவும் சுருக்கமாகவும் செறிவாகவும் அவர் எழுதியவைஎதிர்கால நகர வரலாற்றாசிரி யர்களுக்கு வழிகாட்டி நூல்களாகும்.

‘மெட்ராஸ் டிஸ்கவர்ட்’ சுற்றுலாப் பயணிகளால் மட்டுமல்ல, நகரவாசிகளாலும் வாங்கப்பட்டு விரும்பி படிக்கப்பட்ட அதிகம் விற்ற நூலாகும். அது பல பதிப்புகளையும் கண்டது.

சென்னை மாநகரைத் தலைமையிடமாகக் கொண்ட வணிக நிறுவனங்கள், அவற்றை நிறுவிய தொழிலதிபர்கள் ஆகியோரைக் குறித்து படிப்போர் வியக்கும் வண்ணம் எழுதினார்.

1991-ல் ‘லோகவாணி-ஹால்மார்க் பிரஸ்’ உதவியுடன் ‘மெட்ராஸ் மியூசிங்ஸ்’ என்ற மாதமிருமுறை இதழைக் கொண்டுவந்தார்.

அதில் நகரின் வரலாறு, கலாச்சாரம், பாரம்பரியம் இடம் பெற்றன. 1996-ல்பணமுடையால் தடுமாறிய அப் பத்திரிகை ‘சன்மார்’ குழுமத்தின் என். சங்கர் உதவியால் புத்துயிர்பெற்றது. நகரின் பெரு நிறுவனங்கள் அதற்கு உதவின. 2016-ல் அப்பத்திரிகை வெள்ளி விழா கண்டது.

1999-ல் இந்து பத்திரிகையில் திங்கள்கிழமை தோறும் அவர் எழுதத் தொடங்கிய ‘மெட்ராஸ் மிஸலனி’ வாசகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றது. அவர் எழுதியதற்கும் மேலதிகமாக வாசகர்களிடமிருந்து வந்த தகவல்களை, ‘தபால்காரர் கதவைத் தட்டியபோது…’ என்ற பொருளில் கூடுதலாகத் தந்தார். அதுவும் 2009-ல் பத்தாண்டுகளை நிறைவு செய்தது. ஒரு செய்தித்தாளில் அதிக ஆண்டுகள் தொடர்ந்த வாராந்தரப் பகுதியாக அது திகழ்ந்தது. 970 பகுதிகள் அதில் இடம் பெற்றுவிட்டன.

2004 ஆகஸ்டில் ‘மெட்ராஸ் டே’ என்ற நகரின் நாளை, முத்தையா தனது நண்பர்களுடன் சேர்ந்து கொண்டாடத் தொடங்கினார். அது அப்படியே மெட்ராஸ் வாரம்,மெட்ராஸ் இருவாரம், மெட்ராஸ்மாதம் என்று விரிவடைந்தது.

நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இந்தக் கொண்டாட்டங்களில் தாங்களாகவே வந்து இணைந்தது இதன் தனிச்சிறப்பு. வாசிப்பாளர்கள் வந்து பங்கேற்க, ‘மெட்ராஸ் புக் கிளப்’ என்ற அமைப்பையும் அவர்தான் தொடங்கி வைத்தார்.

சென்னை மாநகரின் தனிச்சிறப்பு மிக்க குடிமகனாக முத்தையா விளங்கினார். நகரின் பெருமையை தான் உணர்ந்ததுடன் மற்றவர்களையும் உணரச் செய்தார்.

முத்தையாவுக்கு இரண்டு மகள்கள், மருமகன்கள், பேரக்குழந்தைகள், ஏராளமான எழுத்தாள நண்பர்கள், வாசக அன்பர்களைக் கொண்ட பெரிய குடும்பம் இருக்கிறது. சென்னை மாநகரின் ஒவ்வொரு கட்டிடமும், நினைவகமும் முத்தையாவின் நினைவுகளையும் சேர்த்தே இனி சுமக்கும்.
-----------------------------------------
படித்ததில் பிடித்தது!!!
அன்புடன்
வாத்தியார்
=========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

4 comments:

  1. அருமை. அமர ர் முத்தையா புகழ் ஓங்குக!

    ReplyDelete
  2. Respected Sir,

    Happy morning... Nice post...

    Thanks for sharing....

    Have a great day.

    With regards,
    Ravi-avn

    ReplyDelete
  3. ///Blogger kmr.krishnan said...
    அருமை. அமர ர் முத்தையா புகழ் ஓங்குக!/////

    நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!!!!!

    ReplyDelete
  4. ////Blogger ravichandran said...
    Respected Sir,
    Happy morning... Nice post...
    Thanks for sharing....
    Have a great day.
    With regards,
    Ravi-avn///////

    நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி அவனாசி ரவி!!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com