7.3.19

வாருங்கள்! பொதிகைமலைக்கு போய் வருவோம்!!!!!!!


வாருங்கள்! பொதிகைமலைக்கு போய் வருவோம்!!!!!!!

பொதிகை மலை , அங்கே போறதுக்கு  அகத்திய பெருமானோட அருள் வேணும் அடுத்து அங்க போறதுக்கு சரியாய் வழிகாட்டி வேணும் , அது ஒரு அடர்ந்த காடு அப்பறம் தமிழ்நாடு வழி புலி சரணாலயமா இருக்கிறதால் கவனமாகப் போகணும். அங்க போறதுக்கு சிறந்த வழி கேரளா வழி தான் , தமிழ் நாடு வழி வனவிலங்குகள் அதிகம் , போற ஆட்கள் நிறைய பாதிக்கப்பட்டு இருக்காங்க , விஷயம் வெளியே வரவில்லை. காரணம் வன இலாகாவில் இருந்து யார் கிட்டயும் முறைப்படியான அனுமதிவாங்காமல் போனததினால் தான் .. கேரளா வழியும் சும்மா இல்லை. ஜன நடமாட்டம் இவ்ளோ இருக்குற நாட்கள்லயே யானைகள் சாதரணமா வந்துட்டு போகுது , அதுவும் சரிதான் அது இடத்துக்கு தான நாம போறோம் .

 பொதிகை மலை அகத்தியர் மலை ஒரு பயணம்...

அகத்தியர் வாழ்ந்து வரும், தென்றல் தவழ்ந்தோடும் பொதிகை மலையை, அகத்தியர் மலை என்றும் அழைக்கின்றனர். தமிழ் இலக்கணம், சித்த மருத்துவம், சோதிடம் ஆகியவற்றைப் படைத்து, சித்தர்களுக்கெல்லாம், தலையாய சித்தராக விளங்கும் தமிழ் முனிவர் அகத்தியரை, இறைவனாகவே சித்தர் வழிபாட்டில் ஈடுபடுபவர்கள் வணங்கி வருகின்றனர்.

அகத்தியர் வாழும் இப்பொதிகை மலையில் கடல்மட்டத்திலிருந்து சுமார் 6,132 அடி உயரத்திலுள்ள அகத்தியரைத் தரிசிக்கச் செல்வதை புனிதப் பயணம் என்றும் சாகசப் பயணம் என்றும் கூறலாம்.

அபூர்வ மூலிகைகள், மனதைக் கவரும் அருவிகள், சிற்றோடைகள், ஆறுகள், எங்கு காணினும் இயற்கையின் கொடையான பசுமையான அடர்ந்த மரங்கள் நிறைந்த காடுகள், புல்வெளிகள் ஆகியவற்றைத் தன்னகத்தே கொண்டுள்ள இப்பொதிகை மலை இயற்கை நமக்கு அளித்த கொடை. இந்த அடர்ந்த காட்டில் சிறு அட்டை முதல் மான், காட்டெருமை, கரடி, சிறுத்தை, புலி, யானை, செந்நாய், பாம்பு, உடும்பு மற்றும் காடுகளில் உள்ள ஊர்வன, பறப்பன உள்ளிட்ட அனைத்து வனவாழ் உயிரினங்களும் உள்ளன.

கயிற்றின் துணையுடன்  தமிழ் முனிவரைத் தரிசிக்க கேரளத் தலைநகரான திருவனந்தபுரம் பி.டி.பி. நகரிலுள்ள வனவிலங்குக் காப்பாளர் அலுவலகத்தில் அனுமதி பெற்று, அவர்களது தகவலின் பேரில் போணக்காட்டிலுள்ள வனத் துறை சோதனை மையத்தில் பணம் செலுத்தி, அனுமதிச் சீட்டு பெற்று, அங்கிருந்து வாகனம் மூலம் சுமார் 10 கி.மீ. தொலைவு சென்று, போணக்காடு பிக்கெட் ஸ்டேசன் என்ற இடத்திலிருந்து, வனத் துறையினர் நமக்கு ஏற்பாடு செய்துள்ள வழிகாட்டியுடன்  மூன்று நாள் பொதிகை மலை பயணம் தொடங்குகிறது. முதல் அரைமணிநேரப் பயணத்தில் நாம் முதலில் காண்பது விநாயகர் கோயிலை. அவரை வணங்கி நடைப்பயணம் தொடங்குகிறது. அங்கிருந்து சுமார் ஒரு மணி நேரப் பயணத்தில் கரமனையாறு அடைகிறோம். அடர்ந்த வனப்பகுதி இங்கிருந்துதான் தொடங்குகிறது.

இவ்வாறு மலை ஏற்றம், இறக்கம், சிற்றாறு, அருவிகள், புல்வெளி, அடர்ந்த வனம் ஆகிய வழிகளில் நடந்து, சுமார் 6 மணி நேர பயணத்தில் (நன்றாக நடைப்பழக்கம் உள்ளவர்களுக்கு ஒரு மணி நேரம் ஆகலாம்) அதிருமலை எஸ்டேட் என்ற இடத்தை அடைகிறோம்.

அங்கு கேரள வனத் துறையினர் பக்தர்கள் தங்குவதற்காகக் கட்டியுள்ள அதிருமலை கேம்ப் ஷெட்டில் முதல் நாள் இரவு தங்குகிறோம். குறுமுனிவரின் வழிபாட்டுக்குக் கொண்டு செல்லும் பூஜைப் பொருள்களை எடுத்துக் கொண்டு, அதிருமலையில் காவல் தெய்வமாக உள்ள தெய்வத்தை வணங்கிவிட்டு நடைப்பயணம் தொடங்குகிறது.

 சுமார் 1 மணி நேர நடைப்பயணத்தில் பொதிகை மலையின் அடிவாரத்தை அடைகிறோம். அங்கு சிறிது நேரம் ஓய்வு, அங்குள்ள தென் பொதிகை மானசரோவரில் சிறு குளியலை முடித்துவிட்டு (இது முற்றிலும் மூலிகை நீரைக் கொண்டது) மீண்டும் நடைப்பயணம். 15 நிமிட நடைப்பயணத்தில் தமிழக வனப் பகுதி எல்லையான சங்கு முத்திரை என்ற இடத்தை அடைகிறோம். இது கடல்மட்டத்திலிருந்து சுமார் 4,000 அடி உயரம் கொண்டது. சங்கு போன்ற அமைப்பை உடையதால் இப்பெயர். கேரளத்தினர் இப் பகுதியை "பொங்காலைப்பாறை’ என்று கூறுகின்றனர். கேரளத்தவர்கள் இங்கு வந்து பொங்கலிட்டு, அகத்தியரை வழிபடுவதால் இந்த இடம் பொங்காலைப்பாறை என்றழைக்கப்படுகிறது.

இச் சங்கு முத்திரை பகுதியின் மற்றொரு பள்ளத்தாக்கில் நமது வற்றாத ஜீவநதியாம், பொருநை என்று அழைக்கப்படும் தாமிரவருணி உற்பத்தி இடமான பூங்குளம் சுனை உள்ளது.

 இந்த சங்கு முத்திரை பகுதியிலிருந்துதான் பொதிகை மலையை நோக்கிய மிகவும் செங்குத்தான பாதை தொடங்குகிறது. இப்பாதையில் பெரும் பகுதி பாறைகளாகவே காணப்படுகிறது.

 இச்சிகரத்தின் பாதி உயரம் வரை, இடது புறத்தின் மரங்கள் நிறைந்த மழைநீர் வழியும் சாய்வான பகுதி வழியே ஏறி சென்று, பின் வழித்தடங்கள் அற்ற பாறைகள் வழியே துன்பத்தைப் பொருள்படுத்தாது,  காலும், கையும் ஊன்றி மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்கி, நாக்கு வறண்டு, பின் செங்குத்தான பகுதியில் கயிறு மற்றும் இரும்புக் கயிறு (ரோப்) பிடித்து கவனத்துடன் ஏறிச் சென்றால் கடல்மட்டத்திலிருந்து சுமார் 6,132 அடி உயரமுடைய பொதிகை மலை சிகரத்தை அடையலாம். அங்கு குட்டையான மரங்களைக் கொண்ட சிறு சோலையில் குறு முனிவர் அகத்தியரின் ஏகாந்த சிலையைத் தரிசிக்கும்போது, அந்த எண்ணங்கள் எல்லாம் மறந்து, இந்தத் தரிசனத்துக்குத்தான் நாம் இப்பிறவி எடுத்தோமோ என்ற நிலை நமக்கு ஏற்படும்.பனிபடர்ந்த அகத்தியர் மலை
 கவனமாக கீழே இறங்கத் தொடங்கி, மூன்று மணி நேரப் பயணத்தில் மீண்டும் அதிருமலை கேம்ப் ஷெட்டை அடையலாம் அங்கு உணவருந்தி விட்டு, சிறிது நேரம் ஓய்வுக்குப் பின் இரவு 7 மணிக்கு கூட்டுப் பிரார்த்தனை செய்து. இரவு பொழுதை அங்கு கழித்துவிட்டு, மூன்றாம் நாள் காலையில் அதிருமலை காவல் தெய்வத்தையும், பொதிகை சிகரத்தையும் வணங்கிவிட்டு பயணம் தொடங்கி, சுமார் 5 மணி நேர நடைப்பயணத்துக்கு பின் போணக்காடு பிக்கெட் ஸ்டேஷனில் பயணம் நிறைவு பெறுகிறது.இம் மூன்று நாள் பயணத்தின்போது சுத்தமான காற்று, மூலிகை கலந்த நீர், செல்போன் தொந்தரவு இல்லாத வெளி உலகத் தொடர்பின்மை, பார்க்கும் இடங்கள் எல்லாம் மனதைக் கவரும் பசுமை வெளி ஆகியவற்றால் நமது உடலும், உள்ளமும் புத்துணர்வு பெற்றது என்றால் அது மிகையாகாது.

தமிழ் முனிவரைத் தரிசிக்க ஆண்டுதோறும் ஜனவரி 15 முதல் சிவராத்திரி வரை கேரளத்தவர்கள் தினமும் குழுவாக (நாள் ஒன்று சுமார் 200 பேர்) சென்று வருகின்றனர்.

இந்த உச்சிப் பகுதியில் திடீர், திடீரென வெயிலும் சில நேரங்களில் உடலை நடுங்கச் செய்யும் பலத்த குளிர் காற்றும், சில நேரம் மழையும், சாரலும் ஏற்படும்.ஆனால் மலைப்பகுதிகளில் மெதுவாக வழிந்தோடும் சிற்றோடையில் குளிப்பது அற்புதமான அனுபவம். உடல் அதிகபட்சமாக தாங்கும் அளவிற்கான குளிர்ச்சி, சில்லிப்பு நீரில் உறைந்து ஊறி இருக்க..முழங்கால் அளவு நீரில் உடலை மூழ்கச் செய்ததும்.. சின்னச்சிறு லட்சக்கணக்கான ஊசிகள் உடலில் இருந்து வெளியேறுவது போன்ற உணர்வு தொடர்ந்து பல நிமிடங்களுக்கும் இருக்கும்!!!!!
------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!!!
அன்புடன்
வாத்தியார்
===============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

4 comments:

  1. வணக்கம் குருவே!
    பொதிகை மலை தரிசன அனுபவம்
    மிகவும் ரசிக்கத் தகுந்தது!
    முறையான வழியில் சரியான
    துணையுடன் எட்டிரங்கள், அருவிகள்
    முதலான அத்தனை போன்ற அத்தனையும் பார்த்து முநிபுங்கவரை
    தரிசித்து அருமையான நினைவுகளுடன் வீடு திரும்பிய
    அனுபவத்தை அள்ளித் தந்த தங்களுக்கு எனது மனமுவந்த
    வாழ்த்துக்கள், வாத்தியார் ஐயா!

    ReplyDelete
  2. ////Blogger kmr.krishnan said...
    Awesome/////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!!!!

    ReplyDelete
  3. //////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    பொதிகை மலை தரிசன அனுபவம்
    மிகவும் ரசிக்கத் தகுந்தது!
    முறையான வழியில் சரியான
    துணையுடன் எட்டிரங்கள், அருவிகள்
    முதலான அத்தனை போன்ற அத்தனையும் பார்த்து முநிபுங்கவரை
    தரிசித்து அருமையான நினைவுகளுடன் வீடு திரும்பிய
    அனுபவத்தை அள்ளித் தந்த தங்களுக்கு எனது மனமுவந்த
    வாழ்த்துக்கள், வாத்தியார் ஐயா!////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com