9.11.18

நீங்கள் அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படம்!!!!!


நீங்கள் அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படம்!!!!!

சிவகெங்கைச் சீமை திரைப்படம்
#மருது பாண்டியர்

தமிழ் மண்ணைச் சேர்ந்த அனைவரும் பார்க்க வேண்டிய படம் இது. படம் வெளிவந்து 59 வருடங்களுக்கு பிறகு இப்போது ஒரு ரிவ்யூ (review).

கண்ணதாசனே திரைக்கதை,வசனம், பாடல் வரிகள் எழுதி தயாரித்த சிவகெங்கைச் சீமை படம் 1959ல் வெளியாகியுள்ளது. கே. சங்கர் இயக்கியுள்ளார். பிளாக் அன்ட் ஒய்ட் படம் தான்.இது வெற்றிப்படமில்லை என்றபோதும் தமிழ் சினிமாவில் இன்றும்  ஒரு முன்மாதிரிப் படம்.

சரித்திரப்படம் என்றவுடனே பளபளக்கும் ஜிகினா ஆடைகள், பிரம்மாண்டமான அரண்மனை, டம்மி தங்க வைர நகைகள், அந்தப்புரம், விஷம் கொடுத்து கொலை செய்யும் சதிகாரர்கள் , பக்கம் பக்கமாக வசனம் பேசும் நடிகர்கள் என்ற பிம்பமே எப்போதுமிருக்கிறது. ஏன் இக்காலத்தில் வெளியான பாகுபலி படமே அப்படித் தானே?

அந்த வகையில் சிவகங்கை சீமை முன்னோடியான படம். இதில் தான் முதன்முறையாக மன்னர்கள் வேஷ்டி அணிந்து மேல்துண்டுடன் இருக்கிறார்கள்.  பகட்டான ஜிகினா ஆடைகள் கிடையாது.  சின்னமருது, பெரியமருது இருவரையும் பற்றிய படம். அது போலவே படத்தில் வரும் பெண்களும் கண்டாங்கி சேலைகள் கட்டி யதார்த்தமாக இருக்கிறார்கள்.

அன்றைய சிவகங்கை சீமை என்பது தெக்கூர்,ஒக்கூர், சிறாவயல், பூங்குடி, திருப்பத்தூர், நரிக்குடி திருமயம், முக்குளம், நாலுகோட்டை, நாட்டரசன் கோட்டை உள்ளடக்கியது. இதற்குள் தான் செட்டிநாடும் அடங்குகிறது. கண்ணதாசன் செட்டிநாட்டில் பிறந்ததால்   அவர் சிவகங்கை சீமையின் வரலாற்றினை ஆழ்ந்து அறிந்திருக்கிறார். படத்தில் வரைபடம் காட்டப்படுகிறது அதை பார்த்தால் நன்றாகவே புரியும்.

மருது சகோதர்களை பற்றிய  பாடல்களையும் கூட கண்ணதாசன் சிறப்பாக தனது படத்தில் எழுதியிருக்கிறார். படத்தில் வரும் வெல்ஷ் துரை ஆங்கிலத்தில் தான் பேசுகிறார். துபாஷி தான் அதை மொழிபெயர்த்து சொல்கிறார். கோட்டைகள், வீடு யாவும் அந்த நிலப்பகுதியின் யதார்த்தமான கட்டிடங்களாக உள்ளது. சாப்பிடுவது கூட தரையில் அமர்ந்து தான் சாப்பிடுகிறார்கள்  மேடைகள் பயன்படுத்தவில்லை அந்த அளவுக்கு யதார்த்தமாக எடுத்துள்ளார்கள்.

படத்தின் மிகப்பெரிய குறை கதைக்கு சற்றும் தொடர்பில்லாமல் திராவிடநாடு பற்றி பாடும் பாடல். இவை தவிர்க்கப் பட்டிருந்தால் படம் இன்னும் சிறப்பாக வந்திருக்க கூடும்.

கதைச் சுருக்கம்:

கட்டபொம்மனைப் பிடித்து வெள்யையர்கள் தூக்கிலிட்டதால் அவரது தம்பியான ஊமைத்துரை சிவகங்கை சீமையில் அடைக்கலமாகிறார். பெரிய மருதுவிற்கு தெரியாமல் சின்னமருது ஊமைத்துரைக்கு அடைக்கலம் தருகிறார். அது வெள்ளையர்களுக்கு கோபத்தை உருவாக்குகிறது. மருது சகோதர்களிடம் வெள்ளையர்கள்  ஊமைத்துரையை ஒப்படைக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். நம்பிவந்தவரை காட்டி கொடுப்பது நட்பல்ல என்று வெள்ளையர்களை மருது சகோதரர்கள்  எதிர்க்கிறார்கள்.

வெள்ளையர்களுக்கும் மருது பாண்டியருக்கும் போர் ஆரம்பமானது. 2000 வீரர்கள் வீர மரணம் அடைந்தார்கள்.
இறுதியில் வெல்ஷ் துரை மருது குடும்பத்தினரை சிறை பிடிக்கிறான். மருது சகோதரர்கள் இருவரும் திருப்பத்தூரில் வெல்ஷ் துரையால் தூக்கிலிடப் படுகிறார்கள். பெரிய மருதுவின் கடைசி ஆசை படி அவரின் தலையை துண்டித்து காளையார் கோவில் முன்பாக வைக்கிறார்கள். மருது குடும்பத்தில் எவரையும் விட்டுவைக்காமல் பழிதீர்த்தது கும்பினி அரசு (வெள்ளையர்கள்).
●●●●●●●●●●●●●

வீரபாண்டிய கட்டபொம்மனும் சிவகங்கை சீமையும் ஒரே நேரத்தில்(1959ல்) தயாரிக்க பட்டிருக்கின்றன. அரசியல் காரணங்களுக்காக வீரபாண்டிய கட்டபொம்மன் படத்திற்கும் சிவகெங்கைச் சீமை படத்திற்கும் இடையே தேவையற்ற மோதல்கள், சர்ச்சைகள் உருவாகியுள்ளது.

கண்ணதாசனே இதைப் பற்றி தனது சுயசரிதையான வனவாசம் நூலில் சொல்கிறார் தான் செய்த ஒரே தவறு இந்த படத்தை வீரபாண்டிய கட்டபொம்மன் படத்திற்கு முன்பாக வெளியிட்டது. வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு பிறகு இது வெளியாகி இருந்தால் ஊமைத்துரையின்  காரணமாக மருது சகோதரர்கள் உயிர்விடும் போது பார்வையாளர்கள் மிகவும் வருந்தியிருப்பார்கள். ஆனால் தன் படம் முன்னாடியே வெளியானது தோல்விக்கு காரணம் என்று குறிப்பிடுகிறார்.

வெற்றி தோல்வியை தாண்டி சிவகங்கை சீமை படம் பல்வேறு வரலாற்று பதிவுகளை சொல்கிறது. குறிப்பாக வெள்ளையர்களை எதிர்க்க வேண்டும் என்ற சூழல் மருதுபாண்டியர்களுக்கு எப்படி உருவாகிறது என்பதை படம் அழகாக சித்தரிக்கிறது.

ஆக்கம் -Kailash PL
அவருக்கு நம் நன்றிகள் உரித்தாகுக!!!
------------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
======================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

4 comments:

  1. ஆம், இப்படம் பற்றியும் அதன் சிறப்பு மற்றும் சர்ச்சைகள் பற்றியும் படித்திருக்கிறேன். என்னால் வீட்டில் 'மானம் காத்த மருதுபாண்டியர்கள்' என்றொரு புத்தகம் இருந்தது. சிறுவயதில் அந்தப் புத்தகத்திலும் இவர்களின் வீர வரலாறு படித்திருக்கிறேன்.

    ReplyDelete
  2. //////Blogger ஸ்ரீராம். said...
    ஆம், இப்படம் பற்றியும் அதன் சிறப்பு மற்றும் சர்ச்சைகள் பற்றியும் படித்திருக்கிறேன். என்னால் வீட்டில் 'மானம் காத்த மருதுபாண்டியர்கள்' என்றொரு புத்தகம் இருந்தது. சிறுவயதில் அந்தப் புத்தகத்திலும் இவர்களின் வீர வரலாறு படித்திருக்கிறேன்.//////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்த்திற்கு நன்றி ஸ்ரீராம்!!!!

    ReplyDelete
  3. /////Blogger kmr.krishnan said...
    Very much true.Nice Sir./////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்த்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com