5.4.17

நீங்களும் நானும் கலியுகமும்!!!


நீங்களும் நானும் கலியுகமும்!!!

இந்த குதிரை விற்பனைக்கு அல்ல...

பரபரப்பாக இயங்கிக் கொண்டு இருந்தது அந்த சந்தை.

பொருட்களை விற்பவர்களும், வாங்குபவர்களுமாக ஏராளமானவர்கள் கூடி இருந்தார்கள்.
மேற்கு திசையில் சூரியன் மறையக்கூடிய நேரம் நெருங்கிய நேரத்தில்.....

குட்டையான கருத்த உருவத்தோடு ஒருவர் ஒரு குதிரையுடன் சந்தைக்குள் நுழைந்தார்.

அவர் கொண்டு வந்த குதிரையின் அழகு அனைவரையும் கவர்ந்தது.

பளபளவென கருத்த உடம்பு, மினுமினுப்பான வால், நெற்றியின் நடுவில் நட்சத்திர வடிவில் வெள்ளையாக மச்சம், கம்பீரமான நடை
 என்று ஒரு குதிரை, சந்தைக்கு வந்தால் யார்தான் பார்க்க மாட்டார்கள்!

எல்லோரும் அந்த குதிரையின் அழகில் மயங்கி, "எவ்வளவு அழகான குதிரை, இதன் விலையும் அதிகமாகத்தான் இருக்கும்" என்று சொல்லி ஒதுங்கி விட்டார்கள்.

அப்போது.....

பஞ்சபாண்டவர்களில் ஒருவரான சஹாதேவன் சந்தைக்குள் நுழைந்தான். அழகான குதிரையை அவனும் பார்த்தான். உடனே குதிரையின் உரிமையாளரை நெருங்கி, "குதிரை என்ன விலை? என்று கேட்டான்.

குதிரையின் உரிமையாளரோ, "ஐயா! இந்த குதிரை விற்பனைக்கு அல்ல. நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொன்னால், குதிரையை இலவசமாகவே கொடுப்பேன்" என்றார். சகாதேவன் உடனே, "சரி கேள்வியைச் சொல்லுங்கள்" என்றான்.

குதிரையின் உரிமையாளர், "நன்றாகக் கவனியுங்கள்! பிறகு பதில் சொல்லுங்கள்!

ஒரு பெரிய கிணறு. அதில் உள்ள தண்ணீரைக் கொண்டு ஏழு சிறிய கிணறுகளை நிரப்பலாம். ஆனால், அந்த ஏழு கிணறுகளில் இருக்கும் தண்ணீரை எடுத்து, மறுபடியும் அந்த பெரிய கிணற்றில் ஊற்றினால், பெரிய கிணறு நிரம்பவில்லை. இது ஏன்? நன்றாக யோசித்து பதில் சொல்லுங்கள்" என்றார். சஹாதேவனால் பதில் சொல்ல முடியவில்லை. அங்கேயே சந்தையில் உட்கார்ந்து விட்டான்.

சற்று நேரத்தில்.... சகாதேவனை தேடிக்கொண்டு நகுலனும் சந்தைக்கு வந்து விட்டான். அவனும் குதிரையைப் பார்த்து, அதன் அழகில் மயங்கிப் போய் விலை கேட்டான்.

குதிரையின் உரிமையாளர், நகுலனிடம் ஒரு கேள்வி கேட்டார். "ஐயா! நான் ஒரு கேள்வி கேட்கிறேன். பதில் சொல்லிவிட்டு, குதிரையை இலவசமாகவே பெற்றுக்கொள்ளுங்கள்.

துணி தைக்கும் ஊசி இருக்கிறது அல்லவா? அதன் ஓட்டையின் வழியாக ஒரு யானை புகுந்து, அடுத்த பக்கம் போய்விட்டது. ஆனால் யானையின் வால் மட்டும் அந்த ஓட்டையின் வழியாகப் போக முடியவில்லை. ஏன்?" என்றார்.

நகுலனால் பதில் சொல்ல முடியவில்லை. அவனும் சந்தையில் உட்கார்ந்திருந்த சஹாதேவனுடன் சேர்ந்து உட்கார்ந்துவிட்டான்.

அதன் பிறகு ஒரு சில நிமிடங்களில், அர்ஜுனனும் அங்கு வந்தான். அவனும், குதிரையைப் பார்த்து, அதன் அழகில் மயங்கிப் போய் விலை கேட்டான். குதிரையின் உரிமையாளர், அர்ஜுனனிடமும் கேள்வி கேட்டார்.

"ஐயா! ஒரு வயல் காட்டில் நன்றாக விளைந்து இருந்தது. அதற்கு வேலியெல்லாம் போட்டு பாதுகாப்பாக வைத்து இருந்தார்கள். ஆனால் அறுவடை காலத்தில், அந்த வயல் காட்டில் எதுவுமே இல்லை. வேலியெல்லாம் அப்படியே இருந்தது. அப்படி இருந்தும் விளைந்த தானியங்களை எல்லாம் யார் எடுத்தார்கள்? பதில் சொல்லிவிட்டு, குதிரையை கொண்டு செல்லுங்கள்" என்றார். அர்ஜுனனால் பதில் சொல்ல முடியவில்லை. அவனும் ஆலோசனை செய்தபடி அங்கேயே உட்கார்ந்து விட்டான்.

சகோதரர்கள் மூவரும் இப்படியே உட்கார்ந்திருக்க, அரண்மனையில் அவர்களைக் காணாமல், தர்மர் திகைத்தார். பீமனைக் கூப்பிட்டு, "தம்பி! நம் தம்பிகள் மூவரையும் நீண்ட நேரமாக காணவில்லை. நீ போய், அவர்கள் எங்கு இருந்தாலும் தேடி அழைத்து வா!" என்றார்.

பீமனும் போய் தேடிப்பிடித்து, அர்ஜுனன், நகுலன், சஹாதேவன் மூவரையும் அழைத்து வந்தான். பாஞ்சாலியோடு அரியணையில் அமர்ந்திருந்த தர்மர், அவர்களைப் பார்த்ததும், "அர்ஜுனா! நீண்ட நேரமாக நீயும் உன் தம்பிகளும் இங்கு இல்லை. எங்கே போய் இருந்தீர்கள்?" எனக் கேட்டார்.

அதற்குப் பதிலாக அர்ஜுனன், நடந்ததை எல்லாம் சொல்லி, குதிரை உரிமையாளர் கேட்ட மூன்று கேள்விகளையும் சொன்னான்.

அதைக் கேட்டதும் தர்மர் நடுங்கினார். அதைப் பார்த்த தம்பிகள்  எல்லாரும் திகைத்தார்கள்.

"அண்ணா! நீங்கள் நடுங்கும்படியாக என்ன நடந்தது?" எனக் கேட்டார்கள்.

தர்மர் பதில் சொல்லத் தொடங்கினார்.....

"தம்பிகளே! எதிர்காலத்தில் நடக்கப்போகும் விபரீதங்களை, அந்த மூன்று கேள்விகளும் சொல்கின்றன. அதை நினைத்துத்தான் நடுங்கினேன். ஒவ்வொன்றாகச் சொல்கிறேன் கேளுங்கள்....." என்று விரிவாகக் கூறினார்.

"உங்களிடம் கேள்வி கேட்டவன் கலி புருஷன். அவன் கேட்ட முதல் கேள்வியில் பெரிய கிணறு என்பது பெற்றோர்கள். ஏழு சிறிய கிணறு என்பது அவர்களது பிள்ளைகள். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை, அவர்கள் எவ்வளவு பேர்களாக இருந்தாலும் சரி! அவ்வளவு பிள்ளைகளையும் காப்பாற்றுவார்கள். இதைத்தான் பெரிய கிணற்றின் தண்ணீரைக் கொண்டு சிறிய கிணற்றை நிரப்பினார்கள் என்றது குறிக்கிறது. ஆனால் அந்த பிள்ளைகளோ, அவ்வளவு பேர்களும் சேர்ந்தால் கூட, தங்கள் பெற்றோரை காப்பாற்ற மாட்டார்கள். இதைத்தான் ஏழு சிறிய கிணறுகளில் உள்ள தண்ணீரைக் கொண்டு, பெரிய கிணற்றை நிரப்ப முடியவில்லை என்பது குறித்தது.

அடுத்து இரண்டாவது கேள்விப்படி, இனி வருங்காலங்களில் அக்கிரமங்கள், முறைகேடான செயல்கள் ஏராளமாக நடைபெறும். ஆனால் நல்ல செயல்கள் நடைபெறுவது மிகவும் கடினமாக இருக்கும். இதைக்த்தான் யானையே போன வழியில், அதன் வால் போக முடியவில்லை என்று சொல்லி இருக்கிறார்.

அடுத்து மூன்றாவது கேள்வியில் பயிர்கள் என்பது மக்களைக் குறிக்கும், பாதுகாக்கும் வேலி என்பது அதிகாரிகளைக் குறிக்கும். அதாவது மக்களைப் பாதுகாக்க வேண்டிய அதிகாரிகளே அவர்களை அழித்து விடுவார்கள். மக்கள்தான் வறுமையில் வாடுவார்களே தவிர, அதிகாரிகள் செழிப்பாகத்தான் இருப்பார்கள். இதைத்தான், வேலி அப்படியே இருக்க,  பயிர்கள் எப்படி அழிந்தன என்ற கேள்வி குறிப்பிடுகிறது என்று சொல்லி முடித்தார் தர்மர்...

கலியின் ஆரம்பம் பற்றிய நிலைமை இதுதான். கலி முற்ற முற்ற இந்தக் கேடுகளும் அதிகமாகும்.
----------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
=======================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

8 comments:

  1. Respected Sir,

    Pleasant morning... WISH YOU HAPPY RAMA NAWAMI TO ALL.

    Very very interesting article. Thanks for sharing.

    Have a holy day.

    Thanks & Regards,
    Ravi-avn

    ReplyDelete
  2. வணக்கம் ஐயா,சிறப்பான கதை.அறிகுறிகளும் ஆரம்பித்து விட்டன.நன்றி.

    ReplyDelete
  3. ////Blogger smruthi sarathi said...
    Nice story sir... Great answers/////

    நல்லது. நன்றி சகோதரி!

    ReplyDelete
  4. /////Blogger ravichandran said...
    Respected Sir,
    Pleasant morning... WISH YOU HAPPY RAMA NAWAMI TO ALL.
    Very very interesting article. Thanks for sharing.
    Have a holy day.
    Thanks & Regards,
    Ravi-avn/////

    நல்லது. நன்றி ரவிச்சந்திரன்!!!!

    ReplyDelete
  5. /////Blogger kmr.krishnan said...
    very good story Sir.Thank you.////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!!!!

    ReplyDelete
  6. ////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,சிறப்பான கதை.அறிகுறிகளும் ஆரம்பித்து விட்டன.நன்றி.////

    நடக்கும் நிகழ்வுகள் இத்ற்குச் சான்றாக உள்ளன! நன்றி ஆதித்தன்!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com