27.10.16

Short Story: சிறுகதை: மணிவிழா


Short Story: சிறுகதை: மணிவிழா

மாத இதழ் ஒன்றிற்காக அடியேன் எழுதிய சிறுகதை ஒன்றை நீங்கள் படித்து மகிழ இன்று, இங்கே பதிவிட்டுள்ளேன்.

அன்புடன்
வாத்தியார்
----------------------------------------------------------------
சாரதா ஆச்சி, அதாவது தனது மனைவி சாரதா ஆச்சி வந்து நின்று கேட்டவுடன், சண்முகம் செட்டியார் நிமிர்ந்து பார்த்தார். ஆச்சி அதே கேள்வியை மீண்டும் கேட்டார்கள்.

“உண்டக்கட்டி, உண்டக்கட்டி என்று சொல்கிறீர்களே என்ன அர்த்தத்தில் அதைச் சொல்கிறீர்கள்?”

அண்ணன் புன்னகைத்துவிட்டு, பதில் சொல்லாமல், பதிலுக்குக் கேள்வி ஒன்றைக் கேட்டு வைத்தார்:

“நீதான் தமிழில் முதுகலைப் பட்டதாரி ஆயிற்றே. அத்துடன் தமிழ் பேராசிரியை வேறு. அதன் அர்த்தம் உனக்கு தெரியாதா?”

“எனக்குத் தெரிந்த அர்த்தம் வேறு. நீங்கள் என்ன காரணத்துடன் அதைச் சொல்கிறீர்கள். அதைச் சொல்லுங்கள்”

”கோயில்களில் வழங்கப்படும் இலவச உணவுப் பொட்டலங்களுக்கு அந்தப் பெயர். அதாவது கோயிலில் வழங்கப்படும் சர்க்கரை சாதம், புளி சாதம், தயிர் சாதம், சம்பா சாதங்களுக்கு அந்தப் பெயர்.”

“சரிதான். ஆனால் அதை ஏன் நீங்கள் சென்று விட்டு வந்த மணிவிழாவிற்கு - உண்டக்கட்டி மணிவிழா என்று ஏன் குறையாகச் சொல்லி அவர்களைத் திட்டுகிறீர்கள்?”

“மணிவிழா என்று கூப்பிடுகிறார்கள். சென்னையில் இருந்து செட்டிநாட்டிற்கு  நானூற்றி ஐம்பது கிலோ மீட்டர் தூரம் பயணித்து அங்கே செல்கிறோம். அத்துடன் போக வர குறைந்தது ஆயிரம் ரூபாய் செலவாகிறது. வருகிறவர்களுக்கு நல்ல சாப்பாடாவது போட வேண்டாமா? சென்ற வாரம் குப்பாஞ்செட்டியாரின் மணிவிழாவிற்கு சென்றபோது, கந்த சஷ்டி கழக கல்யாண மண்டபத்தில் மணிவிழாவை நடத்தியதோடு வந்தவர்களுக்கெல்லாம் உண்டக்கட்டி சாப்பாடுதான் போட்டார்கள். எனக்கு வருத்தம். அதனால்தான் அப்படிச் சொன்னேன்”

“நெடுங்குடி சமையல் கலைஞர்களை வைத்து நல்ல சாப்பாடு செய்து போட்டால், சந்தோஷமாக, முழுமையாக அதை ரசித்தா சாப்பிடுகிறீர்கள்?
அடுத்த இலையில் சாப்பிடுபவன் ரசம் சாதம் சாப்பிடுவதற்குள், எத்தனை பேர், இலையை மடக்கிவிட்டு எழுந்து விடுகிறீர்கள்? அதை எங்கே போய்ச் சொல்வது?”

“பொதுப்படையாக எல்லோரையும் குறை சொல்லக்கூடாது. நல்ல சாப்பாடு போடுவது, அழைப்பவர்களின் கடமை அல்லவா?”

“வசதி இருப்பவர்கள் போடுவார்கள். வசதி இல்லாதவர்கள் என்ன செய்ய முடியும்?”

“வசதி இல்லாதவர்கள் எதற்காக மணிவிழா கொண்டாட வேண்டும்? குடும்பத்தை மட்டும் கூட்டிக் கொண்டுபோய் கோயிலில் அர்ச்சனை செய்து சாமி கும்பிட்டு விட்டுத் திரும்பி வரவேண்டியதுதானே? எதற்காக பத்திரிக்கை அடித்து பங்காளிகளையும், உறவினர்களையும் அழைத்து சிரமப்பட வைக்கவேண்டும்? அத்துடன் உக்கிரரத சாந்தி, சஷ்டியப்த பூர்த்தி சாந்தி, பீமரத சாந்தி என்று தொடர்ந்து 59, 60, 70, 75, 80, 83 என்று தங்களை முன்னிறுத்தி எதற்காக விழா எடுக்க வேண்டும்? குறிப்பிட்ட வயதில் ஏதாவது ஒரு விழாவை மட்டும் எடுத்தால் போதாதா? ”

“அதனால் உங்களுக்கு என்ன பிரச்சினை? முடிந்தால், மனமிருந்தால் செல்லுங்கள். இல்லாவிட்டால் வீட்டிலேயே சும்மா இருங்கள். வரவில்லை என்று உங்களை யார் அடிக்கப் போகிறார்கள்?”

“பங்காளிகள் வீட்டு விஷேசங்களுக்கு, அதுவும் அய்யா வீட்டுக்காரர்களின் வீட்டு விஷேசங்களுக்கு செல்ல வேண்டும் என்ற எழுதாத சட்டம் இருக்கிறதே - அதை எப்படிப் புறந்தள்ளுவது? அத்துடன் தாயபிள்ளைகள் வீட்டு நிகழ்ச்சிகளை எப்படி ஒதுக்கிவிட்டு சும்மா இருப்பது?”

"ஒதுக்கி விட்டு சும்மா இருக்க முடியாது என்பதைப்போல, போய்விட்டு வந்து குறை சொல்லாமல், திட்டாமல் இருக்கவும் பழகிக் கொள்ள வேண்டியதுதான்!”

“மன ஆதங்கத்தை எப்படி வெளிப் படுத்தாமல் இருக்க முடியும்? வசதி இருப்பவர்கள், அதாவது சொத்து சுகம் இருப்பவர்கள் அல்லது நல்ல வருமானம், பணங்காசு இருப்பவர்கள் கொண்டாடட்டும். வீட்டுக்கு வீடு வேஷ்டி துண்டு எல்லாம் வாங்கிக் கொடுத்துக் கொண்டாடுகிறார்கள் கொண்டாடட்டும். வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் புலியைப் பார்த்து பூனை தாவுவதைப் போல ஒன்றும் இல்லாதவர்களும், தங்கள் பிள்ளைகளைக் கசக்கிப் பிழிந்து பணம் வாங்கி வெட்டிப் பெருமைக்கு விழா எடுக்கிறார்களே - அதை எப்படி நியாயப் படுத்த முடியும்?”

“நியாயப் படுத்துவது நமது வேலை இல்லை. அதேபோல் அடுத்தவர்களைத் திட்டுவதும் குறை சொல்வதும், நமது வேலை இல்லை! உங்களால் முடிந்தால் செல்லுங்கள். இல்லாவிட்டால் சிவனே என்று சும்மா இருங்கள். என்ன நடந்தாலும் எதிர் கொள்வோம்!”

“நீ சொன்னால் சரிதான். உண்டக்கட்டி என்பதற்கு உனக்குத் தெரிந்த அர்த்ததை நீ சொல்!”

”பயனற்ற, உழைக்காது திரியும் ஆண்மகனை; தண்டச்சோறு; ஊர்சுற்றி, உண்டக்கட்டி என்று இழிந்த பொருளில் சாடுவது தமிழர் வழக்கு. சில சமூகங்களில் இன்றும் அப்படித்தான் சொல்வார்கள். ஆனால் அந்தச் சொல்லின் உண்மையான பொருள் வேறு. இப்பெயர் மருவியது சுவையான மாற்றமாகும். முற்காலத்து அரண்மனைகளில் ஒவ்வொரு வேளையும் அரசர் சாப்பிடுமுன் அவருக்காகச் சமைக்கப்பட்ட உணவு வகைகள் நச்சுத்தன்மை இன்றி உள்ளதா என்பதைச் சோதித்துப் பார்ப்பதுண்டு. அச்சோதனை, அவ்வரண்மனையில் நியமிக்கப்பட்ட இரு -சாப்பாட்டு ராமர்- ஆடவர்களை உண்ண வைத்து மேற்கொள்ளப்படும். சாப்பிட்டபின் அவர்களுக்கு விபரீதம் ஏதும் நேரவில்லை என்பதை உறுதி செய்த பின்னரே, அவ்வுணவு வகைகள் அரசருக்குப் பரிமாறப்படும். அவ்வாறு சோதனைக்காகச் சாப்பிட்டுக் காட்டுபவர்களுக்கு "உண்டு காட்டிகள்" என்று பெயர். இத்தகைய "உண்டு காட்டி" என்ற பெயரே பிற்காலத்தில் உண்டக்கட்டி என்று மருவியது. "தண்டச்சோறு" என்றும் வழங்கலாயிற்று.”

“அப்படியென்றால் விருந்துகளுக்குச் செல்லும் நாங்களெல்லாம், விருந்தினர்களா? அல்லது உண்டு காட்டிகளா?”

“எப்படி வேண்டுமென்றாலும் வைத்துக் கொள்ளுங்கள்” என்று சொல்லிவிட்டு ஆச்சி நகர்ந்து சென்றவுடன் அவர்களின் உரையாடல் அத்துடன் நிறைவு பெற்றது.

                              *********************************************************

சண்முகம் செட்டியாருக்கு தேசிய வங்கி ஒன்றில் மேலாளர் வேலை. இந்த அக்டோபர் மாதம் எட்டாம் தேதிமுதல் பன்னிரெண்டாம் தேதிவரை தொடர்ந்து ஐந்து நாட்கள் விடுமுறை வந்ததால், திருச்செந்தூர் சென்று வரத் திட்டமிட்டிருந்தார். ஆனால் அவருடைய மூத்த சகோதரர் தன் மனைவி மகனுடன் சென்னைக்கு வருவதாகச் சொன்னதால், கோயில் பயணத்தை ரத்து செய்துவிட்டு வீட்டிலேயே இருந்தார்.

அவருடைய அண்ணன் மகன் சரவணன், அவன் வேலை செய்யும் பன்னாட்டு நிறுவனத்தின் சார்பில் அமெரிக்காவிற்குச் செல்லவிருக்கிறான். தன்னுடைய சிறிய தந்தையார் மற்றும் சிறிய தாயார் ஆகிய இருவரையும் சந்தித்து ஆசி பெற்றுச் செல்ல விரும்பியதால் தன் பெற்றோர்களுடன் அவன் சண்முகம் அண்ணன் வீட்டிற்கு வந்திருந்தான்.

சண்முகம் அண்ணனும் தட்டில் வெற்றிலை, பாக்கு, அடையாறு ஆனந்தபவன் பாதாம் ஹல்வா ஆகியவற்றுடன் ஆயிரத்தோரு ரூபாய் பணம் வைத்து, தன் மனைவியுடன் வீட்டு சுவாமி அறையில் நின்று அவனை மனதார வாழ்த்தி அதை வழங்கினார்.

சாஷ்டாங்கமாக அவர்களைத் தரையில் விழுந்து வணங்கியவன், கண்ணில் நீர் மல்க அதைப் பெற்றுக் கொண்டான்.

அன்று மாலையே அவர்கள் கிளம்பிச் சென்று விட்டார்கள். இன்னும் இரண்டு நாளில் அவன் அமெரிக்கா புறப்பட வேண்டும். அவர்கள் இருக்கும் திருவனந்தபுரத்தில் இருந்து விமானப் பயணம்.

அவர்கள் புறப்பட்டுச் சென்றவுடன், சண்முகம் அண்ணன், தன் மனைவியுடன் பேசத் துவங்கினார்.

“இதுதான் பாசம் என்பது. தட்டை வாங்கிக் கொள்ளும் போது, அவன் கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது பார்த்தாயா?”

“பார்த்தேன். உங்களிடம் ஆசி பெறுவதற்கு அவன் இத்தனை தூரம் பயணப்பட்டு வந்திருக்க வேண்டுமா? அதை தொலைபேசியிலேயே கேட்டுப் பெற்றுக் கொண்டிருக்கலாமே?”

“ஆன்லைனில் பணப் பரிவர்த்தனை செய்வதைப்போல ஆசிப் பரிவர்த்தனையும் செய்திருக்கலாம் என்கிறாயா?”

“ஆமாம்!”

“திருமணம் என்றால் பெண்ணும் பையனும் நேரில் இருந்துதான் தாலி கட்டிக் கொள்ள முடியும். ஆன் லைனில் கட்டிக் கொள்ள முடியாது. அதுபோல ஆசிகள் எல்லாம் நேரில்தான் வணங்கிப் பெற்றுக் கொள்ள வேண்டும். அந்த ஆசிகள் உடன் இருந்து, பெறுபவர்களைக் காக்கும். நம் குல தெய்வப் பிரார்த்தனைகள் நம்மைக் காப்பது போல!”

“கரெக்ட். இந்த பதிலைத்தான் நான் எதிர்பார்த்தேன். உங்கள் பதிலுக்கு நன்றி! இப்போது தெரிந்து கொள்ளுங்கள். மணிவிழாவிற்கு பங்காளிகளையும் உறவினர்களையும் அழைப்பவர்கள், அவர்களிடமிருந்து ஆசிகளைப் பெறுவதற்காகத்தான் அவர்களை அழைக்கிறார்கள். அவர்களின் நோக்கமும் அதுதான். அதை மனதில் வையுங்கள். ஆகவே அங்கே சென்று ஆசீர் வதிப்பவர்கள், அவர்கள் எண்பதும் நூறும் கண்டு இனிதாக வாழ வேண்டும் என்று ஆசீர்வதிக்க வேண்டுமே தவிர, வேறு எதையும் எதிர்மறையாகச் செய்யக்கூடாது.”

சண்முகம் செட்டியாருக்கு செவிட்டில் அரைந்ததைப் போன்று இருந்தது. அடடா, இந்தக் கோணத்தில் நாம் சிந்திக்கவில்லையே என்ற வருத்தமும் மேலோங்கி நின்றது.

ஆச்சியின் சிந்தனைத் திறன் கண்டு அவரின் மனம் மகிழ்ந்தது என்று சொல்லவும் வேண்டுமா? உண்டக்கட்டி மணிவிழா என்று குறை சொல்வதை இப்போது அவர் அறவே நிறுத்திவிட்டார்

                           ***********************************************
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

5 comments:

  1. அருமையான கதை ஐயா!

    உண்டுகாட்டி, உண்டக் கட்டி ஆனது என்பதும் சரிதான். இப்படியும் இருக்கலாம் என்று ஒரு கருத்தினைச் சொல்கிறேன்.

    உருண்டை என்பது உண்டை என்று மாறியது.சாதாரணமாக கோவில் பிரசாதம்
    ஒரு பாத்திரத்தில் அப்பி எடுத்து, பட்டை பட்டை யாக தனித் தனியாக தாம்பாளத்தில் அடித்து வைத்து அதனை ஒவ்வொரு விக்கிரகத்திற்கும் நெய்வேத்தியம் செய்து எடுத்து வருவார்கள்.அது பார்க்க உருண்டையாக இருக்கும்.அந்த உருண்டைக் கட்டி சாதம் தாம் உண்டக்கட்டி.அதனை வாங்கி சாப்பிட்டுக் காலம் கழிப்பவரையும் உண்டக்கட்டி என்று அழைப்பார்கள்.

    ReplyDelete
  2. Respected Sir,

    Happy morning... Meaningful story.

    Thanks & Regards,
    Ravi-avn

    ReplyDelete
  3. வணக்கம் குருவே!
    தங்களின் கதைகளில் ஏதாவது ஒரு moral மையப்படுத்தப்பட்டிருப்பதை எப்போதுமே காண்கினறேன்!படிப்பவர் மனதிலும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்
    வகையில் கதை இருப்பது ஒரு plus point!

    ReplyDelete
  4. வணக்கம் ஐயா,கதையும்,கருத்தும்,உண்டகட்டி விளக்கமும் அசத்தல்.நன்றி.

    ReplyDelete
  5. Excellent story n brings out the ideas behind the various customs n usages practised by our great forefathers. Sv NARAYANAN

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com