9.6.16

உழைப்பு மற்றும் அனுபவக் கல்வியின் மேன்மை!


உழைப்பு மற்றும் அனுபவக் கல்வியின் மேன்மை!

7 வது வரை படித்தவர்... இப்போது 210 பஸ்களுக்கு முதலாளி !!!

படித்து பட்டங்கள் பல பெற்றவர்கள்தான் புதுமையாக சிந்தித்து ,தொழிலில் வெற்றிபெறமுடியும் என்பதில்லை......

பள்ளிக்கல்வியை முழுமையாக முடிக்காதவர்கள் கூட வெற்றிகரமான தொழில் முனைவோர்களாக விளங்குகிறார்கள் என்பதற்கு மற்றொரு உதாரணமாக வலம் வருகிறார் இந்த தொழிலதிபர்................

மூன்று ஆங்கில எழுத்துக்களை சொன்னாலே போதும், தமிழகம் மட்டுமல்ல தென்மாநிலங்களில் உள்ள மக்களுக்கும் அந்த சொகுப்பேருந்துகள்தான் நினைவுக்கு வரும். அந்தப் பேருந்துகளை இயக்கும் கே.பி.என். டிராவல்ஸ் அதிபர் கே.பி.நடராஜன்,


இன்றைய தேதியில் தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரா உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் தலா ஒன்றரைக்கோடி ரூபாய் மதிப்புள்ள 210 சொகுசு பேருந்துகளுக்கு சொந்தக்காரர்.

அதோடு 300 பார்சல் லாரிகளும் நாடுமுழுவதும் சுமைகளை ஏற்றி இறக்கி வலம் வந்துகொண்டிருக்கின்றன. இவ்வளவு பெரிய போக்குவரத்து சாம்ராஜ்யத்தை நிறுவி, வெற்றிகரமாக நடத்திவரும் கே.பி.நடராஜன், பெரிய பிசினஸ் படிப்பு எதுவும் படித்தவர் அல்ல. இவர் படித்தது வெறும் ஏழாம் வகுப்பு மட்டும்தான். ஆனால், அடைந்த வெற்றிகள் ஏராளம்.தனது வெற்றிக்கதையை சொல்கிறார் நடராஜன்....

'' நான் பிறந்து வளர்ந்தது சேலம், பெரியபுத்தூர் கிராமம். அப்பா பொன்மலைக்கவுண்டர் நாலரை ஏக்கர் நிலம் வைத்திருந்த சாதாரண விவசாயி. எனக்கு விவசாயத்தில் பெரிய நாட்டம் இல்லை. சிறு வயதில் இருந்தே மோட்டார் தொழிலில் ஈடுபடவேண்டும் என்கிற ஆசை எனக்கு அதிகம். ஏழாம் வகுப்பு தாண்டியதும் பள்ளிப்படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தேன். சில வருடங்கள் அப்பாவுக்கு துணையாக விவசாய வேலைகளை செய்தேன். ஒரு கட்டத்தில் என்னுடைய மோட்டார் தொழில் கனவு நிறைவேறும் சூழல் ஏற்பட்டது. 1968 ம் வருடம் எனது உறவினர்கள் சிலருடன் சேர்ந்து பஸ் ஒன்றை வாங்கினேன்.

அதுக்கு ’வெங்கடேஸ்வரா பஸ் சர்வீஸ்' என்று பெயர் வைத்து கோவை டூ பெங்களூரு ட்ரிப் அடித்தேன்.அந்த ஒற்றைப் பஸ்ஸின் ஓட்டுநரும் நான்தான், கிளீனரும் நான்தான். இப்படியாக தனி ஒருவனாக பஸ் போக்குவரத்தை நடத்தினேன். அடுத்த சில வருடங்களில் பங்குதாரர்கள் தங்கள் பங்கை பிரித்துக்கொண்டு வேறு தொழில்களுக்கு போய்விட்டார்கள்.

எனக்கு மோட்டார் தொழிலை விட மனதில்லை. என்னிடம் இருப்பில் இருந்த பணம் போதவில்லை. வெளியில் தெரிந்தவர்களிடம் கொஞ்சம் கடன் வாங்கி 1969 ல் ஒரு புதிய பஸ் ஒன்றை வாங்கினேன். எனது நெருங்கிய உறவினரின் குழந்தை பெயர் சிவக்குமார். அந்த குழந்தையின் பெயரையே புதிய பஸ் கம்பெனிக்கு வைத்தேன். 'சிவக்குமார் பஸ் சர்வீஸ்' என்கிற பெயரில் இயங்கிய அந்தப் பஸ்ஸின் டிரைவரும் நான்தான்.மதுரை டூ பெங்களூரு ரூட்டில் பேருந்தை இயக்கி, அந்த பஸ் கம்பெனியை 3 வருடங்களாக வெற்றிகரமாக நடத்தினேன். கிடைத்த லாபத்தில், தொடர்ந்து இன்னொரு பஸ் வாங்கினேன்.

எனது தாத்தா ’குப்பண்ணகவுண்டர் பெயரின் முதல் எழுத்தான 'கே' இன்ஷியலையும், எனது தகப்பனார் பொன்மலைக்கவுண்டர் பெயரில் இருந்து 'பி' எழுத்தையும், என்னோட பெயரில் இருந்து 'என்' ஆங்கில எழுத்தையும் எடுத்து இணைத்து, '1972 கே.பி.என்.' என்கிற பெயரைவைத்து, டிராவல்ஸ் கம்பெனி தொடங்கினேன்.

'ஏ.பி.சி 7581' என்கிற ஆந்திர மாநில பதிவு எண் கொண்ட அந்த கே.பி.என். டிராவல்ஸ் பஸ், திருநெல்வேலி - பெங்களூரு இடையே இயக்கப் பெற்றது. தொடர்ந்து இரண்டு வருடங்கள் நடந்த போக்குவரத்தை தொடர்ந்து, 1974ம் வருடத்தில், கே.பி.என்.டிராவல்ஸின் இரண்டாவது பஸ் இயக்கப்பெற்றது.1976 ல் மூன்றாவது பஸ்ஸை வாங்கினேன். மூன்று பேருந்துகளும் லாபகரமாக ஓடின.

பயணிகளிடம் நாங்கள் காட்டிய அன்பான அணுகுமுறை, சரியான நேரத்தில் புறப்பட்டு ஊரை சென்றடைதல், பாதுகாப்பான பயணத்திற்கு உத்தரவாதம் உள்ளிட்ட விஷயங்களில், எங்கள் கம்பெனி டாப்கியரில் போகத்தொடங்கியது. இதில் ஒரு விஷேசம் என்னவென்றால், ஒரு பஸ் மட்டும் இயக்கிய பொழுது, நான் மட்டும்தான் டிரைவர். இரண்டாவது பஸ்ஸை ஓட்ட, இன்னொரு டிரைவரை வேலையில் சேர்த்தேன். படிப்படியாக கம்பெனி வளர்ந்து, ஒரு கட்டத்தில் 10 வண்டிகளுடன் உயர்ந்தது. அப்படி 10 வண்டிகளுக்கு முதலாளி என்கிற அந்தஸ்து கிடைத்தபோதும், அதில் ஒரு வண்டியின் டிரைவராக நான்தான் இருந்தேன்.

அடுத்தடுத்து தொலைதூர பயணிகளை ஈர்க்கும் விதமாக சொகுசு பஸ்களை அறிமுகம் செய்தேன். குளுகுளு வசதி செய்யப்பட்டதும், சாய்மானம் கொண்ட மெத்தை இருக்கைகளை உடைய பஸ்களை வடிவமைத்தோம். அவற்றுக்கு பயணிகளிடம் பெரும் வரவேற்பு கிடைத்தது. தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் பல பஸ்களை இயக்கினோம்.

இந்தியாவில் படுக்கை வசதி கொண்ட தொலைதூர பஸ்ஸை அறிமுகம் செய்தது எங்கள் நிறுவனம்தான்.இப்போது எங்கள் நிறுவனத்தின் 210 பேருந்துகளில், 95 படுக்கை வசதி கொண்டவை.இன்று நாட்டின் எல்லா நகரங்களிலும் எங்கள் நிறுவனத்திற்கு பதிவுக் கிளைகள் உண்டு
நாட்டின் எந்த மூலையில் நீங்கள் இருந்தாலும், கே.பி.என்.டிராவல்ஸில் பயணம் செய்ய ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளமுடியும்.

ரயில் பயணிகளுக்கு ரயிலுக்குள் உணவு கிடைப்பது போல, எங்கள் பஸ்ஸில் பயணிப்பவர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தையும் செயல்படுத்திட உள்ளோம். எதிர்காலத்தில் 'கே.பி.என். ஏர்லைன்ஸ்' என்கிற பெயரில் குறைந்த கட்டணத்தில் விமானச் சேவை வழங்கும் ஒரு திட்டத்தைப் பற்றிய யோசனையும் இருக்கிறது.

ஏழாம் வகுப்பு வரை மட்டும் படித்த நான் 17 வயதில் கிளீனர்,18 வயதில் டிரைவர், 20 வயதில் ஒரு பஸ்ஸின் பங்குதாரர், 24 வயதில் கே.பி.என்.டிராவல்ஸ் என்கிற கம்பெனியின் முதலாளி என்று படிப்படியாக வளர்ந்து, இன்று 510 வாகனங்களை வைத்து இயக்கி வருகிறேன். நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் எங்கள் பஸ்ஸில் பயணிக்கிறார்கள். கோடிக்கணக்கான ருபாய் சரக்குகள் நாடெங்கிலும் எடுத்துச் செல்லப்படுகிறது. இதை நிர்வாகம் செய்ய, என்னிடம் நூற்றுக்கணக்கான பட்டதாரிகள் வேலை பார்க்கிறார்கள்" என்ற நடராஜன்," அன்றைக்கு ஏதோ ஒரு ஆர்வத்தில் படிப்பை பாதியில் கை விட்டேன். இன்னும் கூட படித்திருக்கலாம் என்கிற ஆதங்கம் சிலசமயம் எழுவதுண்டு. இன்று தென் மாநிலங்களுக்கு மட்டும் பஸ் போக்குவரத்தை நடத்திவரும் நான், பட்டப்படிப்பை படித்திருந்தால், இன்னும் நன்றாக பஸ் போக்குவரத்தை நடத்தியிருக்கலாம் என்று எப்போதாவது நினைப்பதுண்டு. ஆனாலும் வாழ்க்கையில் தெரிந்துகொண்ட அனுபவக் கல்விதான் என்னை இந்த அளவுக்கு உயர்த்தி உள்ளது என்பதையும் மறுபதற்கில்லை.'' என சொல்லி முடித்தார்!~

நன்றி :..... விகடன் 
==============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

14 comments:

  1. எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் மகிழ்ச்சி

    ReplyDelete
  2. விதித்தபடிதான் நடக்கும் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

    ReplyDelete
  3. Respected Sir,

    Happy morning... Hard work will never get failure.

    Thanks for sharing.

    Thanks & Regards,
    Ravi-avn

    ReplyDelete
  4. கே பி என் நான் பிறந்த மாவட்டத்தினைச் சேர்ந்தவர் என்பதில் பெருமை அடைகிறேன்.

    இப்போது ஆன் லைனில் கே பி என் பேருந்து டிக்கட்டுகளை வாங்கலாம்.அதில் முயற்சி செய்த போது பணம் செலுத்தும் ஆப்ஷனில் 'சிட்ரஸ் பேமென்ட்' என்று கொடுத்திருந்தார்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. இன்டெர்னெட் , டிபிட் கார்ட், க்ரெடிட்கார்ட் என்று பழகிப் போன எனக்கு சிட்ர‌ஸ் பேமென்ட் என்ன‌ என்று புரியவில்லை.எனவே திருச்சிக்கு நேரில் சென்று பெங்களூருக்குப் பயணச்சீட்டு வாங்கினேன்.அப்போது இந்த சிட்ர‌ஸ் பேமென்ட் பற்றியும் கேட்டேன். அவர்களுக்கும் ஒன்றும் புரியவில்லை. சேலம் அலுவலக தொலை பேசி எண்ணுக்குப் பேசச் சொன்னார்கள்.அங்கே பேசிய பெண் பணிவாகப்பேசி என் குறையைக்கேட்டு மேல் அதிகாரிகளிடம் சொல்வதாகச்சொன்னார். தெளிவு கிடைக்கவில்லை.

    பயணச்சீட்டு வாங்கிவிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து சத்திரம் நிலையத்திற்கு நகரப்பேருந்துப் பயணத்தில் எனது பணப்பை(கணிசமான தொகையுடன்), பேன் அட்டை, பல வங்கிகளின் ஏடிஎம் அட்டைகள், அலுவலக ஐ டி கார்ட் அனைத்தும் பிக் போக்கெட் அடித்துவிட்டார்கள்.

    எனவே இப்போது கே பி என் என்றாலே நினைவுக்கு வருவது இந்தத் திருட்டு சமபவம் தான். அவர்களுடைய போர்டல் மட்டும் பயன் படுத்துவோருக்குப் புரியும் படி இருந்து இருந்தால் , நான் வீட்டிலேயே இருந்திருப்பேன். வெளியில் சென்று திருட்டுக் கொடுத்து இருக்க மாட்டேன்.










    ReplyDelete
  5. வணக்கம் ஐயா,"எனக்கு விவசாயத்தில் பெரிய நாட்டம் இல்லை. சிறு வயதில் இருந்தே மோட்டார் தொழிலில் ஈடுபடவேண்டும் என்கிற ஆசை எனக்கு அதிகம்".உழைப்பு மற்றும் அனுபவ கல்வியுடன் அவருக்கு அந்த தொழிலில் இருந்த ஈர்ப்பும்,இந்த மாபெரும் வெற்றிக்கு ஒரு காரணமாக இருக்கலாம்.நன்றி.

    ReplyDelete
  6. AYYA VANAKKAM. Uzhaippudan inaintha anubhava arivukku inai varu ethuvum illai enbathurkku oru edutthukkattu.valaruttum avar pani.ippadipaata padhivugalai tharum ungal paniyum thodaruttum.anbudan kittuswamy

    ReplyDelete
  7. /////Blogger k.k.kumar k.k.kumar said...
    விதித்தபடிதான் நடக்கும் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை./////

    நல்லது. விதியுடன் முயற்சியும் பலனளிக்கும். நீ மாட்டை வைத்து பிழைப்பு நடத்துவாய் என்றால் மாட்டை வைத்துத்தான் பிழைப்பு நடத்த வேண்டும். ஆனால் மாட்டின் எண்ணிக்கையை விதி நிர்ணயிக்காது அது 4 மாடா அல்லது 40 மாடா என்பது நம் கையில்தான் - அதாவது முயற்சியில் இருக்கிறது

    ReplyDelete
    Replies
    1. முயற்சியே நமக்கு விதி இருந்தால் தான் நடக்கும்

      Delete
  8. ////Blogger ravichandran said...
    Respected Sir,
    Happy morning... Hard work will never get failure.
    Thanks for sharing.
    Thanks & Regards,
    Ravi-avn/////

    நல்லது. நன்றி அவனாசி ரவி!

    ReplyDelete
  9. /////Blogger kmr.krishnan said...
    கே பி என் நான் பிறந்த மாவட்டத்தினைச் சேர்ந்தவர் என்பதில் பெருமை அடைகிறேன்.
    இப்போது ஆன் லைனில் கே பி என் பேருந்து டிக்கட்டுகளை வாங்கலாம்.அதில் முயற்சி செய்த போது பணம் செலுத்தும் ஆப்ஷனில் 'சிட்ரஸ் பேமென்ட்' என்று கொடுத்திருந்தார்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. இன்டெர்னெட் , டிபிட் கார்ட், க்ரெடிட்கார்ட் என்று பழகிப் போன எனக்கு சிட்ர‌ஸ் பேமென்ட் என்ன‌ என்று புரியவில்லை.எனவே திருச்சிக்கு நேரில் சென்று பெங்களூருக்குப் பயணச்சீட்டு வாங்கினேன்.அப்போது இந்த சிட்ர‌ஸ் பேமென்ட் பற்றியும் கேட்டேன். அவர்களுக்கும் ஒன்றும் புரியவில்லை. சேலம் அலுவலக தொலை பேசி எண்ணுக்குப் பேசச் சொன்னார்கள்.அங்கே பேசிய பெண் பணிவாகப்பேசி என் குறையைக்கேட்டு மேல் அதிகாரிகளிடம் சொல்வதாகச்சொன்னார். தெளிவு கிடைக்கவில்லை.
    பயணச்சீட்டு வாங்கிவிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து சத்திரம் நிலையத்திற்கு நகரப்பேருந்துப் பயணத்தில் எனது பணப்பை(கணிசமான தொகையுடன்), பேன் அட்டை, பல வங்கிகளின் ஏடிஎம் அட்டைகள், அலுவலக ஐ டி கார்ட் அனைத்தும் பிக் போக்கெட் அடித்துவிட்டார்கள்.
    எனவே இப்போது கே பி என் என்றாலே நினைவுக்கு வருவது இந்தத் திருட்டு சமபவம் தான். அவர்களுடைய போர்டல் மட்டும் பயன் படுத்துவோருக்குப் புரியும் படி இருந்து இருந்தால் , நான் வீட்டிலேயே இருந்திருப்பேன். வெளியில் சென்று திருட்டுக் கொடுத்து இருக்க மாட்டேன்./////

    அடடா, கேட்பதற்கே வருத்தமாக இருக்கிறது. கூட்டமான பஸ்களில்தான் பிக்பாக்கெட் அதிகம். ஆகவே கூட்டமான, நெரிசலான பஸ்களில் ஏறுவதைத் தவிர்க்க வேண்டும். பஸ் ரிசர்வேசனுக்கு வேறு நிறைய போர்ட்டல்கள் இருக்கின்றன. ஆன்லைன் பேமெண்ட்ற்கு pat tm என்ற போர்ட்டல் இருக்கிறது. முயற்சி செய்து பாருங்கள்!

    ReplyDelete
  10. ////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,"எனக்கு விவசாயத்தில் பெரிய நாட்டம் இல்லை. சிறு வயதில் இருந்தே மோட்டார் தொழிலில் ஈடுபடவேண்டும் என்கிற ஆசை எனக்கு அதிகம்".உழைப்பு மற்றும் அனுபவ கல்வியுடன் அவருக்கு அந்த தொழிலில் இருந்த ஈர்ப்பும்,இந்த மாபெரும் வெற்றிக்கு ஒரு காரணமாக இருக்கலாம்.நன்றி.////

    உண்மைதான்.உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஆதித்தன்!

    ReplyDelete
  11. ////Blogger kittuswamy palaniappan said...
    AYYA VANAKKAM. Uzhaippudan inaintha anubhava arivukku inai varu ethuvum illai enbathurkku oru edutthukkattu.valaruttum avar pani.ippadipaata padhivugalai tharum ungal paniyum thodaruttum.anbudan kittuswamy/////

    நல்லது.உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிட்டுஸ்வாமி!

    ReplyDelete
  12. /////Blogger k.k.kumar k.k.kumar said...
    முயற்சியே நமக்கு விதி இருந்தால் தான் நடக்கும்/////

    அப்படியா? நல்லது. வாழ்க உங்களது விதி பற்றிய நம்பிக்கை! நன்றி!

    ReplyDelete
  13. குருவே வணக்கம்!
    விதியின் வழியில் மதியை செலுத்தி, தனது வாழ்க்கை கதியை மேம்படுத்திய கே.பி.நடராஜன் அவர்களின் சரிதம், அவரின் மன உத்வேகம் போற்றுதற்குரியது!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com