2.6.14

Short story: சிறுகதை: அழகே காணிக்கை!

 
Short story: சிறுகதை: அழகே காணிக்கை!

மாத இதழ்  ஒன்றிற்காக அடியவன் எழுதி சென்ற மாதம் 20ஆம் தேதி
இதழில் வெளியான சிறுகதை. நீங்கள் படித்து மகிழும் பொருட்டு
அதை இன்றுஇங்கே பதிவில் கொடுத்துள்ளேன். அனைவரும் படித்து மகிழுங்கள்.

அன்புடன்
வாத்தியார்

---------------------------------------------------
பழநி இராக்கால மடம். தண்டாயுதபாணியின் திருக்கோயிலுக்கு
அடுத்ததாகப் பழநியில் சிகப்பிக்கு மிகவும் பிடித்த இடம் அதுதான்.
செட்டி நாட்டு வீடுகளைப் போலவே எத்தனை அழகாக, அந்தக்
காலத்திலேயே வடிவமைத்துக் கட்டியிருக்கிறார்கள். எழுபது ஆண்டுகள் ஆகியிருக்குமா?இருக்கலாம். எத்தனை ஆயிரம் நகரத்தார் குடும்பங்கள், பழநிக்கு வந்து போகும்போதெல்லாம், இங்கே வந்து தங்கிப் போயிருக்கிறார்கள்?உத்தேசமாகக் கணக்கிட்டுப் பார்க்கும்போது
மலைப்பாக இருந்தது. புண்ணியத்தை எப்படிக் கணக்கிட முடியும்?

மணியைப் பார்த்தாள். கைக் கடிகாரம் ஐந்து என்றது. சட்டென்று
எழுந்தவள், பக்கத்தில் உறங்கிக் கொண்டிருந்த தன் தாயாரையும் எழுப்பினாள்.இப்போது எழுந்து காலை வேலைகளை முடித்துக்கொண்டு மலை ஏறினால், பழநி அப்பனைத் தரிசித்து விட்டு, வெய்யிலுக்கு
முன்பாக இறங்கி வந்துவிடலாம்.

அவளுடைய தாயாரும், அவளும் காலைக் கடன்களை முடித்துத்
தயாராகிய போது, மணி ஐந்தரையாகிவிட்டிருந்தது. பொழுது இன்னும் முழுதாகப் புலரவில்லை. வாசலில் இருந்த கடையில் காப்பி வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தவள் தன் தாயாரிடம் மெல்லச் சொன்னாள்.

“இங்கே ஆவினன்குடி கோவிலுக்கு அருகே உள்ள கட்டிலேயே முடியிறக்கிவிட்டு வந்து விடுவோம்”

“பூ முடிதானே கொடுக்கப்போகிறாய்?”

“இல்லை, முழுமுடியையும் கொடுக்கப்போகிறேன்”

அவளுடைய தாயாருக்குத் திகைப்பாக இருந்தது. சிகப்பி பெயருக்கு ஏற்றார்ப்போல மிகவும் அழகானவள். நீண்ட, அடர்த்தியான முடியை
உடையவள். வயதும் இருப்பத்தி நான்குதான் ஆகிறது. பிடரியை
மறைக்கும் அழகான முடி. அவளுடைய அழகுக்கு மேலும் அழகு
சேர்க்கும் முடி.அதை அப்படியே கொடுப்பதாவது?

“ஆத்தா, யோசித்து முடிவு செய். முழு முடியையும் இறக்கினால்,
மீண்டும் அது போல முடி வளர்ந்து வருவதற்கு ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளாவது ஆகும்”

“ஆனால் ஆகட்டும். என் பூவையும் பொட்டையும், காப்பாறிக் கொடுத்த தண்டாயுதபாணிக்கு எதை வேண்டுமென்றாலும் காணிக்கையாகக்
கொடுக்கலாம். முடி ஒன்றும் பெரிய விஷயம் அல்ல!”

“சரி உன் இஷ்டம்” என்று சொல்லி அவளுடன் அவள் தாயாரும் புறப்பட்டார்.

                            $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

சிகப்பிக்குப் பழநிஅப்பன் மீது தீவிர பக்தி வந்ததற்குப் பல காரணங்கள் இருந்தாலும், அவள் திருமணத்தை வைத்துத்தான் அவளுக்கு தீவிர
பக்தி உண்டாயிற்று. அது நடந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன.

திருமணம் பேசும் சமயத்தில் அவளுடைய ஜாதகத்தை வைத்துப்
பலரும்  ஒதுங்கிப் போய்விடுவார்கள். செவ்வாய் தோஷ ஜாதகமாம்.
அவள் வளர்ந்தகோவையில் உள்ள ஜோதிடர்கள் அவளுக்கு
செவ்வாய் தோஷம் இல்லை என்றார்கள். மேஷ லக்கினப் பெண்.
 மேஷ லக்கினத்திற்கு செவ்வாய் அதிபதி. அவன் லக்கினத்திற்கு
எட்டில் விருச்சிக வீட்டில் இருக்கிறான். எட்டாம் இடம் என்றாலும்
அது அவனுடைய சொந்த வீடு. அவன்  தனக்குத்தானே, அதாவது
ஜாதகிக்குக் கேடு செய்ய மாட்டான், ஆகவே தோஷம் இல்லை
என்றார்கள். இதையே காரைக்குடி பகுதியில் உள்ள ஜோதிடர்கள்.
எட்டில் இருக்கும் செவ்வாய் என்ன நிலைமையில் இருந்தாலும் தோஷத்தைக் கொடுப்பான். ஆகவே இந்தப் பெண்ணிற்கு தோஷம்
உண்டு என்றார்கள். எதற்கு ரிஸ்க் என்று வருகிறவர்கள் வேண்டாம்
என்று சொல்லிவிடுவார்கள்.

வள்ளுவர் சமூகத்தைத் சேர்ந்த ஜோதிடர் ஒருவர்தான் அதற்கு ஒரு
பரிகாரம் சொன்னார். ஒன்பது செவ்வாய்க்கிழமைகள் விரதம்
அனுஷ்ட்டித்து  முருகப் பெருமானைப் பிரார்த்தனை செய்தால்,
ஒன்பது வாரத்திற்குள் திருமணம் கூடி வரும் என்று சொன்னதோடு,
நல்ல வரனாகவும் வந்து சேரும்,  திருமணமும் நிச்சயமாகிவிடும்.
அப்படி நடக்கவில்லை என்றால் நான் என்னுடைய ஜோதிடத்
தொழிலையே விட்டுவிடுகிறேன் என்று அறுதியிட்டும் சொன்னார்.

சிகப்பியும் ஒன்பது செவ்வாய்க் கிழமைகள் கடுமையான விரதம்
இருந்து முருகப் பெருமானைப் பிராத்தனை செய்தாள். என்ன
ஆச்சரியம் பாருங்கள்.

எட்டாவது வாரமே ஒரு மாப்பிள்ளை வீட்டார் வந்து பேசி, அதற்கு
அடுத்த வாரமே ஒரு முகூர்த்த நாளில் திருமணத்தை நிச்சயம்
செய்து கொண்டு போனார்கள்.

அதோடு மட்டுமா? அதிசயப்படும்படி மாப்பிள்ளையின் பெயரும் கார்த்திகேயன் என்ற கார்த்திக் என்றிருந்தது. கோவை ஆர்.எஸ்.புரம்
ரத்தின  விநாயகர் கோயில் வளாகத்தில் வைத்துத்தான் பெண்
பார்த்தார்கள். மாப்பிள்ளை வீட்டாருக்கு பெண்ணை மிகவும் பிடித்துப் போய்விட்டது. நாங்கள் ஜாதகம் பார்க்க மாட்டோம். மனப்பொருத்தம் இருந்தால் போதும். மற்றதை எல்லாம் இறையருள் பார்த்துக்
கொள்ளும் என்று சொல்லிவிட்டார்கள்.

மாப்பிள்ளை பார்ப்பதற்கு திரைப்பட நடிகர் கார்த்திக்கைப் போல
இருந்தார். அண்ணா பல்கலைக் கழகத்தில் பொறியியல் படித்தவர். சென்னையில் உள்ள ஒரு பன்னாட்டு மென்பொருள் நிறுவனத்தில்
வேலை. கை நிறையச் சம்பளம். வீட்டில் வேறு பிக்கல் பிடுங்கல்
இல்லாத குடும்பப் பின்னணி.

தோதைப் பற்றிப் பேசும்போது, எங்களுக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை. வரதட்சணை என்ற பெயரில் நீங்கள் ஒத்தை ரூபாய் கூடப் பணமாகத்
தர வேண்டாம். உங்கள் பெண்ணிற்கு உங்களால் முடிந்த நகைகளைப் போடுங்கள். திருமணத்தன்று, திருமணத்திற்கு உங்கள் ஊருக்கு வரும்
எங்கள் தாய பிள்ளைகள் (kith & kins) , பங்காளிகளுக்கு நல்லபடியாக விருந்திற்கு மட்டும் ஏற்பாடு செய்யுங்கள் என்று கூறிவிட்டார்கள்

சிகப்பி அடைந்த மகிச்சிக்கு அளவே இல்லை. அதற்கு அடுத்து வந்த,
அதாவது பத்தாவது செவ்வாய்க் கிழமையன்று, சிகப்பி தன் பெற்றோர்
களுடன்  பழநிக்குச் சென்று தன் பிரார்த்தனைக்கு செவி சாய்த்த
முருகப் பெருமானை மனம் உருக வணங்கிவிட்டு வந்தாள்.

அடுத்து வந்த வைகாசி மாதத்தில், ஒரு நல்ல முகூர்த்த நாளில்
அவளுடைய திருமணத்திற்கு நாள் குறிக்கப்பெற்று வேலைகளும்
நடந்து வந்தன.

அப்போதுதான் ஒரு சிறு அசம்பாவிதம் நடந்தது. திருமணத்திற்குப்
பதினைந்து நாட்களுக்கு முன்பு, கணபதி தெய்வானை நகரில் இருக்கும் தங்கள் வீட்டு வாசலில் கிடந்த தண்ணீரில் வழுக்கி விழுந்த சிகப்பிக்கு
இடது காலில் பலமாக அடிபட்டு விட்டது. கணுக்கால் எழும்பு ஒன்றில்
விரிசல் விழுந்து விட்டது. தாங்க முடியாத அதீதமான வலி வேறு
படுத்தியது.

கங்கா மருத்துவ மனையில் சேர்த்தார்கள். ஸ்கேன் எடுத்துப் பார்த்த மருத்துவர், சின்ன பிராக்சர்தான், ஒரு வாரத்திற்குள் சரியாகிவிடும்
என்றார்.  ஆனால் கட்டுப்போட்டு மருத்துவ மனையிலேயே படுக்கவைத்துவிட்டார்கள். விஷயத்தைக் கேள்விப்பட்ட உறவினர்
களும், நண்பர்களும்  மருத்துவ மனைக்கு வந்து பார்த்து, ஆறுதல் சொல்லிவிட்டுப்போனார்கள்.

மாப்பிள்ளைத் தம்பியும், தன் தாயாருடன், சிகப்பியைப் பார்த்து
விட்டுப் போவதற்காக வந்திருந்தார்.

எல்லோரும் சென்றபிறகு, தனக்கு அருகில் ஸ்டூல் ஒன்றில் அமர்ந்து
ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்த முருகப்பனுடன், சிகப்பி பத்து
நிமிடங்கள் பேசினாள்.

”என்னங்க, இப்படியாகிவிட்டதே என்று நீங்கள் வருத்தப்பட வேண்டாம்.
நம் திருமணத்திற்கு முன் எல்லாம் சரியாகிவிடும்.”

“நான் ஒன்றும் கவலைப்படவில்லை”

“கவலைப்படவில்லையா, ஏன்?”

“எல்லா நிகழ்வுகளுக்கும் ஒரு காரணம் இருக்கும். எல்லாம்
நன்மைக்கே என்று நினைப்பவன் நான். இறைவன் இருக்கிறான்.
அவன் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கையோடு இருந்து
விடுவேன்!”

அவன் நம்பிக்கை வீண் போகவில்லை. அந்த நிகழ்வே அவன் மீது
சிகப்பி அதீதமான மதிப்பும், மரியாதையும், அன்பும், பிரியமும்
வைக்கக்  காரணமாக அமைந்துவிட்டது.

தொடர்ந்து பேசிய சிகப்பி மெல்லிய குரலில் அவனிடம் கேட்டாள்:

"சிறு காயமாக இருந்ததால் நான் தப்பித்தேன். இதுவே பெரிய காயமாக இருந்து, ஒரு மாதம் சிகிச்சையளிக்க வேண்டும் என்று சொல்லி
மருத்துவ மனையிலேயே நான் இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருந்தால், என்ன ஆகியிருக்கும்?”

“ஒன்றும் ஆகியிருக்காது. காரைக்குடி மீனாம்பிகா மண்டபத்தில்
நடக்க வேண்டிய நம் திருமணம் கோவையில் நடந்திருக்கும். நான்
இந்த மருத்துவ மனையிலேயே உனக்குத் தாலியைக் கட்டியிருப்பேன். எக்காரணத்தைக் கொண்டும் நான் அந்த முகூர்த்த நாளையும்
தவறவிட மாட்டேன்.உன்னையும் தாமதத்தில் தவிக்கவிட மாட்டேன்.”

சிகப்பி அசந்துவிட்டாள். அவளுடைய கண்கள் பனித்து விட்டன.
மேலும் கண்கள் கலங்கி கண்ணீர் அவள் கன்னங்களை நனைத்தன. கார்த்திக்கின் கைகளைப் பற்றி தன் கண்களில் ஒற்றிக் கொண்டாள்.
தனக்கு நல்லதொரு மணாளனைக் கொண்டுவந்து சேர்த்த முருகப்
பெருமானையும்மனதிற்குள்ளாகவே வணங்கி மகிழ்ந்தாள்.

அதற்குப் பிறகு எல்லாம் மள மளவென்று நடந்தன! கதையின் நீளம்
கருதி சிலவற்றைச் சுருக்கமாகச் சொல்ல வேண்டிய கட்டாயம்.

திருமணம் முடிந்த நான்காவது நாளே சிகப்பி அவனுடன் சென்னைக்கு வந்துவிட்டாள். அம்பத்தூர் வெங்கடாபுரம் வடக்குப் பூங்கா தெருவில்
இருந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு. ரெட் ஹில்ஸ் ரோட்டில் அவன் வேலை பார்க்கும் பன்னாட்டு நிறுவனம் இருந்தது. மண வாழ்க்கை ரம்மியமாகஇருந்தது.

”மஞ்சளோடு மணமாலை சூடிவரும் நல்ல காலம் வருக
மன்னனோடு ஒரு ராணிபோல வரும் இன்ப நாளும் வருக.....
கையோடு கை சேர்க்கும் காலங்களே
கல்யாண சங்கீதம் பாடுங்களேன்...........”


என்ற கவியரசர் கண்ணதாசனின் பாடல் வரிகள் அவள் நெஞ்சை நிறைக்க வாழ்க்கை சுகமாகவும் இருந்தது.

ஆறு மாதங்களுக்கு மேல் அந்த சுகம் நீடிக்காமல் பெரிய சோதனை ஒன்று வந்து சேர்ந்தது.

ஒரு நாள் காலை 8 மணிக்கு தன்னுடைய மோட்டார் சைக்கிளில் அவன் அலுவலகம் செல்லும்போது, அவன் அலவலகம் இருக்கும் கேட்டிற்கு
எதிரிலேயே அந்த விபத்து நேரிட்டது. அவன் தனது அலுவலகத்தை நோக்கி வலது பக்கம் திரும்ப எத்தனிக்கும்போது, எதிர்ப்பக்கம் அசுர வேகத்தில் வந்த செங்கல் லாரி ஒன்று தன் கட்டுப்பாட்டை இழந்து இவன் மீது மோத, இவன் தூக்கி வீசப்பட்டு அலுவலக கேட் அருகே போய்த் தரையில் விழுந்தான். மயங்கிவிட்டான்.

வழக்கமாக அணியும் தலைக் கவசத்தை அன்று அவன் அணியாமல் வந்திருந்ததால் தலையில் பலமாக அடிபட்டுவிட்டது. அலுவலக
ஊழியர்கள் கூடி விட்டார்கள். நகரத்தில் உள்ள பெரிய மருத்துவமனை ஒன்றில் அவன் உடனே சேர்க்கப்பட்டான். நிறுவனமே அதற்கு ஏற்பாடு செய்தது.

நிறுவனத்தைச் சேர்ந்த பெண் ஊழியர்கள் இருவர் கம்பெனிக் காரில் கார்த்திக்கின் வீட்டிற்குச் சென்று அவன் மனைவி சிகப்பியிடம் தகவலைச்
சொல்லி, அவளை மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றார்கள்.

சிகப்பி பதறிப்போய்விட்டாள். கதறி அழத் துவங்கிவிட்டாள். வந்திருந்த
பெண் ஊழியர்கள் இருவரும் அவளைச் சமாதானப் படுத்தி அழைத்துச்
சென்றார்கள்.

காரில் செல்லும்போது மனம் மிகவும் குழப்பம் அடைந்தது. தன் அன்புக் கணவனுக்கு ஒன்றும் ஆகக்கூடாது என்று மனம் முருகப்பெருமானைப்
பிரார்த்திக்கத் துவங்கியது.

தன் ஜாதகத்தில் எட்டில் உள்ள செவ்வாய், தன் மாங்கல்ய பாக்கியத்திற்குக் கேடு எதையும் செய்யக்கூடாது என்று செவ்வாய் பகவானையும் அவள்
வேண்டிக்கொண்டாள்.

மூன்று நாட்கள், பேச்சு, நினைவின்றி கோமா நிலையில் இருந்த
அவளுடைய கணவன் நான்காவது நாள்தான் கண் விழித்துப் பார்த்தான்.
அந்த  மூன்று நாட்களில் கந்த சஷ்டிக் கவசத்தை சிகப்பி தன் மனதிற்குள்ளாகவே எத்தனை முறை பாராயணம் செய்தாள் என்பது அவளுக்கே தெரியாது.

மருத்துவமனையில் இருந்த சிறந்த மருத்துவர்களும், அவன் வேலை
செய்த நிறுவனத்தின் பண பலமும் சேர்ந்து கார்த்திக்கை உயிர் பிழைக்க வைத்து விட்டன. எழுந்து உட்கார வைத்து விட்டன. 15 நாட்கள்
சிகிச்சைக்குப் பிறகு, கார்த்திக் வீட்டிற்குத் திரும்பினான். மேலும் ஒரு பதினைந்து  நாட்கள் ஓய்விற்குப் பிறகு வேலைக்குச் செல்லத்
துவங்கினான். கம்பெனி நிர்வாகம் சில மாதங்களுக்கு மோட்டார்
சைக்கிளில் பயணிக்க  வேண்டாம் என்று சொல்லிக் கம்பெனிக் கார்
ஒன்றை அவனுக்குக ஏற்பாடு செய்து கொடுத்தது.

தன் கணவனைக் காப்பாற்றிக் கொடுத்த முருகப் பெருமானுக்கு,
நன்றி செலுத்தும் முகமாகத்தான் சிகப்பி, பழநிக்குச் சென்று
வருவதற்கும் முடிக்காணிக்கை கொடுப்பதற்கும் பிரார்த்தனை
செய்து வைத்திருந்தாள்.

மூன்று மாதங்கள் கழிந்த பிறகு, எல்லாம் இயல்பு நிலைக்குத்
திரும்பிய பிறகு, தன் கணவனுக்கு அவனுடைய தாயாரைத்
துணைக்கு வைத்துவிட்டு, தன் தாயாருடன் பழநிக்குப் பயணமானாள்.

           $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
                                         
அன்று சஷ்டி தினம். முருகப் பெருமானைத் தரிசிப்பதற்கு உகந்த நாள்.
அன்று வார நாளாக இருந்தாலும் சஷ்டி தினம் என்பதால் மலையில் கூட்டமாகத் தான் இருந்தது.

முடிக்காணிக்கை செலுத்திவிட்டு வந்தவள், இராக்கால மடத்தில்
குளித்து, ஆடைகளை மாற்றிக் கொண்ட பிறகு, தன் தாயாருடன்,
யானைப் பாதைவழியாக மலை ஏறத்துவங்கினாள்.

முடியை வழித்து விட்டதால், அவளுடைய தலையும் முகமும்
ஒன்று போல் பளபளத்தது. படியில் இறங்கிக் கொண்டிருந்தவர்கள்,
ஒரு சில வினாடிகள் ஆச்சரியத்துடன் நின்று அவளைப் பார்த்து
விட்டுப் போனார்கள்.

சிறு உருண்டை சந்தனத்தை வாங்கி, அவளுடைய தாயார் அவர்கள்
அவள் தலையில் முழுமையாகப் பூசி விட்டார்கள். இப்போது
அவளுடைய அழகுஇன்னும் கூடி விட்டது.

மலை உச்சியை அடைந்தவுடன், நூறு ரூபாய் தரிசன சீட்டுக்களில்
இரண்டை வாங்கிக் கொண்டு அப்பனின் சந்நிதானத்தை அடைந்தார்கள்.

சந்நிதானத்தில் பரவசமுடன் அப்பனை வணங்கினாள். உணர்ச்சிப்
பெருக்கில், அவளை அறியாமல் அவள் கண்களில் நீர் சுரந்து
கன்னங்களில் வழிந்தது. வயதான குருக்கள் ஒருவர், முருகனை
அலங்கரித்த மாலை ஒன்றைக் கழற்றிக் கொண்டு வந்து இவள்
கரங்களில் கொடுத்துக் கழுத்தில்  அணிந்து கொள்ளச் சொன்னார்.
அணிந்து கொண்டவள், அவருடைய தட்டில் நூறு ரூபாய்த்தாள்
ஒன்றைத் தட்சணையாகப் போட்டுவிட்டு, சந்நிதானத்தை விட்டு
நகர்ந்து அருகில் இருந்த மிகப் பெரிய உண்டியல் அருகே வந்தாள்.

வந்தவள் தன் தாயார் எதிர்பார்க்க காரியம் ஒன்றைச் சட்டென்று
செய்தாள். கைகளில் அணிந்திருந்த எட்டு தங்க வளையல்களையும்
கழற்றி உண்டியலில் செலுத்தி விட்டாள். பக்கத்தில் நின்ற தன்
தாயாரின் திகைப்பு அடங்கும் முன்பாக, தன் கழுத்தில் அணிந்திருந்த இரட்டைவடச் சங்கிலி,

காதில் அணிந்திருந்த வைரத்தோடு (Diamond ear studs)  கழுத்தில் அணிந்திருந்த வைரப் பூச்சரம் (Diamond Necklace) ஆகியவற்றையும் கழற்றியவள் அவற்றை ஒரு புதுக் கைக் குட்டையில் வைத்து
நன்றாக முடிந்து உண்டியலில் செலுத்தி விட்டு, அந்த உண்டியலைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக் கொண்டதோடு, அதையும் இரு கரம்
கூப்பி வணங்கினாள்.

பிறகு வெளியே வந்தவள், அடுத்துள்ள பிரகாரத்தில் போகர் சந்நிதானம் அருகே உள்ள மண்டபத்தில் வந்து அமர்ந்தாள். உடன் அவளுடைய
தாயாரும் வந்து அமர்ந்தார்கள்.

அவளுடைய தாயார் மெதுவாகக் கேட்டார்கள்:

”என்ன ஆத்தா, எல்லா நகைகளையும் கழற்றி உண்டியலில் போட்டுவிட்டாய்?”

“திருமாங்கல்யத்தைப் போடவில்லை. அது என் கழுத்தில்தான்
இருக்கிறது”

“வைரத்தோடு, வைரப் பூச்சரம் என்று எல்லா நகைகளையும் 
உண்டியலில் போட்டு விட்டாயே, அதைச் சொல்கிறேன்.”

“என் கணவரைக் காப்பாற்றிக் கொடுத்த பழநிஅப்பனுக்கு என்
அழகைக் காணிக்கையாகக் கொடுப்பதாக வேண்டிக்கொண்டேன். அதனால்தான் என் நகைகள் அனைத்தையும் கழற்றி என்னுடைய காணிக்கையாக உண்டியலில் செலுத்தினேன்”

“முடிக் காணிக்கை செலுத்தியதோடு மட்டும் நிறுத்தியிருக்கக்
கூடாதா?”

“ஒரு பெண்ணின் அழகு என்பது அடர்த்தியான அவளுடைய 

தலைமுடி மற்றும் அவள் அணிந்திருக்கும் நகைகள் ஆகிய 
இரண்டையும்  உள்ளடக்கியது. ஒன்றில்லாமல் ஒன்றில்லை. 
ஆகவேதான் செலுத்தினேன். முருகன் என்றால் அழகன் என்று 
பொருள்படும். அழகனுக்கு என்  அழகையே காணிக்கையாகச் 
செலுத்தினேன்”

“இப்போது சரியாத்தா, ஊர் விசேடங்களுக்குச் செல்லும்போது இப்படி
வெறும் கழுத்து, வெறும் கைகளோடா செல்வாய்? எதை அணிந்து கொள்வாய்?”

“அது பழநியப்பனுக்குத் தெரியாதா? அவன் பார்த்துக்கொள்வான்.
பாகுபாடு  இன்றி தன் பக்தர்களைப் பார்த்துக் கொள்ளும் அவன் இந்த பக்தையை மட்டும் விட்டு விடுவானா என்ன? அவன் தருவான்.
என் கணவர் மூலம் அவன் தருவான். கூடிய சீக்கிரம் தருவான்.
அவன் இப்போது எனக்குக் குழந்தையைத் தந்துள்ளான. வயிற்றில்
40 நாள் கருவோடு இருக்கிறேன். எனக்குக் குழந்தை பிறப்பதற்குள்
அவன் தருவான். என் கணவரிடமும் என் மாமியாரிடமும் சொல்லி விட்டுத்தான் வந்திருக்கிறேன். அவர்களின் சம்மதத்துடன்தான் செலுத்தியிருக்கிறேன்.”

அவள் பேசப் பேச அவளுடைய தாயார் திகைத்து நின்றார்கள்.
அவர்களுடைய கண்கள் பனித்து விட்டன.

பக்தி என்றால் இதுவல்லவா பக்தி! இறை நம்பிக்கை என்றால்
இதுவல்லவா இறை நம்பிக்கை!

ஆமாம், பக்தியில் நம்பிக்கைதான் முக்கியம்!

                                 $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

14 comments:

  1. சிறந்த பகிர்வு

    ReplyDelete
  2. மனம் நிறையும்படியான கதை. ஆசிரியருக்கு நன்றி. எந்த கருத்தையும் பிறருக்கு தெளிவாகவும், சுவையாகவும் சொல்லவேண்டும். அதை சிறப்பாக செய்கிறீர்கள்.

    ReplyDelete
  3. அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்

    உண்மைதான் ..அழகனுக்கு அழகு ..அப்பன் முருகனை நம்பினவர்களை அவன் என்றும் கைவிடுவதில்லை..

    ReplyDelete
  4. ////Blogger வேப்பிலை said...
    வருகை பதிவு////

    நல்லது. உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி வேப்பிலையாரே!

    ReplyDelete
  5. ////Blogger Jeevalingam Kasirajalingam said...
    சிறந்த பகிர்வு///

    உங்களின் பாராட்டிற்கு நன்றி! பாராட்டு என்பது எழுதுபவர்களுக்கு ஊக்க மருந்து (Tonic)

    ReplyDelete
  6. /////Blogger Raja Murugan said...
    மனம் நிறையும்படியான கதை. ஆசிரியருக்கு நன்றி. எந்த கருத்தையும் பிறருக்கு தெளிவாகவும், சுவையாகவும் சொல்லவேண்டும். அதை சிறப்பாக செய்கிறீர்கள்./////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி! பாராட்டு என்பது எழுதுபவர்களுக்கு ஊக்க மருந்து (Tonic)

    ReplyDelete
  7. /////Blogger hamaragana said...
    அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்
    உண்மைதான் ..அழகனுக்கு அழகு ..அப்பன் முருகனை நம்பினவர்களை அவன் என்றும் கைவிடுவதில்லை../////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. சரணாகதி தத்துவத்தை எவ்வளவு அழகாக கூறிவிட்டிர்கள் !!! மேலும் நம்பிக்கை தான் வாழ்க்கை என்பதையும் சிகப்பியின் மூலமாக இயம்பிவிட்டர்கள் !! இயைந்துபோகும் கணவன் மற்றும் குடும்பத்தாரைக் கொடுத்த அந்த பழனியப்பன் லேசுப்பட்டவனா என்ன ?

    ReplyDelete
  10. சிறு கதையை இப்போதுதான் படிக்க நேரம் கிடைத்தது.மூன்று நாட்களாக ஒரே வேலை.லால்குடியில் என் மூத்த பெண் வீடுகட்டி கிரஹப்பிரவேசம்1 ஜூன்'14
    ஞாயிறு அன்று நடந்தது. நாங்களும் உட‌ன் இருக்கும் படி பெரிய வீடாகக் கட்டியுள்ளார்கள். ஆண் வாரிசு இல்லாத எங்க‌ளுக்கு இந்த ஏற்பாடு கடைசி காலத்துக்கு மிகவும் உதவியாக இருக்கும்.இருந்த சொத்துக்கள் அனைத்தையும் விற்று விட்டு குடக்கூலிக்கு இருக்கும் எங்களுக்கு, மீண்டும் சொந்த இடத்தில் இருக்கும் வாய்ப்பு மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் ஆண்டவனாக அருளியிருக்கிறார்.எல்லாம் அவன் அருள்.

    சென்ற 2013=14 குரு பெயர்ச்சியால் எங்கள் இல்லத்தில் அனைவருக்குமே
    நாலாம் இடத்தினை குருபார்த்தார்.அதனால்தான் என் மகளும் மாப்பிள்ளையும்
    சொத்து சேர்க்க கூடாது என்ற கொள்கையைக் கை விட்டு, வீடு கட்டினார்கள்.
    ஆக கோள்சாரமும் ஓரளவு வேலை செய்கின்றது. இந்த ஆண்டு அனைவருக்கும் ஐந்தாம் இடத்தினை உச்ச குரு தன் பார்வையில் வைப்பார்.
    திருமணமாகி 17 ஆண்டுகள் ஆகியும் சந்தானம் இல்லாத என் மகளுக்கு அந்த பாக்கியத்தையும் பழனியப்பன் அருள வேண்டுகிறேன். நண்பர்களும் வேண்டிக்கொள்வார்களாக.

    முடி காணிக்கை என்பதைப்பற்றி நாத்திகர்கள் கேலி செய்வார்கள். அத‌ன் உட்பொருளை நன்கு உணர்த்தும் கதை. திருப்பதியில் கிடைக்கும் முடி காணிக்கை மூலம் கோவிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் 100 கோடிக்கு மேல் வருமானம் வருகிறது. தெலுங்கர்களில் ஆண் பெண் வேறுபாடு இல்லாமல் அனைவருமே முடி காணிக்கை அளிக்கிறார்கள்.விக் செவதில் இருந்து, புரோட்டின் மருந்து வரை முடியில் இருந்து கிடைக்கிறது. முடி ஏற்றுமதிப்பொருள்.
    நல்ல கதைக்கு நன்றி ஐயா!

    ReplyDelete
  11. ////Blogger Hari Krishna said...
    சரணாகதி தத்துவத்தை எவ்வளவு அழகாக கூறிவிட்டிர்கள் !!! மேலும் நம்பிக்கை தான் வாழ்க்கை என்பதையும் சிகப்பியின் மூலமாக இயம்பிவிட்டர்கள் !! இயைந்துபோகும் கணவன் மற்றும் குடும்பத்தாரைக் கொடுத்த அந்த பழனியப்பன் லேசுப்பட்டவனா என்ன ?/////

    நல்லது. உங்களின் மனம் உவந்த பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  12. /////Blogger kmr.krishnan said...
    சிறு கதையை இப்போதுதான் படிக்க நேரம் கிடைத்தது.மூன்று நாட்களாக ஒரே வேலை.லால்குடியில் என் மூத்த பெண் வீடுகட்டி கிரஹப்பிரவேசம்1 ஜூன்'14
    ஞாயிறு அன்று நடந்தது. நாங்களும் உட‌ன் இருக்கும் படி பெரிய வீடாகக் கட்டியுள்ளார்கள். ஆண் வாரிசு இல்லாத எங்க‌ளுக்கு இந்த ஏற்பாடு கடைசி காலத்துக்கு மிகவும் உதவியாக இருக்கும்.இருந்த சொத்துக்கள் அனைத்தையும் விற்று விட்டு குடக்கூலிக்கு இருக்கும் எங்களுக்கு, மீண்டும் சொந்த இடத்தில் இருக்கும் வாய்ப்பு மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் ஆண்டவனாக அருளியிருக்கிறார்.எல்லாம் அவன் அருள்.
    சென்ற 2013=14 குரு பெயர்ச்சியால் எங்கள் இல்லத்தில் அனைவருக்குமே
    நாலாம் இடத்தினை குருபார்த்தார்.அதனால்தான் என் மகளும் மாப்பிள்ளையும்
    சொத்து சேர்க்க கூடாது என்ற கொள்கையைக் கை விட்டு, வீடு கட்டினார்கள்.
    ஆக கோள்சாரமும் ஓரளவு வேலை செய்கின்றது. இந்த ஆண்டு அனைவருக்கும் ஐந்தாம் இடத்தினை உச்ச குரு தன் பார்வையில் வைப்பார்.
    திருமணமாகி 17 ஆண்டுகள் ஆகியும் சந்தானம் இல்லாத என் மகளுக்கு அந்த பாக்கியத்தையும் பழனியப்பன் அருள வேண்டுகிறேன். நண்பர்களும் வேண்டிக்கொள்வார்களாக.
    முடி காணிக்கை என்பதைப்பற்றி நாத்திகர்கள் கேலி செய்வார்கள். அத‌ன் உட்பொருளை நன்கு உணர்த்தும் கதை. திருப்பதியில் கிடைக்கும் முடி காணிக்கை மூலம் கோவிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் 100 கோடிக்கு மேல் வருமானம் வருகிறது. தெலுங்கர்களில் ஆண் பெண் வேறுபாடு இல்லாமல் அனைவருமே முடி காணிக்கை அளிக்கிறார்கள்.விக் செவதில் இருந்து, புரோட்டின் மருந்து வரை முடியில் இருந்து கிடைக்கிறது. முடி ஏற்றுமதிப்பொருள்.
    நல்ல கதைக்கு நன்றி ஐயா!//////

    முருகனருள் முன்னிற்கும். முருகப்பெருமானை அனுதினமும் பிரார்த்தனை செய்யச் சொல்லுங்கள். சந்தானபாக்கியம் விரைவில் கிடைக்கும்.
    சில செய்திகளை கதைகளின் மூலம் சொல்லும்போது, அது சென்றடையும் தூரமே தனி. நல்லது. உங்களின் பாராட்டிற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  13. கண்களில் நீருடன் எழுதுகிறேன்...

    ஆவினன்குடி வேலன் நம்பினோரை கை விட்டதில்லை, விடுவதும் இல்லை...

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com