28.4.14

பரமசிவன் கழுத்தில் இருந்து என்ன கேட்டது பாம்பு?

 

பரமசிவன் கழுத்தில் இருந்து என்ன கேட்டது பாம்பு?

ஒரு திரைப்படம். அதில் நாயகனுக்கும், நாயகிக்கும் பிணக்கு ஏற்பட்டுவிடுகிறது. இருவரும் வேலைக்குச் செல்கின்றவர்கள்.பதவி உயர்விலும், வாங்கும் சம்பளத்திலும் நாயகி நாளும் உயர, நாயகனுக்குத் தன்முனைப்பு (Ego) காரணமாகத் தன் மனைவியின் உயர்வை ஏற்றுக் கொள்ள முடியாத மனஉளைச்சல்

அதற்குக் கவியரசர் கண்ணதாசன் பாடல் எழுதினார்

மனதளவில் கணவனும், மனைவியும் சம அளவு சக்கரங்களாக இருந்தால்தானே வாழ்க்கையெனும் வண்டி ஓடும்! (மனதளவில்) ஒரு சக்கரம் பெரியதாகவும், ஒரு சக்கரம் சிறியதாகவும் இருந்தால் வாழ்க்கையெனும் வண்டி எப்படி ஓடும்? அதைவலியுறுத்திக் கவியரசர் அவர்கள்
எழுதிய வரிகள்:

"வ‌ண்டி ஓடச் ச‌க்க‌ர‌ங்க‌ள் இர‌ண்டு ம‌ட்டும் வேண்டும்
அந்த‌ இர‌ண்டில் ஒன்று சிறிய‌தென்றால் எந்த‌ வ‌ண்டி ஓடும்"


தன் மனைவி உயரத்தான் தேய்பிறை நிலவுபோலத் தேய்ந்து விடதாகவும், அதனால் தன் மன அமைதியை இழந்து விட்டதாகவும் நினைக்கும் கணவனின் மன நிலையை அப்படியே பாடலில் கொண்டு வந்து விட்டார் கவியரசர்

"நீயும் நானும் சேர்ந்திருந்தோம் நில‌வும் வானும் போலே
நான் நில‌வு போல‌ தேய்ந்து வந்தேன் நீ வ‌ளர்ந்ததாலே
என்னுள்ள‌ம் எனைப் பார்த்து கேலி செய்யும் போது
இல்லாதான் இல்வாழ்வில் நிம்ம‌தி ஏது"


கருடனுக்குப் பயந்து வாழ் வேண்டிய பாம்பு, தான் பரமசிவன் கழுத்தில் இருக்கும் அகம்பாவத்தில் என்ன கருடா செளக்கியமா?" என்று கேட்பதைப் போல தன் மனைவி தன்னை நடத்துவதாக இல்லாததைக் கற்பனை செய்து கொண்டு நாயகன் புலம்பும் மன நிலைமையை விளக்குவதாக அமைந்த பாடல் இது.

அதன் சிறப்பு என்னவென்றால் கணவனாக திரு.முத்துராமன் அவர்களும், மனைவியாக செல்வி ஜெயலலிதா அவர்களும் சிறப்பாக நடித்து வெற்றி கண்டு பல திரையரங்குகளில் நூறு நாட்களுக்குமேல் ஓடி விழாக்கண்ட வெற்றிப்படமான 'சூரியகாந்தி' என்ற திரைப் படத்தில் வரும் பாடல் இந்தப் பாடல்!

இந்தப் பாடலைப் படத்தில் வரும் ஒரு விழாவில் கவியரசரே மேடையில் நின்று பாடுவதுபோலவும், அரங்கில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருக்கும்
நாயகனுக்கும், நாயகிக்கும் செய்தியாகச் சொல்வது போலவும் காட்சி அமைந்திருக்கும்!

பாட்டை இன்று பதிந்துள்ளேன். படித்து மகிழுங்கள் ஒளி மற்றும் ஒலி வடிவம் வேண்டுமென்றால் இணையத்தில் உள்ளது. கேட்டு மகிழுங்கள்!

உயர்ந்த இடத்தில் இருக்கும் போது
உலகம் உன்னை மதிக்கும்! உன்
நிலைமை கொஞ்சம் இற‌ங்கி வந்தால்
நிழலும் கூட மிதிக்கும்!


என்ற் வரிகள்தான் பாடலின் முத்தாய்ப்பான வரிகளாகும்
------------------------------------------------
"பரமசிவன் கழுத்திலிருந்து
பாம்பு கேட்டது கருடா செளக்யமா? யாரும்
இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் செளக்யமே கருடன் சொன்னது
அதில் அர்த்தம் உள்ளது

(பரமசிவன்)

உயர்ந்த இடத்தில் இருக்கும் போது
உலகம் உன்னை மதிக்கும்! உன்
நிலைமை கொஞ்சம் இற‌ங்கி வந்தால்
நிழலும் கூட மிதிக்கும்!

மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று
மானமுள்ள மனிதனுக்கு- ஒளவை சொன்னது
அது - ஒளவை சொன்னது!
அதில் - அர்த்த‌ம் உள்ள‌து

(பரமசிவன்)

வ‌ண்டி ஓடச் ச‌க்க‌ர‌ங்க‌ள்
இர‌ண்டு ம‌ட்டும் வேண்டும் - அந்த‌
இர‌ண்டில் ஒன்று சிறிய‌தென்றால்
எந்த‌ வ‌ண்டி ஓடும்?

உனைப்போலே அள‌வோடு உற‌வாட‌ வேண்டும்
உய‌ர்ந்தோரும் தாழ்ந்தோரும் உற‌வு கொள்வ‌து
அது - சிறுமை என்ப‌து
அதில் - அர்த்தம் உள்ளது!

(பரமசிவன்)

நீயும் நானும் சேர்ந்திருந்தோம்
நில‌வும் வானும் போலே! - நான்
நில‌வு போல‌ தேய்ந்து வந்தேன்
நீ வ‌ளர்ந்ததாலே

என் உள்ள‌ம்- எனைப் பார்த்துக்
கேலி செய்யும் போது
இல்லாதான் இல்வாழ்வில் நிம்ம‌தி ஏது - இது
க‌ண‌வ‌ன் சொன்ன‌து
இதில் அர்த்த‌ம் உள்ளது"


படம்: சூரியகாந்தி - வருடம் 1973
இசை: எம்.எஸ்.வி அவர்கள்
வரிகள்: கவியரசர் கண்ணதாசன் அவர்கள்
குரல்: திரு.டி.எம்.எஸ் அவர்கள்

====================================================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

12 comments:

  1. இன்றைய நாளில் வருகின்ற
    இந்த சூலுலினை அன்றைய

    சீனுவாசன் இப்படத்தில்
    சிறப்பாக எடுத்து காட்டியது சிறப்பு

    முதல்வர் அம்மாவின் நினைவில்
    முன்வரிசையில் நிற்கும் படத்தில்

    இந்த படமும்
    இந்த படத்தில் அவர் TMSஉடன்

    பாடடிய பாடல்லும் என
    பலமுறை சொல்வார்கள்...

    பதிவுக்கும்
    பகிர்ந்துகொண்ட தன்மைக்கும்

    நன்றிகள்
    நலமுடன் வாழ்க

    ReplyDelete
  2. கவியரசரின் முத்தான பாடல்களுள் இதுவும் ஒன்று..
    பதிவிட்டமைக்கு மகிழ்ச்சி..

    ReplyDelete
  3. உலகின் இயற்கையே ஒன்று மற்றொன்றுக்கு உணவாக இருப்பதே.

    தண்ணீருக்குள் முதலைக்கு அதிகபலம். நிலத்திலே யானை பலமுள்ளதாக இருந்தாலும் தண்ணிருக்குள் முதலையின் முன்னால் யானை பலம் தோற்றாக‌
    வேண்டும்.

    தன்வலிமையும் மாற்றான் வலிமையும் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.அஞ்சுவதைக் கண்டு அஞ்சத்தான் வேண்டும்.

    வாலியிடம் தோற்று ஒளிந்திருந்த சுக்ரீவன் ஸ்ரீராமரின் சகாயம் கிடைத்தவுடன்
    வாலியை போருக்கு அழைக்கிறார்.இதனை வாலியின் மனைவி எடுத்துக் கூறுகிறாள்.

    தன் நிலை உணர்தல் என்பது உண‌ர்ச்சி வசப்படுவோர்க்குக் கிடையாது.
    அறிவை முதன்மையாகவும், உணர்வை அதன் பின்னணியிலும் வைத்தவர்களுக்கே, தன்னைத்தானே அறிதல் எளிது.

    அருமையான தத்துவத்தை எளிமையாகக்கூறிய கவியரசருக்கும் அதனை வெளியிட்ட தங்களுக்கும் வந்தனங்கள்.

    ReplyDelete
  4. அர்த்தம் நிறைந்த பாடல் ,பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி ஐயா

    ReplyDelete
  5. காலத்துக்கு ஏற்றாற் போல் பாடல் பகிர்ந்துள்ளீர்கள்.நன்று & நன்றி!

    ReplyDelete
  6. /////Blogger வேப்பிலை said...
    இன்றைய நாளில் வருகின்ற
    இந்த சூலுலினை அன்றைய
    சீனுவாசன் இப்படத்தில்
    சிறப்பாக எடுத்து காட்டியது சிறப்பு
    முதல்வர் அம்மாவின் நினைவில்
    முன்வரிசையில் நிற்கும் படத்தில்
    இந்த படமும்
    இந்த படத்தில் அவர் TMSஉடன்
    பாடடிய பாடல்லும் என
    பலமுறை சொல்வார்கள்...
    பதிவுக்கும்
    பகிர்ந்துகொண்ட தன்மைக்கும்
    நன்றிகள்
    நலமுடன் வாழ்க/////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி வேப்பிலை சுவாமி!

    ReplyDelete
  7. /////Blogger துரை செல்வராஜூ said...
    கவியரசரின் முத்தான பாடல்களுள் இதுவும் ஒன்று..
    பதிவிட்டமைக்கு மகிழ்ச்சி..////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  8. ////Blogger kmr.krishnan said...
    உலகின் இயற்கையே ஒன்று மற்றொன்றுக்கு உணவாக இருப்பதே.
    தண்ணீருக்குள் முதலைக்கு அதிகபலம். நிலத்திலே யானை பலமுள்ளதாக இருந்தாலும் தண்ணிருக்குள் முதலையின் முன்னால் யானை பலம் தோற்றாக‌ வேண்டும்.
    தன்வலிமையும் மாற்றான் வலிமையும் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.அஞ்சுவதைக் கண்டு அஞ்சத்தான் வேண்டும்.
    வாலியிடம் தோற்று ஒளிந்திருந்த சுக்ரீவன் ஸ்ரீராமரின் சகாயம் கிடைத்தவுடன்
    வாலியை போருக்கு அழைக்கிறார்.இதனை வாலியின் மனைவி எடுத்துக் கூறுகிறாள்.
    தன் நிலை உணர்தல் என்பது உண‌ர்ச்சி வசப்படுவோர்க்குக் கிடையாது.
    அறிவை முதன்மையாகவும், உணர்வை அதன் பின்னணியிலும் வைத்தவர்களுக்கே, தன்னைத்தானே அறிதல் எளிது.
    அருமையான தத்துவத்தை எளிமையாகக்கூறிய கவியரசருக்கும் அதனை வெளியிட்ட தங்களுக்கும் வந்தனங்கள்./////

    நல்லது. உங்களின் கருத்துப் பகிர்விற்கும் சிறப்பான பின்னூட்டத்திற்கும் நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  9. ////Blogger M.R said...
    அர்த்தம் நிறைந்த பாடல் ,பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி ஐயா////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  10. ////Blogger Subramaniam Yogarasa said...
    காலத்துக்கு ஏற்றாற் போல் பாடல் பகிர்ந்துள்ளீர்கள்.நன்று & நன்றி!////

    நல்லது. உங்களின் மேலான கருத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  11. உனைப்போலே அள‌வோடு உற‌வாட‌ வேண்டும்
    உய‌ர்ந்தோரும் தாழ்ந்தோரும் உற‌வு கொள்வ‌து
    அது - சிறுமை என்ப‌து

    இதன்பொருள்என்ன?குழப்பமாகஉள்ளது

    அதில் - அர்த்தம் உள்ளது!

    ReplyDelete
  12. திருவாசகத்தில் மாயை பற்றிய கருத்துக்கள் தருக

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com