28.1.14

Short Story:சிறுகதை - எது பாவம்? எது புண்ணியம்?

 

Short Story:சிறுகதை - எது பாவம்? எது புண்ணியம்?

(பத்து ஆண்டுகளாக எழுதிக்கொண்டிருக்கிறேன். பத்திரிக்கைகளிலும் எழுதுகிறேன். வலைப் பதிவுகளிலும் எழுதுகிறேன். கீழே கொடுத்துள்ள
கதையை உங்களுக்கு முன்பாகவே அறியத்தந்திருக்கிறேனா என்பது நினைவில் இல்லை. தேடிப் பார்ப்பதற்கும் நேரம் இல்லை. ஆகவே இதைப்
படிப்பவர்கள் - புதிதாகப் படிக்கின்றீர்கள் என்றால் சந்தோஷப் படுங்கள். முன்பே படித்திருந்தால் பழைய சாதம் என்று வருத்தப்படாதீர்கள்)


ஒரு துறவியும், அவருடைய சீடனும், திருத்தலம் ஒன்றிற்குப் பயணமாகச் சென்று கொண்டிருந்தார்கள்

இரு நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம் அது. வோல்வா பேருந்துகளும், சதாப்தி ரயிலும் இல்லாத காலம். நடைப் பயணம்தான்

சுட்டெரிக்கும் வெய்யிலில் நடந்த களைப்பு. உடன் கடுமையான பசி. பெரியவர் பொறுத்துக்கொண்டார். சீடனால் முடியவில்லை

"சாமி, அதோ ஒரு கிராமம் தெரிகிறது. சிரமபரிகாரம் செய்து விட்டுப் போகலாமே" என்றான்

துறவியாரும் சரி என்று செயலில் இறங்கினார். வரப்பின் மேல் நடந்து, கிராமத்தை அடைந்தனர்.

கிராமத்தின் நுழை வாயிலிலேயே ஒரு பெரிய பண்ணை வீடு இருந்து. பின்புறம் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலபுலன்களுடன் கூடிய மிகப் பெரிய வீடு.

துறவி கதவைத் தட்டினார். திறக்கப் படவில்லை. மீண்டும், மீண்டும் நான்கைந்து முறை தட்டினார். கால்மணி நேரம் கடந்திருக்கலாம். கதவைத்
திறந்து கொண்டு பீமசேனன் தோற்றத்துடன் ஒரு மனிதன் வெளிப்பட்டான்.

அவன்தான் அந்தப் பெரும் பண்ணைக்கும், பண்ணை வீட்டிற்கும் சொந்தக்காரன். பாதித் தூக்கம் அவன் கண்களில் மிச்சம் இருந்தது

எரிச்சலோடு கேட்டான்,"என்ன வேண்டும்?"

துறவி, பொறுமையாகத் தாங்கள் யார் என்பதையும், எங்கு பயணிக்கின்றோம் என்பதையும் கூறிவிட்டு, தங்களுக்கு உணவு வழங்கும்படி வேண்டினார்.

அடிப்படைப் பண்பின்றி அவன் கோபமாக, "இதற்குத்தான் தட்டினீர்களா, சனியன் பிடித்தவர்களே! என் தூக்கத்தை வேறு கெடுத்துவிட்டீர்களே!
போய் வேறு இடத்தில் கேளுங்கள்" என்று சொல்லி, படார் என்று கதவை அறைந்து சாத்திவிட்டுத் திரும்பவும் தன் வீட்டிற்குள் சென்று விட்டான்.

அவன் நடத்தையைப் பார்த்துச் சீடனுக்கு அசாத்திய கோபம் வந்தது. ஆனால் குருபக்தியினால் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டான்.

ஆனால் துறவி எதுவுமே நடக்காதது போல சாந்தமாக நின்றவர், தன் கைகளை உயர்த்தி, "ஆண்டவனே இவனுக்கு இன்னும் நான்கு மடங்கு
செல்வத்தைக் கொடுப்பாயாக!" என்று பிராத்தனை செய்தார்.

சீடன் வியப்பின் எல்லைக்கே போய்விட்டான். குருவின் தவ வலிமை அவனுக்குத் தெரியும். அவர் பிராத்தனை செய்தால் அது நடந்துவிடும். ஆனாலும் இவர் ஏன் இந்தக் கிராகதகனின் நல்வாழ்விற்குப் பிரார்த்திக்கின்றார் என்பது அவனுக்குப் பிடிபடவில்லை.பேசாமல் நின்றான்.

இறங்கி நடந்த துறவி, கிராமத்தை நோக்கி நடந்தார். சீடனும் தொடர்ந்தான். ஒரு குடிசை வீடு அவர்கள் கண்ணில் பட்டது. முன் பக்கம் திண்ணை.
அருகில் உள்ள கொட்டகையில் நான்கு பசுமாடுகள் கட்டப்பட்டிருந்தன

துறவி,"தாயே!" என்று ஓங்கிக் குரல் கொடுத்தார்.

அடுத்த நொடியே, ஒரு மூதாட்டி கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தாள்.

"வாங்க சாமிகளா? என்ன சாமிகளா வேணும்?" என்று அன்புடன் கேட்டாள்

துறவி சொன்னார்

அவள் பதறி விட்டாள். அவள் வீட்டில் சற்று முன்தான் சாப்பிட்டுவிட்டு, பாத்திரங்களைக் கழுவிப் போட்டிருந்தார்கள்

"சாமி நல்ல மோர் இருக்கிறது. ஆளுக்கு ஒரு செம்பு தரட்டுமா?" என்று தயக்கத்துடன் வினவினாள்.

கொண்டுவரச் சொல்லிவிட்டுத் துறவி திண்ணையில் அமர்ந்தார். சீடனையும் அமரச் செய்தார்.

இரண்டு பெரிய செம்புகளில் அமிர்தம் போன்ற சுவையுடன் மோர்
வந்தது. வாங்கி அருந்தினார்கள் பசி அடங்கிய பிறகுதான் இருவரும்
ஒருநிலைக்கு வந்தார்கள்.

துறவி அந்த மூதாட்டியிடம் பேச்சுக் கொடுத்தார்

அவள் தன் கதையைச் சொன்னாள். அவள் வீட்டில் விதைவைக் கோலத்துடன் ஒரு மகள். பதினெட்டு வயதில் ஒரு பேத்தி. ஆக மூன்று பேர்கள்.

நான்கு பசு மாடுகளை வைத்து ஜீவனம். பால், தயிர், மோர் விற்று வயிறு வளர்ப்பதை நடிகை மனோரமா பாணியில் ஏற்ற இறக்கத்துடன் சொன்னாள்.

துறவி விடை பெற்றுக் கொண்டு புறப்படும்போது, இப்படிச் சொல்லி ஆசீர்வதித்தார்: ."உன் பேத்திக்கு சீக்கிரம் திருமணம் ஆகும். நல்ல மணாளன்
கிடைப்பான். உன் மாடுகளில் இரண்டு இறந்துவிடும் ஆனாலும் நீ நன்றாக இருப்பாய்!"

சீடன் நொந்து போய்விட்டான்

அந்த அயோக்கியன் வீட்டில் உன் செல்வம் நான்கு மடங்கு பெருகட்டும் என்று சொன்னவர். ஏழையானாலும், பசிக்கு அற்புதமான மோர் கொடுத்த
இந்த மூதாட்டி வீட்டில் இரண்டு பசுமாடு சாகட்டும் என்கிறாரே, எதற்காக இப்படி சொல்கிறார்? என்று புரியாமல், குழப்பத்துடன் தன் குருவைத்
தொடர்ந்தான்.

அவன் மன ஓட்டத்தை ஊகம் செய்த துறவி அவராகவே முன்வந்து விளக்கம் சொல்லி அவன் குழப்பத்தைத் தீர்த்துவைத்தார்.

"பண்ணைக்காரனிடம் அபரிதமான செல்வம் இருந்தும் பசித்தவர்க்கு உணவளிக்க மறுக்கும் பாவியாக இருக்கின்றான். அவன் செல்வம் நான்கு
மடங்கு பெருகினால், அவன் பாவமும் நான்கு மடங்கு பெருகும்.அதனால்தான் அவனை அப்படி ஆசீர்வதித்தேன். இந்தப் பெண்மணி தன் ஏழ்மையிலும் தர்மம் செய்யும் தயாநிதியாக இருக்கிறாள். நான்கு மாடுகளை மட்டுமே வைத்து இவள் செய்யும் தர்மம் (புண்ணியம்) இரண்டு மாடுகளை மட்டும் வைத்துச் செய்யும் போது இரண்டு மடங்காக மாறும். அதனால்தான் இங்கே அப்படி ஆசீர்வதித்தேன்"

புண்ணியத்தைப் பற்றியும், பாவத்தைப் பற்றியும், என் சிற்றறிவிற்குத் தெரிந்தவரை ஓரளவு தெளிவு படுத்தியிருக்கிறேன்.


அன்புடன்,
வாத்தியார்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++




வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

13 comments:

  1. பண்ணைக்காரனிடம் பாவம் நாற்பது மடங்கு பெருக வாய்ப்புண்டு...!

    ReplyDelete
  2. பசித்தோர் முகம் பார் என்று சொல்வழக்கு உண்டு. ஆனால் நம்மவர்கள் அதன் உட்பொருள் புரியாமல் முகத்தை மட்டும் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.

    பழைய சோறு என்றாலும் பசி தீர்க்கும் அல்லவா!

    ReplyDelete
  3. அடுத்தவருக்கு கெடுதல்நினைப்பவர்
    அப்படி துறவியாக இருக்க வாய்ப்பு

    உண்டா? கதை என்பதினாலும்
    உள்ளத்திலிருந்து வந்த கடைசி

    வரிகளின் படியே
    வாய் நிறைய மவுனத்துடன்

    புண்ணியம் என்பதும்
    பாவம் என்பதும் வேறு

    வாய்ப்புகிடைத்தால்
    வரும் வார சிந்திக்க சிலவில்

    ReplyDelete

  4. 2மாடுகள் 20 மாடுகளாக மாறும்

    நீயும் இது போன்று அதிக தானம் தர்மம் செய் , என்று ஆசிர்வாதம் செய்து இருக்கலாம்

    ReplyDelete
  5. “பாவமாம், புண்ணியமாம்; எந்த மடையன் சொன்னான்?”

    “சொர்க்கமாம், நரகமாம்! எங்கே இருக்கின்றன அவை?”

    “பாவமும் புண்ணியமும் பரலோகத்தில்தானே? பார்த்துக்கொள்வோம் பின்னாலே?”

    இவையெல்லாம் நமது பகுத்தறிவு உதிர்க்கும்பொன் மொழிகள்.

    பாவமும் புண்ணியமும் பற்றி வேதாத்திரி மகரிஷி சொல்வது இதுதான் :
    "நன்மையும் தீமையும் செயல்களில் இல்லை. செய்யும் செயல் என்னென்ன விளைவுகளைத் தருமோ, அந்த விளைவுகளைக் கொண்டு தான் நன்மையும் தீமையுமாகப் பிரித்துப் பார்க்கிறோம். அது நன்மையான விளைவாக இருந்தால் 'புண்ணியம்' என்றும், தீமையான விளைவாக இருந்தால் 'பாவம்' என்றும் கூறுகிறோம்.
    கதை பழைய சாதமானாலும் புதிய தயிர் சேர்த்து பிசைந்து வடுமாங்காய் ஊறுகாயுடன் சாப்பிட்டது போல் சுவைத்தது.நன்றி ஐயா!

    ReplyDelete
  6. அன்புடன் வாத்தியார் அய்யா வணக்கம்
    நிறைய மக்களுக்கு தெரிவதில்லை வாழ்க்கை வாழ பணம் தேவைதான் !!!
    அனால் பணமே வாழ்க்கை இல்லை. !!என்பது !!
    எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் ...சில்லறையை தொட்டு கொண்டு பண நோட்டை பசிக்கு திங்க முடியுமா??

    இதை ஒருத்தன் புரிஞ்சிகிட்டான் அவன் வாழ்க்கை கொஞ்சம் நிம்மதி யாக இருக்கும்...
    வாத்தியார் அய்யா !!கதை ..எழ்மையிலும் செம்மையான வாழ்வு ..அதிதி தேவோ பவ!! பித்ருகள் .

    ReplyDelete
  7. ////Blogger திண்டுக்கல் தனபாலன் said...
    பண்ணைக்காரனிடம் பாவம் நாற்பது மடங்கு பெருக வாய்ப்புண்டு...!////

    அது மட்டுமல்ல, அந்தப் பாவங்களுக்கான பலனும் கிடைக்கும்!

    ReplyDelete
  8. /////Blogger துரை செல்வராஜூ said...
    பசித்தோர் முகம் பார் என்று சொல்வழக்கு உண்டு. ஆனால் நம்மவர்கள் அதன் உட்பொருள் புரியாமல் முகத்தை மட்டும் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.
    பழைய சோறு என்றாலும் பசி தீர்க்கும் அல்லவா!////

    உங்கள் வயது மற்றும் அனுபவத்திற்கு அது தெரிகிறது. இளவட்டங்களுக்குத் தெரியாதே சுவாமி!

    ReplyDelete
  9. /////Blogger வேப்பிலை said...
    அடுத்தவருக்கு கெடுதல்நினைப்பவர்
    அப்படி துறவியாக இருக்க வாய்ப்பு
    உண்டா? கதை என்பதினாலும்
    உள்ளத்திலிருந்து வந்த கடைசி
    வரிகளின் படியே
    வாய் நிறைய மவுனத்துடன்
    புண்ணியம் என்பதும்
    பாவம் என்பதும் வேறு
    வாய்ப்புகிடைத்தால்
    வரும் வார சிந்திக்க சிலவில்////

    அதை எப்படிக் கெடுதல் என்று நினைக்கிறீர்கள்? சாபம் கொடுப்பதும், வரம் அளிப்பதும் துறவிகளின் வேலைதான். அதை மனதில் கொள்ளவும்!

    ReplyDelete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. ////Blogger Sattur Karthi said...
    2மாடுகள் 20 மாடுகளாக மாறும்
    நீயும் இது போன்று அதிக தானம் தர்மம் செய் , என்று ஆசிர்வாதம் செய்து இருக்கலாம்//////

    உங்களுக்கு வாய்ப்புக் கிடைக்கும்போது அப்படிச் செய்யுங்கள்!

    ReplyDelete
  12. /////Blogger venkatesh r said...
    “பாவமாம், புண்ணியமாம்; எந்த மடையன் சொன்னான்?”
    “சொர்க்கமாம், நரகமாம்! எங்கே இருக்கின்றன அவை?”
    “பாவமும் புண்ணியமும் பரலோகத்தில்தானே? பார்த்துக்கொள்வோம் பின்னாலே?”
    இவையெல்லாம் நமது பகுத்தறிவு உதிர்க்கும்பொன் மொழிகள்.
    பாவமும் புண்ணியமும் பற்றி வேதாத்திரி மகரிஷி சொல்வது இதுதான் :
    "நன்மையும் தீமையும் செயல்களில் இல்லை. செய்யும் செயல் என்னென்ன விளைவுகளைத் தருமோ, அந்த விளைவுகளைக் கொண்டு தான் நன்மையும் தீமையுமாகப் பிரித்துப் பார்க்கிறோம். அது நன்மையான விளைவாக இருந்தால் 'புண்ணியம்' என்றும், தீமையான விளைவாக இருந்தால் 'பாவம்' என்றும் கூறுகிறோம்.
    கதை பழைய சாதமானாலும் புதிய தயிர் சேர்த்து பிசைந்து வடுமாங்காய் ஊறுகாயுடன் சாப்பிட்டது போல் சுவைத்தது.நன்றி ஐயா!/////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  13. /////Blogger hamaragana said...
    அன்புடன் வாத்தியார் அய்யா வணக்கம்
    நிறைய மக்களுக்கு தெரிவதில்லை வாழ்க்கை வாழ பணம் தேவைதான் !!!
    அனால் பணமே வாழ்க்கை இல்லை. !!என்பது !!
    எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் ...சில்லறையை தொட்டு கொண்டு பண நோட்டை பசிக்கு திங்க முடியுமா??
    இதை ஒருத்தன் புரிஞ்சிகிட்டான் அவன் வாழ்க்கை கொஞ்சம் நிம்மதி யாக இருக்கும்...
    வாத்தியார் அய்யா !!கதை ..எழ்மையிலும் செம்மையான வாழ்வு ..அதிதி தேவோ பவ!! பித்ருகள் ./////

    உங்களின் மேன்மையான பின்னூட்டத்திற்கு நன்றி கணபதியாரே!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com