13.11.13

Short Story: சிறுகதை: சாமர்த்தியமான பேச்சு!

 
செட்டிநாட்டுத் திருமாங்கல்யம். திருமணத்தின்போது 
மணமகளுக்கு அணிவிற்கப்பெறும் ஆபரணம். 
இதன் பெயர் கழுத்து உரு = கழுத்திரு. 
முற்காலத்தில் 100 பவுன் எடையில் செய்வார்கள். 
இப்போது தங்கத்தின் விலை எகிறிக்கொண்டே போவதால், 
21 பவுன்களில் முடித்துக்கொண்டு விடுகிறார்கள்.
-----------------------------------------------------------------------------------------------------------
திரைப்படம் ஒன்றில் நடிகை சிநேகா கழுத்திரு அணிந்திருக்கும் காட்சி. 
இந்தப் படத்தை உங்களுக்காகத்தான் கொடுத்துள்ளேன்.
திரைப்படங்களுடன் ஒப்பிட்டுச் சொன்னால்தான் நமக்கு 
(என்னையும் சேர்த்துத்தான்) மனதிற்குள் ஏறும்!

 அதே திரைப்படத்தில் நாயகி சிநேகா நாயகன் நடிகர் சேரனுடன் 
இருக்கும் காட்சி
==================================================================
Short Story: சிறுகதை: சாமர்த்தியமான பேச்சு!

அப்பச்சி சொன்ன கதைகள் - பகுதி 8

(எங்கள் அப்பச்சி சட்டென்று குட்டி குட்டிக் கதைகளைச் சொல்வதில் வல்லவர். அவரை வைத்துத்தான் எனக்கு கதைகளின் மேல் ஆர்வம் ஏற்பட்டது. அவர் சொன்ன கதைகளை எழுத்தில் கொண்டு வந்து
கொண்டிருக்கிறேன். சொன்ன கதைகள் வரிசையில் இது எட்டாவது கதை. கதையின் கரு மட்டும் அவருடையது. அதை விரிவு படுத்தி  எழுதியுள்ளேன்.ஒரு தமிழ் மாத இதழுக்காக தொடர்ந்து இத்தலைப்பில்
எழுதிக்கொண்டிருக்கிறேன்.
இன்று அக்கதைகளில் ஒரு கதையை உங்களுக்கு அறியத்தருகிறேன்.)

அப்பச்சி என்ற சொல் எங்கள் பகுதி வழக்குச் சொல். தந்தையை அப்படித்தான் சொல்வோம். அழைப்போம். உங்கள் மொழியில் சொன்னால், We used to call our DADDY as appachi

பெரியப்பச்சி என்றால் தந்தையின் மூத்த சகோதரர். அதாவது பெரியப்பா!

சரி இப்போது கதையைப் பார்ப்போம்:
---------------------------------------------------
கதையின் தலைப்பு: சாமர்த்தியமான பேச்சு!

1951ஆம் ஆண்டு தை மாதத்தில் ஓரு நன்நாள். திருமண வீடு ஒன்றில் நிகழ்ந்த சம்பவம் இது.  மணப்பெண்  நடுத்தரக் குடும்பம் ஒன்றைச்  சேர்ந்தவள்.  அன்றைய நிலவரப்படி ஓரு வராகன் சீதனம்.  30 பவுன் நகைகள்
என்று திருமணத்திற்குத் தோது பேசியிருந்தார்கள்.  மொத்த செலவு பத்தாயிரம் ரூபாய்க்குள் வரும். 

அன்றையத் தேதியில் பத்தாயிரம் என்பது இன்றைய மதிப்பில் சுமார் ஆறு லட்சம் ரூபாய் ஆகும்.

தோது என்பது இங்கே வரதட்சனையைக் குறிக்கும்.  ஓரு வராகன் என்பது 3,500 ரூபாய்! அதுதான் சீதனம்!

பர்மா நொடித்துப்போன சமயம். பர்மாவிலிருந்து திரும்பி வந்திருந்த பெண்ணின் தந்தை, பல சிரமங்களுக்கிடையே அந்தத் திருமணத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். முக்கிய நகையான கழுத்திரு அவரிடம் இல்லை. திருமணத்தில் திருப்பூட்டுவதற்கும் பெண்ணின் கழுத்தில் அன்றைய தினம் அணிந்து  கொள்வதற்கும் அது அவசியம் வேண்டும்.  அந்தக் காலத்தில், கழுத்திரு இல்லாதவர்களும், பெண்ணிற்கு அதைக் கொடுக்க முடியாதவர் களும், உள்ளூரில் இருக்கும் உறவினர்  வீடுகளிர் இரவல் வாங்கிக்  கட்டிவிட்டு,  அடுத்த நாள் திருப்பிக் கொடுத்து விடுவார்கள்.

இப்போது தங்கத்தின் அபரிதமான விலை உயர்வால் செல்வந்தர்களைத் தவிர வேறு எவரும் 100 பவுன்களில்  கழுத்திரு செய்வதில்லை  பலரும் 21 பவுன் தங்கத்தில் அல்லது 16 பவுன் தங்கத்தில்தான் கழுத்திருவைச் செய்கிறார்கள். காரைக்குடியில் உள்ள கடைகளில் ரெடிமேடாகக் கழுத்திருக்கள் விலைக்குக் கிடைக்கின்றன. அத்துடன் பலரும் கழுத்திருவிற்குப் பதிலாக தங்கள் பெண்ணிற்கு வைரப்  பூச்சரம் (Diamond Necklace) போட்டு அனுப்புவதையே விரும்புகிறார்கள். பூச்சரம் என்றால் எல்லா முக்கிய நிகழ்வுகளிலும் கழுத்தில் அணிந்து  கொள்ளலாம். கழுத்திருவை வங்கி லாக்கரில்தான் வைக்க
வேண்டும்.

எங்கள் ஊரில் 50ற்கும் மேற்பட்ட திருமண மண்டபங்கள் உள்ளன. எல்லா மண்டபங்களிலும் வாடகைக்கு ஐம்பொன்னால் செய்யப்பெற்ற கழுத்திரு கிடைக்கும். தேவைப்படுபவர்கள் அதைப் பயன் படுத்திக்  கொள்ளலாம்.

அந்தக் காலத்தில் இந்த வசதி கிடையாது. மணப்பெண்ணின் தந்தை எங்கள் அப்பத்தா வழியில் எங்களுக்கு  உறவு. அவர் என்  தந்தையை ஆனுகிக் கேட்க, என் தந்தையாரும்,  செல்வந்தர் ஓருவர் வீட்டில் இருந்து, கெட்டிக் கழுத்திரு ஓன்றை இரவல் வாங்கிக்  கொடுத்திருந்தார். செல்வந்தர் தன்னுடைய வீட்டில் எப்போதும் 4 அல்லது 5 கழுத்திருக்களை வைத்திருப்பார். நம் வீடுகளில் அண்டா,  குண்டா, குடங்கள் வைத்திருப்பதைப்போல செல்வந்தர்கள் கழுத்திருவை, அதிக எண்ணிக்கையில் வைத்திருப்பார்கள். 

கெட்டிக் கழுத்திரு என்பது 100 பவுன் தங்கத்தில் செய்யப் பெற்றதாகும்.  அன்றைய மதிப்பு ஒரு  கழுத்துருவின் விலை ஏட்டாயிரம் ரூபாய்.  இன்றைய  மதிப்பு 24 லட்ச ரூபாய்.  அதை நினைவில் வையுங்கள்.

என்னுடைய தந்தையார்,  எங்கள் பெரிய அப்பச்சி மற்றும் அவருடைய உற்ற நண்பர் ஆகிய மூவரும் அந்தத் திருமணத்திற்குச்  சென்றிருந்தார்கள். மாலை ஏழு மணிக்கு,  பெண் அழைத்துக் கொள்ளும் நிகழ்ச்சி  சிறப்பாக நடந்தேறியது.  வந்திருந்த விருந்தினர்கள்  அனைவருக்கும் மாப்பிள்ளை வீட்டில் இரவு உணவு  சிறப்பாக வழங்கப் பெற்றது.

விருந்து முடிந்து என் தந்தையார்,  புறப்பட எத்தனிக்கும்போது,  பெண்ணின் தந்தை ஓடி வந்து, “வீரப்பா, போய் விடாதே. எல்லா  வேலையும் முடிந்து விட்டது.  சம்பந்தியிடம் கழுத்திருவை வாங்கிக்கொண்டு  புறப்பட வேண்டியதுதான்.  நானும் வருகிறேன். துணைக்கு ஆள் வேண்டும். போகிற வழியில், இரவல்  கொடுத்தவரிடம் நகையைக் கொண்டு போய்த் திருப்பிக் கொடுத்து விட்டுப் போய் விடுவோம்” என்று  சொன்னார்.

என் தந்தையாரும் சரியென்று சொல்ல, அவர் தன் சம்பந்தி செட்டியாரிடம் சென்று, “அய்த்தான், நாங்கள்  புறப்பட வேண்டும்,  கழுத்திருவைத் தாருங்கள். புறப்படுகிறோம்” என்று சொன்னார். 

அவர் மணவறைக்குள் சென்று,  அங்கே இருந்த தன் மனைவிடம்  பேச்சுக் கொடுக்க, அந்த ஆச்சி  சொன்னார்கள்: 

“முறைச் சிட்டையில் திகட்டல் இருக்கிறது.  அதைக் காலையில் பேசி, பணத்தை வாங்கிக் கொண்ட பிறகு  கழுத்திருவைக்  கொடுப்போம்.  இப்போது இல்லை என்று சொல்லி  அவரை அனுப்பிவையுங்கள்”

“இல்லை என்று எப்படிச் சொல்வது? அது நன்றாகவா இருக்கும்?” என்று புலம்பலாகச் சொல்ல, ஆச்சி  உடனே பதில் அளித்தார்கள்.

“இல்லை என்று ஏன் சொல்கிறீர்கள்? மாற்றிச் சொல்லுங்கள். இன்று வெள்ளிக்கிழமை. பெண்பிள்ளைகள்  இன்று வேண்டாம் என்று  சொல்கிறார்கள். ஆகவே,  நகையை நாளை வாங்கிக்கொண்டு போங்கள்
என்று  சொல்லுங்கள்”

அப்படியே அவரும் வந்து விஷயத்தைச் சொல்ல,  பெண்ணின் தந்தையாருக்குத் திக்’ கென்றிருந்து.

அவர் நேராக வந்து, என் தந்தையாரின் காதில் விஷயத்தைச் சொல்லி,  என்ன செய்யலாம் என்று குழம்பியவாறு கேட்டிருக்கிறார்.

அதைக் கவனித்துவிட்ட எங்கள் பெரியப்பச்சி, “டேய் என்னடா,  கிசுகிசு?  ஓருத்தன் காதை இன்னொருத்தன் கடிக்கிறீர்கள்?  எதுவாக இருந்தாலும்,  வெளிப்படையாகச் சொல்லுங்கடா?” என்று அதட்டவும்,  இருவரும் அவரிடம் விஷயத்தைச் சொன்னார்கள்.

ஓரு விநாடி கூட யோசிக்காமல் அவர் பதில் சொன்னார்:

“இப்படிக் கேட்டால் வராதுடா. நான் கேட்கிறேன் பார்,  உடனே கொண்டுவந்து கொடுப்பான் பார்”

அதை உடனே செயல்படுத்தவும் முனைந்தார். ஆருகில் இருந்த ஓரு சிறுவனை விட்டு,  மாப்பிள்ளையின் தந்தையை ஆழைத்துவரச்  சொன்னார். எங்களூரில், எங்கள் பெரியப்பச்சியைத் தெரியாதவர்கள் ஓருவர்
கூட இருக்க மாட்டார்கள். பிரபலமானவர். பெரியப்பச்சி  கூப்பிடுகிறார் என்று தெரிந்தவுடன், அவரும் விழுந்தடித்துக் கொண்டு வந்து அவர் எதிரில் நின்றார்.

“டேய்,  நாங்கள் வீட்டிற்குக் கிளம்ப வேண்டும்.  கழுத்திரு என் தம்பி இரவலாக வாங்கிக் கொடுத்தது. அதைக் கொடுத்தால்,   எடுத்துக்கொண்டு கிளம்பிவிடுவோம்”

“அதான் சம்பந்தியிடம் சொன்னேனே அண்ணே!”

“என்ன சொன்னாய்?”

“இன்று வெள்ளிக்கிழமை. நாளை வந்து வாங்கிக்கொண்டு போங்கள் என்று சொல்லியிருக்கிறேனே.......”

எங்கள் பெரியப்பச்சி இடைமறித்து அவருடன் தொடர்ந்து பேசினார்:

“என்னடா வெள்ளிக்கிழமை.  நாங்கள் எங்கள் பெண்ணையே வெள்ளிக் கிழமை என்று பாராமல்,  உங்கள்  வீட்டிற்குக் கூட்டி அனுப்பியிருக்கிறோம். அவளைவிடவா அந்த நகை உசந்தது?”

“இன்று திருப்பிக்கொடுக்க என் சம்சாரம் பிரியப் படவில்லை........... அதனால்தான்”

“ஓகோ! உன் சம்சாரம் பிரியப்படவில்லையா? அப்படி யென்றால் சரி.  நாங்கள் நால்வர் இருக்கிறோம். எங்களுக்கு இன்னும் ஓரு  தம்ளர் சூடாகப் பால் கொண்டு வரச் சொல்.  அதோடு உங்கள் வீட்டுப்  பட்டாலையில் (பெட்டக சாலையில்) நான்கு மெத்தை விரிக்கச் சொல், இரவு  படுத்திருந்து விட்டு, அதிகாலை எழுந்தவுடன்  நகையை வாங்கிக்கொண்டு போகிறோம்.  சரிதானே?” என்று பெரியப்பச்சி அதிரடியாகக்  சொல்லவும், அவரின் முகம் பேயரைந்ததைப் போலாகிவிட்டது.

ஓடிச்சென்று,  தன் மனைவியைக் கடிந்து கொண்டார்.  அதோடு மாணிக்கம் செட்டியார்,  படுத்திருந்துவிட்டு,  ஆதிகாலையில்,  நகையை வாங்கிக்கொண்டு போவதாகச் சொன்னதையும் சொன்னார். கழுத்திருவைக்
கொடுத்தவர்கள்,  படுத்திருந்து, அதிகாலை நகையை வாங்கிக் கொண்டு போனால்,  போனது ஊருக்குள் தெரிந்தால், அது நமக்கு அசிங்கம்,  கேவலம் என்றும் சொன்னார்.

அடுத்த நிமிடம்,  நகை உரியவர்களிடம் வந்து சேர்ந்தது!

இது உண்மையில் நடந்த கதை.  ஓரு விஷயத்தை எப்படிக் கையாள வேண்டும்? சாமர்த்தியமாக எப்படி பேசவேண்டும்? என்பதற்கு  உதாரணமாக இந்தக் கதையை என் தந்தையார் என்னிடம் சொல்வார்.

உங்களுக்காக அதை இன்று எழுத்தில் கொடுத்திருக்கிறேன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

17 comments:

  1. ஏற்கனவே படித்துள்ளேன் என்றாலும் மீள்வாசிப்பும் சுவையாகவே இருந்தது.

    ReplyDelete
  2. அதற்குத்தான் நல்ல காரியமானாலும் கெட்ட காரியமானாலும் அதைச் செய்து வைக்க வருபவர்கள் கூட வீட்டில் உள்ள உங்கள் வீட்டுப் பெரியவர்களிடம் 'உங்கள் வீட்டு வழக்கம் என்ன முறை' என்று கேட்டுக் கொள்ளுங்கள் என்று சொல்வார். வீட்டில் பெரியவர்களுக்கு மதிப்பு அப்படி இருந்த காலம். எதை எப்படி கையாள வேண்டும் என்றும் அவர்கள் அனுபவத்தில் அவர்களுக்குத் தெரிந்திருக்கும். இப்போது எல்லாமே செய்தியாகவே போய் விட்டது!

    தோது, கழுத்திரு, வைரப் பூச்சரம், முறைச்சிட்டை போன்ற பதங்கள் அறிந்து கொண்டேன்.

    ReplyDelete
  3. ஆழமாக 'மனத்திரு'க்கும் வகையில் இருந்தது 'கழுத்திரு' கதை.
    ஒவ்வொரு சமூகத்திற்கும், ஒவ்வொரு இடத்துக்குமான 'பரிபாஷை' எனப்படும் 'சொற்பிரயோகம்' தமிழுக்கே உரித்தான அலாதியான அலங்காரம்.
    மண்வாசனை மிளிரும் கதை.
    -நன்றி ஐயா

    ReplyDelete
  4. குருவிற்கு வணக்கங்கள்,]
    சிறுகதை மிக சுவாரசியமாகவும் பயனுள்ளதாகவும் இருந்தது. நன்றி.
    ரெங்கா

    ReplyDelete
  5. நகரத்தார் திருமணம் பற்றிய இந்தத் கட்டுரையும் (இந்தக் கட்டுரை ஜூன் 1, 2013 நம் தோழியில் வெளிவந்தது) சுவையானது.

    சுட்டி : http://honeylaksh.blogspot.sg/2013/10/blog-post_2.html

    ReplyDelete
  6. மதிப்பிற்க்குரிய ஐயா வணக்கம்.

    சிறுகதை சுவையாகவும் சுவாரஸ்யமாகவும் இருந்தது.
    நன்றி. ல ரகுபதி

    ReplyDelete
  7. //////Blogger kmr.krishnan said...
    ஏற்கனவே படித்துள்ளேன் என்றாலும் மீள்வாசிப்பும் சுவையாகவே இருந்தது./////

    எனது தொகுப்பு நூல் ஒன்றில் படித்திருப்பீர்கள். விமர்சனத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  8. //////Blogger ஸ்ரீராம். said...
    அதற்குத்தான் நல்ல காரியமானாலும் கெட்ட காரியமானாலும் அதைச் செய்து வைக்க வருபவர்கள் கூட வீட்டில் உள்ள உங்கள் வீட்டுப் பெரியவர்களிடம் 'உங்கள் வீட்டு வழக்கம் என்ன முறை' என்று கேட்டுக் கொள்ளுங்கள் என்று சொல்வார். வீட்டில் பெரியவர்களுக்கு மதிப்பு அப்படி இருந்த காலம். எதை எப்படி கையாள வேண்டும் என்றும் அவர்கள் அனுபவத்தில் அவர்களுக்குத் தெரிந்திருக்கும். இப்போது எல்லாமே செய்தியாகவே போய் விட்டது!
    தோது, கழுத்திரு, வைரப் பூச்சரம், முறைச்சிட்டை போன்ற பதங்கள் அறிந்து கொண்டேன்./////

    ”அது ஒரு கனாக் காலம். நிலவுகள் சேர்ந்து பூமியில் வாழ்ந்த பொற்காலம்” என்று சொல்லும்படியாக உறவு முறைகளும் பழக்க வழக்கங்களும் சுருங்கிக் கொண்டிருக்கின்ற மோசமான சூழலில் நாம் தள்ளப்பட்டிருக்கிறோம். நன்றி நண்பரே!

    ReplyDelete
  9. //////Blogger Srinivasa Rajulu.M said...
    ஆழமாக 'மனத்திரு'க்கும் வகையில் இருந்தது 'கழுத்திரு' கதை.
    ஒவ்வொரு சமூகத்திற்கும், ஒவ்வொரு இடத்துக்குமான 'பரிபாஷை' எனப்படும் 'சொற்பிரயோகம்' தமிழுக்கே உரித்தான அலாதியான அலங்காரம்.
    மண்வாசனை மிளிரும் கதை.
    -நன்றி ஐயா///////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே! பாராட்டுதான் எழுத்திற்கான ஊக்க மருந்து!

    ReplyDelete
  10. /////Blogger renga said...
    குருவிற்கு வணக்கங்கள்,]
    சிறுகதை மிக சுவாரசியமாகவும் பயனுள்ளதாகவும் இருந்தது. நன்றி.
    ரெங்கா////

    உங்களின் மனம் நிறைந்த பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  11. //////Blogger Srinivasa Rajulu.M said...
    நகரத்தார் திருமணம் பற்றிய இந்தத் கட்டுரையும் (இந்தக் கட்டுரை ஜூன் 1, 2013 நம் தோழியில் வெளிவந்தது) சுவையானது.
    சுட்டி : http://honeylaksh.blogspot.sg/2013/10/blog-post_2.html/////

    மேலதிகத்ததகவலுக்கு நன்றி நண்பரே1

    ReplyDelete
  12. /////Blogger raghupathi lakshman said...
    மதிப்பிற்குரிய ஐயா வணக்கம்.
    சிறுகதை சுவையாகவும் சுவாரஸ்யமாகவும் இருந்தது.
    நன்றி. ல ரகுபதி//////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  13. பல்வேறு காலகட்ட வாழ்க்கை முறைகளை சுவைபட தாங்கள் எழுதுவது அருமையாக உள்ளது ஐயா!

    ReplyDelete
  14. கழுத்தில் இருப்பதில்லை என
    கழுத்திரு பெயரா..?

    இதன் அமைப்பிற்கும் சைவத்திற்கும்
    இங்கு தொடர்புண்டு..

    தெரிந்தவர்கள் பகிர்ந்து கொள்ளுங்கள்
    தெரிந்து கொள்ள உதவுங்கள்

    ReplyDelete
  15. ////Blogger Lakhsmi Nagaraj said.
    பல்வேறு காலகட்ட வாழ்க்கை முறைகளை சுவைபட தாங்கள் எழுதுவது அருமையாக உள்ளது ஐயா!/////

    உங்களீன் பாராட்டிற்கு நன்றி சகோதரி. பாராட்டுக்கள்தான் எழுதுபவர்களுக்கு ஊக்க மருந்து. டானிக்!

    ReplyDelete
  16. ////Blogger வேப்பிலை said...
    கழுத்தில் இருப்பதில்லை என
    கழுத்திரு பெயரா..?
    இதன் அமைப்பிற்கும் சைவத்திற்கும்
    இங்கு தொடர்புண்டு..
    தெரிந்தவர்கள் பகிர்ந்து கொள்ளுங்கள்
    தெரிந்து கொள்ள உதவுங்கள்/////

    நான் ஏதாவது சொன்னால். நீங்கள் அதை மறுத்து நீங்கள் வேறு ஏதாவது சொல்வீர்கள். ஆகவே ஆட்டத்தை நீங்களே தொடருங்கள். அதாவது நீங்களே சொல்லுங்கள்!

    ReplyDelete
  17. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com