22.8.13

தாங்கிப்பிடிக்கும் தத்துவப் பாடல்கள்

 

தாங்கிப்பிடிக்கும் தத்துவப் பாடல்கள்

புதிய தொடர் - பகுதி ஒன்று

ஏங்கித் தவிக்கும் நம்மைத் தத்துவப்பாடல்கள்தான் தாங்கிப் பிடிக்கின்றது! ஒவ்வொரு சூழ்நிலைக்கும் ஒவ்வொரு பாடல் என்று  ஏராளமான பாடல்கள் இருக்கின்றன!

இன்றையப் பொருளாதாரச் சூழலில் சிக்கித் தவிக்கும் எண்ணற்றவர்களைத் தாங்கிப் பிடிக்கும் தத்துவப் பாடல்களை வாரம் ஒரு  பாடல்வீதம் அடையாளப் படுத்தும் முகமாக இத்தொடர்பதிவு. தொடர்ந்து படியுங்கள்
-------------------------------------------------------------------------------------
ஒரு பெண், தன் குழந்தையைப் பறிகொடுத்ததும் மாளாத துயரத்தில் சிக்கித் தவிப்பாள். கடவுள் வரமாகக் கொடுத்த தூக்கமும் மறதியும், போகப் போக கொஞ்சம் கொஞ்சமாக அவளுடைய துயரத்தைப் போக்கி விடும். ஒரு ஆண்டு கழிந்து, தன் குழந்தையின் மறைவு தினத்தன்று அதை எண்ணி மீண்டும் துயரத்திற்கு ஆளாவாள். மீண்டும் தூக்கமும் மறதியும் அவளுடைய மனக்காயங்களுக்கு மருந்து போட்டு அவளைக் குணப்படுத்தும்.

ஆனால் ஐந்தறிவு உள்ள பிராணிகள், பறி கொடுத்த அன்று வேண்டுமென்றால் துக்கப்பட்டு அங்கும் இங்கும் அலைமோதும். ஆனால் இரண்டொரு நாட்களில் அதை அவைகள் அறவே மறந்துவிடும். சிந்திக்கும் தன்மையும் நினைவில் வைத்துக்கொள்ளும் மேன்மையும் அவற்றிற்குக் கிடையாது.

அந்த நிலைப்பாட்டைக் கவியரசர் கண்ணதாசன் தன்னுடைய பாடல் வரிகளில் இப்படிச் சொல்வார்

பெட்டைக் கோழிக்கு கட்டுச் சேவலை
கட்டி வைத்தவன் யாரடா..
அவை எட்டுக் குஞ்சுகள் பெற்றெடுத்ததும்
சோறு போட்டவன் யாரடா..
வளர்ந்த குஞ்சுகள் பிரிந்த போதும்
வருந்தவில்லையே தாயடா..
மனித ஜாதியில் துயரம் யாவுமே
மனதினால் வந்த நோயடா..


மனிதனுக்கு ஏற்படும் துன்பம் எல்லாம் பாழாய்ப் போன மனதினால்தான் என்று அடித்துச் சொல்லுவார் அவர்! விளங்கும்படி எடுத்துச் சொல்வார் அவர்

காசில்லாமல் தவிக்கும் மனிதனை அவனுடைய உறவுகளும் நேசிக்காது. உதவி செய்ய முன்வராது என்பதை அதே பாடலில் இப்படிச் சொல்வார்:

தாயும் பிள்ளையும் ஆனபோதிலும் வாயும்
வயிறும் வேறடா
சந்தைக் கூட்டத்தில் வந்த மந்தையில்
சொந்தம் என்பதும் ஏதடா..
வாழும் நாளிலே கூட்டம் கூட்டமாய்
வந்து சேர்கிறார் பாரடா
கை வறண்ட வீட்டிலே உடைந்த பானையை
மதித்து வந்தவர் யாரடா..
பணத்தின்மீதுதான் பக்தி என்றபின்
பந்தபாசமே ஏனடா..


உடன்பிறப்புக்களும் இதற்கு விதிவிலக்கில்லை என்பதை இப்படி சுட்டிக்காட்டுகின்றார்:

அண்ணன் என்னடா தம்பி என்னடா
அவசரமான உலகத்திலே
ஆசைகொள்வதில் அர்த்தம் என்னடா
காசில்லாதவன் குடும்பத்திலே..


சரி, இதற்கெல்லாம் தீர்வு என்ன? அவர் ஒரு மாபெரும் கவிஞர். நல்ல தீர்வைச் சொல்லாமல் எந்தப் பாடலையும் அவர் நிறைவு  செய்ததில்லை. இந்தப் பிரச்சினைக்கும் அவர்  ஒரு அருமையான தீர்வைச் சொல்கிறார்:

பதைக்கும் நெஞ்சினை அனைக்கும் யாவரும்
அண்ணன் தம்பிகள் தானடா..!!!!!!


ஆமாம்! உன் நிலைமை தெரிந்து உனக்குக் கை கொடுத்து, உன்னை அனைக்கும் எவருமே உனக்கு உடன் பிறப்பு தானடா! உனக்கு உறவுதானடா என்று ஆறுதலாய்ப் பாட்டை முடிக்கின்றார். உண்மைதான். நமக்குக் கை கொடுக்கும், நமக்குத் தோள்கொடுக்கும்  அனைவருமே நம் உடன் பிறந்தவர்கள்தான். அதை நினைவில் வைப்போம்! மனதில் கொள்வோம்!

முழுப்பாடலும் வேண்டுமா? வாத்தியாரின் புதிய தளம் இங்கே உள்ளது. அங்கே சென்று பாருங்கள்:

அதற்கான சுட்டி: http://kaviarasarkannadasan.blogspot.in/2013/08/blog-post_21.html

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++

11 comments:

  1. புதிய தளத்தை தொடர்கிறேன்... நன்றி...

    ReplyDelete
  2. அருமையானதொரு தொடக்கம்...
    கவியரசின் பாடல்களில் திளைக்கலாம் இனி!

    நன்றிகள் ஐயா!

    ReplyDelete
  3. சுற்றம் சொல்லும் செய்திக்கும்
    சுழல விட்ட பாடலுக்கும் நன்றி

    மனம் பற்றி சொல்லி உள்ளீர்கள்
    மனம் உள்ளம் எண்ணம்

    இவை எல்லாம் ஒன்று தானா
    இல்லை வெவ்வேறா என

    விளக்கிச் சொன்னால் மகிழ்ச்சி
    விவரமாக கவிஞர் இம் 3 பற்றியும்

    வேறு வேறு பாடல் தந்துள்ளமையால்
    வேறுவழியின்றி எழுந்த ஐயம்

    சுக ராகம்
    சோகம் தானே என்று

    சுழலட்டும் பாடல்
    சுவைக்கட்டும் மனது

    ReplyDelete
  4. ////Blogger Thiru Mahes said...
    Kallai vannakm sir.
    Mahes////

    உங்களின் வருகைப்பதிவிற்கும் வணக்கத்திற்கும் நன்றி!

    ReplyDelete
  5. ////Blogger திண்டுக்கல் தனபாலன் said...
    புதிய தளத்தை தொடர்கிறேன்... நன்றி.../////

    நல்லது. உங்களின் தொடர்ச்சி நன்மை பயக்கட்டும். நன்றி நண்பரே!

    ReplyDelete
  6. /////Blogger G Alasiam said...
    அருமையானதொரு தொடக்கம்...
    கவியரசின் பாடல்களில் திளைக்கலாம் இனி!
    நன்றிகள் ஐயா!/////

    உங்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும் ஆலாசியம்! நன்றி!

    ReplyDelete
  7. /////Blogger வேப்பிலை said...
    சுற்றம் சொல்லும் செய்திக்கும்
    சுழல விட்ட பாடலுக்கும் நன்றி
    மனம் பற்றி சொல்லி உள்ளீர்கள்
    மனம் உள்ளம் எண்ணம்
    இவை எல்லாம் ஒன்று தானா
    இல்லை வெவ்வேறா என
    விளக்கிச் சொன்னால் மகிழ்ச்சி
    விவரமாக கவிஞர் இம் 3 பற்றியும்
    வேறு வேறு பாடல் தந்துள்ளமையால்
    வேறுவழியின்றி எழுந்த ஐயம்
    சுக ராகம்
    சோகம் தானே என்று
    சுழலட்டும் பாடல்
    சுவைக்கட்டும் மனது///////

    மனம் என்பது மரம். மற்றவைகள் எல்லாம் இலைகள், கிளைகள், வேர்கள், மலர்கள், காய்கள், கனிகள் போன்றவை

    ReplyDelete
  8. /////Blogger Geetha Lakshmi A said...
    வணக்கம் ஐயா/////

    உங்களின் வருகைப்பதிவிற்கும் வணக்கத்திற்கும் நன்றி சகோதரி!

    ReplyDelete
  9. ///மனம் என்பது மரம். மற்றவைகள் எல்லாம் இலைகள், கிளைகள், வேர்கள், மலர்கள், காய்கள், கனிகள் போன்றவை///

    "நான் யார்
    என் உள்ளம் யார்?"

    என்ற மாணிக்க வாசகர் வாக்கிற்கு
    நீங்கள் சொன்ன மரம் போன்ற மற்ற வகைகளை கொண்டு எவ்வாறு பொருள் கொள்வது என விளக்கினால் மகிழ்ச்சியுடன் அறிந்து கொள்கிறோம்

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com