14.12.11

ருத்திராட்சத்தில் என்ன(டா) மகிமை உள்ளது?

ருத்திராட்ச மரம்

ருத்திராட்சத்தில் என்ன(டா) மகிமை உள்ளது?

ருத்திராட்சம் அணிவது பற்றி பல்வேறு கருத்துகள் உள்ளன!

பின்னூட்டம் ஒன்றில் அன்பர் ஒருவர் அது பற்றி எழுதும்படி பணித்திருந்தார்.

நான் சின்ன வயதில் கழுத்தில் ருத்திராட்சம் அணிந்திருந்தேன். அது நடு நிலைப் பள்ளியில் படித்த காலம் வரைதான். அதற்குப் பிறகு பிரச்சாரக் கூட்டங்களுக்கெல்லாம் போகின்றகால கட்டத்தில் (என்ன பிரச்சாரக் கூட்டம் என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன்) அவிழ்த்து வைத்து விட்டேன்.

வீட்டில் பெற்றோர்களும் கட்டாயப் படுத்தவில்லை!

செட்டிநாட்டில் (அந்தக் காலத்தில்) சின்னக்குழந்தைகளின் கழுத்தில் இரண்டு பக்கமும் தங்கப் பட்டி போட்ட ருத்திராட்சம் இருக்கும். செல்வந்தர் வீட்டுக் குழந்தைகளுக்கு தங்கச் சங்கிலியிலேயே ருத்திராட்சத்தைக் கோர்த்து அணிந்திருப்பார்கள்.

மூன்று மாதம் முடிந்த பிறகு, குலதெய்வக்கோவிலிலோ அல்லது உள்ளூர் அம்மன் கோவிலிலோ அல்லது பழநிக் கோவிலிலோ குழந்தைக்கு
முடியிறக்கிவிட்டு, முதல் வேலையாகக் கழுத்தில் ருத்திராட்சத்தைக் கட்டிவிட்டு விடுவார்கள். ஆண் குழந்தைகளுக்கு மட்டும்தான் அது!

குழந்தைகளுக்கு அணிவதற்கென்றே சிறிய அள்வில் ருத்திராட்சங்கள் கிடைக்கும். சில வீடுகளில் கொட்டான் நிறைய உத்திராட்சங்கள்
வைத்திருப்பார்கள். வாரணாசிக்குச் சென்று திரும்புபவர்கள் நிறையக் கொண்டுவந்து உறவினர்களுக்கெல்லாம் கொடுப்பார்கள்.

ருத்திராட்சத்திற்கும் தங்கத்திற்கும் பஞ்சமில்லாத காலம் அது!

நாற்பது வயது தாண்டியவர்கள் அனைவரும் ருத்திராட்சம் அணிந்திருப் பார்கள்.(அந்தக்காலக் கதை என்பதை நினைவுபடுத்திக்கொண்டே
இவற்றைப் படிக்கவும்) வசதியானவர்கள் என்று இல்லாமல் பலரும் ருத்திராட்ச மாலை அணிந்திருப்பார்கள். சின்ன ருத்திரட்சமாக இருந்தால்
108 ருத்திராட்சங்கள் மாலையில் இருக்கும். அதை இரண்டு சுற்றுக்களாக்கி கழுத்தில் அணிந்து கொண்டிருப்பார்கள். பெரிய ருத்திராட்சமாக இருந்தால் மாலையில் 54 ருத்திராட்சங்கள் இருக்கும். வசதியானவர்களின் ருத்திராட்ச மாலை தங்கத்தில் இணைக்கப்பட்டதாக இருக்கும். அல்லவென்றால் செம்புக்கம்பிகளால் இணைக்கப்பட்டதாக இருக்கும்.

சிலர் வயதான காலத்தில் தீவிர சிவபக்தர்களாக மாறி, மொட்டை, பட்டை, கொட்டை, கட்டையுடன் இருப்பார்கள். அதாவது தலை மொட்டை.
நெற்றியில் விபூதிப்பட்டை, கழுத்தில் (ருத்திராட்சக்) கொட்டை. காலில் கட்டை (மரக் கட்டையால் செய்த செருப்பு). மாட்டுத் தோலினால் செருப்புக்கள் செய்யப்படுவதால் தோல் செருப்பை அணியமாட்டார்கள். அப்படியொரு பக்தி.

உபதேசம் கேட்டுக்கொள்வார்கள். அதற்கென்று செட்டிநாட்டில் இரு ஊர்களில் குருமார்கள் இருந்தார்கள். இப்போதும் இருக்கிறார்கள்.  அதற்கென்று அறக்கட்டளைகளும், விடுதிகளும் சொத்துக்களும் இருக்கின்றன. வழிவழியாக வந்த குருமார்களும் இருக்கின்றார்கள்.

அந்த ஊர்களின் பெயர்கள்: பாதரக்குடி, துலாவூர். அந்த இரண்டு கிராமங்களும் குன்றக்குடிக்கு அருகே உள்ளது. நீங்கள் சென்றால் பார்க்கலாம்.

இந்த உபதேசம் கேட்டுக் கொண்டவர்கள், காலை, மாலை என இருவேளைகளும், குளித்து, சந்தியாவந்தனம் செய்வார்கள். 108 முறை சிவன்
நாமத்தைச் சொல்லி - பஞ்சாட்சரத்தைச் சொல்லி (அதாவது நமச்சிவாயா என்று சொல்லி) சிவனை வணங்குவார்கள். அதற்கு அவர்களுக்கு
நேரமும் இருந்தது. அந்த 108 எண்ணிக்கை தவறாமல் இருப்பதற்கு ருத்திராட்ச மாலையும் இருந்தது. மாலையின் மேல் பகுதிக் கொக்கியில்
ஆரம்பித்தால், மறுபக்கக் கொக்கி வருவதற்குள் 108 முறைகள் பஞ்சாட்சரம் சொல்லி முடிக்கப்பெற்றிருக்கும். ஒவ்வொரு முறை சொல்லும்போதும் ஒரு ருத்திராட்சம் கைவிரல்களைக் கடந்திருக்கும்.

இன்றையத் தலைமுறையினர் (என்னையும் சேர்த்து) அப்படிச் செய்வதாகத் தெரியவில்லை. விட்டகுறை தொட்டகுறையாக ஒரு 20% அல்லது 25% அதைத் தொடர்கிறார்கள் (சரியான எண்ணிக்கையில்லை. உத்தேசம்தான்)

அப்படி அணிந்தவர்களுக்கும், பூஜை அல்லது ஜெபம்  ய்தவர்களுக்கெல்லாம், ப்ளட் பிரஷ்சர், சுகர், ஹார்ட் அட்டாக் எல்லாம்  இருந்ததில்லை. ஆரோக்கியமாக இருந்தார்கள். அது நிதர்சனமான உண்மை!

நமக்கெல்லாம் ஆரோக்கியத்தைவிட பணமே பிதானமாகப் போய்விட்டது. பணத்தேடலிலேயே வாழ்க்கையின் பெரும்பகுதி கழன்று  கொண்டிருக்கிறது. யாருக்கும் எதற்கும் நேரம் இல்லை!

நேரம் கிடைத்தாலும் பலர் அதை டாஸ்மாக்கில் அல்லது தொலைகாட்சி அழுவாச்சி சீரியல்களில் அல்லது ஐ.பி.எல் ட்வென்டி ட்வெண்டி  போட்டிகளில் செலவழித்துவிடுகிறார்கள். கலியுகம். வேறென்னத்தைச் சொல்வது?

ஒரு ஆறுதலான செய்தி: மெடிக்ளைம் இன்சூரன்ஸ் இருக்கிறது. ஆகவே அவன் பார்த்துக் கொள்வான்!:-))))
---------------------------------------------------------------------------------------------------------------------
“வாத்தி (யார்) ருத்திராட்சத்தைப்பற்றிய செய்தி அதிகமில்லாமல் எல்லாம் உங்கள் கதையாகவே இருக்கிறதே? ருத்திராட்சத்தைப்பற்றிய முக்கியமான செய்திகள் எங்கே?”

 “நீ கேட்பாய் என்று தெரியும் கண்ணா! கீழே கொடுத்துள்ளேன். படித்துப்பார்!”
______________________________________________________________________

ருத்திராட்சத்தைப் பற்றி நான் சொல்ல வந்ததைவிட ஒரு இஸ்லாமிய அன்பர் சிறப்பாகச் சொல்லியிருக்கிறார். விடாமல் அவருடைய கட்டுரை
முழுவதையும் படியுங்கள். அதற்குப் பிறகு அதை அணிவதா அல்லது வேண்டாமா? என்பதை உங்கள் விருப்பப்படி முடிவு செய்யுங்கள்.
அந்தக் கட்டுரைக்கான சுட்டி இங்கே உள்ளது:
http://www.tamilvanan.com/content/2009/09/11/disease-relief-plants-akbar-kausar-25/
மேலதிகத் தகவல்களைக் கீழே கொடுத்துள்ளேன்.

1. நல்ல ருத்திராட்சமாக இருந்தால், அதைத் தண்ணீரில் போட்டால், அது நீருக்குள் மூழ்கிவிட வேண்டும்

2. ஐந்து முகம், ஆறுமுக முகம் கொண்ட ருத்திராட்சங்கள் அதிகமாகக் கிடைக்கும். எங்கும் கிடைக்கும். திருவண்ணாமலைக் கோபுரவாசலில் உள்ள கடைகளில் விற்கிறார்கள். விலை ஐந்து ரூபாய். அதே உத்திராட்சம் வாரணாசியில் ஒரு ரூபாய்

3. ஆறுமுகத்திற்கு மேல் ஏறுமுகம் என்பார்கள். அதாவது அதிக முகங்களைக் கொண்ட ருத்திராட்சம் நல்ல பலனைத் தரும் என்பார்கள். விலை 300 ரூபாய் முதல் 500 ரூபாய்வரை அதன் தன்மையைவைத்தும் முகங்களை வைத்தும் மாறுபடும்.

4. ஒரு கடினமான நிபந்தனை உண்டு. ருத்திராட்சம் அணிந்தவர்கள் புலால் அருந்தக் கூடாது. அதாவது நான் வெஜ்ஜிற்குத் தடா போட்டுவிட வேண்டும்.

5. ருத்திராட்ச மரத்தைப்பற்றிய செய்திகளுக்கான சுட்டி இங்கே உள்ளது!
http://cpreecenvis.nic.in/04_01_Sacred%20trees/rudraksha.htm

நட்புடன்
வாத்தியார்

+++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

28 comments:

  1. நன்றி வாத்த்யார் ஐயா..


    இங்க ஒரு சிலதுக சொன்னால் நம்பாம ருத்ராட்சம் கழுத்தில் இருக்கறப்பவே புலால் உண்ணுதுக. இந்த பதிவ காட்டணும்.

    காசி பதிவிலேயே நீங்கள் சொல்லியிருந்தீர்கள். மேலதிக விரிவான தகவல்களுக்கு நன்றிகள் பல.

    ReplyDelete
  2. உதிரிப்பூக்களில் இது கற்பக மலர்
    சதுர்மறைத் தலைவனின் அற்புத மலர்
    மேனி யெல்லாம் நிறைந்தும் - அவர்தம்
    அடியார் தனையும் அழகு செய்யும்
    ருத்திராட்ச்சம் தனையே அணிவர் யாவரும்
    ருத்திரன் அருளால் அறுப்பார் வினையே!

    அற்புதப் பதிவு... பகிர்வுக்கு நன்றிகள் ஐயா!

    ReplyDelete
  3. "மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
    அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்
    உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்
    அந்த ஊருக்குள் எனக்கொரு பேர் இருக்கும்"
    அப்படின்னு ஐயா பாட ஆரம்பிச்சிட்டு
    ஆனால் முடிக்கிறப்ப
    "முருகா அது முருகா
    பழனி அது பழனி"
    அப்படின்னு முடிச்சிட்டீங்கன்னு புரிஞ்சுகிட்டேன்

    ReplyDelete
  4. வாத்தியார் ஐயா வணக்கம்,

    உருத்திராட்சம் பற்றி எமக்கே பல விடயங்கள் புதியனவாக இருக்கும்போது,
    ஒரு இஸ்லாமியப் பெரியவர் இவ்வளவு திருக்கோயில்களின் பெயர்களுடன் தலைவிருச்சங்களின் மகிமைபற்றியெல்லாம் குறிப்பிட்டுள்ளமை நன்றாக உள்ளது. நன்றிகள்.
    சுதன்
    கனடா.

    ReplyDelete
  5. Guru Vanakkam,

    I use to wear that until my college days, that gave me an identity too. I don't remember how and when I stopped wearing that. I should find one and start wearing that now.

    Regards
    RAMADU

    ReplyDelete
  6. ருத்திராட்சத்தைப் பற்றிய அரிய தகவல் தந்த பதிவு!

    மேலும் இஸ்லாமிய அன்பருடைய கட்டுரை அதிகமான தகவல்களுடன் பிரமிப்பை ஏற்படுத்துகிறது!

    நன்றி

    ReplyDelete
  7. வாத்தியார் ஐயா வணக்கம்.

    தாங்கள் இன்றைய வகுப்பறை பாடத்தில் கூறி உள்ளீர்கள் ருத்திராட்சை பற்றியும் அதனை அணிவதால் ஏற்படும் மகிமையை பற்றியும் .

    நிற்க! எமக்கும் மனதார ஆசை தான் குருநாதரே! ருத்திராட்சை மாலையாக அணியாவிட்டாலும் குறைந்த பட்சம் ஒன்றையாவது அணிய வேண்டும் என்று ஆனால், பாருங்கோ

    யாம் பொருள்தேடி வந்த இடத்தில கையில், விரல்களில் மற்றும் கழுத்தில் தங்கத்தினால் செய்ய பட்ட ஆபரணத்தை அணிந்தாலே ஒரு மாதிரியாக பார்கின்றனர் மற்றும் பேசுகின்றனர் இதில் ருத்திராட்சை அணிவது என்பது எல்லாம் நடக்கிற காரியம் அல்ல.

    தங்களுக்கு ஒன்றை கூற விருப்புகின்றேன் ஐயா !
    அது என்ன என்றால் என்னுடைய ஆசை மற்றும் மோகத்தை எல்லாம் விட்டு விட்டு காவி உடை அணியாத சந்நியாசியாக வாழ்த்து கொன்று அன்னைக்கு வேண்டிய அனைத்து வசதியும் செய்து தந்துள்ளேன் . அதனில் எல்லாம் மன திருப்பதி அல்லது ஆத்ம திருப்தி அடையாத அன்னை! எம்மிடம் வேண்டுவது யான் இறந்து போனால் எனக்கு கொல்லி மற்றும் வந்து வைத்து விடு என்பது ஆகும் . நீ இந்த உலகத்தில் எங்கு இருந்தாலும் யான் மரணம் அடைந்தாள் மறக்காது வந்து மேற்கூறியதை மற்றும் செய்து விடு என்று கேட்கின்றனர் ஐயா .

    மேற்கண்டதை இங்கு கூற காரணம் என்ன என்பதனை அனைத்தினையும் புரிய கூடிய ஐயாவிற்கு புரிந்து இருக்கும் என்று நம்புகின்றேன் ஐயா !

    ReplyDelete
  8. வணக்கம் ஐயா,
    என்னுடைய இஷ்ட தெய்வம் சிவபெருமான் பற்றிய தகவல்களையும் ருத்ராட்சம் பற்றிய குறிப்புகளும் நன்றாக இருந்தது...
    ஐயா,நான் என் சிறு வய‌திலே ஆறு முகம் கொண்ட ருத்ராட்சம் அணிந்திருந்தேன்.பின்னர் நான் ஒரு பெண் என்பதால் அதை அணியக் கூடாது என்று சிலர் கூறினார்கள்.இப்பொழுது சிலர் அணியலாம் என்கின்றனர்.இன்னும் குழப்பத்திலேயே பத்திரமாக வைத்திருக்கிறேன் அணியாமலே...

    ReplyDelete
  9. ////Blogger Sathish K said...
    நன்றி வாத்தியார் ஐயா..
    இங்க ஒரு சிலதுகள் சொன்னால் நம்பாமல் ருத்ராட்சம் கழுத்தில் இருக்கறப்பவே புலால் உண்ணுதுக. இந்த பதிவைக் காட்டணும்.
    காசி பதிவிலேயே நீங்கள் சொல்லியிருந்தீர்கள். மேலதிக விரிவான தகவல்களுக்கு நன்றிகள் பல./////

    யாரையும் நீங்கள் நெறிப்படுத்த முடியாது. அது உங்கள் வேலையும் அல்ல! அதற்காக நீங்கள் பிறவி எடுக்கவும் இல்லை! அவர்களை அவர்கள் போக்கிலேயே விட்டுவிடுங்கள். அவர்களாகவே ஒரு நாள் அதை அவர்கள் உணர்வார்கள்

    ReplyDelete
  10. ////Blogger தமிழ் விரும்பி said...
    உதிரிப்பூக்களில் இது கற்பக மலர்
    சதுர்மறைத் தலைவனின் அற்புத மலர்
    மேனி யெல்லாம் நிறைந்தும் - அவர்தம்
    அடியார் தனையும் அழகு செய்யும்
    ருத்திராட்ச்சம் தனையே அணிவர் யாவரும்
    ருத்திரன் அருளால் அறுப்பார் வினையே!
    அற்புதப் பதிவு... பகிர்வுக்கு நன்றிகள் ஐயா!///

    நல்லது. உங்களின் மனம் நெகிழ்வான பின்னூட்டத்திற்கு நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  11. ////Blogger தேமொழி said...
    "மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
    அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்
    உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்
    அந்த ஊருக்குள் எனக்கொரு பேர் இருக்கும்"
    அப்படின்னு ஐயா பாட ஆரம்பிச்சிட்டு
    ஆனால் முடிக்கிறப்ப
    "முருகா அது முருகா
    பழனி அது பழனி"
    அப்படின்னு முடிச்சிட்டீங்கன்னு புரிஞ்சுகிட்டேன்///////

    அத்துடன் இன்னொரு மூன்றெழுத்தும் உள்ளது அதுதான் ‘பதிவு’ (Blog). நன்றி சகோதரி!

    ReplyDelete
  12. /////Blogger suthank said...
    வாத்தியார் ஐயா வணக்கம்,
    உருத்திராட்சம் பற்றி எமக்கே பல விடயங்கள் புதியனவாக இருக்கும்போது, ஒரு இஸ்லாமியப் பெரியவர் இவ்வளவு திருக்கோயில்களின் பெயர்களுடன் தலைவிருச்சங்களின் மகிமைபற்றியெல்லாம் குறிப்பிட்டுள்ளமை நன்றாக உள்ளது. நன்றிகள்.
    சுதன்/////

    நல்லது.நல்லவற்றை யார் வாய்மொழியில் கேட்டாலும் நல்லதுதான். நன்றி நண்பரே!

    ReplyDelete
  13. ///Blogger RAMADU Family said...
    Guru Vanakkam,
    I use to wear that until my college days, that gave me an identity too. I don't remember how and when I stopped wearing that. I should find one and start wearing that now.
    Regards
    RAMADU/////

    ஆகா, நல்லது அப்படியே செய்யுங்கள். நன்றி நண்பரே!

    ReplyDelete
  14. /////Blogger முருகராஜன் said...
    ருத்திராட்சத்தைப் பற்றிய அரிய தகவல் தந்த பதிவு! மேலும் இஸ்லாமிய அன்பருடைய கட்டுரை அதிகமான தகவல்களுடன் பிரமிப்பை ஏற்படுத்துகிறது!
    நன்றி////

    நல்லது. உங்களின் நிறைவான பின்னூட்டத்திற்கு நன்றி முருகராஜன்!

    ReplyDelete
  15. /////Blogger kannan said...
    வாத்தியார் ஐயா வணக்கம்.
    தாங்கள் இன்றைய வகுப்பறை பாடத்தில் கூறி உள்ளீர்கள் ருத்திராட்சை பற்றியும் அதனை அணிவதால் ஏற்படும் மகிமையை பற்றியும்
    நிற்க! எமக்கும் மனதார ஆசை தான் குருநாதரே! ருத்திராட்சை மாலையாக அணியாவிட்டாலும் குறைந்த பட்சம் ஒன்றையாவது அணிய வேண்டும் என்று ஆனால், பாருங்கள் யாம் பொருள்தேடி வந்த இடத்தில கையில், விரல்களில் மற்றும் கழுத்தில் தங்கத்தினால் செய்ய பட்ட ஆபரணத்தை அணிந்தாலே ஒரு மாதிரியாக பார்கின்றனர் மற்றும் பேசுகின்றனர் இதில் ருத்திராட்சை அணிவது என்பது எல்லாம் நடக்கிற காரியம் அல்ல.
    தங்களுக்கு ஒன்றை கூற விருப்புகின்றேன் ஐயா !
    அது என்ன என்றால் என்னுடைய ஆசை மற்றும் மோகத்தை எல்லாம் விட்டு விட்டு காவி உடை அணியாத சந்நியாசியாக வாழ்ந்து கொண்டு அன்னைக்கு வேண்டிய அனைத்து வசதியும் செய்து தந்துள்ளேன் . அதனில் எல்லாம் மன திருப்பதி அல்லது ஆத்ம திருப்தி அடையாத அன்னை! எம்மிடம் வேண்டுவது யான் இறந்து போனால் எனக்கு கொள்ளி மட்டும் வந்து வைத்து விடு என்பது ஆகும் . நீ இந்த உலகத்தில் எங்கு இருந்தாலும் நான் மரணம் அடைந்தால் மறக்காது வந்து மேற் கூறியதை மற்றும் செய்து விடு என்று கேட்கின்றனர் ஐயா
    மேற்கண்டதை இங்கு கூற காரணம் என்ன என்பதனை அனைத்தினையும் புரிய கூடிய ஐயாவிற்கு புரிந்து இருக்கும் என்று நம்புகின்றேன் ஐயா !///////

    எல்லாம் சரிதான். மிகவும் உணர்ச்சி வசப்படாதீர்கள். இறையுணர்வு மனதில் இருந்தால் போதும். மத அடையாளங்கள் எல்லாம் இரண்டாம் நிலை. நீங்கள் இந்த வயதில் பொருள் ஈட்டும் பொருட்டு இருக்கும் வேலையில் நிலைப்பதுதான் முக்கியம். மற்றதை எல்லாம் நீங்கள் வணங்கும் இறைவனிடம் விட்டுவிடுங்கள். அவர் பார்த்துக்கொள்வார்!

    ReplyDelete
  16. //////Blogger R.Srishobana said...
    வணக்கம் ஐயா,
    என்னுடைய இஷ்ட தெய்வம் சிவபெருமான் பற்றிய தகவல்களையும் ருத்ராட்சம் பற்றிய குறிப்புகளும் நன்றாக இருந்தது...
    ஐயா,நான் என் சிறு வய‌திலே ஆறு முகம் கொண்ட ருத்ராட்சம் அணிந்திருந்தேன்.பின்னர் நான் ஒரு பெண் என்பதால் அதை அணியக் கூடாது என்று சிலர் கூறினார்கள்.இப்பொழுது சிலர் அணியலாம் என்கின்றனர்.இன்னும் குழப்பத்திலேயே பத்திரமாக வைத்திருக்கிறேன் அணியாமலே...///////

    இறையுணர்வு மனதில் இருந்தால் போதும். மற்றதெல்லாம் இரண்டாம் நிலைதான்! காலம் கனியட்டும் பொறுத்திருங்கள் சகோதரி!

    ReplyDelete
  17. அன்புள்ள அய்யா
    நானும் கைலாசம் சென்றபோது நேப்பாளத்தில் ருத்திராட்ச மரங்கள் மற்றும் ருத்திராட்ச பழங்கள் , மாலைகள் எல்லாம் பார்த்தோம். மலிவு விலையில் வாங்கி வந்தோம். தொடர்ந்து அணிந்தும் வருகிறேன். மிக மகிழ்வாக உள்ளது. உங்கள் கட்டுரை மற்றும் இஸ்லாமியரின் கட்டுரைகளில் இருந்து அதன் மகத்துவத்தை முழுவதுமாக அறிந்து கொள்ளமுடிகிறது. நன்றி .
    அருணாசலம் ( கோட்டையூர் )

    ReplyDelete
  18. ருத்ராட்சம் அணிவது பற்றிய பதிவு சுவாரஸ்யமாக உள்ளது.

    அதில் சுட்டி உள்ள இஸ்லாமிய அன்பர் 100 எக்கர் நிலத்தில் பாரத தேசத்தில் உள்ள கோவில்களின் ஸ்தல விருட்சங்களை வைத்து பெரும் காடாக வளர்த்துள்ளார். எந்தக் கோவிலின் ஸ்தல விருட்சம் எது என்று அதிலேயே எழுதி வைத்துள்ளார். அவற்றின் மருத்துவ குணம் பற்றியும் சொல்லப்பட்டுள்ளது. அவர் செய்துள்ள பணி மிகவும் மகத்தானது.அதை முன் உதாரணமாக எடுத்து அரசாங்கம்,விவசாயப் பல்கலை கழகங்கள், கல்லூரிகளும் அது போன்ற 'தீம்' காடுகளை உருவாக்க‌லாம். கவுசரின் காட்டை தாவர‌ இயல் மாணவர்கள் அவசியம் பார்க்க வேண்டும்.

    ருத்ராட்சம் அணிபவர்கள் ஒழுக்கத்தைப் பேண வேண்டும்.தவறு செய்தால் ருத்திராட்சம் உறுத்த வேண்டும். முப்புரிநூலும் அதே கருத்தில்தான் அணியப்படுகிறது. தாலியும் அதே கருத்துத்தான். நமக்கு நாமே போட்டுக் கொள்ளும் வேலிதான் அது.

    வெளி வேடம் போடும் ஆன்மீக வாதிகளுக்கு ருத்திராட்சப் பூனை என்ற பெயர் உண்டு.

    ReplyDelete
  19. Blogger VCTALAR said...
    அன்புள்ள அய்யா
    நானும் கைலாசம் சென்றபோது நேப்பாளத்தில் ருத்திராட்ச மரங்கள் மற்றும் ருத்திராட்ச பழங்கள் , மாலைகள் எல்லாம் பார்த்தோம். மலிவு விலையில் வாங்கி வந்தோம். தொடர்ந்து அணிந்தும் வருகிறேன். மிக மகிழ்வாக உள்ளது. உங்கள் கட்டுரை மற்றும் இஸ்லாமியரின் கட்டுரைகளில் இருந்து அதன் மகத்துவத்தை முழுவதுமாக அறிந்து கொள்ளமுடிகிறது. நன்றி .
    அருணாசலம் ( கோட்டையூர் )/////

    நல்லது.நன்றி நண்பரே!

    ReplyDelete
  20. /////Blogger kmr.krishnan said...
    ருத்ராட்சம் அணிவது பற்றிய பதிவு சுவாரஸ்யமாக உள்ளது.
    அதில் சுட்டி உள்ள இஸ்லாமிய அன்பர் 100 எக்கர் நிலத்தில் பாரத தேசத்தில் உள்ள கோவில்களின் ஸ்தல விருட்சங்களை வைத்து பெரும் காடாக வளர்த்துள்ளார். எந்தக் கோவிலின் ஸ்தல விருட்சம் எது என்று அதிலேயே எழுதி வைத்துள்ளார். அவற்றின் மருத்துவ குணம் பற்றியும் சொல்லப்பட்டுள்ளது. அவர் செய்துள்ள பணி மிகவும் மகத்தானது.அதை முன் உதாரணமாக எடுத்து அரசாங்கம்,விவசாயப் பல்கலை கழகங்கள், கல்லூரிகளும் அது போன்ற 'தீம்' காடுகளை உருவாக்க‌லாம். கவுசரின் காட்டை தாவர‌ இயல் மாணவர்கள் அவசியம் பார்க்க வேண்டும்.
    ருத்ராட்சம் அணிபவர்கள் ஒழுக்கத்தைப் பேண வேண்டும்.தவறு செய்தால் ருத்திராட்சம் உறுத்த வேண்டும். முப்புரிநூலும் அதே கருத்தில்தான் அணியப்படுகிறது. தாலியும் அதே கருத்துத்தான். நமக்கு நாமே போட்டுக் கொள்ளும் வேலிதான் அது.
    வெளி வேடம் போடும் ஆன்மீக வாதிகளுக்கு ருத்திராட்சப் பூனை என்ற பெயர் உண்டு./////

    பதவியில் இருக்கும் அரசியல்வாதிகளுக்கு அதற்கெல்லாம் நேரம் ஏது சார்? சொந்தத்தில் தீம் பார்க் வைக்கப் புதுவழிமுறைகள் இருந்தால் சொல்லுங்கள்

    ReplyDelete
  21. //சிலர் வயதான காலத்தில் தீவிர சிவபக்தர்களாக மாறி, மொட்டை, பட்டை, கொட்டை, கட்டையுடன் இருப்பார்கள்.//

    கட்டை என்றதும் வாத்தியார் ஏதோ ஒரு நாட்டுக் கட்டையைப் பற்றி சொல்லப் போகிறார் என்று நினைத்தேன். அப்படியானால் காம்பினேஸன் சரியாக வரவில்லையே என்றும் நினைத்தேன்.

    பஞ்சாட்சர மந்திரம் என்று இல்லை, எந்த மந்திரமானாலும், அது சித்தியாகும் வரை தொடர்ந்து ஜபித்துக் கொண்டுதான் வர வேண்டும். நானும் கடந்த 3 வருடமாக விநாயகர் மூல மந்திரத்தை ஜபித்துக் கொண்டுதான் வருகிறேன். ஒரு சில தொல்லைகள் இருந்தது போய் பொருளாதார ரீதியாகவும் முன்னேற்றம் கண்டு வருகிறேன். அடுத்து காளிகாம்பாள் மந்திரம். இந்த மந்திரத்தை ஜபிக்க ஆரம்பித்தது முதல் ஜோதிடம், எழுத்து இவற்றில் ஆர்வம் ஏற்பட்டு இவை சுலபமாக கைவர ஆரம்பித்தது. மேலும் இதைபற்றி சொல்வதானால் அதை வார்த்தையால் விவரிக்க முடியாது. அனுபவித்துப் பார்த்தால்தான் புரியும். வேலை, குடும்பம், மந்திர ஜபம் இவற்றுக்கு நேரம் ஒதுக்கியது போக மற்றவற்றிற்கான நேரம் குறைந்துக் கொண்டே வருகிறது.

    ReplyDelete
  22. அக்கு மணி பற்றிய கட்டுரை
    அருமையானது
    முகங்களின் நிலையை வைத்து குணப்படுத்தலாம் முற்றிய நோய்களையும்


    வெளிநாட்டு பயணத்தில் பாதுகாப்பு சோதைனையில் அணிந்திருந்த ருத்திராக்க மாலையை கழற்ற மறுத்து ஆரோக்கியமாக வாதம் செய்து வெற்றியுடன் பாதுகாப்பு சோதனையை தாண்டிய சூழலினை நிழலாட வைத்தது


    எண்ணங்களின் பதிவுகளே ரேகைகள் என்ற அடிப்படையில் எண்ணங்களை மாற்றியமைக்கும் ருத்திராட்ச முககங்கள் என்பதனை முன்னரே தந்துள்ளோம்

    ஆண்களும் பெண்களும் ருத்திராக்கம் அணியலாம்..
    முககங்களை கொண்டு மட்டுமல்ல அதன் அதிர்வுகளை (vibration) கொண்டு தேர்வு செய்ய வேண்டும். அதனை தேர்வு செய்து தருபவர்கள் இல்லை என்பதினால் பெண்கள் அணியக் கூடாது என்ற தகவல் இருந்திருக்கலாம்..


    நீரில் மூழ்குவது நல்ல ருத்திராக்கம் என்பது சரிதான் ஆனால் சில குறிப்பிட்ட சாதியினர் சிறு துண்டு இரும்புகளை உள்ளே வைத்து நல்லது போல் காட்டி விற்று பணம் பண்ணிவிடுவார்கள்..


    முககங்களைப் போல் அதன் vibration தன் சிறப்பு தன்மையினை வெளிக்காட்டும்..
    vibrationயை எப்படி அறிந்து கொள்வது என அறிய விரும்பும் (இந்திய) குடிமகன்களுக்கு தனியாக para-psychology பற்றிய சொன்ன பிறகு தான் இதைப்பற்றி சொல்ல வேண்டும்..


    தங்கம், வெள்ளி, செம்பு என பட்டியலிட்ட அய்யா..பட்டு நுலில் அணிவதும் உண்டு என்பதை சொல்லாமலே நாம் அறிவோம் தானே


    அணிந்திருப்பவர்களெல்லாம் 40யை தாண்டியவர்களும் அல்ல
    அணியாதவர்கள் எல்லாம் 40யை தாண்டதவரும் இல்லை..
    (சிலர் அணியாத காரணத்தினால் தமக்கு 40 ஆகவில்லை என கற்பனையில் இருக்கலாம் என்பதற்காக இந்த தகவல்)

    சொல்ல மறந்த நிஜங்கள் என
    சொல்வதற்கு ருத்திராக்கம் பற்றிய

    செய்திகள் பல உள்ளது அருள் மழை
    பெய்யட்டும் நனைய காத்திருக்கிறோம்.

    அதற்கு முன்னர்..

    ஒரு வார விடுமுறை எடுத்துக் கொண்டு
    தனுர் மாதம் தொடங்கிய பின் 20க்கு பின் அய்யர் வகுப்புக்கு வருவார்..
    விடுமுறை அனுமதி கிடைக்கும் தானே.

    ReplyDelete
  23. கீழே கொடுக்கப்பட்ட சுட்டியில் ருத்திராட்சத்தை பற்றி நல்ல பதிவு இருக்கிறது. http://appukalpu.blogspot.com/

    நன்றி.

    பிரகாஷ்.

    ReplyDelete
  24. //அறிய விரும்பும் (இந்திய) குடிமகன்களுக்கு தனியாக para-psychology பற்றிய சொன்ன //

    லால்(குடிகாரர்) ஒரு சைகாலஜி முதுகலைப் பட்டம் உள்ளவரே என்று (தத்துவக்)
    குடிகாரருக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

    ReplyDelete
  25. Blogger ananth said...
    //சிலர் வயதான காலத்தில் தீவிர சிவபக்தர்களாக மாறி, மொட்டை, பட்டை, கொட்டை, கட்டையுடன் இருப்பார்கள்.//
    கட்டை என்றதும் வாத்தியார் ஏதோ ஒரு நாட்டுக் கட்டையைப் பற்றி சொல்லப் போகிறார் என்று நினைத்தேன். அப்படியானால் காம்பினேஸன் சரியாக வரவில்லையே என்றும் நினைத்தேன்./////

    கட்டை என்றவுடன் கலக்குகிறீகளே! காலில் அணியும் மரத்தாலான பாத அணியை நான் குறிப்பிட்டுள்ளேன்!
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    பஞ்சாட்சர மந்திரம் என்று இல்லை, எந்த மந்திரமானாலும், அது சித்தியாகும் வரை தொடர்ந்து ஜபித்துக் கொண்டுதான் வர வேண்டும். நானும் கடந்த 3 வருடமாக விநாயகர் மூல மந்திரத்தை ஜபித்துக் கொண்டுதான் வருகிறேன். ஒரு சில தொல்லைகள் இருந்தது போய் பொருளாதார ரீதியாகவும் முன்னேற்றம் கண்டு வருகிறேன். அடுத்து காளிகாம்பாள் மந்திரம். இந்த மந்திரத்தை ஜபிக்க ஆரம்பித்தது முதல் ஜோதிடம், எழுத்து இவற்றில் ஆர்வம் ஏற்பட்டு இவை சுலபமாக கைவர ஆரம்பித்தது. மேலும் இதைபற்றி சொல்வதானால் அதை வார்த்தையால் விவரிக்க முடியாது. அனுபவித்துப் பார்த்தால்தான் புரியும். வேலை, குடும்பம், மந்திர ஜபம் இவற்றுக்கு நேரம் ஒதுக்கியது போக மற்றவற்றிற்கான நேரம் குறைந்துக் கொண்டே வருகிறது.//////

    இன்றைய சக மனிதர்களின் முக்கியமான பிரச்சினையே - நேரமின்மைதான். ஆனால் மனது வைத்தால் நேரத்தை ஒதுக்கிக்கொள்ள முடியும். நன்றி ஆனந்த்!

    ReplyDelete
  26. Blogger iyer said...
    அக்கு மணி பற்றிய கட்டுரை
    அருமையானது
    முகங்களின் நிலையை வைத்து குணப்படுத்தலாம் முற்றிய நோய்களையும் வெளிநாட்டு பயணத்தில் பாதுகாப்பு சோதைனையில் அணிந்திருந்த ருத்திராக்க மாலையை கழற்ற மறுத்து ஆரோக்கியமாக வாதம் செய்து வெற்றியுடன் பாதுகாப்பு சோதனையை தாண்டிய சூழலினை நிழலாட வைத்தது
    எண்ணங்களின் பதிவுகளே ரேகைகள் என்ற அடிப்படையில் எண்ணங்களை மாற்றியமைக்கும் ருத்திராட்ச முககங்கள் என்பதனை முன்னரே தந்துள்ளோம்
    ஆண்களும் பெண்களும் ருத்திராக்கம் அணியலாம்..
    முககங்களை கொண்டு மட்டுமல்ல அதன் அதிர்வுகளை (vibration) கொண்டு தேர்வு செய்ய வேண்டும். அதனை தேர்வு செய்து தருபவர்கள் இல்லை என்பதினால் பெண்கள் அணியக் கூடாது என்ற தகவல் இருந்திருக்கலாம்..
    நீரில் மூழ்குவது நல்ல ருத்திராக்கம் என்பது சரிதான் ஆனால் சில குறிப்பிட்ட சாதியினர் சிறு துண்டு இரும்புகளை உள்ளே வைத்து நல்லது போல் காட்டி விற்று பணம் பண்ணிவிடுவார்கள்..
    முககங்களைப் போல் அதன் vibration தன் சிறப்பு தன்மையினை வெளிக்காட்டும்..
    vibrationயை எப்படி அறிந்து கொள்வது என அறிய விரும்பும் (இந்திய) குடிமகன்களுக்கு தனியாக para-psychology பற்றிய சொன்ன பிறகு தான் இதைப்பற்றி சொல்ல வேண்டும்..
    தங்கம், வெள்ளி, செம்பு என பட்டியலிட்ட அய்யா..பட்டு நுலில் அணிவதும் உண்டு என்பதை சொல்லாமலே நாம் அறிவோம் தானே
    அணிந்திருப்பவர்களெல்லாம் 40யை தாண்டியவர்களும் அல்ல
    அணியாதவர்கள் எல்லாம் 40யை தாண்டதவரும் இல்லை..
    (சிலர் அணியாத காரணத்தினால் தமக்கு 40 ஆகவில்லை என கற்பனையில் இருக்கலாம் என்பதற்காக இந்த தகவல்)
    சொல்ல மறந்த நிஜங்கள் என சொல்வதற்கு ருத்திராக்கம் பற்றிய செய்திகள் பல உள்ளது அருள் மழை
    பெய்யட்டும் நனைய காத்திருக்கிறோம்.
    அதற்கு முன்னர்..
    ஒரு வார விடுமுறை எடுத்துக் கொண்டு தனுர் மாதம் தொடங்கிய பின் 20க்கு பின் அய்யர் வகுப்புக்கு வருவார்..
    விடுமுறை அனுமதி கிடைக்கும் தானே./////

    இணைய வகுப்பு. விடுமுறை அனுமதிக்கெல்லாம் இங்கு வேலை இல்லை! உத்திராட்சம் பற்றிய உங்களின் மேலதிகத் தகவல்களுக்கு நன்றி விசுவநாதன்!

    ReplyDelete
  27. ////Blogger Prakash said...
    கீழே கொடுக்கப்பட்ட சுட்டியில் ருத்திராட்சத்தை பற்றி நல்ல பதிவு இருக்கிறது. http://appukalpu.blogspot.com/
    நன்றி.
    பிரகாஷ்./////

    மேலதிகத் தகவல்களுக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  28. /////Blogger kmr.krishnan said...
    //அறிய விரும்பும் (இந்திய) குடிமகன்களுக்கு தனியாக para-psychology பற்றிய சொன்ன //
    லால்(குடிகாரர்) ஒரு சைகாலஜி முதுகலைப் பட்டம் உள்ளவரே என்று (தத்துவக்)
    குடிகாரருக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.//////

    நாங்களும் தெரிந்து கொண்டோம். மிக்க நன்றி!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com