11.12.10

இன்று ‘ஷெல்லிதாசனின்’ பிறந்தநாள்; அதைக் கொண்டாடுவோம், வாரீர்!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

-------------------------------------------------------------------------------
இன்று ‘ஷெல்லிதாசனின்’ பிறந்தநாள்; அதைக் கொண்டாடுவோம், வாரீர்!

மஹாகவி பாரதியாருக்கு இன்று ஆங்கிலத் தேதிப்படி 11 டிசம்பர்
பிறந்ததினம். அவர் நினைவாக இந்தப் பதிவில் சில செய்திகளைச்
சொல்ல விரும்புகின்றேன்.

மஹாகவி பாரதியார் என்றாலே அவர் ஒரு தமிழ்க் கவிஞர், பாடல்கள் எழுதியவர், சுதந்திரப் போராட்டத்துக்கு உத்வேகம் அளித்த பாடல்களை அளித்தவர் என்ற அளவில் பலரும் அறிந்து உள்ளார்கள். மிகச் சிலருக்கு  மட்டுமே அவர் ஒரு பத்திரிக்கை ஆசிரியர், தமிழ் உரை நடையில் திறமை வாய்ந்தவர் என்பது தொ¢யும்.

சுதேசமித்திரன் நாளேட்டில் பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.

அவர் நல்ல ஆங்கிலப் புலமையும் வாய்ந்தவர். பல ஆங்கிலக் கட்டுரைகளை மொழிபெயர்த்துள்ளார். ஆங்கிலக் கவிஞர் ஷெல்லியைப் படித்துவிட்டு, சொக்கிப்போய் தன் புனைப் பெயராக "ஷெல்லி தாசன்" என்ற பெயரையும் சூட்டிக் கொண்டார்.

இன்று புதுக் கவிதைக் என்று பிரபலமாக உள்ள கவிதை அமைப்பை முதல் முதலாக எழுதியவர் வால்ட் விட்மென் என்ற அமரிக்கக் கவிஞர்.. அவருடைய கவிதைகளை மஹாகவி படித்துவிட்டுத் தானும் தமிழில் அது போன்ற இலக்கியத்தை உருவாக்க வேண்டும்  என்று ஆவல் கொண்டார். அதன் விளைவாக எழுதப் பட்டதுதான் 'வசன கவிதை"

இந்த வசன கவிதைக்குக்  கருப்பொருளாக  வேதங்களிலும், உபனிஷ தங்களிலும் கூறபட்டுள்ள கருத்துக்களை எடுத்துக்கொண்டார்.மேலும் பல இடங்களில் வேத ஒலியே கேட்கும் வண்ணம் வடிவமைத்துள்ளார். ஐந்து பெரும் பூதங்களான நிலம், நெருப்பு, நீர், காற்று, ஆகாயம் ஆகியவற்றின் செயல்பாடுகள், அவற்றின் துதியைப் பாடுதல், அவற்றிடம் வேண்டுகோள் வைத்தல் ஆகிய முறைகளைக் கடைப்பிடித்து வசன கவிதை என்ற புதிய  ஆக்கத்தைத் தமிழ்த் தாய்க்குக் காணிக்கை ஆக்கினார்.

"இவ்வுலகம் இனியது. இதிலுள்ள வான் இனிமையுடைத்து. காற்றும் இனிது. தீ இனிது.நீர் இனிது.நிலம் இனிது. ஞாயிறு நன்று!...." என்று துவங்கி விவரித்துக்கொண்டே போகின்றார்.

"எல்லா உயிரும் இன்பமெய்துக,
எல்லா உடலும் நோய் தீர்க
எல்லா உணர்வும் ஒன்றாதல் உணர்க.
-----------------------------------
அமுதம் எப்போதும் இன்பமாகுக." அத்வைதக் கருத்தை முன்னிறுத்திச் சொல்லுகிறார்.

"இவ்வுலகம் ஒன்று. ஆண், பெண், மனிதர், தேவர், பாம்பு, பறவை, காற்று, கடல், உயிர், இறப்பு--இவை அனைத்தும் ஒன்றே.
------------------
இவை ஒரு பொருளின் பல தோற்றம்.."

ஞாயிறு (சூரியன்) பற்றி எழுதுகிறார் பாருங்கள்.

"நீ ஒளி.நீ சுடர்.நீ விளக்கம். நீ காட்சி. ......கண் நினது வீடு.
நீ சுடுகின்றாய், வாழ்க.நீ காட்டுகின்றாய், வாழ்க."

"வானவெளி என்னும் பெண்ணை ஒளியென்னும் தேவன் மணந்திருக்கின்றான்.."

அற்புதமான சொற்சித்திரங்கள் இன்னும் நிறைய இருக்கின்றன.

ஒரு கயிறு தொங்குவதைப்பார்த்து அருகில் உள்ள மற்றொரு கயிற்றை வள்ளி என்றும் , நீளக்கயிற்றை முருகன் என்றும் பெயரிட்டு அவை புரிந்த காதல் சாகஸத்தைச் சுவையாக வர்ணித்துள்ளார். நான் இங்கே கூறிவிட்டால் படிக்கும் போது உங்களுக்குச் சுவைக்காது. நீங்களே படித்து ரசியுங்கள்.

இந்த பாரதி என்னும் மாகவி பிறந்த தினத்தில், மீண்டும் அவருடைய ஆக்கங்களைப் படிக்கத் துவங்குவோம். அதுவே அவருக்கு நம்மால் செய்ய முடிந்த பிரதி உபகாரம் ஆகும்!

வாழ்க மஹாகவி பாரதியாரின் திருப்பெயர்! 
வாழ்க வையகம்!
வாழ்க தமிழ்!
வளர்க தமிழ் நாடு!
ஆக்கம்: கே.முத்துராமகிருஷ்ணன், தஞ்சாவூர்

தஞ்சை மண்ணுக்குப் பெருமை சேர்க்கும் திருவாளர் 
கே.முத்துராம கிருஷ்ணரின் எழில்மிகு தோற்றம். 
இவர் நம்முடைய வகுப்பறையின் 
மூத்த மாணவர்களில் ஒருவர் என்பது 
நமக்குப் பெருமை!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


வாழ்க வளமுடன்!

13 comments:

  1. மகாகவியின் நினைவு போற்றி பதிவு அருமை... இயற்கை , காதல் கவிகளை நினைவு படுத்தியது சிறப்பு ..

    ReplyDelete
  2. என் ஆக்கத்தைத் தவறாமல் வெளியிட்டு ஊக்கம் அளிக்கும் அய்யாவே!நீங்கள்
    பல்லாண்டு பல்லாண்டு பலகோடி நூறாயிரம் ஆண்டுகள் வாழ்ந்து தமிழ்த்தொண்டு ஆற்றிட தமிழ்க் கடவுளாம் பழனி ஆண்டவர் அருளை வேண்டி நிற்கிறேன்.

    ReplyDelete
  3. ஆஹா! அருமை, அற்புதம். மகாகவி ஷேல்லிதாசனின் பிறந்தநாளில் அவனை நினைவுகொள்ள ஒரு வாய்ப்பு....
    பாரதியும் ஷெல்லியும் காலத்தால் வேறுபட்டாலும் கருத்தால் ஒன்றுபட்டவர்கள்.... அதனாலே பாரதி பல புனைப் பெயர்களில் வலம் வந்திருந்தப் போதிலும்.... அவன் முதலில் தன்னை ஷெல்லிதாசன் என்றே கூறியிருக்கிறான்....1792 ஆகஸ்ட் 4 அன்று பிறந்த ஷெல்லியும் பெரும் பணக்கார வாரிசே.... பாரதியும் அப்படித்தானே.....
    ஷெல்லியும் 29 வருடம் 11 மாதம் 4 நாட்கள் தான் இந்த பூமியில் வாழ்ந்திருக்கிறான்.

    எங்கோ பிறந்த ஒருகவிஞனை இங்கு இந்த அக்னிக் குஞ்சு எப்படித் தேடித் படித்தது..... அவனின் அகோர அறிவுப் பசிதானே இதற்கு காரணம்...... அதனாலே அவனே பராசக்தியிடம் வேண்டினான்... நல்லதோர் வீணை செய்து, அதன் நலம் கெட புழுதியில் எறிவதுண்டோ.......என்று......

    பாரதியும் ஷெல்லியும் இருகண்களாய் ஒரு பார்வையில் இந்த சமுதாயத்தைப் பார்த்து இருக்கிறார்கள் என்பதை வெவ்வேருகாலங்களில் பிரசவித்த அவர்களின் கவிதைகள் நமக்குத் தெரிவிக்கும்......
    அவைகளை உதாரணங்களாக திரு கிருஷ்ணன் சார் தந்திருக்கலாம்..... அற்புத நினைவு நன்றிகள் கிருஷ்ணன் சார்......
    வாழ்க தமிழ்.... வளர்க அத்வைதி பாரதியின் புகழ். நன்றி.

    ReplyDelete
  4. ////பத்மநாபன் said...
    மகாகவியின் நினைவு போற்றி பதிவு அருமை... இயற்கை , காதல் கவிகளை நினைவு படுத்தியது சிறப்பு!

    நல்லது. நன்றி நண்பரே!பாராட்டிற்கு உரியவர் KMRK.தேங்காய் அவர் கொடுத்தது. பிள்ளையாருக்கு உடைத்தது (வகுப்பறையில் பதிவிட்டது) மட்டுமே அடியேன் செய்த பணி.

    ReplyDelete
  5. /////kmr.krishnan said...
    என் ஆக்கத்தைத் தவறாமல் வெளியிட்டு ஊக்கம் அளிக்கும் அய்யாவே!நீங்கள்
    பல்லாண்டு பல்லாண்டு பலகோடி நூறாயிரம் ஆண்டுகள் வாழ்ந்து தமிழ்த்தொண்டு ஆற்றிட தமிழ்க் கடவுளாம் பழனி ஆண்டவர் அருளை வேண்டி நிற்கிறேன்./////

    ஆகா, உங்கள் பிரார்த்தனைகள் பலிக்கட்டும். நூறு ஆண்டுகள் கூட வேண்டாம். இன்னும் ஒரு பத்து ஆண்டுகள் வாழ்ந்தாலும் போதும். என்னால் முடிந்த தமிழ்ப்பணிகளைச் செய்து முடித்திடுவேன். நன்றி

    ReplyDelete
  6. Alasiam G said...
    ஆஹா! அருமை, அற்புதம். மகாகவி ஷேல்லிதாசனின் பிறந்தநாளில் அவனை நினைவுகொள்ள ஒரு வாய்ப்பு....
    பாரதியும் ஷெல்லியும் காலத்தால் வேறுபட்டாலும் கருத்தால் ஒன்றுபட்டவர்கள்.... அதனாலே பாரதி பல புனைப் பெயர்களில் வலம் வந்திருந்தப் போதிலும்.... அவன் முதலில் தன்னை ஷெல்லிதாசன் என்றே கூறியிருக்கிறான்....1792 ஆகஸ்ட் 4 அன்று பிறந்த ஷெல்லியும் பெரும் பணக்கார வாரிசே.... பாரதியும் அப்படித்தானே.....
    ஷெல்லியும் 29 வருடம் 11 மாதம் 4 நாட்கள் தான் இந்த பூமியில் வாழ்ந்திருக்கிறான்.
    எங்கோ பிறந்த ஒருகவிஞனை இங்கு இந்த அக்னிக் குஞ்சு எப்படித் தேடித் படித்தது..... அவனின் அகோர அறிவுப் பசிதானே இதற்கு காரணம்...... அதனாலே அவனே பராசக்தியிடம் வேண்டினான்... நல்லதோர் வீணை செய்து, அதன் நலம் கெட புழுதியில் எறிவதுண்டோ.......என்று......
    பாரதியும் ஷெல்லியும் இருகண்களாய் ஒரு பார்வையில் இந்த சமுதாயத்தைப் பார்த்து இருக்கிறார்கள் என்பதை வெவ்வேருகாலங்களில் பிரசவித்த அவர்களின் கவிதைகள் நமக்குத் தெரிவிக்கும்......
    அவைகளை உதாரணங்களாக திரு கிருஷ்ணன் சார் தந்திருக்கலாம்..... அற்புத நினைவு நன்றிகள் கிருஷ்ணன் சார்......
    வாழ்க தமிழ்.... வளர்க அத்வைதி பாரதியின் புகழ். நன்றி.////

    சிறந்த பின்னூட்டம். நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  7. சுப்பிர மணிய பாரதியைப் பற்றிய பதிவு அருமை..

    உலகக் கடவுள் முருகன் பற்றிய பதிவுடன் இன்று முதல் என் வலைப்பூ “செங்கோவி” ஆரம்பம் ...முகவரி:
    http://sengovi.blogspot.com/

    ஐயாவும், சக மாணவ அன்பர்களும் வாருங்கள்..வாழ்த்துங்கள்..

    --செங்கோவி

    ReplyDelete
  8. புரட்சி தீ = பாரதி.

    இன்றைய பதிவு பல நல்ல பழைய நினைவுகளை கொண்டு வந்து உள்ளது.

    மிகவும் மகிழ்ச்சி.

    ReplyDelete
  9. பாரதி சொன்னவை, "ஊருக்கு உழைத்திடல் யோகம்", "பிறர் துன்பத்தைக் கண்டு பொறாதவன் புண்ணியமூர்த்தி". இவை இரண்டு நோக்கங்களும் அவனை இந்த உலகத்துக்கு அடையாளம் காட்டும். "வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்" என்றார் வள்ளலார். அவரும், தாயுமானாரும், கோபாலகிருஷ்ண பாரதியாரும், அண்ணாமலை ரெட்டியாரும் பாரதியின் எளிய கவிதைகளுக்கு ஊற்றுக்கண்ணாகத் திகழ்ந்தனர். அந்த மகாகவியின் 129ஆவது பிறந்த நாளன்று நாள் முழுவதும் நூற்றுக் கணக்கான மாணவச் செல்வங்களுக்கு மத்தியில் அவனை நினைவுகூரும் நல்வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. பாரதியின் கருத்துக்கள் நம்மை வழிநடத்திச் செல்லட்டும். அவனது பன்முகத் தோற்றத்தில் 'ஷெல்லிதாசன்' எனும் முகத்தை நமக்குச் சுட்டிக்காட்டிய திரு கே.எம்.ஆர்.அவர்களுக்கு நன்றி.

    ReplyDelete
  10. பல ஆங்கிலக் கட்டுரைகளை மொழிபெயர்த்துள்ளார். ஆங்கிலக் கவிஞர் ஷெல்லியைப் படித்துவிட்டு, சொக்கிப்போய் தன் புனைப் பெயராக "ஷெல்லி தாசன்" என்ற பெயரையும்//

    இவை இரண்டும் நான் கேள்விப்பட்டிராத விஷயங்கள். ஆச்சரியமாக இருக்கிறது

    ReplyDelete
  11. இளைஞர் பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்ற நோக்கத்திலேயே மஹாகவியின் மாறுபாடான ஒரு புதிய முகத்தைக் காட்டினேன்.அதுவும் இல்லாம‌ல் ஆங்கில‌ம் ந‌ன்கு அறிந்த‌வ‌ர் பார‌தியார் என்ப‌தைச் சொன்னால்,
    அத‌னால் இளைஞ‌ர்க‌ளுக்கு அவ‌ர் மீது ஒரு ஈர்ப்பு ஏற்ப‌ட‌லாமோ என்ற‌ ஒரு ந‌ப்பாசை.சமஸ்கிருத‌ம், ஹிந்தி, பிர‌ன்ச்சு, தெலுங்கு ஆகிய‌ மொழிகளிலும்
    ந‌ல்ல‌ புல‌மை. கீதைக்கு உரை எழுத‌‌க்கூடிய‌ அள‌வுக்கு ப‌ழங்கால‌ ச‌மஸ்கிருத‌ சொற்க‌ளை ந‌ன்கு அறிந்த‌வ‌ர்.

    ReplyDelete
  12. பாரதியின் கவிதைகளை நிறையப் படித்திருக்கிறேன்.

    கீதைக்கு உரை எழுத‌‌க்கூடிய‌ அள‌வுக்கு ப‌ழங்கால‌ ச‌மஸ்கிருத‌ சொற்க‌ளை ந‌ன்கு அறிந்த‌வ‌ர்.// இது கேள்விப்பட்டிருக்கிறேன். நன்றி.

    ReplyDelete
  13. sir, ive read bharathiar was good in french too and that he used be a sub editor for an english daily during his early days. the hindu published his articles a couple of years ago in his rememberance.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com