12.3.10

Knock out Narayanan - நாக் அவுட் நாவன்னா

-----------------------------------------------------------------------------
Knock out Narayanan - நாக் அவுட் நாவன்னா

Interesting Short Story
-----------------------------------------------------------------
நாக் அவுட் நாவன்னா வீட்டுப் பாகப்பிரிவினைப் பிரச்சினைக்கு என்ன முடிவு எற்படப்போகின்றது என்பதைத் தெரிந்துகொள்ள செட்டி நாட்டிலுள்ள அந்த சிற்றூரே மிகவும் ஆவலாக இருந்தது!

என்ன பிரச்சினை?

பெரியதாக ஒன்றுமில்லை. அரண்மனை போன்ற அவர்களுடைய வீட்டை நாவன்னாவும் அவருடைய உடன் பிறப்புக்கள் ஆறு பேரும் சேர்ந்து எப்படி சண்டை, சச்சரவின்றி சமமாகப் பிரித்துக் கொள்வார்கள் என்பதைத்தான் ஆளாளுக்கு ஒவ்வொருவிதமாகப் பேசிக் கொண்டிருந் தார்கள்

நாவன்னா வீட்டில் ஏழு சகோதரர்கள்.நான்கு சகோதரிகள்.
பிறப்பு வரிசையில் நாவன்னா இரண்டாவது. அவருக்கு ஒரு மூத்த சகோதரர் மட்டுமே மற்ற அனைவரும் அவருக்கு இளையவர்களே.

சுண்டியிழுக்கும் கண்கள்.களையான முகம்.சிவந்த நிறம்.வெட்டு ஒன்று, துண்டு இரண்டு என்பது போன்ற தெறிக்கும் பேச்சு.பார்வை யிலேயே ஆட்களை எடைபோடும் திறமை என்று வித்தியாசமான குணாதிய சங்களைக் கொண்டவர் நாவன்னா. வயது ஐம்பத்தியெட்டு.ஆனாலும் இருபது வயது இளைஞனுக்குரிய சுறுசுறுப்போடு இருப்பார்.தும்பைப்பூ போன்ற வெள்ளை மல் வேஷ்டி,வெள்ளை அரைக்கைச் சட்டை அணிந்திருப்பார்.கையில் கடிகாரமோ, விரல்களில் மோதிரமோ அணிந் திருக்க மாட்டார். •போர்டு ஐகான் காரில் வந்திறங்கும் போதுதான் அந்தஸ்து தெரியும்.

அவருடைய இயற்பெயர் நாராயணன். அவருக்கு நாக் அவுட் நாவன்னா என்று பெயர் வந்ததற்கு இரண்டு காரணங்கள் உண்டு.ஒன்று அவர் தினமும் மாலை நேரங்களில் அனுமதிக்கப்பட்ட கிளப்புகளில், அல்லது நண்பர்கள் வீடுகளில் சீட்டாடுவார்-அதுவும் 251 அல்லது 321 பாயிண்ட்டுகள் என்று நாக் அவுட் ஆட்டம்தான் ஆடுவார். இரண்டு, அவருடைய பேச்சு ஆட்களை நாக் அவுட் செய்வதைப்போல இருக்கும்

நாவன்னாவின் பாட்டையா காலத்தில் கட்டப்பெற்ற வீடு அது. 90 அடி அகலம், 160 அடிநீளத்தில், பர்மா தேக்கு மரங்களாலேயே இழைத்துக் கட்டப்பெற்றது. கலை அழகு மிளிரும். இடத்திற்கு இடம் பெரிய பெரிய பெல்ஜியம் கண்ணாடிகள். இன்று வரை பராமரிகப்பட்டு வந்துள்ளது. முன் தலைமுறைகளில், வழி வழியாக ஒரே ஒரு பிள்ளை தான் வாரிசாக வந்துள்ளது என்பதனால் நாவன்னாவின் அப்பச்சி காலம் வரை எந்தப் பிரச்சினையும் இல்லாமல் இருந்தது. ஆனால் நாவன்னாவின் தந்தையாரின் மறைவிற்குப் பிறகுதான் பிரச்சினை அரம்பித்தது..

அண்ணன் தம்பிகள் ஏழு பேர்களும், வீட்டைப்பங்கு வைத்துச் சாவிகளை எடுத்துக்கொள்வது பற்றி விவாதித்த போதுதான் அவர்களுக் குள் உடன்பாடு ஏற்படாமல் போய்விட்டது

நான்கு ஆப்பிள்கள் - ஏழு பேர்களுக்குச் சமமாகப் பங்கு வைக்க வேண்டுமென்றால் எப்படி முடியும் ?

இரண்டு முகப்பு அறைகள்,நான்கு பெட்டக சாலைகள்,எட்டு இரட்டை அறைகள், எட்டு மேல் வீட்டு அறைகள், ஆறு நடுக்கட்டு அறைகள், ஆறு அடுப்படி அறைகள் - இவற்றை எப்படிச் சமமாகப் பங்கு வைக்க முடியும்?

எல்லோருமே, எல்லாப் பகுதிகளிலுமே பங்கு கேட்டு வாதிட்டதால் ஒரு முடிவிற்கும் வரமுடியவில்லை

அவர்கள் அனைவருமே வெளியூர் வாசிகள்தான்.நாவன்னாவின் அண்ணனுக்கு மதுரையில் இரும்புக்கம்பிகள், தகடுகள் வியாபாரம்.நாவன்னாவிற்குக் கோவையில் பஞ்சு வியாபாரம்.தம்பிகளில் நால்வர் சென்னை, பெங்களூர், மும்பை என்று பெரிய ஊர்களில் வங்கிகளிலும் இன்ஸ¥ரன்ஸ் கம்பெனிகளிலும் பெரிய பதவிகளில் பணியாற்றி வருகிறார்கள்.கடைசித் தம்பி மட்டும் தன் பெரிய அண்ணனுடன் சேர்ந்து அவர் செய்து வரும் வியாபாரத்தையே செய்து வருகிறார்

ஊர் வீட்டினால் பெரிய உபயோகம் இல்லை என்றாலும், யாருக்கும் தங்கள் உரிமையை விட்டுக்கொடுக்க மனம் இல்லை.குட்டையோ, நெட்டையோ பஞ்சாயத்தாரை வைத்து ஏழு பங்குகளாகப் பிரித்துத் திருவுளச்சீட்டு போட்டுப் பிரித்துக் கொள்ளலாம் என்ற நாவன்னாவின் யோசனைக்கும் மற்றவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை

கடைசியாக நாவன்னா இப்படிச் சொன்னார், "நாம் ஒருவருக் கொருவர் விட்டுக்கொடுத்துப் பங்கு வைத்துக்கொண்டால்தான் நல்லது. அதற்கு நீங்கள் யாரும் உடன் படுவதாகத் தெரியவில்லை.இதற்கு ஒரே ஒரு வழிதான் உள்ளது. வீட்டின் அமைப்புப்படி நான்கு பேர்கள்தான் சமமாகப் பங்கிட்டுக் கொள்ள முடியும்.ஆகவே நம்மில் நான்கு பேர்கள் தான் இந்த வீட்டை வைத்துக் கொள்ள வேண்டும். மற்ற மூன்று பேர்கள் விலைவைத்துப் பணத்தை வாங்கிக்கொண்டு வெளியேறிவிட வேண்டியது தான். வேறு வழியில்லை ! "

கடைக்குட்டித்தம்பி இடைமறித்தார். "எப்படி விலை வைப்பது? யார் யார் வெளியேறுவது?"

"வீட்டிற்கு எழுபது இலட்சம் அல்லது எண்பது இலட்சம் என்று மதிப்பு வைப்போம்.எந்த நான்கு பேர் எடுத்துக்கொள்ள விரும்புகிறார் களோ, அவர்கள் மற்ற மூவருக்கும் ஈவுத்தொகையைக் கொடுத்து அனுப்பிவிட வேண்டியதுதான்"

" அது சரி! யார் யார் வெளியேறுவது என்பதை எப்படி முடிவு செய்வது? "

நாவன்னா அதற்குத் தெளிவாகவும், விளக்கமாகவும்,சற்றுப் புன்னகையோடும் பதில் சொன்னார்,"ஏன் இல்லை! கிரிக்கெட்டில் நாக் அவுட் மேட்ச் என்று இருக்கிறதல்லவா - அது போல செய்ய வேண்டியது தான்.பன்னிரெண்டு நாடுகள் கலந்து கொள்ளும் போட்டியில், செமி பைனல்ஸிற்கு நான்கு நாடுகள் தானே வருகின்றன.அவர்கள் ஆடுவது போல நாக் அவுட் மேட்ச் ஆட வேண்டியதுதான். மூன்று மூன்று பேர்களாக இரண்டு அணிகளாகப் பிரிந்து கொள்ளுங்கள் எனக்கு என்று தனிப்பட்ட கருத்து ஒன்றும் கிடையாது.நான் பொதுவாக இருந்து கொள்கிறேன்.ஒவ்வொரு அணியும் தாங்கள் வீட்டை எடுத்துக் கொண்டால் என்ன விலை கொடுப்பதற்குத் தயாராக இருக்கிறோம் என்பதை எழுத்து மூலம் எழுதி பரஸ்பரம் கையெழுத்திட்டு ஒரு கவரில் போட்டுக்கொடுங்கள்.மூன்று பஞ்சாயத்தார்கள் முன்னிலையில் அந்தக்கவர்களைப் பிரித்துப்பார்த்து, யார் அதிக விலை தருவதாக எழுதியிருக்கிறார்களோ அந்த மூவரும் வீட்டை எடுத்துக் கொள்ள வேண்டியது.கவர்களைப் பிரிக்குமுன், அல்லது பிரித்தப்பின் எந்த அணி என்னைச் சேர்த்துக்கொள்ள விரும்புகிறதோ அந்த அணியோடு நானும் சேர்ந்து கொள்கிறேன் "

இந்த யோசனை அனைவருக்கும் சரி என்று பட்டது. ஆனால் ஒரு நாள் முழுவதும் தாங்களும் தங்கள் மனைவி, குழந்தைகளோடும் பேசி முடிவெடுக்கும் போதுதான் ஒரு சின்னக் குழப்பம் ஏற்பட்டது.
மதுரையில் கூட்டாக வியாபாரம் செய்து கொண்டிருந்த பெரிய அண்ணனையும், கடைசித்தம்பியையும் விட்டு விட்டு நாவன்னாவிற்கு அடுத்துப் பிறந்த நான்கு சகோதரர்களும் ஓர் அணியாகி விட்டார்கள்
இது தெரிந்த மறுவிநாடியே நாவன்னா தன் பெரிய அண்ணனையும், கடைசித்தம்பியையும் அழைத்துக் கவலைபட வேண்டாம், நாம் மூவரும் ஒரு அணியாய் இருப்போம் என்று கூறிவிட்டார். அவர்களும் மகிழ்வோடு ஒப்புக்கொண்டு, முடிவெடுக்கும் பொறுப்பை நாவன்னா விடமே விட்டு விட்டார்கள்.

எல்லாம் மட மடவென்று நடந்தது

அடுத்து இரண்டு நாட்களில் வரும் ஞாயிற்றுகிழமை முகூர்த்தநாள்
என்பதால் அந்தநாள் பஞ்சாயத்தார் முன்னிலையில் முடிவெடுக்கப் பெறும் நாளாக நிச்சயிக்கப்பட்டது. சிவன்கோவில் காரியக்காரர் முத்துபழநியப்ப செட்டியார், மற்றும் தங்கள் பங்காளிகள் வீட்டில் வயதில் பெரியவர் களான ஆண்டியப்ப செட்டியார் மற்றும் அடைக்கப்ப செட்டியார் ஆகியோர்களைப் பஞ்சாயத்தார்களாக நியமிப்பதற்கும் ஒருமித்த கருத்தோடு முடிவு செய்யப்பட்டது.
****************** ********************
ஞாயிற்றுக்கிழமை காலை மணி சரியாகப் பதினொன்று.குரு ஹோரை நல்ல நேரம்.பஞ்சாயத்தார்கள் மூன்று பேர்களும் ஒன்றாக வந்து சேர்ந்தார்கள்.

ஊரணிக்கரைக்கு எதிர் வீடு என்பதால் அந்த நேரத்திலும் கூடக் குளிர்ந்த காற்று தவழ்ந்து வந்து கோண்டிருந்தது.

நாவன்னாவும், அவருடைய சகோதரர்களும் வந்தவர்களை வரவேற்றார்கள். அனைவருக்கும் கின்னங்களில் ரஸமலாய் இனிப்பும்,வறுத்த முந்திரிப்பருப்புக்களும்,வே•பர் பிஸ்கெட்டுகளும், சூடான ஃபில்டர் காப்பியும் வழங்கப்பட்டது

முதலில் சுழ்நிலையின் இறுக்கத்தைக் குறைப்பதற்காக காரியக் காரர் மூனா பானாழானா பொதுவான விஷயங்களைப் பேசி விட்டுக் கடைசியில், வந்த விஷயத்திற்குரிய செய்திகளைப் பற்றிப் பேசினார்.
பிரிவினைக்குப் பிறகும் கூட அவர்களுடைய வீட்டுப் பெருமையைக் காப்பாற்ற பேதங்களை மறந்து அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.பிறகு இரண்டு சாராரிடமும் கவர்களை வாங்கி, அங்கே உள்ளவர்களில் வயதில் பெரியவரான ஆண்டியப்ப செட்டியார் அவர்களிடம் கொடுத்து, அவற்றைப் பிரித்துப் படிக்கச் சொன்னார்.

முதலில் நால்வர் கூட்டணிக் கவர்தான் பிரித்துப் படிக்கப் பெற்றது.வீட்டை எப்படியும் வாங்கி விடவேண்டும் என்ற நோக்கத்திலும், நாவன்னாவை மடக்கிவிட வேண்டும் என்ற எண்ணத்திலும்,நாவன்னா மதிப்பிட்ட எழுபதையும் எண்பதையும் எழுதாமல் அதிரடி விலையாக ரூபாய் ஒரு கோடி என்று எழுதியிருந்தார்கள்.அவர்கள் குடும்பங்களில் வீட்டுக்கொரு பிள்ளை வெளிநாடுகளில் வேலை பார்த்துக் கொண்டு பணத்தை டாலர்களாகக் கொட்டிக் கொண்டிருப்பதாலும், பத்து வருடங்களுக்கு முன்பு தங்கள் தந்தையார் பிரித்துக் கொடுத்த பணம் வட்டியும் முதலுமாக லட்சக்கணக்கில் பெருகி வங்கிகளில் வைப்பு நிதியாகக் கிடப்பதாலும், விலையைப் பற்றிக் கவலைப்படாமல் எழுதியிருந்தார்கள்.

இந்த விலைக்கு அவர்களுக்குத்தான் கிடைக்கவேண்டும் - கிடைக்குமா?

நாவன்னாவின் கவரைப் பிரித்தால் அல்லவா தெரியும்!

பஞ்சாயத்தார்கள் ஆவலோடும், கோடி எழுதிய தம்பிகள் பதை பதைப்போடும் பார்த்துக்கொண்டிருக்க அந்தக்கவரும் பிரிக்கப்பட்டது.

நாக் அவுட் நாவன்னா என்ன சாதாரண மனிதரா? அறிவு ஜீவியல்லவா! யாரும் எதிபார்க்காததையும், யாரலும் ஊகிக்க முடியாததையும் அவர் எழுதியிருந்தார்.

அவர் எழுதியிருந்தது இதுதான்.

' என் தம்பிகள் நால்வரும் என்ன தொகை வேண்டுமென்றாலும் எழுதட்டும். அதைவிட ரூ.108:00 அதிகமாகக் கொடுத்து வீட்டை வாங்கிக் கொள்ள நான் தாயாராக உள்ளேன். என்னுடைய மூத்த சகோதரரும், கடைசித்தம்பியும் மனப்பூர்வமாக எனக்கு முழு அதிகாரம் கொடுத்திருப்பதால் அவர்களும் அந்தத் தொகைக்குச் சம்மதப்படுவார்கள் என் முடிவிற்குக் கட்டுப்படுவார்கள்.'

முடிவு தெரிந்தவுடன் தம்பிகள் நால்வரின் முகமும் சுருங்கிப்போய் நான்கு தினங்கள் தரையில் கிடந்த தாமரைப்பூப் போல ஆயிற்று! சொல்லி வைத்தாற் போல நான்கு பேர்களும் எழுந்தார்கள்.

அவர்களைக் கையமர்த்தி, மீண்டும் அமரச் செய்த நாவன்னா, தன்னுடைய வழக்கமான பாணியில் மள மளவென்று பேச ஆரம்பித்தார்.

"உங்களுக்கு உணர்த்த வேண்டும் என்பதற்காகத்தான் அப்படி எழுதினேன்.உண்மையில் எனக்கு இந்த வீடு வேண்டாம்.நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்.ஒரு ஞானி சொன்னதைப் போல வீடா முக்கியம்? அந்த வீட்டை ஜீவனுள்ளதாகவும், சந்தோஷங்கள் உள்ளதாகவும், கலகலப்பு உள்ளதாகவும் வைக்கக்கூடிய உறவுகள் அல்லவா முக்கியம்! எத்தனை கோடி கொடுத்தாலும், அப்பச்சி, ஆத்தா, அண்ணன் தம்பி உறவுகளை விலைக்கு வாங்க முடியுமா? அல்லது நமது எண்ணப்படி நமக்கு வளைந்து கொடுத்து போகும்படியான உறவுகள் நமக்கு ரெடிமேடாகக் கிடைக்குமா?எல்லாம் கவியரசர் கண்ணதாசன் சொன்னதைபோல ஆண்டவன் அளித்த வரம்.அதனால் உங்களை இழந்து இந்த வீட்டை நான் கைப்பற்றிக் கொள்ள விரும்பவில்லை - வீட்டை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். எனக்கு நம் ஊருக்கு எல்லையில் நான் கட்டியிருக்கும் வீடே போதும். என் வீட்டிற்கு அருகில் உள்ள இடத்தில் பெரிய அண்ணனுக்கும், சின்னத் தம்பிக்கும் நாற்பது சென்ட் இடத்தை நான் என்னை நம்பி வந்து அவர்கள் கைகோர்த் ததற்குப் பரிசாகத் தருகிறேன். அவர்கள் அந்த இடத்தில் தங்கள் விருப்பம் போல் வீடுகளைக் கட்டிக்கொள்ளட்டும்.ஈட்டுத் தொகையாக எனக்கு நீங்கள் ஒரு பைசாக் கூடக் கொடுக்க வேண்டாம்.பழநியாண்டவர் அருளால் நான் மிகவும் வசதியாக இருக்கிறேன்.அவர்களுக்கு மட்டும் ஆளுக்கு பதினைந்து லட்சம் நீங்கள் நால்வரும் சேர்ந்து கொடுத்து விடுங்கள்.இப்போது நடந்தது எல்லாவற்றையும் மறந்து நாம் இதுவரை இருந்தது போல ஒற்றுமையாகவே இருப்போம்.ஒரே ஒரு வேண்டுகோள், நம் சாமி வீட்டு அறை உங்களில் யார் பங்கிற்கு வருகிறதோ அவர்கள் அதைப்பூட்ட வேண்டாம்-அப்படியே பூட்டினாலும் வீட்டுக் கணக்கப் பிள்ளையிடம் சாவியைக் கொடுத்து வையுங்கள். அதில் பேழை, ஐயா அப்பத்தா, அப்பச்சி, ஆத்தா படங்கள் எல்லாம் உள்ளது நம்மில் யார் வேண்டுமென்றாலும் எப்போது வேண்டுமென்றாலும் வந்து கும்பிட்டு செல்வதற்கான வசதியைப் பண்ணிவையுங்கள். அது போதும்" என்று சொல்லிக்கொண்டே வந்தவர் பஞ்சாயத்துக்கு வந்த பெரியவர்களைப் பார்த்துக் கையெடுத்துக் கும்பிட்டுவிட்டுத் தன் பேச்சைத்தொடர்ந்தார், " அண்ணே, நீங்கள் மூவரும் எங்கள் வேண்டுகோளுக்கு இணங்கி இங்கே வந்ததற்கு மிக்க நன்றி! !நான் சொன்ன இந்த முடிவைப் பஞ்சாயத்து முச்சரிக்கையாக எழுதிக் கொடுத்துவிடுங்கள் "

அடுத்து முச்சரிக்கை எழுதப்பெற்றது. எழுதிமுடித்தவுடன் இரு சாரார்களிடமும் முச்சரிக்கைகளைக் கொடுத்துவிட்டு அவர்கள் புறப்பட்டுச்சென்றார்கள்.

நாவன்னாவும், தங்கள் வீட்டு சாமி அறையில் சாஷ்டங்கமாக விழுந்து கும்பிட்டு விட்டுத் தன் பெரிய அண்ணன், மற்றும் தன் கடைசித் தம்பி உடன்வரப் புறப்பட்டுப் போய்விட்டார்.

மற்ற நால்வரும் நடந்து முடிந்த செயல்களினால் ஏற்பட்ட அதிர்ச்சியில் தங்கள் மனம் முற்றிலும் பாதிக்கப்பட்ட காரணத்தாலும், நாராயண அண்ணனுக்குள்ள நுண்னறிவும், பக்குவமும் தங்களுக்கு ஏன் இல்லாமல் போய்விட்டது என்ற ஆதங்கத்தாலும் அப்படியே உறைந்துபோய் நின்றார்கள்.

அவர்கள் அறியாமலேயே அவர்கள் கண்களில் நீர் கோர்த்திருந்தது.

அதை விடுங்கள் - அடுத்த சில மணி நேரத்தில் செய்தி பரவ, அந்த சிற்றூரிலுள்ள நகரத்தார்களெல்லாம் என்ன பேசிக் கொண்டார்கள் தெரியுமா?

" நடந்து முடிந்த நாக் அவுட் மேட்சில் எல்லோருடைய மனம் என்ற கோப்பையைத் தட்டிக் கொண்டு போனது நாவன்னாதான்! "
+++++++++++++++++++++++++++++++
இதுவரை நான் எழுதிய 60 சிறுகதைகளில் இந்தக் கதையும் ஒன்று! அக்கதைகள் தொகுக்கப்பெற்று செட்டிநாட்டு மண்வாசனைக் கதைகள்’ என்னும் பெயரில் 3 நூல்களாக வெளிவந்துள்ளன. இந்தக்கதை முதல் தொகுப்பில் உள்ளது.

டாக்டர் ஜஸ்டிஸ் திரு.AR.லெட்சுமணன் அவர்கள், முன்னாள் உச்ச நீதிமன்ற நீதியரசர் இன்னாள் தலைவர். இந்தியச் சட்ட ஆணையம் புது தில்லி அவர்களின் பாராட்டுரை, இலக்கியச்சிந்தனை திரு.ப.லெட்சுணன் அவர்களின் முன்னுரை (இவர் இந்திய உள்துறை அமைச்சர் திரு.ப.சிதம்பரம் அவர்களின் மூத்த சகோதரர்) முனைவர், பேராசான் திரு.தமிழண்ணல் அவர்களின் அணிந்துரை, பெரும் புலவர்.திரு.பா.நமசிவாயம் அவர்களின் பாராட்டுரை, திரைப்பட இயக்குனர்.திரு. SP. முத்துராமன் அவர்களின் அணிந்துரை என்று பலபிரபலங்களின் பாராட்டுக்களுடன் சிறப்பாகத் தொகுக்கப் பெற்றிருக்கும் நூல்களாகும் அந்த நூல்கள்.

ஒரு தொகுப்பிற்கு 20 கதைகள் வீதம் 3 தொகுப்புக்களுக்கும் சேர்த்து மொத்தம் 60 சிறுகதைகள். (3 x 160 பக்கங்கள்) 480 பக்கங்கள் கொண்ட 3 நூல்கள்.

----------------------------------------------------------------------
"வாத்தியார், கதை சரி, மேலே உள்ள 10 வரிகள் எதற்கு?”

“ஹிஹி.... ஒரு இலவச விளம்பரம்.... என்னுடைய பதிவில்..எனக்கு அந்த வசதி உண்டுதானே ராசா?”
===================================================

வாழ்க வளமுடன்!

33 comments:

  1. அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
    தங்களின் செட்டி நாட்டு மண் வாசனைக்கதைகள்

    தொகுப்பில் இருந்து தந்துள்ள கதை மிகவும் அருமை.

    நல்ல கருத்துள்ள இதனைப் படிக்கும்போது பாகப்பிரிவினையை நேரில் பார்ப்பது போல இருந்தது. காலை வேளையில் இதனைப் படித்ததும் மிகவும் சந்தோஷமாகவும் மனதுக்கு ஆனந்தம் மற்றும் மன நிறைவும ஏற்பட்டது.

    மிக்க நன்றி!


    வணக்கம்.


    தங்கள் அன்புள்ள மாணவன்

    வ.தட்சணாமூர்த்தி

    2010-03-12

    ReplyDelete
  2. கதை நன்று. Finishing உண்மையிலேயே knock outதான். ஒரு கதையை எப்படி ஆரம்பித்து முடிப்பது என்பது தங்களுக்கு நன்றாக தெரிந்திருக்கிறது. செட்டி நாடுகளில் பயன்படுத்தப்படும் வார்த்தைகளை அங்கங்கே உலவ விட்டுருக்கிறீகள்.

    ReplyDelete
  3. அய்யா வணக்கம், கதை மிக அருமை !! - செந்தில்

    ReplyDelete
  4. ஆசிரியருக்கு வணக்கம்,

    அருமையானக் கதைக் களம்,
    வழக்கம் போல் அமர்க்களம்.

    "எத்தனைக் கோடி கொடுத்தாலும் , அப்பச்சி, ஆத்தா, அண்ணன் தம்பி உறவுகளை விலைக்கு வாங்க முடியுமா? அல்லது நமது எண்ணப்படி நமக்கு வளைந்துக் கொடுத்து போகும்படியான உறவுகள் ரெடிமேடாகக் கிடைக்குமா?"
    இந்த வரிகள் ஒரு கணம் என் இதயத்தை இடம் பெயர்த்து இறக்கி வைத்தது. என் கண்கள் பனித்தன.

    திறமையும் புத்திசாலித்தனமும் கூடிய செல்வமும் கொண்ட ஒருவரின் சொல்லுக்கே இத்தனை சக்தி இருக்கும் அப்படி அமைவதும் "ஆண்டவன் அளித்த வரமே"!!!!

    நன்றிகள் குருவே!
    அன்புடன்,
    ஆலாசியம் கோவிந்தசாமி.

    ReplyDelete
  5. கதை அருமை ஐயா..

    ReplyDelete
  6. //////V Dhakshanamoorthy said...
    அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
    தங்களின் செட்டி நாட்டு மண் வாசனைக்கதைகள்
    தொகுப்பில் இருந்து தந்துள்ள கதை மிகவும் அருமை.
    நல்ல கருத்துள்ள இதனைப் படிக்கும்போது பாகப்பிரிவினையை நேரில் பார்ப்பது போல இருந்தது. காலை

    வேளையில் இதனைப் படித்ததும் மிகவும் சந்தோஷமாகவும் மனதுக்கு ஆனந்தம் மற்றும் மன நிறைவும

    ஏற்பட்டது. மிக்க நன்றி!
    வணக்கம்.
    தங்கள் அன்புள்ள மாணவன்
    வ.தட்சணாமூர்த்தி////

    உங்களின் மனம் நிறைந்த பாராட்டிற்கு நன்றி தட்சணாமூர்த்தி!

    ReplyDelete
  7. //////ananth said...
    கதை நன்று. Finishing உண்மையிலேயே knock outதான். ஒரு கதையை எப்படி ஆரம்பித்து முடிப்பது

    என்பது தங்களுக்கு நன்றாக தெரிந்திருக்கிறது. செட்டி நாடுகளில் பயன்படுத்தப்படும் வார்த்தைகளை

    அங்கங்கே உலவ விட்டுருக்கிறீகள்.//////

    சிறுகதை இலக்கணப்படி கதையை முதல்வரியிலே துவங்கி, முடிவை முத்தாய்ப்பாய்ச் சொன்னால், அனைவரும் விரும்பிப்படிப்பார்கள். நான் நிறைய கதைகளைப் படித்தவன். அதனால் அந்த டெக்னிக் அத்துபடி! உங்களின் பாராட்டிற்கு நன்றி ஆனந்த்!

    ReplyDelete
  8. ////பாவக்காய் said...
    அய்யா வணக்கம், கதை மிக அருமை !! - செந்தில்///

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  9. //////Alasiam G said...
    ஆசிரியருக்கு வணக்கம்,
    அருமையானக் கதைக் களம், வழக்கம் போல் அமர்க்களம்.
    "எத்தனைக் கோடி கொடுத்தாலும் , அப்பச்சி, ஆத்தா, அண்ணன் தம்பி உறவுகளை விலைக்கு வாங்கமுடியுமா? அல்லது நமது எண்ணப்படி நமக்கு வளைந்துக் கொடுத்து போகும்படியான உறவுகள் ரெடிமேடாகக் கிடைக்குமா?" இந்த வரிகள் ஒரு கணம் என் இதயத்தை இடம் பெயர்த்து இறக்கி வைத்தது. என் கண்கள் பனித்தன.
    திறமையும் புத்திசாலித்தனமும் கூடிய செல்வமும் கொண்ட ஒருவரின் சொல்லுக்கே இத்தனை சக்தி இருக்கும் அப்படி அமைவதும் "ஆண்டவன் அளித்த வரமே"!!!!
    நன்றிகள் குருவே!
    அன்புடன்,
    ஆலாசியம் கோவிந்தசாமி.//////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி ஆலாசியம் கோவிந்தசாமி!

    ReplyDelete
  10. ஆசிரியர் அய்யா அவர்களுக்கு இனிய காலை வணக்கம் கதை நன்றாக உள்ளது. புத்தக விளம்பரமும் நன்றாக இருந்தது ஆனால் நான் புக்கை வாங்கமாட்டேன் ஏன் என்றால் அனைத்து கதைகளும் நீங்கள் எழுதிவிடிவீர்கள். அதை நான் படித்துவிடுவேன்.

    ReplyDelete
  11. நாட்டுக்கோட்டை நகரத்தார்களுக்கேயுரிய அந்த knack உடன் எழுதப்பட்ட கதை.அனைத்துக் கதைகளிலும் இந்த செட்டி வாசனை' இருக்கும் என்றே நினைக்கிறேன்.

    ஒரு வகையில் உங்களை மிகவும் பாராட்டுகிறேன்;இன்றைய நகரச் சூழலில் கரைந்து கொண்டிருக்கும் நா.கோ.ந.இளைஞர்கள் கானாடுகாத்தானிலோ நெற்குப்பையிலோ இருக்கும் வீடுகளையும் வாழ்க்கை முறைகளையும் கண்ணாலும் பார்த்திருப்பார்களா என்பது ஐயமே..அவர்களுக்கு உங்கள் இந்தப் புத்தகம் ஒரு நல்ல டூல்..

    நகரத்தார் சங்கங்கள் மூலமாக இந்தப் புத்தகங்களை வெளியூரில் வாழ்பவர்களுக்குக் கிடைக்கும் படி செய்தீர்கள் என்றால் அவர்களுக்கு ஒரு புதிய சாளரம் திறக்கும் !

    ReplyDelete
  12. இனிய காலை வணக்கம்.

    நல்ல கருத்தாழம் மிக்க கதை.....

    ReplyDelete
  13. /////Subbaraman said...
    கதை அருமை ஐயா..////

    நல்லது.நன்றி!

    ReplyDelete
  14. /////rajesh said...
    ஆசிரியர் அய்யா அவர்களுக்கு இனிய காலை வணக்கம் கதை நன்றாக உள்ளது. புத்தக விளம்பரமும் நன்றாக இருந்தது ஆனால் நான் புக்கை வாங்கமாட்டேன் ஏன் என்றால் அனைத்து கதைகளும் நீங்கள் எழுதிவிடிவீர்கள். அதை நான் படித்துவிடுவேன்.////

    எழுதுவது, பதிப்பகமும் என் தொழிலல்ல! ஆகவே நீங்கள் வாங்காவிட்டாலும் நான் கவலைப்படமாட்டேன்.
    என் எழுத்துக்களும் ஆக்கங்களும் படிக்கப்படவேண்டும் என்கின்ற தவறான ஆர்வம் மட்டும் என்னிடம் உள்ளது. அதையும் போக்கிவிட்டால், பிரச்சினை இருக்காது:-))))

    ReplyDelete
  15. ////அறிவன்#11802717200764379909 said...
    நாட்டுக்கோட்டை நகரத்தார்களுக்கேயுரிய அந்த knack உடன் எழுதப்பட்ட கதை.அனைத்துக் கதைகளிலும் இந்த செட்டி வாசனை' இருக்கும் என்றே நினைக்கிறேன்.
    ஒரு வகையில் உங்களை மிகவும் பாராட்டுகிறேன்;இன்றைய நகரச் சூழலில் கரைந்து கொண்டிருக்கும் நா.கோ.ந.இளைஞர்கள் கானாடுகாத்தானிலோ நெற்குப்பையிலோ இருக்கும் வீடுகளையும் வாழ்க்கை முறைகளையும் கண்ணாலும் பார்த்திருப்பார்களா என்பது ஐயமே..அவர்களுக்கு உங்கள் இந்தப் புத்தகம் ஒரு நல்ல டூல்..
    நகரத்தார் சங்கங்கள் மூலமாக இந்தப் புத்தகங்களை வெளியூரில் வாழ்பவர்களுக்குக் கிடைக்கும் படி செய்தீர்கள் என்றால் அவர்களுக்கு ஒரு புதிய சாளரம் திறக்கும் !/////

    காரைக்குடி பகுதியில் நடக்கும் திருமணங்கள், மணிவிழாக்கள் மூலமாக (ஸ்பான்சர்கள் - சம்பந்தப்பட்ட குடும்பங்களே) இதுவரை என்னுடைய 3 தொகுப்புக்களும் தலா 2,000 பிரதிகள் வீதம் 6,000 புத்தகங்கள்
    பலரையும் சென்றடைந்திருக்கின்றன. அதுவும் எட்டு மாத காலத்திலேயே!

    ReplyDelete
  16. ///////astroadhi said...
    இனிய காலை வணக்கம்.
    நல்ல கருத்தாழம் மிக்க கதை...../////

    நல்லது.நன்றி!

    ReplyDelete
  17. வணக்கம் அய்யா.
    "நாக் அவுட்" நாவண்ணா கதை
    சூப்பர்.
    நாவண்ணா என்றால் நாவண்மை
    மிக்கவர் என்றுதானே அர்த்தம்.
    நன்றி அய்யா.

    ReplyDelete
  18. {தலா 2,000 பிரதிகள் வீதம் 6,000 புத்தகங்கள்
    பலரையும் சென்றடைந்திருக்கின்றன. அதுவும் எட்டு மாத காலத்திலேயே!}

    அசத்தலான பாராட்டுக்கள்,உங்கள் முயற்சிக்கு.

    ReplyDelete
  19. "வீடு கைகளால் கட்டப்படுகிறது.குடும்பம் மனங்களால் கட்டப்படுகிறது."
    "A house is built by hands;A home is built by hearts"

    ReplyDelete
  20. //////thirunarayanan said...
    வணக்கம் அய்யா.
    "நாக் அவுட்" நாவண்ணா கதை
    சூப்பர்.
    நாவண்ணா என்றால் நாவண்மை
    மிக்கவர் என்றுதானே அர்த்தம்.
    நன்றி அய்யா.//////

    நாவன்னா என்பது நாராயணன் எனும் பெயரின் சுருக்கம்.
    சோனா என்றால் சொக்கலிங்கம் எனும் பெயரின் சுருக்கம்!
    மேனா என்றால் மெய்யப்பன் எனும் பெயரின் சுருக்கம்!
    லேனா என்றால் லெட்சுமணன் எனும் பெயரின் சுருக்கம்!
    எங்கள் பகுதியில் அப்படித்தான் ஒவ்வொரு பெயருக்கும் ஒரு சுருக்கமான பெயரும் இருக்கும்!

    ReplyDelete
  21. //////அறிவன்#11802717200764379909 said...
    {தலா 2,000 பிரதிகள் வீதம் 6,000 புத்தகங்கள்
    பலரையும் சென்றடைந்திருக்கின்றன. அதுவும் எட்டு மாத காலத்திலேயே!}
    அசத்தலான பாராட்டுக்கள்,உங்கள் முயற்சிக்கு.//////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  22. //////kmr.krishnan said...
    "வீடு கைகளால் கட்டப்படுகிறது.குடும்பம் மனங்களால் கட்டப்படுகிறது."
    "A house is built by hands;A home is built by hearts"//////

    உண்மை! நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  23. சார் வணக்கம்,
    கண்கள் நனைந்தது கிழ் கணட வரிகளால்,இது உண்மை கதையா அல்லது கற்பனை கதையா சொல்லுங்கள் சார்.
    உங்களுக்கு உணர்த்த வேண்டும் என்பதற்காகத்தான் அப்படி எழுதினேன்.உண்மையில் எனக்கு இந்த வீடு வேண்டாம்.நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்.ஒரு ஞானி சொன்னதைப் போல வீடா முக்கியம்? அந்த வீட்டை ஜீவனுள்ளதாகவும், சந்தோஷங்கள் உள்ளதாகவும், கலகலப்பு உள்ளதாகவும் வைக்கக்கூடிய உறவுகள் அல்லவா முக்கியம்! எத்தனை கோடி கொடுத்தாலும், அப்பச்சி, ஆத்தா, அண்ணன் தம்பி உறவுகளை விலைக்கு வாங்க முடியுமா? அல்லது நமது எண்ணப்படி நமக்கு வளைந்து கொடுத்து போகும்படியான உறவுகள் நமக்கு ரெடிமேடாகக் கிடைக்குமா?எல்லாம் கவியரசர் கண்ணதாசன் சொன்னதைபோல ஆண்டவன் அளித்த வரம்.அதனால் உங்களை இழந்து இந்த வீட்டை நான் கைப்பற்றிக் கொள்ள விரும்பவில்லை - வீட்டை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். எனக்கு நம் ஊருக்கு எல்லையில் நான் கட்டியிருக்கும் வீடே போதும். என் வீட்டிற்கு அருகில் உள்ள இடத்தில் பெரிய அண்ணனுக்கும், சின்னத் தம்பிக்கும் நாற்பது சென்ட் இடத்தை நான் என்னை நம்பி வந்து அவர்கள் கைகோர்த் ததற்குப் பரிசாகத் தருகிறேன். அவர்கள் அந்த இடத்தில் தங்கள் விருப்பம் போல் வீடுகளைக் கட்டிக்கொள்ளட்டும்.ஈட்டுத் தொகையாக எனக்கு நீங்கள் ஒரு பைசாக் கூடக் கொடுக்க வேண்டாம்.பழநியாண்டவர் அருளால் நான் மிகவும் வசதியாக இருக்கிறேன்.அவர்களுக்கு மட்டும் ஆளுக்கு பதினைந்து லட்சம் நீங்கள் நால்வரும் சேர்ந்து கொடுத்து விடுங்கள்.இப்போது நடந்தது எல்லாவற்றையும் மறந்து நாம் இதுவரை இருந்தது போல ஒற்றுமையாகவே இருப்போம்.ஒரே ஒரு வேண்டுகோள், நம் சாமி வீட்டு அறை உங்களில் யார் பங்கிற்கு வருகிறதோ அவர்கள் அதைப்பூட்ட வேண்டாம்-அப்படியே பூட்டினாலும் வீட்டுக் கணக்கப் பிள்ளையிடம் சாவியைக் கொடுத்து வையுங்கள். அதில் பேழை, ஐயா அப்பத்தா, அப்பச்சி, ஆத்தா படங்கள் எல்லாம் உள்ளது நம்மில் யார் வேண்டுமென்றாலும் எப்போது வேண்டுமென்றாலும் வந்து கும்பிட்டு செல்வதற்கான வசதியைப் பண்ணிவையுங்கள். அது போதும்" என்று சொல்லிக்கொண்டே வந்தவர் பஞ்சாயத்துக்கு வந்த பெரியவர்களைப் பார்த்துக் கையெடுத்துக் கும்பிட்டுவிட்டுத் தன் பேச்சைத்தொடர்ந்தார், " அண்ணே, நீங்கள் மூவரும் எங்கள் வேண்டுகோளுக்கு இணங்கி இங்கே வந்ததற்கு மிக்க நன்றி! !நான் சொன்ன இந்த முடிவைப் பஞ்சாயத்து முச்சரிக்கையாக எழுதிக் கொடுத்துவிடுங்கள் "

    ReplyDelete
  24. //////kannan said...
    yes Sir!
    thanks./////

    நல்லது.நன்றி!

    ReplyDelete
  25. ////sundari said...
    சார் வணக்கம்,
    கண்கள் நனைந்தது கிழ் கணட வரிகளால்,இது உண்மை கதையா அல்லது கற்பனை கதையா சொல்லுங்கள் சார்./////

    100% கற்பனைக்கதைதான்! ஒரு மனிதர் இப்படி இருந்தால் நன்றாக இருக்குமே என்று கற்பனை செய்யும்போது, இந்தமாதிரிக் கதாபாத்திரம் கிடைத்துவிடும்!

    ReplyDelete
  26. ஹலோ சார்,

    கதை மிக அற்புதம். கற்பனையானாலும்
    நல்ல கருத்தாழமிக்க நடையுடனும் பாடத்துடனுமுள்ளது.

    ReplyDelete
  27. ஜோரான கதை!
    சின்ன வயசில் இப்படி அருமையான கதைகள் கேட்டிருக்கிறேன். என் பாட்டியிடம். இந்தக்காலத்தில் மாணவப்பருவத்தினருக்கு இதுபோன்ற கலாச்சார வாசம் மிகுந்த, அன்பு, பண்பு, அறிவு இவைகளின் முக்கியத்துவம் வாய்ந்த செய்திகள் அடங்கிய கதைகளைக்கூறினால்.... வருங்காலச் சமுதாயம் வளமானதாய் மாறும். ஆனால் இன்று பள்ளிகளில் கற்றுத்தருவதெல்லாம் காசு சம்பாதிக்கும் வித்தையைத்தானே? எப்படியோ, இளமைப்பருவத்தை நினைவுபடுத்திய உங்கள் அருமைக்கதைக்கு நன்றி மலர்கள்!

    -அன்புடன்,
    லலித்

    ReplyDelete
  28. /////Sumathi. said...
    ஹலோ சார்,
    கதை மிக அற்புதம். கற்பனையானாலும்
    நல்ல கருத்தாழமிக்க நடையுடனும் பாடத்துடனுமுள்ளது.////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  29. /////லலித் said...
    ஜோரான கதை!
    சின்ன வயசில் இப்படி அருமையான கதைகள் கேட்டிருக்கிறேன். என் பாட்டியிடம். இந்தக்காலத்தில் மாணவப்பருவத்தினருக்கு இதுபோன்ற கலாச்சார வாசம் மிகுந்த, அன்பு, பண்பு, அறிவு இவைகளின் முக்கியத்துவம் வாய்ந்த செய்திகள் அடங்கிய கதைகளைக்கூறினால்.... வருங்காலச் சமுதாயம் வளமானதாய் மாறும். ஆனால் இன்று பள்ளிகளில் கற்றுத்தருவதெல்லாம் காசு சம்பாதிக்கும் வித்தையைத்தானே? எப்படியோ, இளமைப்பருவத்தை நினைவுபடுத்திய உங்கள் அருமைக்கதைக்கு நன்றி மலர்கள்!
    -அன்புடன்,
    லலித்////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  30. என் தாத்தா மறைந்ததினத்திலிருந்தே என் பெரியப்பாவின் அலட்சிய நடவடிக்கைகள் கவனித்து நான் என் சித்தப்பா, குடும்ப உறுப்பினர்களிடம் இவர் சொத்துக்களில் ஏதோ வில்லங்கம் செய்திருக்கிறார் என்று நினைக்கிறேன் என்று ஊகத்தில் கூறினேன்..எல்லோரும் வெள்ளந்தியாக என்னை வில்லனைப் போலே பார்த்து வாளாவிருந்துவிட்டார்கள்.
    வாரிசு சான்றிதழ் வாங்கும் போதுதான் பூர்விக வீட்டை அவர் பெயருக்கு மாற்றிக்கொண்டுள்ளார் என்பது தெரிய வந்தது.
    ((V.A.O. )வை கையில் போட்டுக்கொண்டு.தண்ணிவண்டி..அவர்பக்கம்) மேலும் நாங்கள் இரு தரப்பினருமே ஊரில் வசிக்கவில்லை என்ற காரணம் கொண்டு அவரிடமிருந்தும் அதை ரகசியமாக வாங்கிடவும் பேச்சுவார்த்தையில் முன்பணமும் பெற்றுவிட்டார் என்பதும் செவிவழிச் செய்திகளாக எங்களுக்கு வந்துசேர அப்பா,சித்தப்பா சென்று நியாயம் கேட்டபோது ஆளுக்கு 10 % மட்டுமே கொடுக்க முடியுமென்று கூறிவிட்டார்.அதுவும் அவர் விற்கப்போகும் விலை வேறு. எங்களுக்காக அவர் சொல்லும் விலை வேறு.ஏமாற்றப்பட்டதாக உணர்ந்து விக்கித்துப் போய் இருக்கும் நிலையில் நான் வேகத்துடன் தாலுகா அலுவலகத்தில் காய்களை நகர்த்தி 6 மாதங்கள் பல ஆயிரங்களையும் செலவு செய்து A - register என்ற பழைய register ஐ தேடி எடுத்து அதனில் இருந்த பதிவுகளின்படி மூவரின் பெயர்களுமே இருக்கப்பெற்ற ஆவணங்களை மறுபதிப்பு செய்து அதனை பஞ்சாயத்தாரிடம் சொல்லி சரியான தீர்வை வழங்கவிடில் கோர்ட்டுக்கு செல்வேன் என்று பேசி மடக்கியதிலே வேறு வழியில்லாமல்
    பெரியப்பா எங்களுக்கு சரியான உரிய பங்கினைத் தந்துவிட்டு அந்த இடத்தை விற்றார்.
    கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது.அன்றிலிருந்து பேச்சுவார்த்தை இல்லை.அவருடன் என் சித்தப்பா இப்போதும் உறவு நிலையில்.அதனால் நான் அவருடனும் உறவை துண்டித்துவிட்டேன்.
    இங்கே காசு என்பது முக்கியமில்லை.நம்பிக்கைதுரோகம் செய்பவர், அவருக்கு துணையாக நிற்பவர் உறவு கொள்ள தகுதியானவரா என்பதுதான் எனக்கு முக்கியம்.
    நல்ல கற்பனை கதை இங்கே எனது உண்மைக்கதையை வெளியிட வழி செய்து விட்டது..கற்பனையில் எப்படி இருக்கவேண்டும் என்பது
    சொல்லப்பட்டாலும் நடைமுறையில் என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்துதான் நாம் எதிர்வினை ஆற்றவேண்டியிருக்கிறது..காலசூழல்.

    ReplyDelete
  31. minorwall said...
    என் தாத்தா மறைந்ததினத்திலிருந்தே என் பெரியப்பாவின் அலட்சிய நடவடிக்கைகள் கவனித்து நான் என் சித்தப்பா, குடும்ப உறுப்பினர்களிடம் இவர் சொத்துக்களில் ஏதோ வில்லங்கம் செய்திருக்கிறார் என்று நினைக்கிறேன் என்று ஊகத்தில் கூறினேன்..எல்லோரும் வெள்ளந்தியாக என்னை வில்லனைப் போலே பார்த்து வாளாவிருந்துவிட்டார்கள்.
    வாரிசு சான்றிதழ் வாங்கும் போதுதான் பூர்விக வீட்டை அவர் பெயருக்கு மாற்றிக்கொண்டுள்ளார் என்பது தெரிய வந்தது.
    ((V.A.O. )வை கையில் போட்டுக்கொண்டு.தண்ணிவண்டி..அவர்பக்கம்) மேலும் நாங்கள் இரு தரப்பினருமே ஊரில் வசிக்கவில்லை என்ற காரணம் கொண்டு அவரிடமிருந்தும் அதை ரகசியமாக வாங்கிடவும் பேச்சுவார்த்தையில் முன்பணமும் பெற்றுவிட்டார் என்பதும் செவிவழிச் செய்திகளாக எங்களுக்கு வந்துசேர அப்பா,சித்தப்பா சென்று நியாயம் கேட்டபோது ஆளுக்கு 10 % மட்டுமே கொடுக்க முடியுமென்று கூறிவிட்டார்.அதுவும் அவர் விற்கப்போகும் விலை வேறு. எங்களுக்காக அவர் சொல்லும் விலை வேறு.ஏமாற்றப்பட்டதாக உணர்ந்து விக்கித்துப் போய் இருக்கும் நிலையில் நான் வேகத்துடன் தாலுகா அலுவலகத்தில் காய்களை நகர்த்தி 6 மாதங்கள் பல ஆயிரங்களையும் செலவு செய்து A - register என்ற பழைய register ஐ தேடி எடுத்து அதனில் இருந்த பதிவுகளின்படி மூவரின் பெயர்களுமே இருக்கப்பெற்ற ஆவணங்களை மறுபதிப்பு செய்து அதனை பஞ்சாயத்தாரிடம் சொல்லி சரியான தீர்வை வழங்கவிடில் கோர்ட்டுக்கு செல்வேன் என்று பேசி மடக்கியதிலே வேறு வழியில்லாமல்
    பெரியப்பா எங்களுக்கு சரியான உரிய பங்கினைத் தந்துவிட்டு அந்த இடத்தை விற்றார்.
    கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது.அன்றிலிருந்து பேச்சுவார்த்தை இல்லை.அவருடன் என் சித்தப்பா இப்போதும் உறவு நிலையில்.அதனால் நான் அவருடனும் உறவை துண்டித்துவிட்டேன்.
    இங்கே காசு என்பது முக்கியமில்லை.நம்பிக்கைதுரோகம் செய்பவர், அவருக்கு துணையாக நிற்பவர் உறவு கொள்ள தகுதியானவரா என்பதுதான் எனக்கு முக்கியம்.
    நல்ல கற்பனை கதை இங்கே எனது உண்மைக்கதையை வெளியிட வழி செய்து விட்டது..கற்பனையில் எப்படி இருக்கவேண்டும் என்பது
    சொல்லப்பட்டாலும் நடைமுறையில் என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்துதான் நாம் எதிர்வினை ஆற்றவேண்டியிருக்கிறது..காலச்சூழல்.//////

    உண்மைதான் மைனர். நம்பிக்கைத் துரோகம் மன்னிக்கமுடியாதது ஆகும். என்ன செய்வது?
    சுயநலம் உள்ள மனிதன் தன் நலத்தை உயர்த்திற்கொள்ள, என்ன துரோகமும் செய்யத்தயாராகிவிடுகிறான்! அதுதான் மனித வாழ்வின் முதல் அவலம்!

    ReplyDelete
  32. அன்புடன் வணக்கம்
    நல்லதொரு எழுத்தாளர் பதிவுக்கு அறிமுகம் கிடைத்தமைக்கு கூகுள்கு நன்றி
    இந்த செட்டிநாட்டு பகபிரிவைனை கதை கேட்டதில் மனம் மிக மகிழ்ச்சி .இதுபோல் எல்லா குடும்பங்களிலும் ஒரு
    தன்மை போக்கு இருந்தால் எப்படி இருக்கும் . ம்ம்ம் அதற்கும் கொடிப்பிணை வேண்டும் ..

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com