30.9.07

தமிழ்ப் பதிவுல பிரம்மாவிற்காக ஒரு பதிவு

தமிழ்ப் பதிவுலக பிரம்மாவிற்காக ஒரு பதிவு

தமிழ்ப் பதிவுக பிரம்மாவின் கேள்வி:

///உருவாய் அருவாய் உளதாய் இலதாய்... இந்த
கடை வார்த்தைக்கு அர்த்தம் அவரால் இல்லமலும்
போகமுடியும்... he can become non existent too!
என்று நான் விளங்கியிருக்கிறேன். நாத்திகமும்
அவருக்கு ஒத்துப்போகும் என்பதையே நான்
உணர்கிறேன். அல்லது அவர் ஆத்திக நாத்திகங்கள்
இரண்டிற்கும் அப்பாற்பட்டவரோ? நீங்க என்ன
சொல்றீங்க வாத்தியார் ஐயா?///

அடியவனின் பதில்:

நாத்திகம் அவருக்கு (இறைவனுக்கு) ஒத்துப்போகும்.
ஆனால் நாத்திகத்திற்கு இறைத் தத்துவம் ஒத்துப்
போகவில்லை. அவர் இவை இரண்டிற்கும் -
நீங்கள் சொல்லியபடி அப்பாற்பட்டவர்தான்!!!!

இவர்கள் ஒத்துப்போகாதற்கும் இறைவன்தான்
காரணம் என்று எண்ணுகிறேன் இருதுருவங்கள்
இருப்பதுபோல - இரவு, பகல் இருப்பதுபோல -
இன்பம், துன்பம் இருப்பதுபோல - உறவு, பகை
இருப்பதுபோல - பெருமை, சிறுமை
இருப்பது போல, வறுமை, செழுமை
இருப்பதைப்போல, துணை, தனிமை
இருப்பது போல இதுவும் இருக்கட்டும் என்று எண்ணிச்
சும்மா இருக்கின்றாரோ என்னவோ:-)))))

ஆனால் ஆத்திகம், நாத்திகம் என்ற பேதம்
இறைவனுக்கு இல்லை. அவற்றைக் கடைப்பிடிக்கும்
இரு சாராருமே அவருக்குச் சமமானவர்கள் தான்
அவரால் படைக்கப்பட்ட இந்த உலகத்தின் பிரஜைகள்
அவர்கள். இந்தச் சம நோக்குப் பார்வையால்தான்
அவர் எல்லாம் வல்லவர் என்ற நிலையில் உள்ளார்.
That is the main reason for His existence as The Almighty
இல்லையென்றால் அவர் வெறும் mighty ஆகத்தான்
இருப்பார். எல்லாம் என்ற நிலை காணாமல் போயிருக்கும்.
வெறும் வல்லவர் என்றுதான் அவர் சொல்லப்படுவார்.

"ரவுசு பண்ணாம, முடக்கடி செய்யாம ஒத்துமையா
இருக்கோணும்டா சாமிகளா" என்று ஒரு தாய் தன்
பிள்ளைகளிடம் சொல்வது போலத்தான்
கடவுளின் சித்தமும். பிள்ளைகள் கேட்டால்தானே?

இங்கே நடக்கும் நாத்திக ஆத்திக சண்டைகளுக்கு
அவர் எப்படிப் பொறுப்பாவார்?

இலதாய் = இல்லாததாய் (non existent)
உளதாய் = உள்ளதாய்

உருவாய் அருவாய் உளதாய் இலதாய் என்பதை
உருவம் உடையவராகவும், உருவம் இல்லாதவராகவும்
உலகத்தோரின் கண்களில் படும்படி உள்ளவராகவும்
உலகத்தோரின் கண்களுக்கு (படாதபடி) இல்லாதவராகவும்
அல்லது தெரியாதவராகவும் என்று பொருள் கொள்ளல் வேண்டும்

நாத்திகத்தைப் பற்றிய எந்தவிதமான செய்திக்கும்
இந்தப் பாடலில் வாய்ப்பே இல்லை! ஏனென்றால்
பாடலை எழுதியவர் அருணகிரிநாதர்.
அவரைப் பற்றிச் சொல்லவா வேண்டும்?

விளக்கம் போதுமா தமிழ்ப் பதிவுலகப் பிரம்மாவே?

நாத்திகம் பற்றி நான் நன்கறிவேன். ஏனென்றால்
வசந்த காலத்தில் நான் நாத்திகனாக இருந்தவன்.
"தில்லை நடராசரையும் ஸ்ரீரெங்க நாதரையும் பீரங்கி
வைத்துப் பிளக்கும் நாள் எந்நாளோ?" என்று
சொல்லிய அன்பர்களோடும் நண்பர்களோடும்
ஒன்றாக இருந்தவன்.

நாத்திகக் கொள்கைகளுக்கு உரம் சேர்க்க ஆதாரங்
களைத் தேடி அலைந்தபோதுதான் ஆத்திகம் என்னைப்
பிடித்துக் கொண்டு விட்டது.

பிடிக்கு ஆளான கதை பெருங்கதை!

நன்றி, வணக்கத்துடன்
தோழமையுடன்,
SP.VR. சுப்பையா

பின் குறிப்பு: செய்தி நீண்டதாக இருந்ததாலும்,
உங்களின் மேல் உள்ள அன்பு, மரியாதை காரணமாகவும்,
தனிப் பதிவாக வலையேற்றம் செய்துள்ளேன்.

4 comments:

  1. தமிழ் வலை உலக பிரம்மா யாரென்று தெரியாதவர்கள்
    நண்பர் செல்லா அவர்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ளும்படி
    வேண்டிக் கொள்கிறேன்

    ReplyDelete
  2. அட இது கோவை உள்ளூர் தகறாறு! இந்த அளவுக்கு போகிறது! ஆனாலும் வலயுலக பிரம்மா என்றது ஓவர். அவர் விஸ்வநாதர் ஆச்சே!எப்படி பிரம்மனாகவிட்டீர்கள் வாத்தியாரே! :-) யாரைச் சொல்கீரேன்என்று உங்களுக்கு நல்லாவே தெரியும் என்று பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு சொன்னது!

    ReplyDelete
  3. அன்புள்ள சுப்பையா அய்யா,

    உங்கள் பொறுமையும் நடையும் அசரவைக்கின்றன. 'இலதாய்' என்பதற்கான
    //உலகத்தோரின் கண்களுக்கு (படாதபடி) இல்லாதவராகவும்
    அல்லது தெரியாதவராகவும் என்று பொருள் கொள்ளல் வேண்டும்//

    என்ற உங்கள் விளக்கம் நன்றாயிருக்கிறது. ஆனாலும் புதிதாக எதுவும் அறிந்துகொள்ள முடியுமா என்றே உங்களை சீண்டினேன்:-). அது முழுதாக நிறைவேறவில்லை. உங்கள் விளக்கம் இன்னும் ஒரு கடவுள் நம்பிக்கையாளரின் பார்வையிலேயே சொல்லப்படுவதாக உணர்கிறேன். அது இயல்பானதும் நியாயமானதும்கூடத்தான். பக்தியாளர் அருணகிரிநாதர் எழுதியது இந்தப் பார்வையில்தானே இருக்கவேண்டும்.

    இந்தப் பாடலை ஏற்கனவே கேள்விப்பட்டிருந்தாலும் இன்று மீண்டும் கூகுளிட்டபோது இன்னொரு விளக்கமும் கிடைத்தது:

    //உளது ஆய் ... உண்டு என்பவருக்கு உள் பொருளாகவும்,
    இலது ஆய் ... இல்லை என்பாருக்கு இல் பொருளாகவும்,//


    இதுவும் நல்லாத்தான் இருக்கிறது.

    //நாத்திகக் கொள்கைகளுக்கு உரம் சேர்க்க ஆதாரங்
    களைத் தேடி அலைந்தபோதுதான் ஆத்திகம் என்னைப்
    பிடித்துக் கொண்டு விட்டது.

    பிடிக்கு ஆளான கதை பெருங்கதை!//

    அந்தக் கதையும் ஒருநாள் சொல்லுவீங்க, இல்லீயா? (இல்லே ஏற்கனவே சொல்லியிருந்தா சுட்டி கொடுங்க, படிச்சுக்கிறேன்)

    (இன்னொண்ணு, இந்த 'பிரம்மா' பட்டமெல்லாம் வேண்டாம் சார். ஆயிரம் பேர் சேர்ந்து உருவாக்கிய கட்டடம் தமிழ் வலையுலகம். இணையத்தில், கணினியில் தமிழ் உலா வரச்செய்ய உழைத்த/உழைக்கும் நல்லவர்கள் பலர் இங்கே இருக்கிறார்கள். தமிழ்மணம் என்ற ஒரு செங்கல்லை மட்டும் எடுத்துவைக்க முடிந்ததோடு மனநிறைவு அடைகிறேன்.)

    ReplyDelete
  4. ///Kasi Arumugam - அவர்கள் சொல்லியது:
    உங்கள் பொறுமையும் நடையும் அசரவைக்கின்றன. ///

    உங்கள் வருகைக்கு நன்றி. பாராட்டிற்கும் நன்றி!

    முண்டாசுக் கவிஞரோடு கைகுலுக்கிய சந்தோசம ஏற்படுகிறது.
    மின்ஞ்சலை சிறப்பாக வடிவமைத்த 'சபீர் பாட்டியாவுடன்' உரையாடிய
    மன நிறைவு உண்டாகிறது.

    ///இந்தப் பாடலை ஏற்கனவே கேள்விப்பட்டிருந்தாலும் இன்று மீண்டும் கூகுளிட்டபோது இன்னொரு விளக்கமும் கிடைத்தது:
    //உளது ஆய் ... உண்டு என்பவருக்கு உள் பொருளாகவும்,
    இலது ஆய் ... இல்லை என்பாருக்கு இல் பொருளாகவும்,//
    இதுவும் நல்லாத்தான் இருக்கிறது.///

    இந்தக்கருத்தை வலியுறுத்திக் கவியரசர் கண்ணதாசன் அவர்கள் தன்னுடைய
    பாடல் ஒன்றில் இப்படிச் சிறப்பாகச் சொல்லியிருக்கின்றார்:

    "உண்டென்றால் அது உண்டு
    இல்லையென்றால் அது இல்லை!"

    தெய்வம் உண்டு என்று சொல்பவர்களுக்கு தெய்வம் உண்டு
    இல்லை என்று சொல்பவர்களுக்கு தெய்வம் இல்லை!

    அடித்துச் சொல்லியிருக்கிறார். அவரால்தான் அப்படிச் சொல்ல
    முடிந்திருக்கிறது.

    //நாத்திகக் கொள்கைகளுக்கு உரம் சேர்க்க ஆதாரங்
    களைத் தேடி அலைந்தபோதுதான் ஆத்திகம் என்னைப்
    பிடித்துக் கொண்டு விட்டது. பிடிக்கு ஆளான கதை பெருங்கதை!//
    அந்தக் கதையும் ஒருநாள் சொல்லுவீங்க, இல்லீயா? ///

    நிச்சயம் சொல்வேன். அப்போது உங்களுக்கும் தெரிவிப்பேன்

    ////இன்னொண்ணு, இந்த 'பிரம்மா' பட்டமெல்லாம் வேண்டாம் சார். ஆயிரம் பேர் சேர்ந்து உருவாக்கிய கட்டடம் தமிழ் வலையுலகம். இணையத்தில், கணினியில் தமிழ் உலா வரச்செய்ய உழைத்த/உழைக்கும் நல்லவர்கள் பலர் இங்கே இருக்கிறார்கள். தமிழ்மணம் என்ற ஒரு செங்கல்லை மட்டும் எடுத்துவைக்க முடிந்ததோடு மனநிறைவு அடைகிறேன்.///

    'படைப்பதனால் என் பேர் இறைவன்' என்று கண்ணதாசன் அவர்கள்
    சொல்லியிருக்கிறார்.

    மற்றவர்கள் பயனுற யார் எதைப் படைத்தாலும் அவர்கள் ஒரு பிரம்மாதான்.

    நீங்களும் பிரம்மாதான், தமிழ் வலையுலகம் மேன்மையுற பாடுபட்ட
    அத்தனை நல்ல உள்ளங்களும் பிரம்மாக்கள்தான்.

    இன்னும் ஓர் ஆயிரம் பிரம்மாக்கள் கிடைக்கட்டும் - தமிழ் வலை உலகிற்கு

    அதுதான் என்னுடைய தற்போதைய ஆசை!
    நன்றி! வணக்கம்

    நட்புடன்
    SP.VR,சுப்பையா

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com