21.3.07

சாகித்ய அகாதமி விருது பெற்ற நூல்



சாகித்ய அகாதமி விருது பெற்ற நூல்

ஆகாயத்துக்கு அடுத்த வீடு

'ஆகாயத்துக்கு அடுத்த வீடு' என்னும் அசத்தலான
தலைப்பில் கவிஞர்.மு.மேத்தா அவர்கள் எழுதிய
கவிதை நூலிற்கு 2006ம் ஆண்டிற்கான சாகித்ய
அகாதமியின் விருது கிடைத்ததும், அதைக்கவிஞர்
பெற்றுக் கொண்டு தமிழுக்குப் பெருமை சேர்த்ததையும்
அனைவரும் அறிவோம்.

அந்த நூலைப் படிக்கவும், கவிஞருக்குக் கோவையில்
நட்ந்த பாராட்டு விழாவில் பங்கு கொள்ளவும்
ஒரு சேரப்பேறு சென்ற ஞாயிற்றுக்கிழமையன்று
(17.03.2007) அடியவனுக்குக் கிடைத்தது.

கவிஞர் மு.மேத்தா அவர்களின் அந்தக் கவிதைத்
தொகுப்பு நூல் படிப்பவர்களின் மனதில் படிக்கும்
போது ஏற்படுத்தும் இன்பத்தாக்கத்தை அடியவனின்
பார்வையில் கீழே கொடுத்துள்ளேன்.

நூல்நயம் அல்லது புத்தக விமர்சனம் என்று நீங்கள்
எடுத்துக் கொள்ளலாம்

புத்தகத்தைப் பிரித்தவுடன் 'இந்தியா என் காதலி''
என்னும் தலைப்பில் உள்ள கவிதையின் முதல் ஒன்பது
வரிகளைப் படித்தவுடனேயே நாம் நிமிர்ந்து உட்கார்ந்து
விடுவோம்!

அதில் கவிஞர் மேத்தா அவர்கள் இப்படித்
துவங்கியுள்ளார்

"உண்மையை நான்
ஒப்புக் கொள்கிறேன்
காதலித்து உன்னைக்
கட்டிக் கொள்ளவில்லை...
கட்டிக்
கொண்டதால்தான்
காதலித்துக்
கொண்டிருக்கிறேன்!"

தொடர்ந்து வரும் வரிகளில்,

"உன்
தர்பார் மண்டபங்களில்
நியாயங்கள்
தற்கொலை
செய்துகொள்ளும்
முன்பே
கொலை
செய்யப்படுகின்றன

சட்டங்கள் விசிலடிக்க
ஜனநாயகம்
கை தட்டுகிறது!"
என்று நாட்டு நடப்பை ஆதங்கத்தோடு
சிறப்பாகச் சொல்கின்றார்

அந்தத் தலைப்பின் கீழ் மேலும்
ஒன்பது பத்திகளில் நாட்டின்
அவலத்தை ஆணி அடிப்பதுபோல் சிறப்பாகச்
சொல்லிவிட்டுக் கடைசியில்
"கட்டிக்
கொண்டதால்தான்
காதலித்துக்
கொண்டிருக்கிறேன்!"
என்று முத்தாய்ப்பாய் முடிக்கின்றார்.

குற்றப் பத்திரிக்கை, வழுவமைதி, ஞானம்,
வாழ்க்கையென்பது, உயிர்பாடும் ஒப்பாரி, வரலாறு,
குடியரசு தினம், நதி, நீயும் நானும், பாடம், இன்னொரு
கடத்தல், எழுத்தெனப் படுவது, அகமே புறம், புறமே அகம்,
விளக்குகளின் விழா, ஒரே குரல், சிறு குறிப்பு வரைக,
கவிதையின் கதை, விழாக்காலம், நேரம், ஆகாயத்துக்கு
அடுத்த வீடு,தீண்டாமை, அன்பழைப்பு, கடலுடன் ஒரு
கலந்துரையாடல், மனக் கதவு, இதயத்தின் தொலைபேசி,
புன்னகைக்கும் புயல், தாய் மண்ணே வணக்கம்,
அவளுக்கு ஒரு ஆடை(சில்க் ஸ்மிதாவிற்கு
அஞ்சலியாக எழுதப்பெற்றது), நியாயங்கள், பொங்கும்
கனவுகள், ஓர் உரையாடல், வாழ்க்கை, கன்னி மாடம்,
தாய், கும்பகோணத்தில் ஒரு மகாவதம் (பள்ளித்
தீவிபத்தில் பலியான சிறார்களுக்கு அஞ்சலியாக
எழுதியது) கல்விக் கடைகள், சொற்பொழிவு, வெற்றித்
தூண், வெற்றியின் மறுபக்கம், கி.பி. 2000, இன்று முதல்,
சுவரொட்டித் தலைவர்கள், பிறவிக்கடன், நினைவு நாள்,
மதிப்பீடு, விடைபெறும் வேளை
என்று 48 ற்கும் மேற்பட்ட தலைப்புக்களில் அருமையான
கவிதைகள் இந்த நூலிற்குச் சிறப்பைச் சேர்க்கின்றன!

எளிமையான் சொற்களில் ஆழமான கருத்துக்களை
அசத்தலான வெளிப்பாட்டில் சொல்வதுதான் கவிஞரின்
தனிச் சிறப்பு

உதாரணம் கொடுத்துள்ளேன்:

1. தலைப்பு: குடியரசு தினம்
ஆளுநர் மாளிகையில்
விருந்து
அனைத்துக் கட்சிகத்
தலைவர்களுக்கும்!

பணியாற்றிக் கொண்டிருந்த
பணியாளர்கள் தமக்குள்
பேசிக் கொண்டனர்:

"யார்
யாரைச்
சாப்பிடப் போகிறார்களோ?"

2. தலைப்பு - மதிப்பீடு

எழுதிக் கொண்டிருந்தான்
விமர்சனங்கள் வந்தன....
எழுதாமல் இருந்தான்
விருதுகள் வந்தன!

எப்படி நச்' சென்று இருக்கிறது பார்த்தீர்களா?
அதுதான் திரு.மு.மேத்தா!

படித்து முடித்தவுடன் உவகை மேலிட, தமிழ்கூறும்
நல்லுலகத்தோர் அனைவரும் இதைப் படித்து மகிழ
வேண்டும் என்ற ஆதங்கத்தில் இதற்கு ஒரு விமர்சனம்
எழுதத் துணிந்தேன்.

அற்புதமாக எழுதப்பெற்றுள்ள இந்த நூல் 96 பக்கங்களைக்
கொண்டது. நூலில் உள்ள அத்தனை கவிதைகளுமே
முத்துக்கள்.

எல்லாவற்றையும் எடுத்து நான் எழுத விரும்பினாலும்
பதிப்பாளர்கள் தங்கள் காப்புரிமையை மீறி அனுமதிப்பார்களா
என்பது தெரியாது! அதேபோல மிகவும் அதிகமாக நெஞ்சைத்
தொட்ட வரிகளைக்குறிப்பிட்டு எழுதுவதென்றால் எதை
எழுதுவது எதை விடுவது என்ற திகைப்புத்தான் மேலிடும்.
ஒரு விருதுபெற்ற நூலில் அதைச் செய்வதும் சரியல்ல!

புத்தகத்தின் வடிவமைப்பும் வழவழ்ப்பான உயர்ந்த
காகிதத்தில் அச்சிட்டுக் கொடுத்துள்ள நேர்த்தியையும்,
ஒவ்வொரு பக்கத்திற்கும் அந்தப் பக்கத்திலுள்ள
கவிதைக்குத் தோதாகக் கொடுக்கப்பட்டுள்ள
படங்களையும் பாராட்ட வார்த்தைகள் இல்லை
என்பதுதான் நிதர்சனமான உண்மை!

ஆகவே ஒரே ஒருவழிதான் உண்டு. நூலை விலை கொடுத்து
வாங்கிப் படியுங்கள்.அதுதான் நெஞ்சைத் தொடும்படி எழுதிய
கவிஞர்.மு.மேத்தா அவர்களுக்கும், சிறப்பாக வெளியிட்ட
குமரன் பதிப்பகத்தார்க்கும் நாம் செய்யும் மரியாதையும்,
நன்றிக் கடனுமாகும்.

பக்கங்கள் 96 - விலை ரூ.60:00

பதிப்பாளர்களின் முகவரி:
குமரன் பதிப்பகம்
3, முத்துக்கிருஷ்ணன் தெரு,
பாண்டி பஜார்,
சென்னை - 600 017
தொலைபேசி எண்: 2815 3742, 2815 2559

நன்றி, வணக்கத்துடன்,
SP.VR.சுப்பையா
-------------------------------------------------------------------


4 comments:

  1. அய்யா

    நல்ல பதிவு

    அழகாக எடுத்து கூறியுள்ளீர்கள்.. நூலை படிக்கும் ஆவலை அதிகப் படுத்திவிட்டீர்கள்..

    கவிஞர் மூ. மேத்தாவிற்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. குருவே,

    நயம் பட எழுதி உள்ளீர்கள். அயல் நாடு வாழும் தமிழர்கள் நண்பர்களின் மூலமாகத்தான் வாங்கி படிக்க வேண்டும்.

    ராஜகோபால்

    ReplyDelete
  3. மு. மேத்தா அவர்கள் என் விருப்பத்திற்குரிய கவிஞர் ம் கூட.

    புத்தக அறிமுகத்திற்கு நன்றி, அய்யா!

    ReplyDelete
  4. நூல் அறிமுகத்திற்கு நன்றி வாத்தியாரே...

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com