2.5.25

Astrology: கிரகங்களின் அமர்விடப் பலன்கள்:

Astrology கிரகங்களின் அமர்விடப் பலன்கள்:

Placement benefits of planets!
கிரகங்களின் அமரும் இடத்தைவைத்துப் பலன்கள் வேறுபடும். அவற்றை விவரமாகப் பார்ப்போம்!

முதலில் லக்கின அதிபதி!
1
அவர் முதல் வீட்டில், அதாவது லக்கினத்திலேயே இருந்தால், அதுவும் ஆட்சி பெற்று அது அவருக்குச் சொந்த வீடாக இருந்தால் மிகவும் நல்லது.
அதனால் ஜாதகனுக்கு நீண்ட ஆயுளையும், மகிழ்ச்சியையும் கொடுப்பார். ஜாதகன் பக்திமானாகவும், நல்ல குணங்களை உடையவனாகவும் இருப்பான்.
லக்கினத்தின் மேல் சனி, ராகு, கேது போன்ற தீய கிரகங்களின் பார்வை இருக்கக்கூடாது. அவைகளின் சேர்க்கையும் இருக்கக்கூடாது. அவ்வாறான அமைப்பில் ஜாதகனுக்கு நீண்ட ஆயுள் இருக்கும்.
2.
லக்கின அதிபதி 2ம் வீட்டில் இருந்தால், அதாவது லக்கினத்திற்கு அடுத்த வீட்டில் இருந்தால், ஜாதகன் செல்வந்தனாகவும், நல்ல மனைவி மக்களுடைய குடும்பத்தைக் கொண்டவனாகவும் இருப்பான்.  ஜாதகனுக்கு வாய், வார்த்தை அதாவது வாக்கு சாமர்த்தியம் இருக்கும். எதையும் பேசி சமாளிக்கும் ஆற்றல் உடையவனாக இருப்பான்.
3.
லக்கின அதிபதி மூன்றாம் வீட்டில் இருந்தாக், ஜாதகன் உடன்பிறப்புக்களுடன், அதாவது சகோதர, சகோதரிகளுடன் ஒற்றுமையாக வாழ்பவனாக இருப்பான். செல்வந்தனாகவும், செல்வாக்கு உடையவனாகவும் இருப்பான்.
4
லக்கினாதிபதி நான்காம் வீட்டில் இருந்தால், ஜாதகன் எல்லா சுகங்களையும் உடையவாக இருப்பான். வீடு, வாசல், நிலம், புலம், வண்டி வாகனம் என்று எல்லா வசதிகளையும் உடையவனாக இருப்பான். கல்வி, கேள்விகளில் விருப்பமுடையவனாகவும், தாயிடத்தில் பாசம் மிக்கவனாகவும் இருப்பான்.
5
லக்கினாதிபதி ஐந்தாம் வீட்டில் இருந்தால், ஜாதகன் புத்திசாலியாக இருப்பான். குழந்தை பாக்கியம் உள்ளவனாக இருப்பான். பெரும்பாலும் சொந்த ஊரில் வசிப்பவனாக இருப்பான். பூர்வ புண்ணிய பலத்துடன் இருப்பான். நல்லபடியான வாழ்க்கை அமையும்
6.
லக்கினாதிபதி ஆறாம் வீட்டில் இருந்தால், அது நன்மையான அமைப்பு இல்லை. ஜாதகன் போராடப் பிறந்தவன். வாழ்க்கை முழுவதும் போராட்டம் நிறைந்ததாக இருக்கும். எதிரிகள் இருப்பார்கள். கடன் உண்டாகும். அணுகுமுறை வெற்றியைக் கொடுக்காது. லக்கினாதிபதி பாப கிரகம் என்றால் இந்த இடத்தில் இருப்பது சில விஷயங்களில் நன்மையானதுதான்
7
லக்கினாதிபதி ஏழாம் வீட்டில் இருந்தால், ஜாதகன் காமம் அதிகம் உடையவனாக இருப்பான். பலவிதமான ஆசைகள் உடையவனாக இருப்பான். திருமணத்தால் மேன்மை அடைபவனாக இருப்பான். பிறரை ஈர்க்கும் தன்மை உடையவனாக இருப்பான்.
8
லக்கினாதிபதி எட்டில் இருப்பது நன்மையான அமைப்பு இல்லை. சிலருக்கு ஆயுள் குறைவாக இருக்கும். சிலருக்கு அவமானங்களும் கெட்ட பெயரும் உண்டாகும். சனி, ராகு அல்லது கேது இந்த இடத்துடன் சம்பந்தப் பட்டிருந்தால் ஜாதகனுக்கு உடற் குறைபாடு இருக்கும்.
9
லக்கினாதிபதி ஒன்பதாம் வீட்டில் இருந்தால் ஜாதகன் பாக்கியசாலியாக இருப்பான். எல்லா பாக்கியங்களையும் அனுபவிக்கும் யோகம் உண்டாகும். தந்தையை நேசிப்பவனாகவும், தந்தையின் ஆதரவைப் பெற்றவனாகவும் இருப்பான். தர்ம காரியங்களைச் செய்வான். எப்போதும் நல்ல பெயர் இருக்கும்.
10
லக்கினாதிபதி பத்தில் இருந்தால், எந்த நேரமும் தன்னுடைய தொழில் அல்லது வேலை பற்றிய சிந்தனை உடையவனாக இருப்பான். அன்றாட வேலைகளில் கண்ணும் கருத்தும் உடையவனாக இருப்பான். தர்மகாரியங்களைச் செய்பவனாக இருப்பான்.
11.
லக்கினாதிபதி பதினொன்றாம் வீட்டில் இருந்தால், லாபம் உடையவனாக இருப்பான். இது லாப ஸ்தானம் அதை மனதில் வையுங்கள். மூத்த சகோதரனாக இருப்பான் அல்லது மூத்தவர்களிடம் அன்பு உடையவனாக இருப்பான். சுபக்கிரகங்களின் பார்வை இல்லாவிட்டால் மாரக திசையாக மாறும் அபாயம் உண்டு.
12
லக்கினாதிபதிக்கு 12ம் இடம் உன்னதமானது அல்ல! ஜாதகன் பண விரயம் உடையவனாக இருப்பான். உயர்ந்த நிலையை அடைய முடியாதவனாகவும் இருப்பான். அயன, சயன, சுகங்களை கிடைத்தவரை அனுபவிப்பவனாக இருப்பான். சிலருக்கு ஆயுள் குறைவு ஏற்படும். எல்லோருக்கும் அல்ல!

அன்புடன்,
வாத்தியார்
----------------------------------------------

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com