24.10.24

Astrology - ஆடும்வரை ஆட்டம்!!

Astrology -  ஆடும்வரை ஆட்டம்!!

வீடுவரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரோ?

என்று பிரபலமான பாடல் ஒன்றின் பல்லவியில் எழுதிய கவியரசர், அதே பாடலின் சரணத்தில் இப்படி எழுதியிருப்பார்:

ஆடும் வரை ஆட்டம்
ஆயிரத்தில் நாட்டம்
கூடிவரும் கூட்டம்
கொள்ளிவரை வருமா?

செவிட்டில் அறைவதைப்போன்று என்ன ஒரு கேள்வி பாருங்கள்

நம்மோடு தொடர்ந்து சுற்றியவர்கள், சாப்பிட்டவர்கள், நமது பணத்தைக் கூட இருந்தே கரைத்தவர்கள், வலது கை என்று நாம் நம்பிக்கொண்டிருந்தவர்கள்,  மாலை நேரங்களில், கூட இருந்து நமக்கு சரக்கை ஊற்றிக்கொடுத்தவர்கள், கொஞ்சம் அதிகமான நேரங்களில் வீடுவரை கொண்டுவந்து விட்டு விட்டுப் போனவர்கள், உயிர் காப்பான் தோழன் என்று கவிஞர்களால் வர்ணிக்கப்படுகிறவர்கள் - இப்படிச் சொல்லிக்கொண்டே போகக்கூடிய எண்ணற்றவர்கள், நமக்கு மிகவும் நெருங்கியவர்கள் எத்தனை பேர்கள் இருந்தாலும், ஒரு நாள் நாம் சிதையில் வேகும் போது “ அடேய், நம் சுப்பிரமணி கொள்ளியில் தனியாக வேகிறானடா! அவன் தனியாக வேகக்கூடாது. நானும் அவனோடு போகிறேன்” என்று சொல்லியவாறு எரியும் சிதையில் எவனாது ஏறிப்படுத்துகொள்வானா?

மாட்டான்!. மாட்டான்! மாட்டான்!

அதைத்தான் கூடிவரும் கூட்டம் கொள்ளிவரை வருமா? என்று கவியரசர் கேட்டார்
------------------------------------------------------------------
பணம், பதவி, புகழ், செல்வாக்கு, அதிகாரம் என்று அவற்றை ஒரு கிரக்கத்துடன் தேடி அலைபவர்கள்  நிறையப் பேர்கள் உள்ளார்கள்.

அவற்றில் ஏதாவது ஒன்று கிடைத்தாலும் போதும் என்று தனியாக அலைபவர்களும் உள்ளார்கள். ஒருவித போதை அது!

வாழ்க்கை ஒரு மாயை (illusion) என்பதை உணர்ந்தவன் அதற்கு அலையமாட்டான்!

கிடைப்பது முக்கியமில்லை. கிடைத்தால் அது கடைசிவரை நம்மோடு இருக்க வேண்டும். நம்மை அது மேன்மைப் படுத்த வேண்டும்.
அந்த நிலைமை இல்லை என்றால் அது கிடைத்தும் பிரயோஜனமில்லை

ஜாதகப்படி அது கிடைப்பதற்கும், கிடைத்தது நிலைப்பதற்கும் என்ன காரணம் என்று இன்று பார்ப்போம்
------------------------------------------------------------------------------------
உலகையே கலக்கிய மனிதனின் ஜாதகம்
ஹிட்லரின் ஜாதகம்

ஹிட்லரைப் பற்றி முன்பு விவரமாக எழுதியுள்ளேன். ஆகவே அதைத் தவிர்த்துவிட்டு சொல்ல வந்த செய்தியை மட்டும் சொல்கிறேன்
பணம், பதவி, புகழ், செல்வாக்கு, அதிகாரம் என்று அனைத்தையும் எட்டிப் பிடித்தவர் அவர்.

ஆனால் அவைகளே அனைத்தையும் கொட்டிக் கவிழ்த்து அவருடைய முடிவைத் தற்கொலையில் கொண்டுபோய் நிறுத்தின!
ஜாதகப்படி என்ன காரணம்?

ஜாதகப்படி என்ன காரணம்?

கஜகேசரி யோகம் இருந்து, அந்த யோகத்தைக் கொடுக்கும் குரு பகவான் தன்னுடைய  பார்வையில் ஏழாம் வீட்டை வைத்திருந்தால் ஜாதகனுக்கு எல்லாம் கிடைக்கும். ஆனால் அந்த அமைப்பில் குருவுடன், கேது அல்லது ராகு வந்து ஒட்டிக்கொண்டிருந்தால், முடிவு அவலமாக இருக்கும். கஜகேசரி யோகம் கிடைத்தும் பிரயோஜனமில்லாத நிலை அது!

சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் என்று 4 கிரகங்களை தன்னுடைய கஜகேசரி யோகத்தால் ஆட்டிவைத்த குருவை, (ஆட்டிவைத்த பதம் எதற்கு? துலாம் லக்கினத்திற்கு குரு நம்பர் ஒன் வில்லன். அதை மனதில் வையுங்கள்) அவர் ஜாதகனுக்கு வாங்கிக் கொடுத்தவற்றை, கூடவே இருந்த கேது, கடைசியில் கொட்டிக் கவிழ்த்தான்.

ஹிட்லரின் படையில் எத்தனை அதிகாரிகள், வீரர்கள் இருந்தார்கள். அவனுடன் சேர்ந்து சுகப்பட்டவர்கள் எத்தனை பேர்கள். ஒருவனாவது ஹிட்லர் புதையுண்டபோது, கூடச் சேர்ந்து புதையுண்டானா?

அதை வலியுறுத்தத்தான் பதிவின் முகப்பில் உள்ள பாடல் வரிகள்

அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com