Astrology : கைக்காசு எப்போது கரையும்?
முதலில் கரை என்றால் என்னவென்று பார்ப்போம். கரை என்ற தமிழ்ச்சொல்லிற்குப் பல அர்த்தங்கள் உண்டு
1. காகம் கரைவதும் கரைதான். அதாவது காகம் 'காகா’ என்று ஒலி எழுப்புவதைக் காகம் கரைகிறது என்று சொல்லுவார்கள்
2, நீரைத் தேக்கிப் பிடித்து நிறுத்தும் மேடான மண் பகுதிக்கு (ஏரி, குளங்களில்) கரை என்றுதான் சொல்லுவார்கள். ஏரிக்கரை
3. ஒரு திடப்பொருளை நீரில் கரைத்து திரவ நிலைக்குக் கொண்டு வருவதையும் (சோப்பை இப்படிக் கரைத்து விட்டாயே) கரைத்தல் என்று சொல்லுவார்கள்
4. வீணாகக் காசைச் செல்வழிப்பதையும், இப்படிக் காசைக் கரைக்கிறாயே என்றுதான் சொல்லுவார்கள்
5. உடலில் ஏற்பட்டுள்ள கட்டியை நீக்கம் செய்வதற்கு மேற்கொள்ளும் சிகிச்சைக்கும் கரைத்தல் என்றுதான் பெயர். இந்தக் கட்டியைக் கரைப்பதற்கு எவ்வளவோ செலவு செய்துவிட்டேன்; ஆனால் கட்டி கரைந்த பாடாக இல்லை என்று சிலர் அங்கலாய்ப்பதைப் பார்த்திருப்பீர்கள். அதுவும் கரைத்தலில்தான் வரும்.
6. கற்பூரம் போன்ற பொருட்கள் காற்றில் ஆவியாகி ஒன்றுமில்லாமல் போகும் நிலைக்கும் கரைந்துபோய்விட்டது என்ற சொல்தான் பயன்படுத்தப்பெறும்
7. இருப்பில் உள்ள சேமிப்புப் பணம் கொஞ்சம் கொஞ்சமாக செலவழிந்து கொண்டிருந்தாலும்’ கைக்காசு கரைந்து கொண்டிருக்கிறது என்றுதான் சொல்லுவார்கள்
சரி சொல்ல வந்த விஷயத்திற்கு வருகிறேன். ஜாதப்படி இப்படிக் கரைக்கும் பணி ஒருவனுக்கு எப்போது அமுலுக்கு வரும்? அதாவது எப்போது நடக்கும்?
பன்னிரெண்டாம் இடத்தில் இருக்கும் கிரகத்தின் மகாதிசையில் அது நடக்கும். அது எந்தவிதமான கிரகமாக இருந்தாலும் அதை நடத்திவைக்கும். சனி, ராகு அல்லது கேது போன்ற கிரகங்களின் மகாதிசை என்றால் இந்தக் கரைக்கும் பணி ஜரூராக நடக்கும். சுபக்கிரகங்களின் மகாதிசை என்றால் சற்று மெதுவாக நடக்கும். ஆனால் முடிவு ஒன்றாகத்தான் இருக்கும். மொத்தத்தில் கரைத்துவிட்டுப் போய்விடும்!
Any planet in the 12th house would make its dasa expense oriented!
அடடே, பணம் மட்டும்தான் கரையுமா?
இல்லை. கை இருப்பை, சேமிப்பைக் காலி செய்துவிட்டுப் போவதோடு, வீடு வாசல் இருப்பவர்களுக்கும் பிரச்சினைகளை ஏற்படுத்தி அவற்றை விற்க வைத்து, விற்று வரும் பணத்தையும், வைத்துக்கொள்ளவிடாமல் காலி செய்து விட்டுப் போய்விடும்
அதேபோல, அந்தத் தசாநாதன் தன்னுடைய சுயவர்க்கத்தில் மிகவும் குறைந்த பரல்களுடன் இருந்தால், ஜாதகனின் ஆரோக்கியத்தைக் கரைத்துப் படுக்க வைத்துவிடும். ஜாதகன் வீட்டிற்கும் மருத்துவமனைக்குமாக அலைந்து கொண்டிருக்க நேரிடும்.
அவ்வளவுதானா?
இல்லை! முக்கியமான விதிகளை மட்டும் கூறியுள்ளேன். மற்றவற்றை விரிவாக இன்னொரு நாள் பார்ப்போம்!
இதற்குப் பரிகாரம் உண்டா? பிரார்த்தனை ஒன்றுதான் பரிகாரம்!
அன்புடன்
வாத்தியார்
===========================================
No comments:
Post a Comment
முக்கிய அறிவிப்பு:
பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com