Astrology.சித்தப்பன் மகனுக்கு மட்டும் ஏன் சின்னவயசிலேயே திருமணம் ஆச்சு?
ஒரு இளைஞனுக்கு மிகுந்த வருத்தம். 34 வயதாகியும், அவனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. ஆனால் அவனுடைய தம்பிக்கு (சித்தப்பா மகனுக்கு) 24 வயதிலேயே திருமணம் முடிந்துவிட்டது.
இதுபற்றி தன் தம்பி கேட்டபோது, நமது நாயகனின் அப்பா சொல்லிவிட்டார், “இவனுக்கு இன்னும் நேரம் வரவில்லை. கால சர்ப்பதோஷம் ஏழரைச் சனி என்று எல்லா கெரகமும் வந்து தள்ளிக்கொண்டே போகிறது. அதற்காக அவனுடைய திருமணத்தைத் தள்ளிப் போடாதே! நீ பாட்டுக்கு செய்து முடி!”
அப்படி வீட்டாரின் சமமதத்துடன்தான் அந்தத் திருமணமும் நடைபெற்றது
அதோடு மட்டுமல்லாமல அதுபற்றி, வீட்டில் உள்ள பெரிசுகள் பேசிக் கொண்டது நமது நாயகனின் காதில் விழுந்தது.
“என்னங்க நம்ம பையனுக்கு மட்டும் இன்னும் திருமணம் அமைய மாட்டேன் என்கிறது. அதற்குக் காரணம் இந்தப் பாழாய்ப்போன ஜாதகத்தை கட்டிக்கொண்டு நீங்கள் அழுவதால்தான்!” இது நாயகனின் அம்மா!
“ஆமாம்டி ராசாத்தி, என்னை மட்டும் குறை சொல்! நாம் பார்க்கிற பெண் வீட்டில் எல்லாம் இவனுடைய ஜாதகத்தைப் பார்த்துவிட்டு, கடுமையான களத்திர தோஷம் உள்ளது என்று சொல்லிப் பின் வாங்கி விடுகிறார்கள். அதற்கு நான் என்ன செய்வது?”
“அதுசரி, இனிமேல் பெண் பார்க்கும்போது, அவர்கள் கேட்டால், இவனுக்கு ஜாதகம் இல்லை. வீடு மாற்றும்போது ஒரு பெட்டியோடு அதுவும் தொலைந்து விட்டது என்று சொல்லுங்கள்”
“பிறந்த தேதியைக் கேட்பார்களே?”
“கேட்டால் சொல்லுங்கள். பிறந்த நேரத்தை மட்டும் மாற்றி சொல்லுங்கள். காலை எட்டு மணி என்பதை இரவு எட்டு மணி என்று சொல்லுங்கள். அதான் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு லக்கினம் மாறிக்கொண்டே இருக்குமாமே - ஒரு புத்தகத்தில் படித்தேன். அப்படியாவது இவன் திருமணம் முடியட்டும்!”
“அது அதர்மமில்லையா?”
“பகவனே ஒரு நல்ல காரியத்திற்காக அமாவாசையையே மாற்றி ஒரு நாள் முன்பாக தர்ப்பணம் செய்யவில்லையா? நன்மைக்கு எனும்போது எதுவும் அதர்மம் ஆகாது”
“ஆமாம், உனக்கென்று செய்யும்போது எல்லாமே தர்மக்கணக்கில்தான் வரும்” என்று நக்கலாகச் சொன்னவர், அதற்குமேல் பேசவில்லை
அப்படி எல்லாம் மாற்றிக் கொடுக்கலாமா?
கொடுக்கக்கூடாது. அப்படியொரு மூல நட்சத்திர ஜாதகத்தை ஒரு நாள் தள்ளி பூராட நட்சத்திரமாக்கினார்கள். எட்டில் இருந்த சனி ஏழுக்கு வந்துவிட்டது.
அது பற்றி இன்னொரு நாள் விரிவாகப் பார்ப்போம். இப்போது சொல்ல வந்த மேட்டருக்கு வருகிறேன்!
சிலருக்கு இளம் வயதிலேயே திருமணம் ஆகிறது. சிலருக்கு காலம் கடந்து திருமணமாகிறது. இளம் வயதிலேயே திருமணம் ஆகிவிடுவதற்கான ஜாதக அமைப்பு என்ன? அதை இன்று பார்ப்போம்!
1. லக்கினத்திலும், ஏழாம் வீட்டிலும் சுபக்கிரகங்கள் மட்டுமே இருக்க வேண்டும். அல்லது அந்த வீடுகள் சுபக்கிரகங்களின் பார்வையைப் பெற வேண்டும்.
2. ஏழாம் வீட்டுக்காரன் தீய கிரகங்களின் கூட்டோடு அல்லது பார்வையோடு இருகக்க்கூடாது
3. குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீடும் அப்படியே இருக்க வேண்டும்
4. சுக்கிரன் அஸ்தமனமாகி இருக்கக்கூடாது
5. சுபக்கிரகங்கள் வக்கிரமாகி அதாவது வக்கிரகதியில் இருக்கக்கூடாது.
6. லக்கினம், மற்றும் ஏழாம் வீட்டில் 28ற்கும் அதிகமான பரல்கள் இருக்க வேண்டும்
7. லக்கினாதிபதியும் ஏழாம் வீட்டுக் காரனும் தங்கள் சுயவர்க்கத்தில் 4 அல்லது அதற்கு மேலான பரல்களுடன் இருக்க வேண்டும்
அப்படி இருந்தால் சின்ன வயதிலேயே திருமணம் கூடிவரும்!
அன்புடன்
வாத்தியார்
----------------------------------------------------------------------
No comments:
Post a Comment
முக்கிய அறிவிப்பு:
பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com