4.7.24

நாட்டு நடப்பு: காலம் கடந்தும் திருமணம் ஆகாமல் இருக்கும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரிக்க காரணங்கள் என்ன?


நாட்டு நடப்பு:  காலம் கடந்தும் திருமணம் ஆகாமல் இருக்கும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரிக்க காரணங்கள் என்ன?

 தற்போதைய நடைமுறையில் பெண்ணை விட மணமகன் அதிகமாக படித்திருக்க வேண்டும் என்பது முதல் அடியாக வைக்கப்படுகிறது. படித்து முடித்ததும் பெண் வேலைக்கு சென்று விட்டால் நல்லது தான். ஆனால் அந்த இடத்தில் ஒப்பீடு என்பது ஆரம்பம் ஆகிறது.

பெண் BE முடித்து இருந்தால் பையன் ME முடித்திருக்க வேண்டும்.

பெண் ஒரு லட்சம் சம்பளம் வாங்கினால் பையன் அதைவிட 20000 ரூபாயாவது அதிகமாக வாங்கவேண்டும்.

பெண் வேலை பார்க்கும் இடத்திற்கு பையன் மாறி வரவேண்டும்.

திருமணத்திற்கு பின்னர் பெண் வேலையை விடமாட்டாள் என்றெல்லாம் பெண்ணைப்பெற்றவர்களின் எதிர்பார்ப்புகளும்,நிபந்தனைகளும் கூடிக்கொண்டு செல்கின்றன.

நல்லவிதமாக குணமாக,ஒழுக்கமாக இருக்கும் பையன் கூட ஏதேனும் ஒரு காரணத்தால் இரண்டு அல்லது மூன்று கம்பெனிகள் மாறி சீனியாரிட்டி இழந்து 80,000 வாங்கிக் கொண்டிருக்கும் சமயத்தில் கூட அவனை நிராகரித்த பெண்களை எனக்கு தெரியும்.

பெண்களின் படிப்பு முடிந்து வேலைக்கு வந்ததுமே பெண்களின் பெற்றோருக்கும் சம்பாதிக்கும் போது சிறிது ஆணவம் வந்துவிடுகிறது என்பதில் யாராலும் மறக்க முடியாத உண்மை.

என் பொண்ணு சம்பாதிக்கிறா.

என் பொண்ணு வேலைக்கு போறா.

என் பொண்ணு இவ்வளவு வாங்குறா.

என் பொண்ணு இந்த கம்பெனியில் இன்ன போஸ்டிங்! என்றெல்லாம் முன்னைப்போல இல்லாமல் இப்போது பெண்ணை பெற்றவர்தான் மாப்பிள்ளையின் பெற்றோர்களிடம் கெத்து காண்பிக்கும் நிலை வந்துவிடுகிறது .இங்கேயே அமரலாமா? தொடரலாமா?என்ற மணமகனை பெற்றவர்களுக்கு எண்ணம் எழுவது தவிர்க்க இயலாததாகி விடுகிறது.

இதில் சராசரியாக பெண்ணின் திருமண வயது 22 இல் ஆரம்பித்து 25 /27 என்று உயர்ந்து இன்றைக்கு 29 இல் வந்து நிற்கின்றது. 29 வயது பெண்ணுக்கு நான்கு வயது வித்தியாசத்தில் மாப்பிள்ளை பார்த்தால் கூட மணமகனுக்கு 33 வயதாயிருக்கும். அந்த நேரம் வாலிபன்தோற்றத்திலிருந்து அடுத்த நிலைக்கு மாறும் சமயம் உடல், முகம், முடி போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்படும் காலம்.

இன்னொருபக்கம் பெண் வயதுகூடினால் கருவுறுதல் முதற்கொண்டு சிரமங்கள் அதிகரிக்கும்.இன்றைக்கெல்லாம் பல் மருத்துவமனைகளும் ,செயற்கைகருத்தரிப்பு மருத்துவமனைகளும் ,அதிகரிப்பது இங்கேதான் ஆரம்பம்.

மனது வலிக்கும் விஷயம் தான் இருந்தாலும் சொல்வது தவறில்லை.தெரிந்த பெண்மணி ஒருவருக்கு வரனுக்காக பேசிய சமயம்என்னுடைய மைத்துனி ஒருமுறை சொன்னார் வயது என்ன? என்று கேட்டார். 31 என்று பதிலுக்கு மாமா !எக்ஸ்பயர்ட் என்று பொட்டிலடித்தாற்போல கூறினார். அந்த வார்த்தை உண்மையாகவே இப்போதும் மனதில் சுடுகின்றது.

செல்லக்கிளியின் சொந்தங்களிலேயே திருமண வயது அதிகரித்தநிலையில் பெண்கள் இருக்கவே செய்கின்றார்கள். ஆனால் அதே சமயம் பத்தாம் வகுப்பு முடித்த பெண்களும், பன்னிரண்டாம் வகுப்பு முடித்த பெண்கள் மிகச் சரியாக 19லிருந்து 21 வயதுக்குள் திருமணம் ஆகி விடுகிறது. இன்னும் சொல்லப்போனால் 18 வயது நிரம்பாமல் கோவிலில் ரிஜிஸ்டர் செய்ய முடியாமல் நடந்த திருமணமும் எனக்கு தெரியும்.

எனவே இவற்றில் பெண்ணை பெற்றவர்கள் விட்டுக் கொடுக்க வேண்டுமா? பையனைப் பெற்றவர்கள் விட்டுக் கொடுக்க வேண்டுமா? என்பது அவர் அவர்தான் தீர்மானிக்க வேண்டும்.

ஆனால் இவர்கள் இருவருக்கும் செல்லக்கிகிளியின் தினசரி பிரார்த்தனை ஒன்று உண்டு. திருமணம் ஆகாமல் இருக்கும் வரன்களுக்கு திருமணம் விரைவில் நடக்க வேண்டும். அப்படியும் திருமணம் ஆகி குழந்தைப்பேறு தாமதிப்பவர்களுக்கு விரைவில் குழந்தை கிடைக்க வேண்டும்.

சட்டுபுட்டுன்னு பேசி காலகாலத்துல கல்யாணத்த முடிச்சு வைங்கப்பா!!!

காலத்தே பயிர் செய்!

கல்யாணமும் செய்து கொள்!

பருவத்தில் பயிர் செய்!

பிள்ளையும் பெற்றுக்கொள்!

இது வேண்டுகோள்
அன்புடன்
வாத்தியார்
--------------------------------------------------------

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com