12.7.24

Astrology ஆர்யபட்டா



Astrology ஆர்யபட்டா

மைக்ரோசாஃப்ட், நோக்கியா, சாம்சங், பெப்சி எல்லாம் இல்லாத காலம்!

இடம். நாளந்தா பல்கலைகழகம்.

தெரியாத பெயராக இருக்கிறதா?

ஆண்டைச் சொன்னால் நினைவிற்கு வரும்.

ஆமாம், அது கி.பி.499 ஆம் ஆண்டு.

அம்மாடியோவ்...இன்றைக்கு 1,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலமா?

ஆமாம், மைக்ரோசாஃப்ட், நோக்கியா, சாம்சங், பெப்சி, பானிபூரி, பேல்பூரி, ஏ.கே 47கள் எல்லாம் இல்லாத காலம்

இயேசு கிறிஸ்துவின் பிறப்பிற்குப் பிறகு சுமார் 500 ஆண்டுகள் முடிந்துவிட்ட காலம். பாட்னா அருகே குசுமபுரா என்னும் ஊரில் இருந்த நளந்தா பல்கலைக்கழகத்திற்குச் சொந்தமான கோளரங்கம். அங்கேதான் அந்த அரிய நிகழ்ச்சி நடைபெற்றது.

அந்த ஆண்டில் மார்ச் மாதம் 21ஆம் தேதி மதியம் சரியாகப் பன்னிரெண்டு மணி.

பல்கலைகழகத்தின் மணி ஒலிக்கிறது. மாணவர்களின் வேத பாடல்கள் ஓங்கி ஒலித்து காற்றை நிரப்புகின்றன. சாஸ்திர விற்பன்னர்களின் பிரார்த்தனை துவங்கி சற்று நேரத்தில் முடிவடைகின்றன.

23 வயது இளைஞன் மேடையில் ஏறுகிறான், அவன்தான் அன்றைய நாயகன். அவன் பலகலைக்கழகத்தில் வானவியல் துறையில் பயின்று படிப்பை முடித்துவிட்ட மாணவன். கணிதத் துறையிலும் மேதை அவன்!

எங்கும் அமைதி நிலவுகிறது. அங்கே மேடையின் மேல் இருக்கும் மேஜையின் மீதும், ஓலைகள், எழுத்தாணிகள் மீதும் கும்ப நீரைத் தெளிக்கிறான். தன் தலையை உயர்த்தி வானத்தில் இருக்கும் சூரியனையும் அவன் வணங்குகிறான். பிறகு தான் எழுதவிருக்கும் தொடர் ஆராய்ச்சிக் கட்டுரையின் முதல் சொல்லை ஒரு ஓலையின் மீது பக்தியுடன் எழுதுகிறான். அருகில் இருக்கும் அந்த பல்கலைக்கழகத்தின் பேராசான்கள் அவன் மீது மலர்களைச் சொறிகின்றார்கள்.

அந்த வானவியல் வல்லுனன், இளைஞன் வேறு யாருமில்லை. அவன்தான் ஆர்யபட்டா! அவன் அன்று துவங்கி எழுதிய நூலின் பெயர் ஆர்யபட்டியா!

ஆர்யபட்டா கி.பி 476 ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்தவர். துவக்கத்தில் தனது மாநிலத்தில் படித்தவர், மேல் படிப்பிற்காக நளந்தா பல்கலைக் கழகத்தில் சேர்ந்து படித்தார். அன்றைய காலகட்டத்தில் அதுதான் நாட்டின் உயர்ந்த கல்விக்கூடம். அவன் எழுதிய அந்த ஒப்பற்ற நூலை, அனைவரும் பாராட்டினார்கள். அதன் அருமை, பெருமைகளை உணர்ந்த புத்தகுப்தா என்னும் அன்றைய மன்னன், அவனை, அப்பல்கலைகழகத்தின் தலைமைப் பதவியில் அமர வைத்தான்.

உலகம் உருண்டை. அது தன்னுடைய சொந்த அச்சிலேயே, ஒரு ஒழுங்கு முறையிலேயே சுழல்கிறது என்று உலகிற்கு முதன் முதலில் சொன்னவர் ஆர்யபட்டா! சுழலும் பூமியினால்தான் இரவு, பகல் உண்டாகிறது என்றும் முதன் முதலில் சொன்னவரும் அவர்தான். சந்திரன் இருளானது. சூரிய ஒளியால்தான் அது ஒளிர்கிறது என்று சொன்னவரும் அவர்தான்.

வானவியலிலும், கணிதத்ததிலும் எண்ணற்ற சாதனைகளைச் செய்து அனைத்திற்கும் முன்னோடியாக இருந்தவர் அவர்

ஆர்யபாட்டவின் வானவியல் குறிப்புக்களையும், கணக்குகளையும், சூத்திரங்களையும் வைத்துத்தான் பஞ்சாங்கங்கள் எழுதப்பெறுகின்றன. இந்துக்களின் நாட்காட்டிக்கும் (Hindu calendars) அவர்தான் தந்தை!

அன்புடன்,
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++=
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com