13.12.23

ஜோதிடம் : மாதங்களும் வருடங்களும்

ஜோதிடம் : மாதங்களும் வருடங்களும்

எங்கள் பகுதி மக்களெல்லாம் தமிழிலும், பக்தியிலும்
ஊறித் திளைத்தவர்கள்.

தமிழையும், சைவத்தையும் இரண்டு கண்களாகப்
போற்றுபவர்கள். பெயர்கள் எல்லாம் தூய தமிழ்ப்
பெயர்களாக இருக்கும்

சிறு வய்தில் இருந்தே வீட்டிலும் தமிழைச் சொல்லித்
தருவார்கள்.

வீட்டுப் பெரியவர்கள், சிறுவர்கள் எழுதும்போது
திருத்தமாக இருக்கிறதா என்று பார்ப்பார்கள்

, கி, கீ, கோ, என்று எழுதும் போது (மேற்கோடுகளுக்கு
கொம்பு என்ற பெயர்) அவைகள் திருத்தமாக இல்லை
யென்றால் மறுபடி, மறுபடி எழுதச் சொல்லி
தண்டனை கிடைக்கும்

'
கொம்பு சுழி கோணாமல், தம்பி நீ எழுதினால்தான்
சோறுண்டு' என்ற வரிகளைக் கவிதையாகச் சொல்லிப்
பசியில் தவிக்க வைத்து விடுவார்கள்

"
பொழுதெப்ப விடியும்
பூவெப்ப மலரும்
சிவனெப்ப வருவார்
வரமெப்பத் தருவார்"
என்று பாட்ல்களையும் சொல்லிக்
கொடுப்பார்கள்.

"
துள்ளாத மனமும் துள்ளும்
சொல்லாத கதைகளைச் சொல்லும்"
போன்ற சினிமாப் பாடல்களெல்லாம் வீட்டிற்கு
வெளியேதான்.

சற்றுப் பெரிய குழந்தைகளுக்குக் கடிதங்கள்
எழுதச் சொல்லித் த்ருவார்கள். அதே சாக்கில்
அவர்களுடைய கடிதங்களுக்கும் dictation கொடுத்து
குழந்தைகளையே எழுதவைத்து விடுவார்கள்

காகிதத்தைக் கையில் எடுத்தவுடனேயே 'பிள்ளையார்
சுழி, சிவமயம் என்று எழுதிவிட வேண்டும். இல்லையென்றால்
பளார் என்று முதுகில் ஒன்று விழுந்துவிடும்

அதேபோல கடிதத்தை முடிக்கும்போது,
வேணும், அண்ணாமலையார் துணை என்று
எழுதித்தான் முடிக்கவேண்டும்.

அன்புள்ள மான்விழியே அல்லது அன்புள்ள மன்னவனே,
அன்புள்ள நண்பனே என்றெல்லாம் கடிதம் எழுதும்
வழக்கம் உலகத்தில் உள்ளது என்பது எனக்குப் பதினான்கு
வயதிற்குமேல்தான் தெரிந்தது.

அண்ணாமலை என்பது திருவண்ணமலையில் உறையும்
அண்ணாமலையாரைக் குறிக்கும்

பிறந்தால் சிதம்பரத்தில் பிறக்க வேண்டும்,
வாழ்ந்தால் ஆருரில் வாழவேண்டும்,
இறந்தால் காசியில் இறக்கவேண்டும்.
இவை மூன்றிற்கும் சாத்தியமில்லை என்பதால்
அண்ணாமலையாரை நினைக்க வேண்டும் என்பார்கள்.

சற்று வயதானவுடன், என் பெரியப்பாவிடம் எதற்கு
இது என்றபோது "அண்ணாமலையை நினைதாலே முக்தி !
ஆகவே பேசாமல் எழுது!" என்று சொல்லி என்
வாயை அடைத்துவிட்டார்.

ஓகோ அவருக்கு முக்தி கிடைக்க அடுத்தவன்தான்
எழுத வேண்டுமா என்று அறிவீனமாய் நினைக்காமல்
நல்லதுக்குத்தான் சொல்கிறார் என்று அப்போது நினைப்பேன்

இப்போது உலகம், ஜெட் விமான வேகத்தில் போய்க்
கொண்டிருக்கிறது. யாருக்கும் எதற்கும் நேரமில்லை!
இந்தப் பழங்கதைகளையெல்லாம் சொன்னால்
அடிக்க வருவார்கள். இன்னும் சிலர் இருக்கிறார்கள்
பகிரங்கமாகப் பக்தியைப் பற்றியும், முக்தியைப் பற்றியும்
பேசினால் கத்தியை காட்டுவார்கள்.

கடிதத்தில் தேதி எழுதும் பொது, விய ஆண்டு
மாசித் திங்கள் 13ம்தேதி ஞாயிற்றுக்கிழமை என்றுதான்
எழுத வேண்டும். 25.02.2007 என்று எழுதவிட மாட்டார்கள்.

அதனால் எனக்குச் சிறுவயதிலேயே தமிழ் மாதங்களின்
பெயர்களும், வருடங்களின் பெயர்களும் சுத்தமாகத் தெரியும்.

(
அப்பாடா, Subjectற்கு வந்து விட்டேன்)

"
சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி. புரட்டாசி
ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி"

என்று தமிழ் மாதங்களின் பெயர்களைக் கடகட
வென்று சொல்வேன்

அதே போல தமிழ் ஆண்டுகளின் பெயர்களும் தெரியும்

பிரபவ, விபவ, சுக்ல, பிரமோதூத, பிரஜோற்பத்தி,
ஆங்கிரஸ, ஸ்ரீமுக, பவ, யுவ, தாது, ஈஸ்வர, வெகுதான்ய,
பிரமாதி, விக்கிரம, விஷூ, சித்திரபானு, சுபானு, தாரண,
பார்த்திப, விய,

சர்வஜித், சர்வதாரி, விரோதி, விக்ருதி, கர, நந்தன, விஜய,
ஜய, மன்மத, துன்முகி, ஹேவிளம்பி, விளம்பி, விஹாரி,
சார்வரி, பிலவ, சுபகிருது, சோபகிருது, குரோதி, விசுவாசு,
பராபவ,

பிலவங்க, கீலக, செளமிய, சாதாரண, விரோதிகிருது,
பரிதாபி, பிரமாதீச, ஆனந்த, இராஷச, நள, பிங்கல, காளயுக்தி,
சித்தார்த்தி, ரெளத்திரி, துன்மதி, துந்துபி, ருத்ரோத்காரி,
ரக்தாஷி, குரோதன, அக்ஷ்ய

அப்பாடா, 60 ஆண்டுகளின் தமிழ்ப் பெயர்களை ஒரே ஓட்டத்தில்
சொல்லிவிட்டேன்.

இந்த இரண்டும்தான் இன்றைய பாடம். பாடங்கள்
எப்போதும் மருந்தைப் போன்றது: மருந்தைத் தேனில்
குழைத்துக் கொடுப்பார்கள்.

ஜொதிடப் பாடங்கள் என்னும் மருந்தை, என் சொந்தக்
கதைகள் என்னும் தேனோடு கலந்து, இன்று
முக்கியமான செய்திகள் இரண்டை இன்று பாடமாக
நடத்திவிட்டேன்

ஒன்று மாத்ங்கள், மற்றொன்று வருடங்கள்.
இது கணினியுகம். இவற்றைத் தெரிந்துவைத்துக்
கொண்டால் போதும். மனனம் செய்ய வேண்டிய
அவசியமில்லை!

அடுதத பாடம் மொத்தமும் மருந்துதான்.
அதுவும் வைத்திருந்து அவ்வப்போது சாப்பிட வேண்டியது.
அதனால் தேன் கலக்காமல் அப்படியே தருவேன்
சாப்பிடும்போது தேவைப்பட்டால் நீங்கள் கலந்து கொள்ளலாம்:-)))


------------------------------------------------

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com