திருமணத்திற்கு உரிய வயது (Right age for marriage)
உரிய வயது அல்லது உரிய நேரம் என்று நீங்கள் யாரிடமும் வாதிட முடியாது. அது ஆளாளுக்கு மாறுபடும். நீங்கள் வாதிட்டால் பெரும்பாலும்
அது தோல்வியில்தான் முடியும். அல்லது சண்டையில்தான் முடியும்.
காலையில் எப்போது எழுந்திருக்க வேண்டும்? சூரிய உதயத்திற்கு முன்பாக, அதாவது காலை 6:00 மணிக்குள் எழ வேண்டும் என்பேன் நான்.
எத்தனை பேர்கள் அதை ஒப்புக்கொள்வீர்கள்?
அதுபோல உரிய வயதில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் அல்லது திருமணம் நடக்க வேண்டும். உரிய வயது எது? என்பதில்தான் தகறாறு.
அந்தக் காலத்தில், அதாவது 50 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில் பெண்ணிற்குப் பதினெட்டு வயதிலும், பையனுக்கு 21 வயதிலும் திருமணத்தைச்
செய்துவைத்தார்கள்.
இப்போது அப்படி இல்லை. கல்வி, உயர்கல்வி, வேலை வாய்ப்பு, சம்பளத்தில் ஸ்திரத்தன்மை, வீடு வாசல் வாங்கி செட்டிலாக வேண்டும் என்ற
அபிலாஷைகள் போன்றவற்றின் காரணமாக பலரின் திருமணம் உரிய காலத்தில் நடப்பதில்லை.
பெண்களும் சரி, ஆண்களும் சரி 30 வயதுவரை திருமணத்திற்கு அவசரப் படுவதில்லை. அதுதான் இன்றைய நிலை.
பெற்றவர்களும் கவலைப் படுவதில்லை. கல்விக் கடனை கட்டி முடிக்கட்டும். ஒரு 2 படுக்கை அறைகள் கொண்ட குடியிருப்பு ஒன்றை
வாங்கட்டும் என்று பொறுமையாக இருக்கிறார்கள்.
முதலில் பெண்ணை எடுத்துக் கொள்வோம். ஒரு பெண் 12 அல்லது 13 வயதில் பூப்படைகிறாள் என்று வைத்துக்கொள்வோம். அவளுடைய
வசந்தகாலம் 36 ஆண்டுகள். அதாவது அதிக பட்சம் 50 வயது. அதற்குப் பிறகு மெனோபாஸ், கர்ப்பப்பைக் கொளாறுகள் போன்றவைகள் வந்து
பல பெண்களைப் பயமுறுத்தும் காலம் வந்துவிடும்.
32 வயதில் ஒரு பெண்ணிற்குத் திருமணம் என்றால் அவளுடைய வசந்த காலத்தில் பாதி காலாவதியாகிவிடுமே! 24 வயது என்றால் ஓரளவு பரவாயில்லை.
வசந்த காலத்தில் 1/3 மட்டும்தான் காலியாகும் மிச்சம் 2/3 இருக்கும்
ஆண் பெண் என்ற பேதம் எதற்கு? யாராக இருந்தாலும் 25 வயதிற்குள் திருமணம் நடைபெற வேண்டும்.
அந்த வயதைத் தாண்ட விடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்
---------------------------------------------
உரிய வயதில் திருமணம் என்பது நம் கையிலா இருக்கிறது? ஜாதகப்படி அதற்கு உரிய நேரம் வர வேண்டாமா?
உண்மைதான்.
நேரம் வராவிட்டால் என்ன செய்வது?
இறைவனைப் பிரார்த்தனை செய்யுங்கள். அவர் வழி காட்டுவார்
---------------------------------------------
சரி உரிய வயதில், அதாவது இளம் வயதில் திருமணம் நடைபெற ஜாதகப்படி என்ன அமைப்பு இருக்க வேண்டும்? அதை மட்டும் இன்று பார்ப்போம்!
1. ஏழாம் அதிபதி, அதாவது ஏழாம் வீட்டுக்காரன் கேந்திரம் அல்லது திரிகோணத்தில் நல்ல நட்சத்திரத்தின் சாரத்தில் இருக்க வேண்டும்
2. ஏழாம் வீடு சுபக் கிரகங்களின் பார்வையோடு இருக்க வேண்டும். ஏழாம் வீடு பாபகர்த்தாரியோகத்தில் சிக்காமல் இருக்க வேண்டும்.
3. களத்திரகாரகன் சுக்கிரன் கேந்திரம் அல்லது திரிகோணத்தில் நல்ல நட்சத்திரத்தின் சாரத்தில் இருக்க வேண்டும்
4. லக்கினகாரகன் வலிமையாக இருப்பதுடன் ஏழாம் வீட்டைத் தன் பார்வையில் வைத்திருக்க வேண்டும்.
5. ஏழாம் வீட்டில் சுபக்கிரகங்கள் குடி இருப்பது நன்மையானதாகும்
6. இரண்டாம் வீடு கெட்டுபோகாமல் இருக்க வேண்டும்
அன்புடன்
வாத்தியார்
No comments:
Post a Comment
முக்கிய அறிவிப்பு:
பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com