27.3.23

Astrology: புத்தியுள்ள மனிதரெல்லாம் என்ன செய்வார்கள்?

Astrology: புத்தியுள்ள மனிதரெல்லாம் என்ன செய்வார்கள்?

”புத்தியுள்ள மனிதரெல்லாம்
வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம்
புத்திசாலியில்லை… புத்திசாலியில்லை”

என்று கவியரசர் கண்ணதாசன் அவர்கள் ஒரு பாடலில் அசத்தலாகச் சொல்லிவிட்டுப் போனார். முழுப்பாடலையும், உங்களுக்காகக் கீழே கொடுத்துள்ளேன். பிறகு படித்துப் பாருங்கள். இப்போது பாடத்தைப் பார்ப்போம்!

வெற்றி, தோல்விகளை விட்டுத் தள்ளுங்கள். எல்லோரும், எல்லா நேரத்திலும் வெற்றி பெறமுடியாது. அதற்கு சந்தர்ப்பம், சூழ்நிலை எல்லாம் ஒத்து வரவேண்டும். ஆகவே புத்தியை வெற்றி தோல்விக் கண்ணோட்டத்தில் மறந்துவிட்டுப் பாருங்கள். புத்தி அவசியம். புத்தி இல்லாத மனிதனை யார்தான் விரும்புவார்கள்? அதைச் சொல்லுங்கள்.

ஜாதகத்தில் குரு, சந்திரன், சுக்கிரன் ஆகிய மூன்று சுபக்கிரகங்களும் எப்படி முக்கியமோ அப்படி புதனும் முக்கியமான கிரகமாகும். புதன் தனித்து, அதாவது தீயகிரகங்கள் எதுவுடனும் சேராமல், அல்லது தீயகிரகங்களின் பார்வை பெறாமல் தனித்து இருந்தால் அது சுபக்கிரகமாகும். அத்துடன் அது கேந்திர, திரிகோணங்களில் இருந்தால் ஜாதகனுக்கு மிகுந்த நன்மை அளிக்கும்.

புதன், சுக்கிரனுடன் சேர்ந்தால், அது ஜாதகனுக்கு நிபுனத்துவத்தைக் கொடுக்கும். ஜாதகன் ஆக்க வழியில் செயல்பட்டுப் பேரும் புகழும் அடைவான். அதே புதன், சனியுடன் சேர்ந்திருந்தால் ஜாதகனின் புத்தி எதிர்மறையான வேலைகளைச் செய்யும். அந்த மேட்டர்களில் ஜாதகன் கெட்டிக்காரனாக இருப்பான்.

லக்கினம் அல்லது 7ம் வீட்டில் இருக்கும் புதன் ஜாதகனுக்கு நல்ல நினைவாற்றலைக் கொடுக்கும். ஆழ்ந்து படிப்பதெல்லாம் நினைவில் நிற்கும் சாமிகளா!

சரி நம்ம முனிசாமி, அதாவது நமது முனிவர்கள் புதனைப் பற்றி என்ன சொல்லியிருக்கிறார்கள்?

சொல்லுகிறேன் இருமூன்று ஈராறெட்டும்
   சுகமில்லை ஜென்மனுக்கு குய்யரோகம்
சொல்லுகிறேன் செம்பொன்னும் கணைக்கால்துன்பம்
   சுற்றத்தார் மனமுறிவர் அரிட்டஞ்செப்பு
சொல்லுகிறேன் கேந்திரமும் கோணம் நன்று
   சுகமாக வாழ்ந்திருப்பான் காடியுள்ளோன்
சொல்லுகிறேன் சுயகவிதை மாமன்விருத்தி
   சொர்ண நிலமுள்ளவனாம் கூறே!
- புலிப்பாணி

இருமூன்று ஈராறெட்டும் = 6, 12, & 8 ஆம் இடங்கள் சுகமில்லை என்கிறார். Not useful என்கிறார்

அன்புடன்
வாத்தியார்
--------------------------------------------

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

22.3.23

Astrology திருமணத்திற்கு உரிய வயது (Right age for marriage)


திருமணத்திற்கு உரிய வயது (Right age for marriage)

உரிய வயது அல்லது உரிய நேரம் என்று நீங்கள் யாரிடமும் வாதிட முடியாது. அது ஆளாளுக்கு மாறுபடும். நீங்கள் வாதிட்டால் பெரும்பாலும் 
அது தோல்வியில்தான் முடியும். அல்லது சண்டையில்தான் முடியும்.

காலையில் எப்போது எழுந்திருக்க வேண்டும்? சூரிய உதயத்திற்கு முன்பாக, அதாவது காலை 6:00 மணிக்குள் எழ வேண்டும் என்பேன் நான். 
எத்தனை பேர்கள் அதை ஒப்புக்கொள்வீர்கள்?

அதுபோல உரிய வயதில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் அல்லது திருமணம் நடக்க வேண்டும். உரிய வயது எது? என்பதில்தான் தகறாறு.

அந்தக் காலத்தில், அதாவது 50 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில் பெண்ணிற்குப் பதினெட்டு வயதிலும், பையனுக்கு 21 வயதிலும் திருமணத்தைச் 
செய்துவைத்தார்கள்.

இப்போது அப்படி இல்லை. கல்வி, உயர்கல்வி, வேலை வாய்ப்பு, சம்பளத்தில் ஸ்திரத்தன்மை, வீடு வாசல் வாங்கி செட்டிலாக வேண்டும் என்ற 
அபிலாஷைகள் போன்றவற்றின் காரணமாக பலரின் திருமணம் உரிய காலத்தில் நடப்பதில்லை.

பெண்களும் சரி, ஆண்களும் சரி 30 வயதுவரை திருமணத்திற்கு அவசரப் படுவதில்லை. அதுதான் இன்றைய நிலை. 
பெற்றவர்களும் கவலைப் படுவதில்லை. கல்விக் கடனை கட்டி முடிக்கட்டும். ஒரு 2 படுக்கை அறைகள் கொண்ட குடியிருப்பு ஒன்றை 
வாங்கட்டும் என்று பொறுமையாக இருக்கிறார்கள்.

முதலில் பெண்ணை எடுத்துக் கொள்வோம். ஒரு பெண் 12 அல்லது 13 வயதில் பூப்படைகிறாள் என்று வைத்துக்கொள்வோம். அவளுடைய 
வசந்தகாலம் 36 ஆண்டுகள். அதாவது அதிக பட்சம் 50 வயது. அதற்குப் பிறகு மெனோபாஸ், கர்ப்பப்பைக் கொளாறுகள் போன்றவைகள் வந்து 
பல பெண்களைப் பயமுறுத்தும் காலம் வந்துவிடும்.

32 வயதில் ஒரு பெண்ணிற்குத் திருமணம் என்றால் அவளுடைய வசந்த காலத்தில் பாதி காலாவதியாகிவிடுமே! 24 வயது என்றால் ஓரளவு பரவாயில்லை. 
வசந்த காலத்தில் 1/3 மட்டும்தான் காலியாகும் மிச்சம் 2/3 இருக்கும்

ஆண் பெண் என்ற பேதம் எதற்கு? யாராக இருந்தாலும் 25 வயதிற்குள் திருமணம் நடைபெற வேண்டும். 
அந்த வயதைத் தாண்ட விடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்
---------------------------------------------
உரிய வயதில் திருமணம் என்பது நம் கையிலா இருக்கிறது? ஜாதகப்படி அதற்கு உரிய நேரம் வர வேண்டாமா?

உண்மைதான். 

நேரம் வராவிட்டால் என்ன செய்வது? 

இறைவனைப் பிரார்த்தனை செய்யுங்கள். அவர் வழி காட்டுவார்
---------------------------------------------
சரி உரிய வயதில், அதாவது இளம் வயதில் திருமணம் நடைபெற ஜாதகப்படி என்ன அமைப்பு இருக்க வேண்டும்? அதை மட்டும் இன்று பார்ப்போம்!

1. ஏழாம் அதிபதி, அதாவது ஏழாம் வீட்டுக்காரன் கேந்திரம் அல்லது திரிகோணத்தில் நல்ல நட்சத்திரத்தின் சாரத்தில் இருக்க வேண்டும்
2. ஏழாம் வீடு சுபக் கிரகங்களின் பார்வையோடு இருக்க வேண்டும். ஏழாம் வீடு பாபகர்த்தாரியோகத்தில் சிக்காமல் இருக்க வேண்டும்.
3. களத்திரகாரகன் சுக்கிரன் கேந்திரம் அல்லது திரிகோணத்தில் நல்ல நட்சத்திரத்தின் சாரத்தில் இருக்க வேண்டும்
4. லக்கினகாரகன் வலிமையாக இருப்பதுடன் ஏழாம் வீட்டைத் தன் பார்வையில் வைத்திருக்க வேண்டும்.
5. ஏழாம் வீட்டில் சுபக்கிரகங்கள் குடி இருப்பது நன்மையானதாகும்
6. இரண்டாம் வீடு கெட்டுபோகாமல் இருக்க வேண்டும்

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

18.3.23

Astrology: வர்கோத்தமம் என்றால் என்ன சாமி அர்த்தம் ?



Astrology: வர்கோத்தமம் என்றால் என்ன சாமி அர்த்தம் ?

வர்கோத்தமம் என்பதும் ஒரு யோகம்தான் ராசா!

வர்கோத்தமம் என்பது ஒரு கிரகம் ராசிச் சக்கரத்திலும், நவாம்ச சக்கரத்திலும் ஒரே இடத்தில் இருப்பதைக் குறிக்கும்! 

ராசி, மற்றும் நவாம்சத்தில் ஒரே இடத்தில் லக்கினம் இருந்தால் இருந்தால் அது வர்கோத்தம லக்கினம் எனப்படும்!

ராசி கட்டத்தில் சிம்மத்தில் செவ்வாய் இருந்து, அம்சத்திலும் சிம்மத்தில் செவ்வாய் இருந்தால் அதற்கு வர்கோத்தம செவ்வாய் என்று பெயர்!

சிம்மத்திற்கு செவ்வாய் யோககாரகன். அவன் வர்கோத்தமமும் பெற்றால் ஜாதகனுக்கு இரட்டிப்பு யோகங்களைக் கொடுப்பார். நல்ல பலன்களைக் கொடுப்பார்.

இதுபோன்று ஒவ்வொரு கிரகத்திற்கும், ஒவ்வொரு லக்கினத்தின் யோககாரனுக்கும் ஸ்பெஷல் வர்கோத்தமப் பலன்கள் உண்டு. கேட்டால், ஒரு வேளை உங்கள் ஜாதகத்தில் அப்படி யிருந்தால் அசந்துபோய் விடுவீர்கள். காற்றில் மிதப்பீர்கள். அப்படி ஒரு சந்தோஷமான மனநிலை ஏற்படும்!

உங்கள் மொழியில் சொன்னால், சாதாரணக் காருக்குப் பதிலாக உங்களுக்கு குளிரூட்டப்பெற்ற சொகுசுக்கார் கிடைக்கும். உங்களுக்குக் கிடைக்கும் பெண் (மனைவி) அனுஷ்கா சர்மாவைப் போன்ற அழகி என்பதோடு, நன்கு படித்தவளாக, நல்ல வேலையில் (மாதம் இரண்டு லட்ச ரூபாய் சம்பளம் சாமி) இருப்பவளாகவும் அமைந்துவிடுவாள். சந்தோஷப் படுவீர்களா - இல்லையா?

அப்படி வர்கோத்தமம் பெறும் கிரகம் வலிமை உடையதாக ஆகிவிடும். அந்த அமைப்பு ஜாதகனுக்கு அதிகமான அளவு நன்மையான பலனைக் கொடுக்கும்! இயற்கையில் தீய கிரகமாக இருந்தாலும், வர்கோத்தமம் பெறும்போது நன்மைகளைக் கொடுக்கும். 

உதாரணத்திற்கு லக்கினம் வர்கோத்தமம் பெற்றால், ஜாதகன் நீண்ட ஆயுளூடன் இருப்பான்!

அதுபோல ஒன்பது கிரகங்களுக்கும் தனித்தனியான விசேட பலன் உண்டு

என்னென்ன கிரகத்தால் என்னென்ன நன்மைகள் என்பதை இன்னொரு நாள் விரிவாக எழுதுகிறேன். பொறுத்திருங்கள்

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

8.3.23

Astrology கைக்காசு எப்போது கரையும்?



Classroom Astrology
Kalakkal Lessons
Lesson No.11
Dated 8-3-2023

Astrology கைக்காசு எப்போது கரையும்?

முதலில் கரை என்றால் என்னவென்று பார்ப்போம். கரை என்ற தமிழ்ச்சொல்லிற்குப் பல அர்த்தங்கள் உண்டு

1. காகம் கரைவதும் கரைதான். அதாவது காகம் 'காகா’ என்று ஒலி எழுப்புவதைக் காகம் கரைகிறது என்று சொல்லுவார்கள்

2, நீரைத் தேக்கிப் பிடித்து நிறுத்தும் மேடான மண் பகுதிக்கு (ஏரி, குளங்களில்) கரை என்றுதான் சொல்லுவார்கள். ஏரிக்கரை

3. ஒரு திடப்பொருளை நீரில் கரைத்து திரவ நிலைக்குக் கொண்டு வருவதையும் (சோப்பை இப்படிக் கரைத்து விட்டாயே) கரைத்தல் என்று சொல்லுவார்கள்

4. வீணாகக் காசைச் செல்வழிப்பதையும், இப்படிக் காசைக் கரைக்கிறாயே என்றுதான் சொல்லுவார்கள்

5. உடலில் ஏற்பட்டுள்ள கட்டியை நீக்கம் செய்வதற்கு மேற்கொள்ளும் சிகிச்சைக்கும் கரைத்தல் என்றுதான் பெயர். இந்தக் கட்டியைக் கரைப்பதற்கு எவ்வளவோ செலவு செய்துவிட்டேன்; ஆனால் கட்டி கரைந்த பாடாக இல்லை என்று சிலர் அங்கலாய்ப்பதைப் பார்த்திருப்பீர்கள். அதுவும் கரைத்தலில்தான் வரும்.

6. கற்பூரம் போன்ற பொருட்கள் காற்றில் ஆவியாகி ஒன்றுமில்லாமல் போகும் நிலைக்கும் கரைந்துபோய்விட்டது என்ற சொல்தான் பயன்படுத்தப்பெறும்

7. இருப்பில் உள்ள சேமிப்புப் பணம் கொஞ்சம் கொஞ்சமாக செலவழிந்து கொண்டிருந்தாலும்’ கைக்காசு கரைந்து கொண்டிருக்கிறது என்றுதான் சொல்லுவார்கள்

சரி சொல்ல வந்த விஷயத்திற்கு வருகிறேன். ஜாதப்படி இப்படிக் கரைக்கும் பணி ஒருவனுக்கு எப்போது அமுலுக்கு வரும்? அதாவது எப்போது நடக்கும்?

பன்னிரெண்டாம் இடத்தில் இருக்கும் கிரகத்தின் மகாதிசையில் அது நடக்கும். அது எந்தவிதமான கிரகமாக இருந்தாலும் அதை நடத்திவைக்கும்.
சனி, ராகு அல்லது கேது போன்ற கிரகங்களின் மகாதிசை என்றால் இந்தக் கரைக்கும் பணி ஜரூராக நடக்கும். சுபக்கிரகங்களின் மகாதிசை என்றால் சற்று மெதுவாக நடக்கும். ஆனால் முடிவு ஒன்றாகத்தான் இருக்கும். மொத்தத்தில் கரைத்துவிட்டுப் போய்விடும்!

Any planet in the 12th house would make its dasa expense oriented!

அடடே, பணம் மட்டும்தான் கரையுமா? 

இல்லை. கை இருப்பை, சேமிப்பைக் காலி செய்துவிட்டுப் போவதோடு, வீடு வாசல் இருப்பவர்களுக்கும் பிரச்சினைகளை ஏற்படுத்தி அவற்றை விற்க வைத்து, விற்று வரும் பணத்தையும், வைத்துக்கொள்ளவிடாமல் காலி செய்து விட்டுப் போய்விடும்

அதேபோல, அந்தத் தசாநாதன் தன்னுடைய சுயவர்க்கத்தில் மிகவும் குறைந்த பரல்களுடன் இருந்தால், ஜாதகனின் ஆரோக்கியத்தைக் கரைத்துப் படுக்க வைத்துவிடும். ஜாதகன் வீட்டிற்கும் மருத்துவமனைக்குமாக அலைந்து கொண்டிருக்க நேரிடும்.

அவ்வளவுதானா?

இல்லை! முக்கியமான விதிகளை மட்டும் கூறியுள்ளேன். மற்றவற்றை விரிவாக இன்னொரு நாள் பார்ப்போம்!

இதற்குப் பரிகாரம் உண்டா? பிரார்த்தனை ஒன்றுதான் பரிகாரம்!

அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

6.3.23

Astrology கூலி வேலைதான் செய்ய வேண்டுமா?




Classroom Astrology
Kalakkal Lessons
6-3-2023
Lesson No.11
கலக்கல் பாடம்

கூலி வேலைதான் செய்ய வேண்டுமா?

இன்றைய பொருளாதார சூழ்நிலையில் எது முக்கியம்?

நல்ல வேலை. நல்ல சம்பளம் என்பது முக்கியம். நல்ல வேலைக்கு உரிய வயதில் படித்து (முக்கியமாக தொழில் நுட்பக் கல்வி) பட்டம் பெற்றிருப்பதும் முக்கியம்.

எல்லோருக்கும் அது அமைந்து விடுகிறதா என்ன?

ஜாதகத்தில் 4ஆம் வீடு நன்றாக இருந்தால்தான் படிப்பு அமையும். 4ஆம் அதிபதி கெட்டிருந்தால், லக்கினத்திற்குப் பன்னிரெண்டில் போய் அமர்ந்திருந்தால், அத்துடன் 4ஆம் வீட்டில் கேது போன்ற தீய கிரகங்கள் குடியிருந்தால், படிப்பு பாழாகிவிடும்.

படிப்பு பாழானால் என்ன? வியாபாரம் செய்து அல்லது தொழில் செய்து நல்லபடியாகப் பிழைக்க முடியாதா?

முடியும் அதற்குப் பணம் வேண்டுமே? காசு வேண்டுமே? 4ஆம் அதிபதி கெட்டுப் போனதைப்போல, ஜாதகத்தில் இரண்டாம் வீட்டுக்காரனும் கெட்டிருந்தால், என்ன செய்வது? காசு எங்கே இருக்கும்? காசு எப்ப்டி வரும்? இரண்டாம் அதிபதியும் 12ல் இருந்தால் அந்த நிலைமை உண்டாகும்.

யாரும் கை கொடுக்க மாட்டார்களா? லக்கினாதிபதி நன்றாக இருந்தால், அது நடக்கும். ஆனால் லக்கினாதிபதி பாபகர்த்தாரி யோகத்தில் சிக்கியிருந்தால், உதவிக்கு ஒருத்தனும் வர மாட்டான். ஜாதகன் தன்னிச்சையாகத்தான் போராட வேண்டும்.

என்ன செய்வது? கூலி வேலை செய்துதான் பிழைக்க வேண்டுமா?

ஆமாம். எத்தனையோ மக்கள் கூலி வேலைகள் செய்து பிழைத்துக்கொண்டிருக்கவில்லையா? அதில்தான் எத்தனை விதமான வேலைகள் உள்ளன.

எங்கள் பகுதிக்கு வாருங்கள். திருப்பூர், சோமனூர், கோவை போன்ற ஊர்களில் ஆயிரக் கணக்கான பேர்கள் தினக்கூலி, வாரக்கூலி வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது தெரியவ்ரும்.

கூலி வேலை பார்த்துக் காலம் தள்ளுவது என்பது மிகவும் சிரமமானதுதான். ஆனால் வேறு நல்ல கிரகத்தின் திசை வரும்போது, நிலைமை மாறி விடும்.
கூலி வேலை செய்தவன், அதே வேலையைப் பத்து ஆட்களை வைத்துச் செய்து பொருள் ஈட்ட ஆரம்பித்து விடுவான்.

நேர்மையாகச் செய்யும் எந்த வேலையும் கேவலமானதல்ல! படித்துவிட்டு BPO அலுவலங்களில் வேலை பார்ப்பவர்களைவிட Mason, carpenter, Electrician போன்ற வேலைகளைக் கூலி அடிப்படையில் செய்பவரகள் அதிகமாகச் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள்

ஜாதகத்தில் 2ஆம் அதிபதி, 4ஆம் அதிபதி, லக்கினாதிபதி ஆகிய மூவரும் இளம் வயதில் ஒரு starting கொடுப்பதற்கு முக்கியம். அதை மனதில் கொள்க!

அவ்வளவுதானா?

இல்லை! முக்கியமான விதிகளை மட்டும் கூறியுள்ளேன். மற்றவற்றை விரிவாக இன்னொரு நாள் பார்ப்போம்!

அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

3.3.23

Astrology திருமணம் ஏன் தள்ளிக்கொண்டே போகிறது?




classroom AStrology
Kalakkal Lessons 
Lesson No0.10
Dated 3-3-2023

திருமணம் ஏன் தள்ளிக்கொண்டே போகிறது?

இன்றைய பொருளாதார சூழ்நிலையில் ஆண், பெண் இருபாலருமே திருமணத்தைத் தள்ளிக்கொண்டே போகிறார்கள். ஒரு கால கட்டத்தில் 
அவர்கள் விரும்பினாலும் கூட திருமணம் அவர்களை விட்டுத் தள்ளியே நிற்கிறது.

என்ன காரணம்? எல்லாம் கிரகக் கோளாறுகள்தான்!

முன் காலத்தில் பெண்ணிற்குப் பதினெட்டு வயதிலும், ஆணிற்கு 21 வயதிலும் திருமணத்தைச் செய்து வைத்தார்கள். இப்போது படிப்பு, வேலை வாய்ப்பு, 
பொருளாதரத் தன்னிறைவு அதாவது பணம் சேர்த்து செட்டிலாக வேண்டும் என்ற நினைப்பு போன்றவற்றால் பலருக்கும் 
முப்பது வயதைக் கடந்தும்கூடத் திருமணங்கள் கூடி வரவில்லை.

யாராக இருந்தாலும் 25 வயதிற்குள் திருமணம் ஆக வேண்டாமா?

ஜாதகப்படி தாமதமான திருமணங்களுக்கு என்ன காரணம் என்பதைச் சுருக்கமாகப் பார்ப்போம்!

1. ஏழாம் அதிபதி, அதாவது ஏழாம் வீட்டுக்காரன் பலவீனமாக (வீக்காக) இருந்தால் திருமணம் தாமதமாகும். பலவீனம் என்பது நீசமாகி நிற்பதைக் குறிக்கும்.
உதாரணத்திற்கு துலா லக்கின ஜாதகத்திற்கு ஏழாம் அதிபதி செவ்வாய். அவன் அந்த ஜாதகத்தில் நீசம் பெற்றுக் கடக ராசியில் அமர்ந்திருப்பது, தீமையானது.
திருமணம் தாமதமாகும்.

2. அதுபோல களத்திரகாரகன் சுக்கிரன் நீசமாக இருந்தாலும் திருமணம் தாமதமாகும்

அவ்வளவுதானா?

இல்லை! முக்கியமான விதிகள் இரண்டை மட்டும் கூறியுள்ளேன். இன்னும் சில விதிமுறைகள் உள்ளன. அவற்றை விரிவாக இன்னொரு நாள் பார்ப்போம்!

அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!