7.6.22

யாரிந்த மாமனிதர்?


யாரிந்த மாமனிதர்?

செல்வச் செழிப்பு மிக்க செட்டிநாட்டு நகரத்தார் குடும்பத்தில் 1907-ம் ஆண்டு ஜூலை 28 அன்று ஆவிச்சி செட்டியார், லட்சுமி ஆச்சி தம்பதியின் மகனாகக் காரைக்குடியில் பிறந்து, வளர்ந்தவர் மெய்யப்பன். 

அப்பாவின் கண் பார்வை பாதிக்கப்பட்டதால் அவரது வியாபாரத்தில் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று நினைத்தார். ஆகவே, எட்டாம் வகுப்புடன் தனது படிப்பை நிறுத்துக்கொண்டு, தந்தையின் வியாபார ஸ்தலமான ஏ.வி.அண்ட் சன்ஸ் கடையில் அவருக்கு உதவ ஆரம்பித்தார். இது காரைக்குடியில் அந்நாட்களில் புகழ்பெற்ற கார், சைக்கிள் உதிரி பாகங்கள் விற்கும் கடையாக இருந்தது. 

வியாபார விசியமாக சென்னை செல்லும்போதெல்லாம் அங்கங்கே இசைத்தட்டுகளுக்கு வரவேற்பு இருப்பதைக் கண்டு,
தன் தந்தையாரின் அனுமதியுடன் ஸ்டில் கேமராவுக்கான பிலிம் ரோல்கள், கிராமபோன் ரெக்கார்டுகள் உள்ளிட்ட அரிதான பொருட்களைச் சென்னையில் வாங்கிவந்து கடையின் விற்பனையைப் பெருக்கினார். விற்பனைக்காக அவர் வாங்கிவரும் கிராமபோன் ரெக்கார்டுகளைத் தானும் கேட்டு இசை ரசனையை வளர்த்துக்கொண்ட மெய்யப்பன், சிறந்த ரெக்கார்டுகளை வாடிக்கையாளர்களுக்குப் பரிந்துரைத்த தருணம்தான் மெய்யப்பன் என்ற கலைஞன் பிறக்கக் காரணமாக அமைந்தது.

தொட்டது துலங்கவே, கிராமபோன் நிறுவனத்தின் தென்னிந்திய உரிமையைப் பெற்ற மெய்யப்பன், சென்னையில் முதன்முறையாக தன் வியாபாரத்தை மவுண்ட் ரோடில்  ‘சரஸ்வதி ஸ்டோர்ஸ்’என்ற வியாபார ஸ்தாபனத்தை நிறுவி, ரெக்கார்டுகளின் விற்பனையோடு மட்டுமல்லாமல், கிராமஃபோன் இசைத்தட்டுகளை உற்பத்திசெய்து விற்பனை செய்ய ஆரம்பித்தார்.

பேசும்படங்களின் வரத்தையும், இசைத்தட்டுகள் திரைப்படத்தின் ஒரு அங்கமாக மாறியதையும் கண்ட அவர், 
அதில் உள்ள தொழில்நுட்பங்களை கற்றார்.
"நாம் ஏன் திரைப்படத் தொழிலுக்குள் நுழையக் கூடாது?" என்று நினைத்தவர் கொஞ்சமும் தயங்காமல் களத்தில் குதித்தார்.  

அது 1935-ம் வருடம். தென்னிந்தியப் பேசும் படங்கள் அனைத்தும் கொல்கத்தாவில் தயாராகி வந்தன. எனவே, மெய்யப்பனும் கல்கத்தாவுக்கே சென்றார். 
அங்கே ‘நியூ தியேட்டர்ஸ் ஸ்டூடியோவில்’படப்பிடிப்புத் தளம் ஒன்றை வாடகைக்கு எடுத்து அதில் அரங்கம் அமைத்துத் தனது முதல் முயற்சியான ‘அல்லி அர்ஜுனா’வைப் (1935) படமாக்கினார். 

தனது முதல் முயற்சிக்காக அவர் தொடங்கிய நிறுவனத்தின் பெயர் சரஸ்வதி சவுண்ட் புரெடக்‌ஷன்ஸ். இயக்கியதுடன் தானே படத்தைத் தொகுத்து வெளியிட்டார். மெய்யப்பனின் கன்னி முயற்சி தோல்வியில் முடிந்தது.
ஆனால், அவர் துவண்டுவிடவில்லை.

கல்கத்தாவிலிருந்து சென்னைக்கு வந்த அவர், தனது நண்பர்களைப் பங்குதாரர்களாகக் கொண்டு ‘பிரகதி ஸ்டூடியோஸ்’ என்னும் நிறுவனத்தைச் சென்னையில் அமைத்தார். தரமான கேமரா, இறக்குமதி செய்யப்பட்ட பிளேபேக் கருவிகள், கதை, சினேரியோ(திரைக்கதை), நடிகர்கள் தேர்வு ஆகியவற்றில் அதிக கவனம் எடுத்துக்கொண்டார். 

திட்டமிடலும் செயலாக்கமும்தான் சினிமா என்பதைத் தனது இரண்டாவது முயற்சியிலேயே உணர்ந்து அதை அங்குலம் அங்குலமாகக் கடைப்பிடிக்கத் தொடங்கினார்இரண்டாம் உலகப் போர் உச்சம் பெற்றிருந்த அந்தக் காலகட்டத்தில் சென்னையில் மின்சார விநியோகம் பெரும் பிரச்சினையாக மாறியதால், காரைக்குடியின் தேவகோட்டை ரஸ்தாவுக்குத் (சாலை) தனது ஸ்டூடியோவை மாற்றினார். அதற்கு ‘ஏ.வி.எம் ஸ்டூடியோஸ்’என்று பெயரிட்டார். அங்கிருந்துதான் ‘நாம் இருவர்’(1947), ‘வேதாள உலகம்’(1948) ஆகிய படங்களைத் தயாரித்து வெளியிட்டு தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஆளுமையாக மாறினார்.

சாதனைகளின் சாம்ராஜ்யத்தை விரிவாக்க, சென்னையில்  காடாகக் கிடந்த கோடம்பாக்கத்தின் வடபழனி பகுதியில், குதிரை லாயம் வைத்திருந்த இடத்தை வாங்கி, நிலத்தைச் சீரமைத்து மெய்யப்பன் உருவாக்கியதுதான், சாதனைகளின் சாம்ராஜ்யமாக விளங்கும் இன்றைய ஏ.வி.எம். ஸ்டூடியோ. 

முதல் பின்னணிப் பாடல் முயற்சி, முதல் பின்னணிக்குரல், முதல் மொழிமாற்றுப் படம் (டப்பிங்), வங்காள, சிங்கள மொழிகளில் படத் தயாரிப்பு, ப. நீலகண்டன், பீம்சிங் எஸ்.பி.முத்துராமன் எனப் பல புகழ்பெற்ற இயக்குநர்களை உருவாக்கியது, அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., என்.டி.ஆர்., ஜெயலலிதா வரை ஐந்து முதல்வர்கள் பணியாற்றிய நிறுவனம் என்ற தனித்த பெருமை என எழுத்தில் அடங்காத சாதனைகளைப் படைத்த முன்னோடிதான் ஏ.வி.மெய்யப்ப செட்டியார்.      

அவர் உருவாக்கிய ஏவிஎம்,  மகன்களால் பெரும் ஆலமரமாக விரிந்தது.
ஆனால் நவீன பொழுதுபோக்கு அம்சங்களில், சினிமா தயாரிப்பும், தியேட்டர்களும் தட்டுத்தடுமாற,  ஏவிஎம் உருவாக்கிய ஏவிஎம் ஸ்டுடியோ ,
இன்று பாகப்பிரிவினையாகி, ப்ளாட்களாக மாற தொடங்கிவிட்டது காலத்தின் கோலம்.

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
------------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
===============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com