12.4.22

பசுக்களின் மேல் பிரியம் வைப்போம்


பசுக்களின் மேல் பிரியம் வைப்போம்

கும்பகோணத்தை மையமாக வைத்து ஸ்ரீமடம்
செயல்பட்டுக் கொண்டிருந்த சமயம்.

மடத்தின் பின்புறம் பெரிய மாட்டுக் கொட்டில்,
மடத்துப் பசுமாடுகளுடன் கூட ஒரு புதிய பசுமாடு வந்து
வைக்கோல் தின்று கொண்டிருந்தது.தண்ணிர்
குடித்துக் கொண்டிருந்தது.

யாருடைய மாடு என்று தெரியவில்லை.
ஒருவரும் மாட்டைத் தேடிக்கொண்டும் வரவில்லை.
அக்கம் பக்கத்தில் தகவல் கொடுத்தும் பயனில்லை.

நாலைந்து நாட்கள் கடந்தன.

"அந்த மாட்டை வெளியே ஓட்டி விடலாமா?"
என்று பெரியவாளிடம் வந்து கேட்டார் கார்வார்.

"வெளிமாடு என்பதால் அந்தப் பசு மாட்டை வெளியே
துரத்தி விடுவதானால், நம்ம மடத்திலுள்ள பல வெளி
மனிதர்களையும் வெளியே அனுப்பி விட வேண்டும்!.."

(மடத்தில் எந்தக் காரியமும் செய்யாமல்,தான்
முக்கியமான பணி செய்வது போல் காட்டிக் கொண்டு
பலர் உண்டு, உறங்கி வந்தார்கள்)

"மாடு வாயில்லாப் பிராணி.அதனுடைய எஜமானன்
யார் என்று தெரியல்லே.நம்ம மாட்டுக் கொட்டகையிலேயே
இருக்கட்டும்.அதை ரட்சிக்க வேண்டியது நமது கடமை."
சில நாட்கள் கழிந்த பின் அந்தப் பசுமாடு சினைப்பட்டு
கன்றும் ஈன்றது.

கார்வார் மறுபடியும் வந்து நின்றார் பெரியவாள் முன்.
"சீயம்பால் காலம் முடிஞ்சு போச்சு...நல்ல ஜாதி மாடு...
புஷ்டியான தீனி....வேளைக்கு நாலு சேர் கறக்கிறது..."

"அந்த மாட்டுப் பாலை அப்படியே காளஹஸ்தீஸ்வரர்
கோயில் அபிஷேகத்துக்குக் கொடுத்து விடு.மாடு மடத்துக்குச்
சொந்தமானது இல்லை. பால் மடத்துக்கு வேண்டாம்."

இரண்டு நாட்கள் ஆயின.
"என்ன செய்கிறே அந்த மாட்டுப் பாலை?"
என்று கார்வாரிடம் கேள்வி.

அவர் அவசரம்,அவசரமாக, "தினந்தோறும் நாலு சேர்
பால் காளஹஸ்தீஸ்வரர் கோயிலுக்கு கொடுக்க
ஏற்பாடு செய்துட்டேன்..." என்றார்.

"என்றாலும் தவறுதலாக மடத்து உபயோகத்துக்கு
வந்துடலாம் இல்லையா?...மாட்டையும்,கன்றையும்
ஏதாவது ஒரு சிவன் கோயிலுக்குக் கொடுத்து விடு."
அப்படியே செய்தார் கார்வார்.

ஆனால், அந்தக் கோயிலில் ஏற்கனவே நாலைந்து
பசுமாடுகள் இருந்தன.நிர்வகிப்பது கஷ்டமாக இருந்தது.
பசு மாடுகளை கோயில் அதிகாரி ஏலத்துக்குக்
கொண்டு வந்து விட்டார்.

ஏலத்தில் விட்டால், அவையெல்லாம் நேரே கசாப்புக்
கடைக்குத் தான் போகும் என்ற அச்சம் பெரியவாளுக்கு.

செல்வந்தரான ஒரு பக்தரிடம் சொல்லி எல்லா
மாடுகளையும் ஏலத்தில் எடுக்கச் சொன்னார்கள்.

பின்னர், அக்கறையுடன் பராமரிக்கக் கூடியவர்களைப்
பார்த்து ஒவ்வொரு பசுமாடாகக் கொடுத்து விட்டார்கள்.
பசுக்களிடம் அவ்வளவு வாத்ஸல்யம் பெரியவாளுக்கு.
----------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com