11.3.21

நம் கர்மவினைகளைத் தீர்ப்பதெப்படி?


நம் கர்மவினைகளைத் தீர்ப்பதெப்படி?

பவுர்ணமி தினத்தில் பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமான திருவண்ணாமலையில் கிரிவலம் நம் கர்ம வினைகளை தீர்க்கும். அண்ணாமலையார் சன்னதியில் , திருவண்ணாமலை அக்னித்தலம் என்பதை அந்த வெட்பத்தின் தன்மையால் இன்றும் உணர முடிகிறது.

நம் மனதை இயக்குபவன் சந்திரன். சந்திரனே மனோகாரகன். பவுர்ணமி அன்று பூமியில் சூரியனிடமிருந்து சக்திகளை அதிகளவில் பெற்று பூர்ண நிலவாக சந்திரன் நிறைந்த உயிர்களை தருகிறது, இதனாலேயே பவுர்ணமி கிரிவலம் மனதுக்கும், உடலுக்கும் வலு சேர்க்கிறது. சிவபெருமானின் அடி முடியைக் காண பிரம்மா அன்னப்பறவையாகவும் விஷ்ணு வராக அவதாரமும் எடுத்தனர். எந்த அவதாரம் எடுத்தும், சிவபெருமானின் அடி முடியை இருவராலும் காணமுடியவில்லை.
கடைசியில் சிவபெருமான் ஜோதி வடிவில் காட்சி அளித்த தலமே திருவண்ணாமலை.

கிருதயுகத்தில் அக்னிமலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும்,துவாபர யுகத்தில் தங்க மலையாகவும், கலியுகத்தில் கல்மலையாகவும் விளங்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் இருந்து 14 கிலோ மீட்டர் தூரம் வரை பரவி உள்ளது கிரிவலப்பாதை. இந்திரலிங்கம், அக்னிலிங்கம், யமலிங்கம், நிருத்திலிங்கம், வருணலிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், ஈசான்யலிங்கம் ஆகிய எட்டு லிங்கங்களை கிரிவலப் பாதையில் நம்மால் தரிசிக்க முடியும்.

கிரிவலம் முழுவதும், மனம் முழுக்க சிவப்பெருமானை தாங்கி ஓம் நமச்சிவாய என சொல்லிக் கொண்டே வலம் வர, நம் பாவங்கள் நீங்குகிறது.மன அழுக்கை பகவானின் நாமம் நீக்கி நம்மை தூய்மைப் பாதையில் அழைத்து செல்லும் முதல் முயற்சியே கிரிவலம். உடல், மனம் இரண்டுக்கும் ஊக்கமும் உற்சாகமும் அளிக்கும் கிரிவலம் நமக்கு பெரும் ஆத்ம பலத்தை வழங்குகிறது. திருவண்ணாமலையில் கிரிவலம் வரும்போது திடீரென்று மழை வந்தால், மழைக்கு தயங்காமல் மலை சுற்றி வர பெரும் யோகம் கிடைக்கும். இதை எடுத்துரைக்கும் ஒரு புராண கதை உண்டு.

மனிதனாலோ, மிருகத்தாலோ, பகலிலோ, இரவிலோ சாகாத வரம் பெற்றவன் இரணியன். இப்படி ஒரு வரத்தை பெறுவதற்காக தனது மனைவி லீலாவதிக்குத் தெரியாமல் தவம் புரியச் சென்றான். தனது கணவனைத் தேடித் தேடி ஒவ்வொரு புனிதத் தலங்களுக்கும் சென்றாள், கர்ப்பிணியாக இருந்த லீலாவதி. இதற்கு ஒரு தீர்வு தர நினைத்த நாரதர், " உனக்கு நல்லது நடந்து உனது கணவனை மீண்டும் பார்க்க வேண்டும் என்றால் திருவண்ணாமலைக்கு போய், காயத்ரி மந்திரம் ஜெபித்தபடி கிரிவலம் செல்!' என்று கூறி, காயத்ரி மந்திரத்தை அவளுக்கு உபதேசித்தார்.

நாரதர் நல்வார்த்தைப்படி திருவண்ணாமலை சென்ற லீலாவதி, அண்ணாமலையை சுற்றி கிரிவலப் பாதையில் காயத்ரி மந்திரம் ஜெபித்தபடி கிரிவலம் வந்தார். அப்போது , திடீரென்று அமுத புஷ்ப மழை பொழிந்தது. மழைத் துளிகளுக்கு பயந்து பாறை ஒன்றின் ஓரத்தில் ஒதுங்கிய லீலாவதி, விடாமல் காயத்ரி மந்திரம் சொல்லிக் கொண்டிருந்தாள். மழையாக விழுந்த அமுதத் துளி பாறையில் பட்டு, அதில் அணுவளவு அவளின் கர்ப்பப் பையை அடைந்தது. அதைக் கருவிலிருக்கும் பிரகலாதன் உண்டான். அந்தப் பாறையில் அமுத புஷ்ப மூலிகை தோன்றியது. அந்த நேரத்தில் கிரிவலம் வந்த சித்தர்கள் இந்தக் காட்சியைக் கண்டு, உரிய மந்திரம் சொல்லி, அந்த தெய்வீக மூலிகையைப் பறித்து, லீலாவதியிடம் கொடுத்து ஆசிர்வதித்தனர்.

லீலாவதியின் வயிற்றில் வளர்வது மகாவிஷ்ணுவின் புது அவதாரம் என்பதை சித்தர்கள் உணர்ந்து கொண்டனர். சித்தர்கள் கொடுத்த தெய்வீக மூலிகையை இடுப்பில் செருகிக் கொண்டாள் லீலாவதி. அந்த மூலிகையின் சக்தி கருவிலிருந்த பிரகலாதனை அடைந்தது. இந்த சக்தி தான் பின்னாளில் ஸ்ரீநரசிம்மரின் உக்கிரத்தைத் தாங்கும் வலிமையை பிரகலாதனுக்கு வழங்கியது.

பவுர்ணமி நாளில் மலை சுற்றி வரவேண்டும் என நினைத்து ஓரடி எடுத்து வைப்பவர்களுக்கு ஒரு யாகம் செய்த பலனும் , இரண்டாம் அடி எடுத்து வைத்தால் ராஜ யாகம் செய்த பலனும் நிச்சயம். மூன்றடி எடுத்து வைத்தால் அசுவமேத யாகம் செய்த பலனும், நான்காவது அடி எடுத்துவைத்தால் எல்லா யாகங்களுக்கான பலன் கிடைக்கும்.
கிரிவல கிழமை தரும் பலன்கள்

ஞாயிற்று கிழமை மலையை சுற்றினால் சிவ பதவி கிடைக்கும். திங்கள் கிழமை கிரிவலம் வந்தால் இந்திர பதவி கிடைக்கும். செவ்வாய் கிழமை சுற்றினால் கடன், வறுமை நீங்கும். புதன்கிழமை சுற்றினால் கலைகளில் தேர்ச்சியும் முக்தியும் கிடைக்கும். வியாழக்கிழமை சுற்றினால் ஞானிகளுக்கு ஒப்பான நிலை கிடைக்கும். வெள்ளிக்கிழமை சுற்றினால் விஷ்ணு பதம் அடைய முடியும். சனிக்கிழமை கிரிவலம் சென்றால் நவக்கிரகங்களை சுற்றிவரும் பலன் கிடைக்கும்.

முழு நிலவு நன்னாளில் ஓம் நமச்சிவாய என்று சொல்லி மலை - கிரி வலம் வருவோம். பிறப்பிலா பெரு வாழ்வு பெறுவோம். அன்பே சிவம்.
------------------------------------------------------------------------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
====================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com