15 ஆண்டுகளுக்கு முன்பு மாத
இதழில் வெளியாகி அனைவரது பாராட்டையும் பெற்ற சிறுகதை. நீங்கள் படித்து
மகிழ்வதற்காக இன்று அதை வலையில் ஏற்றியுள்ளேன்
-------------------------------------------------------------------------
மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து வேளாச்சேரியில் உள்ள தன் வீட்டிற்கு வந்து சேர்ந்த ஐந்தாவது நிமிடமே கருப்பையாவிற்கு அதிர்ச்சி யாகிவிட்டது.
தான் அணிந்திருந்த கோட் ஸ¤ட்டையெல்லாம் களைந்துவிட்டு, வேஷ்டி, காலர் வைத்த 'டீ' சர்ட்டிற்குத் தன்னை மாற்றிக்கொண்டு, வீட்டின் பிரதான அறைக்கு வந்தவன், ஏ.ஸி யை இயக்கிவிட்டு, அமர்ந்தான்.
எதிரில் வந்து அமர்ந்த அவன் தாயார் சாத்தம்மை ஆச்சி அவர்கள், இரு கைகளாலும் தன் முகத்தை மூடிக்கொண்டு தேம்பித்தேம்பி அழுக ஆரம்பித்து விட்டார்கள்.
கருப்பையா பதறிப் போய்விட்டான். தன் தாயாரின் அருகே சென்று, அவர்களுடைய கைகள் இரண்டையும் விலக்கிவிட்டுச் சைகையால் அவர்களைச் சமாதானப் படுத்தியவன், மெல்லிய குரலில் பேசத்துவங்கினான்
"ஆத்தா, இப்போது என்ன நடந்து விட்டது? ஏன் அழுகிறீர்கள், சொல்லுங்கள்?" என்றான்.
"உனக்குச் சிரமம் அப்பச்சி.,என்னால் உன் குடும்ப வாழ்க்கை பெரும் பிரச்சினையாகிக் கொண்டிருக்கிறதே!"
"பிரச்சினை என்று நினைத்தால்தான் பிரச்சினை. நான் எதையும் பிரச்சினையாக எடுத்துக்கொள்ளவில்லை. நீங்கள்தான் தேவையில்லாமல் உங்களைக் குழப்பிக் கொள்கிறீர்கள். எப்போதும் நீங்கள் சொல்வது போல ஆண்டவன் நமக்குத் துணை செய்வான்."
"நான் எவ்வளவோ சொல்லியும் உன் மனைவி கேட்கவில்லை அப்பச்சி! அவள் நினைத்தபடி, கைப்பிள்ளையைத் தூக்கிக் கொண்டு தனியாளாகத் தன் ஆத்தாவீட்டிற்குப் போய் விட்டாள் அதை நினைத்துத்தான் எனக்குத் தீராத வருத்தமாக இருக்கிறது!"
"அவள் போனதிற்கு நீங்கள் ஏன் வருத்தப்பட வேண்டும்? நான் நேற்றுக் காலையில் டில்லியிலிருந்து அரை மணி நேரம் அவளுடன் போனில் பேசியிருக்கிறேன். நான் வரும்வரை பேசாமல் இரு என்று கண்டித்தும சொல்லியிருக்கிறேன். அதையும் மீறி அவள் புறப்பட்டு போயிருக்கிறாள். ஆகவே விடுங்கள். உங்கள் மீது எந்தக் குற்றமுமில்லை!"
"இல்லை அப்பச்சி ஊர் உலகம் என்ன சொல்லும்? நல்லா இருந்த மகன் குடும்பத்தை இந்தப் பாவிமட்டை போய்ப் பிரித்து விட்டாள் என்று என்னைத் தானே ஏசும்? உன் அப்பச்சியைப் பறிகொடுத்து ஆறு மாதங்கள்கூட ஆகவில்லையே - அதற்குள் எனக்கு இந்த அவப்பெயர் தேவைதானா? ஆகவே நீ போய் அவளை அழைத்துக் கொண்டு வா - நான் எனக்கு ஏதாவது வழி பண்ணிக் கொள்கிறேன்!"
"ஆத்தா, ஒன்றை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள். பிரளயமே வந்தாலும் உங்களை நான் தனியாக அனுப்ப மாட்டேன். நீங்கள் கடைசிவரை என்னோடுதான் இருக்கப் போகிறிர்கள்.ஊர் உலகத்தைப் பற்றிக் கவலைப் படாதீர்கள். மாமியார் மருமகள் சண்டை யார் வீட்டில்தான் இல்லை? அவள் எங்கே போய்விடப் போகிறாள்? பத்து நாட்களில் தானாகத் திரும்பி வருவாள் பாருங்கள்!"
"போகும் போது, தன் கிளைகாரி ஒருத்தியையும் வைத்துக் கொண்டு அவள் பேசிவிட்டுப் போனதைப் பார்த்தால் - அவள் தானாகத் திரும்பி வருவதாக எனக்குத் தோன்றவில்லை!"
"வராவிட்டால் போகிறது கழுதை!" என்று சொன்ன கருப்பையா தன் பேச்சை நீட்டிக்க விரும்பாமல் தன் தாயாரின் கவனத்தை மாற்றும் நோக்கத்தோடு, தொடர்ந்து சொன்னான்.,"அவளைப் பற்றி அப்புறம் பேசுவோம். எனக்குப் பசிக்கிறது.ஏதாவது டிபன் செய்து எடுத்து வாருங்கள்"
சாத்தம்மை ஆச்சி அவர்கள் சமையலறையை நோக்கி எழுந்து செல்ல, கருப்பையா அன்றைய செய்தித் தாளைக் கையில் எடுத்துக் கொண்டு அதைப் படிக்கத் துவங்கினான்.
மனம் செய்தித் தாளில் நாட்டம் கொள்ளவில்லை.
எப்படிக் கொள்ளூம்?
தன் வீட்டில் நடந்து கொண்டிருக்கும் மருமகள், மாமியார் சண்டையின் தீவிரம் அவனுக்குத் தெரிந்ததுதான். இஸ்ரேல் லெபனான் போர் போல குண்டு வீச்சு இல்லையே ஒழிய வார்த்தைகள் தடித்து விட்டன. இந்தப் போரை உடனடியாக நிறுத்த வேண்டும்.
எப்படி நிறுத்தலாம்?
அவன் தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தான்.
******************
கருப்பையாவிற்குத் திருமணமாகி மூன்றரை ஆண்டு களாகின்றன. முதல் மூன்று வருடத்தில் பிரச்சினை ஏதும் இல்லை. தெளிந்த நீரோடையாக வாழ்க்கை சென்றது.
அவன் மனைவி கண்ணம்மை நல்லவள்தான் - யாரும் சீண்டாதவரை! நிர்வாக இயலில் முதுகலைப் பட்டம் பெற்றவள். கருப்பையாவிடம் தாம்பத்யத்தில் அனுசரனையாகத்தான் நடந்து கொண்டாள். திருமணம் ஆகி தன் கணவனுடன் டில்லிக்குச் சென்றவள் வெகு சீக்கிரமே டில்லிக்கும், ஹிந்தி மொழிக்கும், தன்னைப் பழக்கப் படுத்திக் கொண்டு விட்டாள். ஒருவருடத்திற்கு முன்பு அழகான பெண் குழந்தை ஒன்றும் பிறந்து விட்டது.
அனால் கருப்பையாவின் அன்புத்தந்தை குமரப்ப செட்டியார், அவர்கள் ஆறு மாதங்களுக்கு முன்பு ஹார்ட் அட்டாக்கில் இறந்த பிறகுதான், 'நான் வருகிறேன் தடுக்குப் போட, என் ஆத்தா வருகிறாள் பிள்ளை எடுக்க' என்னும் பழமொழிபோல பிச்சினைகள் அடுக்கடுக்காக வந்து விட்டன.
தன் தந்தையார் இறந்த பிறகு, அவர் செய்து கொண்டிருந்த வியாபாரத்தை ஒழுங்கு பண்ணவேண்டும் என்பதற்காகவும், தன் தாயார் தனியே சிரமப்படக்கூடாது என்பதற்காகவும், கருப்பையா சென்னைக்கு மாற்றல் வாங்கிக்கொன்டு வந்து விட்டான்
ஆதம்பாக்கத்தில் இருந்த தங்கள் வீட்டை வாடகைக்கு விட்டு விட்டதோடு, தான் வேலை பார்த்த நிறுவனத்திற்கு அருகில், வேளாச் சேரியில், அடுக்குமாடிக் குடியிருப்பில் ப்ளாட் ஒன்றை வாங்கிக் கொண்டு குடியேறிவிட்டான்
குடியேறிய இரண்டாவது நாளில் இருந்தே மாமியார் மருமகள் சண்டை சிறிய அளவில் ஆரம்பித்து விட்டது. எங்கேதான் மாமியாரும் மருமகளும் ஒற்றுமையாக இருக்கிறார்கள்? பத்து சதவிகிதம் வீடுகள் விதி விலக்காக இருக்கலாம். பெரும்பான்மையான சண்டைகளுக்குத் தலைமுறை இடைவெளிதான் (Generation Gap) முக்கியமான காரணம்.
பாணிபூரி, பேல்பூரி, பாவ்பாஜி என்று சாட் உணவு அயிட்டங் களையும்,காளான் சூப், சிக்கன் கோப்தா, நான், கோபி மஞ்சூரியா, வெஜிடெபிள் புலவ் என்று கான்டினென்டல் உணவுகளையும் படிக்கும்போது மட்டுமல்ல, டெல்லியில் குடித்தனம் நடத்தும்போதும் சாப்பிட்டுப் பழகிவிட்டவள் கண்ணம்மை. மாலை மற்றும் இரவு உணவு பெரும்பாலும் வெளியில்தான் . அதேபோல சமைத்து மதியம் மீதமான உணவு அப்படியே குப்பைத் தொட்டிக்குப் போய்விடும். கருப்பை யாவிற்கு மாத சம்பளமாக ஒரு லட்ச ரூபாய் வருவதால் அவளுக்கு இதெல்லாம் சாத்தியமாயிற்று. அதேபோல ஒரு நாள் கட்டிய புடவையை அடுத்த நாள் கட்டமாட்டாள். காட்டன் புடவைகள், காட்டன் ரவிக்கைகள் அதுவும் துவைத்து ஸ்டார்ச் போட்டு, அயர்ன் பண்ணியவற்றைத் தான்.அணிவாள்.
சிக்கனத்தை மூச்சாகக் கொண்ட பார்வதி ஆச்சிக்கு இதெல்லாம் பிடிக்கவில்லை. பெரிய நஷ்டம் ஒன்றும் இல்லை - கண்டு கொள்ளாமல் இரு ஆத்தா என்று கருப்பையா பல முறைகள் சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை
அடுத்து, இவள் ஸ்டார் டிவி, ஸ்போர்ட்ஸ் சானெல்கள், சன் மியூஸிக் என்று தேடிப் பிடித்துப் பார்ப்பாள். பார்வதி ஆச்சிக்கு, சன், ராஜ், விஜய் தவிர - அதுவும் கண்ணீரை வரவழைக்கும் தொடர்களைத் தவிர வேறு எதுவும் பிடிக்காது.
மேலும் கண்ணம்மை, தங்கள் வீட்டிற்கு வந்து மேல் வேலைகளைச் செய்யும் வேலக்காரிக்கு, அவள் நன்றாக மகிழ்வோடு வேலை களைச் செய்ய வேண்டுமென்பதற்காக சம்பளத்தைத் தவிரத் தனியாக அவ்வப் போது பத்து இருபது என்று தாராளமாகக் கொடுப்பாள். அதுவும் சாத்தம்மை ஆச்சிக்குப் பிடிப்பதில்லை.
இதைப்போல சில பல சில்லுண்டிக் காரணங்களால் ஆரம்பத்தில் புகைய ஆரம்பித்த சண்டை இப்போது நன்றாகப் பிடித்து எரிய ஆரம் பித்துவிட்டது.
இரவு நேரங்களில் கண்ணம்மை தன் தாயாரைப் பற்றி புகார் செய்யும் போதெல்லாம், கருப்பையா அவளை ஒரே வார்த்தையில் அடக்கி விடுவான். "சரி பண்ணிக்கொண்டு போ - அப்போதுதான் வாழ்க்கை சந்தோசமாக இருக்கும்!"
"உங்களுக்கு அவர்கள் உங்களைப்பெற்ற பெற்ற தாயார் - அதனால் நீங்கள் சரி பண்ணிக்கொண்டு போகலாம்! நான் வந்தவள் - எனக்கு என்று ஒரு சுயமரியாதை இருக்கிறது. நான் எதற்காகச் சரி பண்ணிக்கொண்டு போக வேண்டும்?"
"உன்னுடைய தாயார் என்றால் என்ன செய்வாய்? அதுபோல என் தாயாரிடமும் நீ நடந்து கொள்!"
"என்னுடைய தாயார் என்றால் நடப்பதே வேறு! அம்மா வாயை மூடிக்கொண்டு இருக்கிறாயா? என்று அவ்வப்போது கேட்டு அடக்கி விடுவேன். உங்கள் தாயாரையும் அது போல சொன்னால் நீங்கள் ஒப்புக்கொள்வீர்களா?"
"நிச்சயம் ஒப்புக்கொள்ள மாட்டேன். ஒன்றை மட்டும் நன்றாகப் புரிந்துகொள் கண்ணம்மை. நம் தாம்பத்ய வாழ்க்கையில் எனக்கு நீ முக்கியம் - உனக்கு நான் முக்கியம். உனக்கு நான் எவ்வளவு சுதந்திரத்தையும். உரிமைகளையும் கொடுத்திருக்கிறேன். அதை ஏன் நீ அடிக்கடி மறந்து விட்டுப் பேசுகிறாய்?" என்று அவளைச் சமாதானப்படுத்து வதோடு தொடர்ந்தும் சொல்வான், அதனால் எனக்காக இது ஒன்றே ஒன்றை மட்டும் செய் - என் தாயாரை நீ அனுசரித்துப் போ - முடியாத இடங்களில் சில வற்றைக் கண்டு கோள்ளாமல் இரு. அதுதான் நீ எனக்குச் செய்யும் பிரதி உபகாரம்!"
ஆனால் ஆறு மாதங்களுக்குள் பிரச்சினை முற்றி, சென்ற வாரம் கருப்பையா தன் கம்பெனி வேலையாக டெல்லிக்குப் புறப்பட்டபோது விமான நிலையம் வரை வந்த கண்ணம்மை, அவன் கைகளை பிடித்து கீழ்க்கண்டவாறு கெஞ்சிச் சொல்லிவிட்டாள்.
"இந்த ப்ளாட்டில் நிறைய செக்யுரிட்டிகள் உள்ளார்கள். ஆகவே பயம் ஒன்றும் இல்லை. உங்கள் தாயார் இதிலேயே இருக்கட்டும். நாம் தனிக்குடித்தனம் போய்விடுவோம்!"
கருப்பையாவிற்கு ஜோக் அடித்துக் கலகலப்பாகப் பேசுவது கைவந்த கலை. அவள் அப்படிச் சொன்னவுடன், கருப்பையா, சிரிக் காமலும், கோபப்படாமலும் இப்படிச் சொன்னான்.
"அப்படியென்றால் நீயும், நம் செல்ல மகள் - குட்டிக் கண்ணம்மையும்தான் தனிக்குடித்தனம்போக வேண்டியதாக இருக்கும். கவலைப் படாதே டில்லியிலிருந்து திரும்பியவுடன், உங்கள் இருவருக்கும் ஏற்றதாக ஒரு வீட்டைப் பிடித்துக் கொடுத்து விடுகிறேன்"
முன் கதைச் சுருக்கும் இதுதான்.
என்ன செய்தால் இந்த மாமியார் மருமகள் யுத்தம் முடிந்து வீட்டில் அமைதி திரும்பும் என்று யோசித்த கருப்பையா ஒரு நல்ல முடிவிற்கு வந்தான்.
அவர்களுடைய குடும்ப நண்பர் வில்லிவாக்கம் வேலாயுத அண்ணனைச் சந்தித்துப் பேசினான். அவர்தான் கண்ணம்மையை அவனுக்கு மணம் முடித்து வைததவர்.அதோடு கண்ணம்மையின் பெற்றோர்களுக்கும் உறவுக்காரர்.
"சரி, கருப்பையா இரண்டு அல்லது மூன்று நாட்களில் ஒரு தீர்விற்கு ஏற்பாடு செய்து விடுகிறேன் - நீ கவலைப் படாமல் இரு!" என்று ஆறுதல் சொல்லி அவனை அனுப்பி வைத்தார்.
வில்லிவாக்கம் வேலாயுத அண்ணனைப் பற்றி, ஒரே ஒரு சின்ன அறிமுகம் போதும். அவர் அரட்டை அரங்கம் திருவாளர் விசு அவர்களைப் போல எந்தப் பிரச்சினையையும் பேசி ஒரு நல்ல முடிவைக் கொடுக்கக் கூடியவர்!
மூன்றாவது நாள்
காலை மணி 8.10
அலுவலகத்திற்குப் புறப்படுவதற்குக் தன் காரை எடுப்பதற்காகக் குடியிருப்பின் கீழ் தளத்திற்கு லிப்ட்டில் வந்த கருப்பையாவிற்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.
அதே லிப்ட்டில் மேலே ஏறிச் செல்வதற்காக வேலாயுத அண்ணன் அவர்களும், கைக்குழந்தையுடன் அவன் மனைவி கண்ணம்மையும் காத்துக் கொண்டிருந்தார்கள்.
மனிதர் எமகாதகர். பார்த்துவிட்டு வந்து மூன்று நாட்கள்கூட ஆகவில்லை. அதற்குள் சாதித்து விட்டாரே என்று மனதிற்குள் நினைத்தவன், அவர்கள் இருவரும் புன்னகைப்பதைப் பார்த்து வாருங்கள் என்று சொன்னதோடும், கண்ணம்மையின் கையில் இருந்த கைகுழந்தையை வாங்கிக் கொண்டதோடும், அவர்களுக்கு லிப்ட்டில் ஏறத்துணை புரிந்தான்
அப்புறம் நடந்ததெல்லாம் சாதாரண விஷயங்கள்.
அனாவசியமாக லீவு போடாதே என்று கட்டாயப்படுத்திக் கருப்பையாவை அனுப்பி வைத்த வேலாயுத அண்ணன் பகல் பொழுது முழுவதும் மாமியார், மருமகள் இருவரோடும் பேசுவதற்காக அவர்கள் வீட்டிலேயே இருந்து விட்டார்.
****************************
மாலை மணி 6.30
டி.டி.கே சாலை பார்க் ஷெரட்டான் ஹோட்டலின் காப்பி ஷாப்பில் தனக்காகக் காத்திருந்த வேலாயுதம் அண்ணனைக் கருப்பையா பார்த்த வுடன் அவர் அவனை எதிரில் அமர வைத்து ரத்தினச் சுருக்கமாக நடந்ததையும் இனி நடக்க வேண்டியதையும் சொல்லி முடித்தார்.
இருவரில் ஒருவர் பகல் நேரத்தில் வேலைக்குச் சென்றால் பிரச்சினைகளின் தாக்கம் வெகுவாகக் குறைந்து விடும் என்றும், கண்ணம்மை படித்திருந்தாலும் கைக்குழந்தை இருப்பதனால் அவளை வேலைக்கு அனுப்ப முடியாத சூழ்நிலை என்றும், அவனுடைய தாயார் அவர்களுக்குத் தான் ஒரு வேலைக்கு ஏற்பாடு செய்திருப்பதாகவும் அவர் கூறினார்.
அவன் தாயருக்கு, கிளாஸ் பெயிண்ட்டிங், மெட்டி வேரில் கலைப் பொருட்கள் செய்வது, எம்பிராய்டரி, போன்று பல கலைகள் தெரியு மாதலால் அவர்களுக்குத் தகுந்த மாதிரி இளம் பெண்களூக்குக் பயிற்சி (Coaching) கொடுக்கும் பெரிய பள்ளி ஒன்றில் வேலை வாங்கிக் கொடுத்திருப்பதாகக் கூறினார்.
பள்ளிக்குச் சொந்தமான வாகனத்தில் பயணிக்கும் வசதி, மதிய உணவு, இவற்றுடன் கைநிறைந்த ஊதியமும் கிடைக்குமென்றார். அவன் தாயார் அவர்களையும் அன்று காலை பள்ளி நிர்வாகியிடம் அறிமுகம் செய்து வைத்து விட்டதாகவும், அவனுடைய தாயார் அவர்களும் மகிழ்ச்சியோடு அந்த வேலைக்கு ஒப்புக் கொண்டு விட்டதாகவும் அவர் சொன்னார்.
கருப்பையா ஒரு நிம்மதிப் பெருமூச்சு விட்டதோடு அவரைக் கையெடுத்துக் கும்பிடவும் செய்தான். அவனுடைய கண்கள் பனித்து விட்டன.
அவனைத் தட்டிக்கொடுத்துவிட்டு எழுந்தவர், புறப்பட எத்தனித்தார். அப்போது ஒரு சிறு பொறி தட்ட, கருப்பையா தயக்கத்தோடு அவரிடம் கேட்டான்.
"மாமா, ஒரு சின்ன சந்தேகம், கண்ணம்மை சற்று முரண்டு பிடித்தி ருப்பாளே, அவளை எப்படி சமாதானப் படுத்தி அழைத்து வந்தீர்கள்?"
"பெண்களுடைய லாஜிக் எனக்கு நன்றாகத் தெரியும். முதலில் . அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும். அப்புறம் நாம் சொல்வதற்கு அவர்கள் கட்டுப்படுவார்கள். பகல் நேரத்தில் உன் மாமியாரால் உனக்கு எந்தவிதப் பிரச்சினையும் வராது அதற்கு நான் பொறுப்பு என்று சொல்லித்தான் அவளை இங்கே நான் திரும்ப அழைத்து வந்தேன் அதே பிரகாரம் வந்த தினமே அவளுக்கு ஒரு வழி பண்ணி விட்டேனா - இல்லையா, சொல்லு கருப்பையா?" என்று கேட்டுவிட்டுப் புன்னகைத்தார் அவர்.
மேலும் தொடர்ந்து அவர் சொன்னார், "ஏற்பட்டுவிட்ட யுத்த நிறுத்த உடன்படிக்கை எப்போது உடையுமோ என்ற சந்தேகம் உனக்கு வேண்டாம். எனக்கு நம் தமிழ்நாட்டுப் பெண்களைப் பற்றி நன்றாகத் தெரியும். அவர்கள் சத்தியத்திற்குக் கட்டுப்பட்டவர்கள். இருவரிடமும் சத்தியப் பிரமாணம் வாங்கியிருக்கிறேன் - ஒருவருக் கொருவர் இனிப்பிரச்சினையாக இருக்க மாட்டார்கள். ஆகவே நினைத்தபடி இருவரையுமே நீ மகிழ்ச்சியாக வைத்துக்கொள். வாழ்த்துக்கள்,வருகிறேன்!"
கருப்பையா வியந்துபோய் நின்றான் - மகிழ்ச்சியின் எல்லையில் - கண்களில் மீண்டும் நீர் பனிக்க!
--------------------------------
(மதுரையிலிருந்து வெளிவரும் மாத இதழ் ஒன்றிற்காக அடியவன் எழுதி 16.09.2006 தேதியிட்ட இதழில் வெளி வந்த சிறுகதை இது! இணைய நண்பர்களும் படித்து மகிழட்டும் என்று பதிவு செய்துள்ளேன்)
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
Very good story line and well written. Thanks for sharing.
ReplyDelete