4.2.21

அபூர்வமான திரைப்படம்!


அபூர்வமான திரைப்படம்! 

அபூர்வ ராகங்கள் திரைபடத்தில் கேள்வியின் நாயகனே!!! என்னும் தமிழ் பாடலின் சிச்சுவேஷனை எத்தனை அழகாக கவிஞர் மற்றும் மெல்லிசை மன்னருடன் இணைந்து உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் என்று பாருங்கள்?!!! 

மேடையில் பாடிக்கொண்டிருக்கும் பைரவி வயதில் இளையவரான பிரசன்னா தன்னை மணக்க நினைப்பது வெட்கம் கெட்ட செயல் என்பதை பலம் பொருந்திய வார்த்தைகளில் விளக்குவதைப் பாருங்கள்

பசுவிடம் கன்றுவந்து பாலருந்தும் - கன்று

பாலருந்தும் போதா காளை வரும்?

சிலரது வாத்தியத்தில் இரண்டு பக்கம் - கொஞ்சம் 

சிந்தை செய்தால் உனக்கு   பிறக்கும் வெட்கம்

தாலிக்கு மேலுமொரு தாலி உண்டா?

வேலிக்கு இன்னொருவன் வேலி உண்டா?

கதை எப்படி? அதன் முடிவெப்படி

இப்படி பைரவியின் முடிவைக் கேட்டதும்   மேடையில் மிருதங்கம் வாசித்துக் கொண்டிருந்த   பிரசன்னா சினத்துடன் பாதிப்பாடலில் எழுந்து போய் மறைவில் நின்று கொள்வார்

இப்போது  பல வருடங்களாக பைரவியை நிர்கதியாக தவிக்க விட்டுப்போன ரஜினி அங்கே அரங்கத்தின் பால்கனியில் வெளிப்படுவார், ”உன்னை ஏமாற்றிச் சென்றவன் இங்கு வந்திருக்கிறேன், உன் தரிசனம் தேடி,உன் மன்னிப்பை நாடி _பாண்டியன் என்று சீட்டு எழுதி ஒரு சிறுமியிடம் தந்து விடுவார்.

 பைரவி அதைப் படித்தவுடன் வெளிப்படும் கவிஞரின் வைர வரிகளைப் பாருங்கள்

தலைவன் திருச்சானூர் வந்துவிட்டான் - மங்கை

தரும தரிசனத்தை தேடுகின்றான்,தேடுகின்றான்,தேடுகின்றான்

அலமேலு அவன் முகத்தை காண்பாளோ? மங்கை

அவனோடு திருமலைக்குச் செல்வாளோ?

செல்வாளோ? செல்வாளோ?

என்று உணர்ச்சிவசப்பட்டு உடைவார் பைரவி

 பாண்டியன் செய்த தவற்றையெல்லாம் சடுதியில் மன்னித்தவர் ,அவரைக் காண மிகுந்த ஆவல் கொள்வதை பாடல் வரிகளில் இதை விட அழகாக வெளிப்படுத்த முடியுமா

இப்போது உடைந்து குரல் பிசகும் பைரவியின் மகள் வந்து அப்பாடலை தொடர்வதைப் பாருங்கள்.இப்போது பாடலின் டெம்போ எதிர்பாராத திசையில் மாற்றம் பெறுவதைப் பாருங்கள்,அதன் பாடல் வரிகளைக் கவனியுங்கள்.ஆறு மாதம் காணாத தாய் மகளின் சம்பாஷனையைக் கேளுங்கள்

ஒரு கண்ணும் மறு கண்ணும் பார்த்துக்கொண்டால்

பார்த்துக்கொண்டால்...அவை

ஒன்றோடு ஒன்று சொல்லும் சேதி என்ன?

இரு கண்ணும் ஒன்றாகச் சேர்ந்துவிட்டால் - அவை

இரண்டுக்கும் பார்வையிலே பேதமென்ன?

பேதம் மறைந்ததென்று கூறு கண்ணே

நமது பேதம் தனை மறந்து நடக்கும் முன்னே

 

கண்ணே உன் காலம் சென்ற கதை என்ன?

உன்னைக் காணப் பிழைத்திருந்தேன் வேறு என்ன? 

உடல் எப்படி?

முன்பு இருந்தாற்படி...

மனம் எப்படி?

நீ விரும்பும்படி... 

இப்போது பால்கனியில் நிற்கும் பாண்டியனுக்கு தாய் மகளின் தரிசனமும் கிடைத்தாயிற்று, பிடிவாதக்கார மகள் தன் மாற்றுக்கருத்து கொண்ட தாயிடமும் இணைந்தாயிற்று, இப்போது மேஜரின் அருகே இருக்கும் இருக்கை ஜெயசுதா மேடையில் சென்று அமர்ந்ததால் காலியாக இருக்கிறது. இப்போது பாடலின் மந்திர வரிகளால் அங்கே மேஜரின் மகன் பிரசன்னா மேடையிலிருந்து இறங்கிச் சென்று அங்கே அந்த இருக்கையில் அமரும் அதிசயத்தைப் பாருங்கள்

பழனி மலையிலுள்ள வேல் முருகா - சிவன்

பல்லாண்டு ஏங்கி விட்டான் வா முருகா

பிடிவாதம் தன்னை விடு பெருமுருகா - கொஞ்சம்

பிரியத்துடன் பக்கத்திரு முருகா

திருமுருகா...திருமுருகா... 

இவ்வரியைக் கேட்டபின்னர் கமல் மேடைப் படியிறங்கி வந்து பார்வையாளர் வரிசையில் அமர்ந்திருக்கும் அப்பாவின் அருகே கடக்க எண்ணி முடியாமல் அப்பா அன்புக்குக் கட்டுப்பட்டு  அமரும் அதிசயத்தைப் பாருங்கள். அங்கே தந்தை மகனுடன் கைகோர்த்து ஆனந்தப்படுவதுடன் பாடல் முடிவடையும். என்ன ஒரு பாடல்?!!! இந்தப் பாடலுக்கு யாரேனும் சிகரட் பிடிக்க எழுந்து போயிருப்பரா? என்பது சந்தேகமே!!! 

இந்த பாடல் காட்சி வேறு யாருடைய கையில்லாவது கிடைத்திருந்தால்  இந்த கிளைமைக்ஸ் காட்சிக்கு பத்து பதினைந்து காட்சிகள் தேவைப்பட்டிருக்கும் ... 

அத்தனை காட்சிகளுக்கும் உண்டான  சாரத்தை வெறும் ஏழு நிமிட பாடலுக்குள் உள்ளடக்கிய கவியசரை நினைத்தால் பிரமிப்பாக இருக்கிறது ...

 ஊதா கலரு ரிப்பன்

யாரு உனக்கு அப்பன் 

போன்ற இலக்கிய தரமான  பாடல்களும்ஹீரோ பில்டப் பாடல்களுமே நிறைந்திருக்கும் இக்கால பாடல்களை நினைத்தால்

வேதனையாகவும் இருக்கிறது ...🙄 

==============================================

படித்ததில் பிடித்தது

அன்புடன்

வாத்தியார் 

 வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

2 comments:

  1. வணக்கம் குருவே
    ஒவ்வொரு வரியும் நம்மை பாடல் காட்சியை நம் கண் முன்னே கொணர்ந்து நிறுத்தி, காலத்துடன் கலந்த கவியரசரின் காபீபிய நினைவுகளில் கரைந்து போனேன் வாத்தியாரையா!👍👌💐

    ReplyDelete
  2. நல்லது உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com