4.1.21

பையனின் ஜாதகமே தப்பு, சரியில்லை!!!!



*"பையனின் ஜாதகமே தப்பு, சரியில்லை"*

புதிய ஜாதகத்தை தொட்டுக்கூட பார்க்காமல், கிரஹக் கோளாறு இல்லை என்பது பெரியவாளுக்கு எப்படித் தெரிந்தது?

நவ (ஓன்பது) கிரஹங்களுக்கு மேற்பட்ட, நவ (புதிய) கிரஹம் பெரியவாள்.

"பையனுக்கு வயிற்று வலி. எத்தனையோ டாக்டர்களைப் பார்த்தாகி விட்டது. பையன் ஜாதகத்தில் கிரஹங்கள் பாதகமாக இருக்கின்றன என்று ஜோஸ்யர்கள் சொல்கிறார்கள். அதற்காக பரிகாரம் செய்ய வேண்டுமாம்"- பெரியவாளிடம் ஒரு பக்தர்.

பெரியவாள் சொன்னார்கள்;

"பையனின் ஜாதகம் தப்பு. பிறந்த தேதி, நேரம் எல்லாம் சரியாகக் கொடுக்கலே. சரியான நேரம் - காலம் கொடுத்து, புதுசா ஜாதகம் கணிச்சுண்டு வா"---பெரியவா.

காஞ்சிபுரம் உபநிஷத் பிரும்மேந்திர மடத்தில், ஸ்ரீவேங்கட சேஷாத்ரி நன்றாக ஜாதகம் கணிக்கக் கூடியவர். அவர் எழுதிக் கொடுத்த ஜாதகத்துக்கும், பழைய ஜாதகத்துக்கும் வித்தியாசம் இருந்தது. கிரகங்கள் இடம் மாறியிருந்தன.

புதிய ஜாதகத்தைப் பெரியவாளிடம் காட்டினார்கள்.

"ஜாதகப்படி, பையனுக்கு எந்தவிதமான கஷ்டமில்லை. பேதி மருந்து கொடுங்கள் சரியாகிவிடும்"-பெரியவா.

பேதி கொடுத்ததன் விளைவாக, நாலைந்து நாக்குப் பூச்சிகள் வெளியே வந்து விழுந்தன. பையன் சொஸ்தமாகி விட்டான்.

ஆமாம், பையனின் ஜாதகம் சரியாக கணிக்கப்படவில்லை என்பது, பெரியவாளுக்கு எப்படித் தெரிந்தது? புதிய ஜாதகத்தைக் கண்ணால் பார்த்ததோடு சரி, தொட்டுக்கூட பார்க்கவில்லை. ஜாதகத்தில் கிரஹக் கோளாறு இல்லை என்பது எப்படித் தெரிந்தது?.

நவ (ஓன்பது) கிரஹங்களுக்கு மேற்பட்ட, நவ (புதிய) கிரஹம் பெரியவா.
------------------------------------------------------------------------------
2

""பிரதோஷ பூஜைக்கு உதவிய மகாபெரியவா!""

ஒரு பிரதோஷ நாள். தற்செயலாக கிராமத்து சிவாலயம் ஒன்றுக்குச் சென்றிருந்தார் மகாபெரியவர். 

அங்கே நந்திக்கும் ஈசனுக்கும் ஒரே சமயத்தில் அபிஷேகங்கள் தொடங்கின. பால், தயிர், சந்தானம், தேன், இளநீர் என்று அபிஷேகங்கள் நடந்து கொண்டிருந்தன. ஒரு ஓரமாக நின்று எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தார், பரமாசார்யார்.  எல்லாம் நன்றாக நடந்து கொண்டிருந்த அந்த சமயத்தில், அர்ச்சனை செய்து கொண்டிருந்த குருக்கள், ஒரு நிமிடம் திகைத்து நின்றார்.

அவரது பார்வை, அபிஷேகத்துக்கான பொருட்கள் வைக்கப்பட்டிருந்த இடத்தையே துழாவித் துருவிப் பார்த்தது. ஏதோ ஒரு பொருளை அவர் தேடுவதும், அது அங்கே இல்லை என்பதும் அவரது செய்கையைப் பார்க்கும்போதே புரிந்தது. மகாபெரியவர் முன்னிலையில் இப்படி ஆகிவிட்டதே... என்ன செய்வது என்று புரியாமல் அவர் தவிக்க, பக்தர்களோ என்ன பிரச்னை என்று புரியாமல் பார்க்க, வதனத்தில் புன்னகை தவழ அமைதியாக நின்றிருந்தார், மகான்.  

அந்த சமயத்தில் மிகச் சரியாக உள்ளே வந்த பக்தர் ஒருவர், மகான் இருப்பதையோ பக்தர்கள் கூட்டம் நிறைந்து இருப்பதையோ எதையும் கவனிக்காமல் வேகவேகமாக அர்ச்சகர் முன்னால் சென்று நின்றார்.   

"மன்னிக்கணும்...பூஜையெல்லாம் தொடங்கறதுக்கு முன்னாலயே வந்து இந்த அபிஷேக திரவியத்தை தரணும்னு நினைச்சேன். வண்டி கிடைச்சு வர்றதுக்கு நேரமாகிடுச்சு....அபிஷேகமெல்லாம் முடிஞ்சிடுச்சா...இதை சேர்த்துக்க முடியுமா?" பரபரப்பாகக் கேட்டார்.

"என்ன அது?" என்பது போல அர்ச்சகரின் பார்வை உயர.."நெல்லிப்பொடி (காய்ந்த நெல்லிக்காய்த்தூள்) பிரதோஷ அபிஷேகத்துக்குத் தந்தால் நல்லதுன்னு சொன்னாங்க..அதனால கொண்டு வந்தேன்..!"

கையில் இருந்த பொட்டலத்தை அர்ச்சகர் முன் நீட்டினார், அந்த பக்தர். நெல்லிப்பொடி என்று அவர் சொன்னதுதான் தாமதம், அர்ச்சகரின் கண்களில் ஒரு பிரகாசம் தோன்றியது.

இதுதான்....இதைத்தான் தேடினேன்..என்பது போல அவசர அவசரமாக அதை வாங்கியவர், சட்டென்று பொட்டலத்தைப் பிரித்து அதில் இருந்த நெல்லிப்பொடியை சிவலிங்கத் திருமேனியில் கொஞ்சம் கொஞ்சமாகத் தூவினார். அப்படியே சிவலிங்கத் திருமேனி முழுவதுமாக நெல்லிப்பொடியால் நிறைந்தது. ஆர்த்தி காட்டினார் அர்ச்சகர்.

அபிஷேகத்துக்கான பொருட்களை எடுத்து வைத்த போது நெல்லிப் பொடியை எப்படி மறந்தேன் என்று தெரியவில்லையே..மகான் முன்னிலையில் நெல்லிப்பொடி அபிஷேகம் செய்யாமல் விட்டால் அது பெரும் குறையாகி விடுமோ என்றெல்லாம் மனதுக்குள் தவித்துக் கொண்டிருந்த அர்ச்சகர் முகத்தில் இப்போது ஒரு நிம்மதி நிறைந்திருந்தது.

அபிஷேகங்கள், அலங்காரம் எல்லாம் முடிந்து, ஆர்த்தி காட்டினார், அர்ச்சகர். மகாபெரியவரிடம் பிரசாதங்களை கோயில் முறைப்படி கொடுத்தார். 

குறுநகை தவழ அதை ஏற்றுக்கொண்டு புறப்பட்டார் மகாபெரியவர்.

மகான் புறப்பட்ட கொஞ்ச நேரத்துக்குப் பிறகு ஏதோ நினைவு வந்தவராய், சரியான சமயத்தில் நெல்லிப்பொடி கொண்டு வந்த பக்தர் பெயரால் சுவாமிக்கு ஒரு அர்ச்சனை செய்ய நினைத்து, அவரைத் தேடினார், அர்ச்சகர். 

ஊஹூம்..எங்கேயும் காணோம். அவர் ஈசனுக்கு ஆராதனை செய்தபோது நந்திக்கு பூஜைகள் செய்து கொண்டிருந்த அர்ச்சகர், "என்ன நெல்லிப்பொடி கொண்டு வந்தவரைத் தேடறீங்களா? அவர் அப்பவே புறப்பட்டுவிட்டார். நீங்க அர்ச்சனை செய்யறதுக்காக தேடினா, சந்திரசேகரன், அனுஷ நட்சத்திரம்னு சொல்லச் சொன்னார்.!"

அதைக் கேட்டதும் அர்ச்சகருக்கு உடல் சிலிர்த்தது..."இது மகாபெரியவரோட பெயர், நட்சத்திரம் ஆச்சே...அப்படியானால் அதைக் கொண்டுவந்தவர்....?" அவர் மனதில் எழுந்த கேள்விக்கான விடையை சொல்லவும் வேண்டுமா என்ன?   

ஜய ஜய சங்கர! ஹர ஹர சங்கர! காஞ்சி சங்கர! காமகோடி சங்கர!

மகாபெரியவா சரணம்!! குருவே சரணம்!!
=======================================================
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
===========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

3 comments:

  1. திருமணம் வாழ்க்கை?
    11.12.1988 chennai, 13.10 time

    ReplyDelete
  2. வணக்கம் குருவே!
    இன்றைய பதிவில் பக்தி மலர் பூத்திருந்தது!
    இரண்டு நிகழ்ச்சிகளுமே நெகிழ்ச்சி தந்தன. அற்புதங்கள் நிகழ்ந்தவை!
    காஞ்சிப் பெரியவர் முக்காலமும் உணர்ந்தவர் என்பதை இவை நிரூபித்துள்ளன!
    பதிவுக்கு நன்றி ஆசானே!

    ReplyDelete
  3. பின்னூட்டம் இட்ட இருவருக்கும் நன்றி

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com