30.11.20

வெள்ளைக்கார கலெக்டர் மீனாட்சி அம்மன் பெயரில் வைத்திருந்த அதீத பக்தி!!!



வெள்ளைக்கார கலெக்டர் மீனாட்சி அம்மன் பெயரில் வைத்திருந்த 
அதீத பக்தி!!!

நீங்க_என்ன_பெரிய_பீட்டரா...?? 

👍எப்படி வந்தது இந்த வழக்கு சொல்...???

🙏🏼தொடர்ந்து படிக்கவும்.. 

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை பற்றிய சில சுவாரசியமான விஷயங்கள்

மதுரையில் எப்போதும் அம்மாவின் ஆட்சிதான். மற்ற ஆலயங்கள் போலில்லாமல் மீனாட்சி கோவிலில் பெண் தெய்வம் அம்மன்தான் 
முதலில் வணங்கப்படுகிறார். 

சுந்தரேஸ்வரர் பக்கத்து சன்னதியில் பொறுமையாக இருந்து அன்புடன் அருள்பாலிக்கிறார்.

மீனாட்சிக்கு நகைகள், பொக்கிஷங்கள், தான பட்டா நிலங்கள் என்று அளவிட முடியாத சொத்துக்கள் இருக்கின்றன. இந்தியாவில் மிகவும் விலையுயர்ந்தது, 
விரிவானது இந்த நகை கலெக்ஷன். இந்த நகைக்குவியலில் உள்ள ஒவ்வொரு நகைக்கும் ஒரு கதை இருக்கிறது.

அயல் தேசத்து மன்னர்கள், கொள்ளையர்களின் படையெடுப்பு காலங்களில், அம்மனின் நகைகள் ராமேஸ்வரம் போன்ற தூரதேசக் கோயில் லாக்கர்களில் டெபாசிட் பண்ணப் பட்டிருக்கிறது.🏜 

1837 முதல் இந்தியாவை ஆண்ட விக்டோரியா மகாராணிக்கு வைர நகைகள் என்றாலே தனி காதல். தனது கணவரிடம் சொல்லி உலகில் உள்ள பிரபல வைர நகைகளை கைப்பற்றித் தனது அலமாரியில் சேர்த்து வைப்பார்.

மீனாட்சி தேவியின் நகைகளில் பத்துப் பெரிய சபையர் (Sapphire) கற்கள் பதித்த ஒரு நீலப் பட்டயம் உலகப் பிரசித்தம். அதன் ஆபூர்வ அழகு கண்களை பறிப்பதாக இருக்கிறது என்பதை மகாராணியும் கேள்விப்பட்டார் . அதன் மேல் காதல் கொண்டார்; "காண" விரும்பினார். கம்பெனிக்காரர்கள் ஏற்பாட்டில் பதக்கம் லண்டனுக்குக் கப்பலில் சென்றது.

பதக்கத்தை பார்த்ததுமே, மனிதக் காதல் கொள்ள அது சாதாரண நகையல்ல; மகாராணியாக இருந்தாலும் தான் அணிந்து கொள்ள ஏற்புடையதல்ல என்று உணர்ந்தார். மறு கப்பலில் பத்திரமாக அனுப்பப்பட்ட அந்தப் பதக்கம் மீனாட்சியை அலங்கரிக்க மீண்டும் மதுரைக்கு வந்து சேர்ந்திருக்கிறது.

மீனாட்சிக்கு அழகு சேர்க்க இப்படிப் பல வைர, வைடூரிய நகைகள் இருந்தாலும், ஒரு ஆங்கிலேயே முரட்டு பக்தன் இருநூறு வருடங்களுக்கு முன்னால் அம்மனுக்குக் காணிக்கையளித்த ஷூக்கள் பற்றித்தான் இந்த பதிவு.

தங்கத்தால் இழைக்கப்பட்ட விலை மதிக்க முடியாத மாணிக்கங்கள் பதித்த ஒரு ஜோடிக் காலணிகளைத் தன் பக்தியின் காணிக்கையாக வழங்கியவர் அப்போதைய மதுரை கலெக்டர் ரவுஸ் பீட்டர்.

👍யார் இந்த ரவுஸ் பீட்டர்? (நாமெல்லாம் கேட்பமே "என்ன ரவுஸ்" விடுறியான்னு அதுக்கு மூலமே இவருதாங்க)_

பீட்டர் துரை 1812ல் ஒருங்கிணைந்த மதுரை ஜில்லாவுக்குக் கலெக்டராக ஆங்கிலேயே அரசால் நியமிக்கப்பட்டவர்.

பீட்டர் துரை பதினாறு நீண்ட வருடங்கள் அதாவது 1828 வரை மதுரை மாவட்டத்தின் கலெக்டராக இருந்தவர்.

அப்போதெல்லாம் மதுரை கலெக்டர்தான் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கும் தக்கார். கோயில் தக்கார் என்றால் கோயிலுக்கு தக்கவர் (Fit Person) மரியாதைக்குரியவர் என்று அர்த்தம்.

கோவில் தக்காரின் பணி என்னவென்றே தெரியாமல் முதலில் திணறிப் போனார் பீட்டர் துரை. பின்னர் அம்மனின் மகிமைகளை ஒவ்வொன்றாகக் கேட்டறிந்து, அவள் மேல் மரியாதையும், பக்தியையும் செலுத்த ஆரம்பித்தார்.🛕🕉️🛕 

தினமும் தன்னுடைய குதிரையில் ஏறி மீனாட்சி அம்மன் கோயிலை வலம் வருவார். அதன் பிறகே தன்னுடைய அன்றாடப் பணிகளைத் தொடங்குவார்.

கிழக்கு கோபுரத்துக்கு முன்பகுதிக்கு வந்ததும் குதிரையில் இருந்து இறங்கி விடுவார். தன் ஷூக்களை அகற்றிவிட்டு அனலாய் சுடும் அந்த கற்தரையில் வெறும் பாதங்களில் நின்று மீனாட்சியை வணங்குவார்.🏜 

தினமும் கோவில் கோபுர வாயிலில் நின்று மனமுருக வணங்கும் இந்த முரட்டு பக்தனை பார்த்து மதுரை மக்களுக்கு மட்டுமல்ல, அந்த மீனாட்சிக்கே மனசுருகிப் போயிருக்கும்.

பீட்டர் ஆங்கிலேயராக இருந்தாலும்கூட, நம்முடைய கலாசாரத்தையும், ஆன்மிக உணர்வுகளையும் பெரிதும் மதிப்பவராக இருந்தார். மக்களுக்கு எந்த ஒரு கஷ்டமும் வராமல், அம்மனின் வழிகாட்டுதலின்படி ஆட்சி செய்தார்.

மதுரை மக்கள், தங்களுக்கு யாரையாவது பிடித்துப் போனால் எல்லையில்லா அன்பும் நன்றியும் செலுத்துவார்கள். தங்களிடம் மிகுந்த பரிவு காட்டிய இந்தக் கலெக்டரை ஒரு மன்னனுக்கு நிகராக நினைத்த மதுரை மக்கள் அவரைப் பீட்டர் பாண்டியன் என்றே அழைத்தனர். ("நீ என்ன பெரிய பீட்டரா" அதுக்கும் இவருதாங்க மூலம்)

சம்பவத்துக்கு வருவோம்.👍

ஒருநாள் இரவு மதுரையில் இடியும் மின்னலுமாகப் பெருமழை பெய்தது. பெருத்த காற்றுடன் மழை கொட்டோ கொட்டென்று கொட்டியது.

வெள்ளத்தினால் மதுரைக்கும், மக்களுக்கும் பெரிய இடையூறு வருமே என்று கவலையுடன் உறக்கம் வராமல் கட்டிலில் புரண்டு கொண்டிருந்தார் பீட்டர் துரை.

👀நள்ளிரவாகிவிட்டது. பங்களாவுக்கு வெளியே ஒரு சிறுமி அழைப்பது போல பீட்டருக்குக் கேட்டது. எழுந்து வெளி வராந்தாவுக்கு வந்தார்.

🔥அந்த இடத்தில் அவரை நெருங்கி வந்த மூன்று வயது மதிக்கும் சிறுமி ஒருத்தி தன்னுடைய தளிர்க் கரங்களால் அவருடைய கைகளைப் பிடித்து இழுத்து மாளிகைக்கு வெளியில் அழைத்துப் போனாள்.

சிறுமியும் கலெக்டரும் வெளியில் வந்ததுதான் தாமதம், அந்த மாளிகை அப்படியே இடிந்து விழுந்தது. மிரண்டு போனார் பீட்டர். தன்னை ஆபத்தில் இருந்து காப்பாற்றிய அந்தச் சிறுமிக்கு நன்றி சொல்லத் தேடினார். சிறுமியைக் காணவில்லை. 🏜 

பின்னர் கொட்டும் மழையில் சற்றுத் தொலைவில் அந்தச் சிறுமி சென்று கொண்டிருப்பதைப் பார்த்த கலெக்டர் பின்தொடர்ந்து ஓடினார். பிடிக்க முடியவில்லை. இறுதியில் அந்தச் சிறுமி மீனாட்சியின் திருக்கோயிலுக்குள் சென்று மறைந்தே போனாள்.

தன்னை ஆபத்தில் இருந்து காப்பாற்றியது அம்மன் மீனாட்சிதான் என்று கலெக்டர் ரவுஸ் பீட்டர் உறுதியாக நம்பினார்.

கொட்டும் மழையில் வெறும் காலோடு தன்னைக் காப்பாற்ற ஓடோடி வந்த அம்பிகையின் பாதங்களுக்கு அணியும்படி ஏதாவது அணிகலன் செய்து தரவேண்டும் என்று ஆலோசனை செய்தார். அவை தான் மேலே சொன்ன அந்தக் காணிக்கைக் காலணிகள்.

நன்றியுணர்வின் அடையாளமாக அவர் மீனாட்சிக்கு காணிக்கை அளித்த இந்த ஒவ்வொரு தங்க ஷூவின் எடை 28 டோலாக்கள் (ஒரு டோலா தங்கம் தோராயமாக 12 கிராம்).

இதுபோக 412 சிவப்பு கற்கள், 72 மரகதங்கள், 80 வைரங்கள் மற்றும் பூனை கண், முத்துக்கள், சபையர் என்று நவரத்தினங்கள் காலணிகளை அலங்கரிக்கின்றன.

அத்துடன் விட்டாரா? 🏜 

அம்மனைத்தவிர அந்த நாட்களில் மதுரையில் குதிரை வலம் வருபவர் பீட்டர் மட்டும்தான். குதிரை சவாரி எவ்வளவு சிரமம் என்று அவருக்குத்தான் தெரியும். விழாக் காலங்களில் குதிரையில் வலம் வரும் அம்மன், சேணம் இல்லாததால் பேலன்ஸ் பண்ண சிரமபடுவதாக அவரின் பக்திக்கண்களுக்கு பட்டது.

வெள்ளைக்காரர்கள் எதையும் மிஸ் பண்ண மாட்டார்கள். "எடுறா தங்கத்தை, அடிறா சேணத்தை" என்று நவரத்தினங்களால் இழைக்கப்பட்ட இரண்டு தங்க சேணங்களையும் செய்து, அவற்றையும் அம்மனுக்கு காணிக்கையாகச் சமர்ப்பித்தார்.

இன்றைக்கும் சித்திரை திருவிழாவின் ஐந்தாவது நாளில், மீனாட்சி தேவி தங்கக் குதிரையில் இந்த விசித்திரமான அணிகலங்களை பூட்டி, புன்னகையுடன் மாசி வீதிகளைச் சுற்றி வருகிறாள்.

பக்தியில் திளைத்த அவர், மீனாட்சி நடக்கும்போது அவள் திருப்பாதங்கள் 
தன் மேல் நடந்து போவதாக இருக்கட்டும் என்று சொல்லி, அவள் காலணிகளுக்கு அடிப்பாகத்தில் தன் பெயரை எழுத சொல்லிவிட்டார்.

பணி ஓய்வுக்குப் பின்னரும் பீட்டர் இங்கிலாந்துக்குத் திரும்பவில்லை. தனது கடைசி நாட்களை மீனாட்சிப் பட்டிணத்திலேயே கழித்தார்.

மதுரையிலேயே காலமான அவர் மதுரை, மேல ஆவணி மூல வீதி் 
செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டார்.

பீட்டரின் கல்லறை, தேவாலயத்தின் பலிபீடத்தின் அடியில் ஒரு பாதாள அறையில் அமைந்துள்ளது.

கிருஸ்துவ தேவாலயத்தின் அறையில் அவரது இறுதி விருப்பப்படி, அவர்தம் முகம் மீனாட்சி கோயிலை நோக்கி இருக்குமாறு அடக்கம் செய்யப்பட்டார்.

மதுரையின் முதல் புலம் பெயர் தொழிலாளி  திரு. பீட்டர் பாண்டியன்! உங்களுக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள்...!!🌸🙏🙏🙏🌸💚❤️
----------------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
======================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

1 comment:

  1. வணக்கம் குருவே!
    மதுரை மீனாட்சி அம்மன் பற்றிய தங்களின் இன்றைய பதிவு
    அபாரம்!🙏
    முற்றிலும் பக்தி மணம் பெருக விறு விறுப்பான நடையில் உண்மைச் சம்பவங்களை நெஞ்சில் நிறைந்து நின்றது!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com