என் வாயில் இருப்பது சனிதான்!
ஒருநாள் ரேசன் கடையிலிருந்து பத்து கிலோ பச்சரிசி வாங்கி வரச் சொன்னாள் மனைவி. வாங்கி வந்ததும் அதை ஒரு பெரிய அண்டாவில் போட்டு மொத்தத்தையும் இரண்டு மூன்று முறை தண்ணீர் விட்டு அலசச் சொன்னாள்.
அலசிக் கொடுத்தேன். ஒரு போர்வையை எடுத்துக் கொண்டு, "நீங்க அரிசிய தூக்கிட்டு மொட்டை மாடிக்கு வாங்க"னு சொன்னா. போனேன். போர்வையை விரித்து அதில் அரிசியை தட்டி காயப் போட்டோம்.
"ஏங்க கீழே போய் ஒரு நாக்காலியும் சின்னதா ஒரு குச்சியும் எடுத்துட்டு வாங்க" என்றாள். எடுத்து வந்து கொடுத்தேன். மொட்டை மாடியின் ஒரு மூலையில் கொஞ்சமாய் விழுந்திருந்த வேப்பமர நிழலில் நாற்காலியைப் போட்டு "உக்காருங்க " என்றாள். உட்கார்ந்தேன். குச்சியைக் கையில் கொடுத்து "காக்கா குருவி அரிசிய கொத்தி தின்றாம பாத்துக்குங்க " என்று சொல்லிவிட்டு கீழே போய்விட்டாள்.
விதியை நொந்துகொண்டு தேமே என்று உட்கார்ந்திருந்தேன். நிழலுக்கேற்றபடி நாற்காலி நகன்று கொண்டிருந்தது. ஒன்பதரைக்கு காலை உணவும் பதினோரு மணிக்கு ஒரு லெமன் ஜூஸும் ஒன்றரை மணிக்கு மதிய உணவும் நாலு மணிக்கு தேநீரும் என்னைத் தேடி வந்தன. அதே போல் அடுத்த நாளும் நானும் அரிசியும் காய்ந்தோம்.
அடுத்த நாள் சாயந்திரம் "அரிசியை ரைஸ்மில்லில் கொடுத்து திரித்து வாருங்கள் " என்றாள். திரித்து வந்ததும் அதில் பாதியை பெரிய இரும்பு வடச்சட்டியில் கொஞ்சம் கொஞ்சமாக போட்டு வறுத்துக் கொண்டாள். மீதி மாவை பச்சையாகவே ஒரு தூக்குவாளியில் வைத்தாள்.
மறுநாள் வறுத்த மாவில் கொஞ்சம் எடுத்து இட்லி சட்டியில் வைத்து புட்டு செய்தாள். அதற்கடுத்த நாள் வறுத்த மாவில் சுடுதண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசைந்து இடியாப்பம் சுட்டாள். பிழிய முடியாத கடைசி மாவை கொழுக்கட்டையாய் அவித்தாள்.
மூன்றாம் நாள் பச்சை மாவில் கொஞ்சம் எடுத்து ஊறவைத்து அரைத்த உளுந்து மாவை கலந்து பாதியை கொஞ்சம் கெட்டியாகவும் மீதியை சிறிதே இளக்கமாகவும் ஆக்கிக் கொண்டாள். கெட்டியான மாவை இட்லியாகவும், இளக்கமான மாவை தோசையாகவும் சுட்டெடுத்தாள்.
இதற்கிடையே சிறிது பச்சை மாவில் வெல்லம் ஏலக்காய் தூளெல்லாம் போட்டு புரோட்டா மாவு பதத்தில் பிசைந்து ஒரு பாத்திரத்தில் வண்டு கட்டி வைத்துக் கொண்டாள். இரண்டு நாள் கழித்து அதிரசம் சுட்டாள்.
இன்னொரு நாள் சிறிது பச்சை மாவில் ஓமம் உப்பு கலந்து முருக்கு சுட்டாள்.
ஹைலைட்டாக ஒருநாள் அரிசி மாவை கரைத்து அதில் சீனி ஏலக்காய் பொடி மற்றும் மாம்பழ எசென்ஸ் கலந்து கஞ்சி போல் காய்ச்சி ஒரு தட்டில் நெய் தடவி ஊற்றி ஆறிய பின் சதுரமாக கட் செய்து தந்தாள். "என்ன இது " என்றேன். "வட்டிலாப்பம் " என்றாள். நல்லாத்தான் இருந்துச்சு.
அடுத்த நாள் அதே போல் கொஞ்சம் மாவில் சீரகம் உப்பு போட்டு கஞ்சியாய் காய்ச்சி ஒரு பழைய சேலையையும் டீஸ்பூன் ஒன்றையும் கொடுத்து "மொட்டை மாடிக்குப் போய் கூல் வடாம் ஊற்றுங்கள் " என்றாள். நல்லவேளை காவலுக்கு நிற்கச் சொல்லவில்லை.
ஒரு அரிசி மாவில் இப்படியே கிட்டத்தட்ட இருபது நாட்களை ஓட்டினாள். ஒருபக்கம் வியப்பாக இருந்தாலும் இன்னொரு பக்கம் தினமும் அரிசி மாவு அயிட்டம்தானா என கடுப்பாகவும் இருந்தது.
ஒருநாள் கேட்டேன். "ஏண்டி.... ஒரே மாவை வச்சுக்கிட்டு நீ எத்தனை டகாலக்கடி வேலை காட்றே. கோதுமை மைதா ரவை என்று ஏதாவது வெரைட்டியா போட்டா என்ன... ?"
"நீங்களும் ஒரே மனுசன்தான். ஒவ்வொரு நாளும் எத்தனை விதமா லொள்ளு பண்றீங்க..! நாங்க சமாளிக்கல...!? நாங்க என்ன வெரைட்டியா தேடுறோம்...!? "
என் வாயில் சனி இருப்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாக, வாயடைத்துக் கொண்டேன் நான்.
------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
===========================================
Good morning sir excellent and very humorous.Already I read in your Manvasanai kathaikal book sir thanks sir vazhga valamudan
ReplyDelete