11.8.20

எந்த ஒரு வேலையையும் வெற்றிகரமாகச் செய்து முடிக்க என்ன வேண்டும் ?


எந்த ஒரு வேலையையும் வெற்றிகரமாகச் செய்து முடிக்க என்ன வேண்டும் ?

ஒரு நாட்டில் ஒரு இளவரசன் இருந்தான். அவன் சிறந்த போர் வீரன். அவனுடைய வாள் வீச்சிற்கு அந்த நாடே ஈடு கொடுக்க முடியாது. அந்த அளவிற்குச் சிறந்த வீரன்.

அவன் ஒரு முறை அரண்மனையில் வாள் வீசி பயிற்சி செய்துக் கொண்டிருக்கையில், ஒரு எலி குறுக்கே ஓடியது. உடனே அதன் மீது வாளை வீசினான். அந்த எலி லாவகமாக தப்பித்துச் சென்றது. பிறகு மீண்டும் அதனைத் துரத்தி வாளை வீசினான், மீண்டும் தப்பித்து வளைக்குள் புகுந்து கொண்டது. உடனே மனம் உடைந்து போனான்.

அப்போது வந்த அரசர் "ஏன் சோகமாக இருக்கிறாய்?" என கேட்க "இந்த நாடே எனது வாள் வீசும் திறமைக்கு ஈடு கொடுக்க முடியாது போது, இந்த சாதாரண எலியை என்னால் கொல்ல முடியவில்லையே!"என விவரித்தான் இளவரசன். மன்னர் சிரித்து விட்டு "எலியைக் கொள்ள வாள் பயிற்சி எதற்கு? அரண்மனைப் பூனையைக் கொண்டு வந்தாலே போதுமே!" என்றார். உடனே அரண்மனை பூனை வரவழைக்கப் பட்டது. அந்தப் பூனையும் எலியை வேட்டையாட முயன்றது. ஆனாலும் அந்த எலி எளிதாக அதனிடம் இருந்து தப்பித்து, தப்பித்துச் சென்றது. மீண்டும் இளவரசருடன் அரசரும் சோகமானார்.

அப்போது மந்திரி வந்தார். "என்ன அரசே.. நீங்களும் இளவரசரும் சோகமாக இருக்கிறீர்கள்?" என்றார். அதற்கு அரசர் நடந்ததை கூறினார். "நம் நாட்டு பூனைகள் எதற்கு லாயக்கு...? ஜப்பான், பாரசீகம் போன்ற நாடுகளில் உள்ள பூனைகள் புலி உயரம் உள்ளன. எனவே அங்கிருந்து வரவழைப்போம்" என்றார் மந்திரி.

அதே போல் அந்த  நாடுகளில் இருந்து பூனைகள் வரவழைக்கப் பட்டன.
ஆனால் அவற்றிடமிருந்தும் அந்த எலி சாமர்த்தியமாகத் தப்பித்துச் சென்று வளைக்குள் புகுந்தது. எலிக்கு இவ்வளவு திறமையா! என அனைவரும் வியந்து கொண்டிருக்கையில், அங்கே இருந்த அரண்மனைக் காவலன் "இளவரசே! இந்த எலிக்குப் போய் ஜப்பான், பாரசீகப் பூனையெல்லாம் எதுக்கு? எங்க வீட்டுப் பூனையே போதும்" என்றான்.

மன்னருக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. "என்ன.. அரண்மனையில் வளர்ந்து வரும் பூனையால் முடியாதது சாதாரண பூனையால் முடியுமா?" என்றார். உடனே இளவரசர் மறித்து "சரி... எடுத்து வா உனது பூனையை" என்றார். வீட்டிற்குச் சென்று தனது பூனையைக் கொண்டு வந்தான் காவலன். அந்தப் பூனை அந்த எலியை ஒரே தாவலில் "லபக்" என்று கவ்விச் சென்றது. இதனைப் பார்த்த இளவரசருக்குப் பெருத்த ஆச்சரியம். "என்ன இது அதியசம்!

ஜப்பான், பாரசீக, அரண்மனையில் வளர்ந்த பூனைகளிடம் இல்லாத திறமை எப்படி இந்தச் சாதாரண பூனைக்கு ஏற்பட்டது? எப்படி சாத்தியம்? என்ன பயிற்சி கொடுத்துப் பூனையை வளர்க்கிறீர்கள்?" என்று வியந்தவாறே கேள்விகளை கேட்க தொடங்கினார்.

அதற்குக் காவலாளி *"பெரிதாக என் பூனைக்குத் திறமையோ, பயிற்சிகளோ எதுவும் இல்லை இளவரசே... என் பூனைக்கு ரொம்பப் பசி அவ்வளவு தான்" என்றான்.

உடனே இளவரசருக்கு "சுரீர்" என்றது. அரண்மனைக்குள் பூனைகள் நன்கு தின்று கொழுத்திருப்பதால் அவற்றுக்கு பசி என்பதே என்னவென்று தெரிய வாய்ப்பில்லை, எனவே அவற்றால் எலியை எப்படி பிடிக்க முடியும்?.

ஆக எந்த ஒரு வேலையையும் வெற்றி கரமாகச் செய்து முடிக்க வேண்டுமென்றால் பணமோ அந்தஸ்தோ வயதோ முக்கியமல்ல  முதலில் அதனைப் பற்றிய பசி அல்லது தேவை இருந்தால் போதுமானது.  அப்போது தான் அந்தக் காரியத்தை விரைவாகவும் கச்சிதமாகவும் செய்து முடிக்க முடியும்.
--------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
=======================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

2 comments:

  1. It is called passion .We shall do well if we have passion for action. Good moral story Sir.

    ReplyDelete
  2. /////Blogger kmr.krishnan said...
    It is called passion .We shall do well if we have passion for action. Good moral story Sir.////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com