கவியரசர் கண்ணதாசன் எழுதிய சில ஐயங்கள்
பொய்மானைத் தேடிப்
புறம்போன ராமனுக்கும்
தெய்வம் எனும்பெயரைச்
சேர்த்துவைத்த தேனடியோ?
தெய்வம் எனும்பெயரைச்
சேர்த்துவைத்த தேனெனிலோ
தெய்வமே தர்மத்தைத்
தேடுவதாம் என்பதனால்!
கற்புடையாள் சீதையவள்
கனலாக மாறாமல்
காட்டிடையே கண்ணீரில்
கரைந்ததுவும் ஏனடியோ?
காட்டிடையே கண்ணீரில்
கரைந்ததுவும் ஏனெனிலோ
பாட்டிடையே கம்பனுக்கு
பலபொருள்கள் தேர்வதற்கே!
சூதாடும் நேரத்தில்
துணைக்குவராக் கண்ணனவன்
போராடும் பாரதத்தில்
பொங்கிவந்த தேனடியோ?
போராடும் நேரத்தில்
பொங்கிவந்த தேனெனிலோ
யாரோடு கூட்டணிஎன்(று)
அன்றுவரை அறியானால்!
அகலிகையின் கணவனுக்கே
ஐயந்தீர் ராமபிரான்
அகந்தெளித்த சீதையின்பால்
ஐயமுற்ற தேனடியோ?
அகந்தெளித்த சீதையின்பால்
ஐயமுற்ற தேனெனிலோ
பரந்தெரித்த ராமனுக்கும்
இகந்தெரியாக் காரணத்தால்!
மாதவியாள் மார்பிருந்து
மயங்கிவிட்ட கோவலினின்
பேதலித்த புத்திக்குப்
பின்னணிதான் என்னடியோ?
பேதலித்து புத்திக்குப்
பின்னணிதான் என்னவென்றால்
பேர்தரித்த வணிகனெனும்
பிறப்பாய்ப் பிறந்ததனால்!
காரியங்கள் அத்தனைக்கும்
காரணங்கள் உள்ளவெனக்
காட்டிவிட்ட வேதமெல்லாம்
கண்மறைந்த தேனடியோ?
காட்டிவிட்ட வேதமெல்லாம்
கண்மறைந்த தேனனெனிலோ?
காட்டியதை பொய்யென்று
கண்டுகொண்ட காரணந்தான்
அவ்வளவும் உண்மையென்று
ஆர்ப்பரிக்கும் மக்களிடை
இவ்வளவு ஐயங்கள்
எனக்கெழுந்த தேனடியோ?
இவ்வளவு ஐயங்கள்
எனக்கெழுந்த தேனெனிலோ?
கையளவு கல்வியில்நீ
கவிபாடும் காரணம்தான்!
-------------------------------------------------
படித்ததில் ரசித்தது!
அன்புடன்
வாத்தியார்
===================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
best poem Sir.
ReplyDelete