14.4.20

நீங்களும் நானும் தமிழ் புத்தாண்டும்!!!!

நீங்களும் நானும் தமிழ் புத்தாண்டும்!!!!

சார்வரி தமிழ்ப் புத்தாண்டு 14-04-2020 செவ்வாய்க்கிழமை

தமிழ் புத்தாண்டு முக்கியத்துவம்

மங்களகரமான சித்திரை சார்வரி வருடம் சிசிர ருதுவுடன் உத்தராயனப்   நிறைந்த திங்கள்கிழமை 13.04.2020 இரவு 7.20 -மணிக்கு துலா லக்கினத்தில் புதன் ஹோரையில் கிருஷ்ணபட்சத்தில் 10.20 வரைசஷ்டி திதி, பின்பு சப்தமி. மூலம் 12.30 வரை பின்பு பூராடம்'சார்வரி' சித்திரை அசுவினி 1 மேஷ சூரியன்  17.35 புண்ணிய காலம் சுப தமிழ்ப் புத்தாண்டு 2020 பிறக்கிறது. இந்த 2020 ஆம் வருடம், ஏப்ரல் 14 ஆம் தேதி  செவ்வாய்க்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. 

தமிழ்ப் புத்தாண்டு தமிழர் புதிய ஆண்டு பிறப்பதைக் கொண்டாடும் விழாவாகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும், பிற நாடுகளிலும் வாழும் தமிழ் மக்கள் சித்திரை மாதத்தின் முதல் நாளைப் புத்தாண்டாகக் கொண்டாடுகின்றனர்.

ஒரு தமிழ் ஆண்டு என்பது வானியல் ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் அளவிடப்பட்ட காலத்தைக் கொண்ட காலப்பகுதியாகும். பூமி சூரியனை ஒரு தடவை சுற்றிவர 365 நாட்கள், 6 மணி, 11 நிமிடம், 48 நொடிகள் ஆகின்றது. இதுவே தமிழ் வருடத்தினதும் கால அளவாகும். சூரிய மேஷ இராசியில் பிரவேசிக்கும்போது தொடங்கும் ஆண்டு, மீன இராசியிலிருந்து வெளியேறும்போது முடிவடைகின்றது. ஆகவே தமிழ் வருடத்தின் கால அளவு எப்போதும் சீரானதாகவே இருக்கிறது. இதன் அடிப்படையிலேயே தமிழ்ப் புத்தாண்டு பிறக்கும் நாள், நேரம் கணிக்கப்படுகிறது. ஆங்கில நாட்காட்டியில் பெரும்பாலும் ஏப்ரல் 14 தொடங்கும் தமிழ் ஆண்டு சில ஆண்டுகளில் ஏப்ரல் 13 அல்லது 15 நாட்களில் தொடங்கும். இதற்குக் காரணம் ஆங்கில (கிரகோரியன்) நாட்காட்டி ஒரே சீரானதாக இல்லை என்பதே.

நடைமுறைக்கு ஏற்றதாக சித்திரை தமிழ்ப் புத்தாண்டு ஒரு குறிப்பிட்ட நாளில் கொண்டாடப்பட்டாலும், தமிழ்ப் பஞ்சாங்கங்களில் அந்த நாளில் ஆண்டு பிறக்கும் சரியான நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும். அதன் அடிப்படையிலேயே ஆண்டுக்காலம் கணிக்கப்படுகிறது.

சித்திரை தமிழ்ப் புத்தாண்டு - அறிமுகம்

தமிழ் மாதமாகிய சித்திரை மாதப் பிறப்பு என்பது, ஆண்டு தோறும், புது வருடப் பிறப்பாகக் கருதப்படுகிறது. பொதுவாக இது, ஏப்ரல் மாதத்தின் மத்தியில் வருகிறது. மங்களகரமான சித்திரை சார்வரி வருடம் சிசிர ருதுவுடன் உத்தராயனப்   நிறைந்த திங்கள்கிழமை 13.04.2020 இரவு 7.20 -மணிக்கு துலா லக்கினத்தில் புதன் ஹோரையில் கிருஷ்ணபட்சத்தில் 10.20 வரைசஷ்டி திதி, பின்பு சப்தமி. மூலம் 12.30 வரை பின்பு பூராடம்'சார்வரி' சித்திரை அசுவினி 1 மேஷ சூரியன்  17.35 புண்ணிய காலம் சுப தமிழ்ப் புத்தாண்டு 2020 பிறக்கிறது. இந்த 2020 ஆம் வருடம், ஏப்ரல் 14 ஆம் தேதி  செவ்வாய்க்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. 

சார்வரி வருஷத்திய  வெண்பா பலன்
சாருவரி ஆண்டதனிற் சாதிபதினெட்டுமே
தீரமறு நோயால் திரிவார்கள், மாரியில்லை
பூமி விளை வில்லாமற் புத்திரரும் மற்றவரும்
ஏமமன்றிச் சாவார் இயம்பு.

அதாவது சார்வரி ஆண்டில், தீராத நோயால் அவதிப்படுவர், மழை குறைவாக இருக்கும் என்பதால், பூமியில் விளைச்சல் குறையும் சோகம் உண்டு. மக்கள் மற்றும் கால்நடைகள் கடுமையாக  பாதிக்க நேரிடும்
 
உலகின் பண்டைய கலாசாரங்கள் அனைத்தும், நாள், வாரம், மாதம், வருடம் போன்றவற்றைக் கொண்ட ‘பஞ்சாங்கம்’ எனப்படும் நாள்காட்டிகளைப் பயன்படுத்தி வந்துள்ளன. இது ‘ஆல்மனாக்’ அல்லது ‘காலண்டர்’ எனப்படும். தமிழர்களின் பழம் பெரும் கலாசாரமும் இதற்கு விதி விலக்கல்ல. பொதுவாக, மாதங்களும், வருடங்களும் சூரியனின் போக்கை அடிப்படையாகக் கொண்டே கணக்கிடப்பட்டுள்ளன.

தமிழ்ப் பாரம்பரியமும் இந்த முறையையே பின்பற்றுகிறது. சூரியன் தனது வான்வெளிப் பயணத்தின் பொழுது 12 ராசிகளின் வழியாகச் செல்கிறார். அவர் ஒவ்வொரு ராசியிலும் தங்கியிருக்கும் காலம், ஒரு குறிப்பிட்ட மாதமாகக் கணக்கிடப்படுகிறது. இவ்வாறு, முதல் ராசியான மேஷ ராசியில் அவர் தங்கி இருக்கும் காலம், சித்திரை மாதமாகக் கருதப்படுகிறது. அவர் மேஷ ராசியில் பிரவேசிக்கும் நாளான, சித்திரை முதல் நாள், ஒரு புதிய தமிழ் வருடத்தின் துவக்கமாகவும், தமிழ்ப் புத்தாண்டாகவும் கொண்டாடப்படுகிறது. இது சித்திரை வருடப் பிறப்பு என்றும், ஆங்கிலத்தில் தமிழ் நியூ இயர் என்றும் கூட வழங்கப்படுகிறது.
 
தமிழர்கள் காலத்தைக் கணக்கிடும் முறைப்படி, வசந்த காலம் என்பது சித்திரை மாதத்திலேயே பிறக்கிறது; எனவே, இந்த மாதப் பிறப்பு புத்தாண்டுப் பிறப்பாகக் கொண்டாடப்படுகிறது என்ற கருத்தும், சிலரிடையே நிலவுகிறது.   

பல்வேறு மொழி பேசும், கலாசாரத்தைப் பின்பற்றும் மக்கள் இது போன்ற புத்தாண்டுப் பிறப்பை, பலவகைப் பெயர்களில், பல்வேறு விதமாகக் கொண்டாடுகிறார்கள். உதாரணமாக தெலுங்கு வருடப் பிறப்பு உகாதி என்றும், மலையாள வருடப் பிறப்பு விஷூ என்றும் அழைக்கப்படுகிறது.  இவ்வாறு புதிய தமிழ் வருடம் பிறக்கும் நாள், தமிழ்ப் புத்தாண்டு என்று அழைக்கப்பட்டாலும், ஒவ்வொறு தமிழ் வருடத்திற்கும் ஒரு தனிப் பெயர் உள்ளது. 

 
ஆண்டு அல்லது வருடம் என்பது, வடமொழி எனப்படும் சமஸ்கிருதத்தில் ‘சம்வத்ஸரம்’ என்று அழைக்கப்படுகிறது. இது போன்ற, குறிப்பிட்ட 60 ஆண்டுகள் அல்லது சம்வத்ஸரங்கள், ஒரு தொகுதியாகக் கருதப்படுகின்றன. இந்த 60 ஆண்டுக் காலப் பொழுதில் இருக்கும் 60 வருடங்களுக்கும் தனித் தனிப் பெயர்கள் உள்ளன. இந்த 60 ஆண்டுத் தொகுதி அல்லது காலகட்டம், சுழன்று, சுழன்று மீண்டும், மீண்டும் வருவதாகக் கணக்கிடப்படுகிறது. இதனால், இந்த 60 வருடத் தொகுதியில் உள்ள ஒவ்வொரு வருடமும், 60 வருடங்களுக்கு ஒருமுறை, மீண்டும் மீண்டும் திரும்பி வருகிறது. வருடங்களின் இந்த சுழற்சி என்பது, ‘சம்வத்ஸர சுழற்சி’ என்று அழைக்கப்படுகிறது.

சார்வரி என்ற சொல்லுக்கு ‘ஒளி’ அல்லது ‘அந்தி வேளை ஒளி’ என்று பொருள். இந்த சார்வரி ஆண்டு, 2020 ஏப்ரல் 13 ஆம் தேதி, திங்கட்கிழமை இரவு 07.20 மணிக்குப் (இந்திய நேரம்) பிறக்கிறது. இருப்பினும், இந்த சார்வரி வருடப் பிறப்பு, தமிழ்ப் புத்தாண்டு 2020 ஆக, அதற்கு மறுநாள், ஏப்ரல் 14 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது.

ஜனவரி மாத மத்தியிலிருந்து ஜூலை மாத மத்தியப் பகுதி  வரையிலான காலம், சூரியனின் வடதிசைப் பயணத்தைக் குறிக்கும், புனிதமான உத்தராயணம் ஆகும். எனவே ஒவ்வொரு வருடத்தைப் போலவே, இந்தத் தமிழ்ப் புத்தாண்டும், உத்தராயண புண்ணிய காலத்தில் பிறக்கிறது.
 
புத்தாண்டுக் கொண்டாட்டம்

தமிழர்களின் புத்தாண்டுத் தொடக்க மாதமான மிகச் சிறப்பு வாய்ந்த இந்த சித்திரை மாதப் பிறப்பின் போது நாம் செய்ய வேண்டியது என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம் தமிழ் புத்தாண்டு தினமான சித்திரை மாதம் முதல் நாள் அன்று அதிகாலையிலேயே துயில் எழுவது மிகவும் நல்லது. மற்ற தினங்களைப் போல அல்லாமல் இந்த சித்திரை மாதம் முதல் தினத்தன்று புத்தாண்டு பிறக்கும் புண்ணிய காலத்தில் உடல் வெப்பம் குறைந்து நோய்கள் தீரவும் தோஷ நிவர்த்திக்காகவும்  பல மூலிகைகள் சேர்ந்த மருத்துநீரை தலையிலும் உடம்பிலும் தடவி முதலில் நீராடுவது வழக்கம்.மருத்து நீரில் அனைவரும் குளியலை மேற்கொள்ள வேண்டும். மருத்து நீர் என்பது நமது முன்னோர்களால் தமிழ் வருடப் பிறப்பு அன்று குளிக்கும் போது பயன்படுத்தப்பட்ட ஒரு நீராகும். தற்கால தமிழர்கள் அதிகம் இதை பற்றி அறியாமல் இருக்க காரணம் இந்த மருத்து நீரை தயாரிக்க தேவையான பொருட்கள் அனைவருக்கும் எளிதில் கிடைக்காததும், இதை தயாரிக்கும் முறை பற்றி அறியாததே ஆகும். எனினும் இந்த மருத்து நீரை தயாரிக்க நினைப்பவர்கள் ஒரு பாத்திரத்தில் சுத்தமான நீரை ஊற்றி அதில் தாழம்பூ, தாமரைப்பூ, மாதுளம் பூ, துளசி, விஷ்ணுகிராந்தி, சீதேவியால் செங்கழு நீர், வில்வம், அறுகு, பீர்க்கு, பால், கோசலம், கோமயம், கோரோசனை, மஞ்சள், மிளகு, திப்பிலி, சுக்கு ஆகியவற்றில் சிறிதளவை போட்டு நன்கு காய்ச்சி நீரை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். வீட்டிலேயே இந்த மருத்து நீரை தயாரிக்க தெரியாதவர்கள், இப்புனித மருத்து நீரை, கோயில்களில் சேவை புரியும் அந்தணப் பெரியோர்களிடம் தயாரித்து தரும்படி கேட்டு பெற்று கொண்டு குளிக்க வேண்டும்.

குளிக்கும் போது தலையில் கொன்றை இலையையும், காலில் புங்கம் இலையையும் வைத்து குளிக்க வேண்டும். இப்படி செய்வதால் பிறந்திருக்கும் தமிழ் வருடத்திற்குரிய தோஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் தோஷங்கள் நீங்க பெறும். மற்ற நட்சத்திரக்காரர்களும் இப்படி குளிப்பதால் அவர்களின் அனைத்து தோஷங்களும் நீங்கி, புதிதாக பிறந்திருக்கும் புத்தாண்டில் அதிர்ஷ்டங்கள் பெருகும். மஞ்சள் நிறம் என்பது வளமை, தெய்வீகம் மற்றும் நன்மையை குறிக்கும் ஒரு நிறமாக நமது கலாச்சாரத்தில் போற்றப்படுகிறது. எனவே புத்தாண்டு தினத்தில் மேற்கண்ட முறையில் குளியலை முடித்த பின்பு , மஞ்சள் நிறப் பட்டாடை அல்லது மஞ்சள் கரை வைத்த வெள்ளை நிற புதிய ஆடைகளை அணிந்து கொள்வதால் பிறக்கின்ற புத்தாண்டு உங்கள் குடும்பத்தில் வளமையை கொடுக்கும் என்பது ஐதீகம்.

 மஞ்சள் நிற ஆடை இல்லாவிட்டாலும் புதிய ஆடையில் ஒரு சிறு பகுதிலாவது மஞ்சள் அரைத்துப் பெற்ற கலவையை பூசி விட்டு அணிந்து கொள்வது நன்மை தரும். பின்னர் உங்கள் வீட்டின் பூஜையறையில் பூரண கும்பம், கண்ணாடி, தீபம், போன்றவற்றை வைத்து, இஷ்ட தெய்வம் மற்றும் குல தெய்வ படங்களையும் தரிசித்து வணங்க வேண்டும். பிறகு உங்கள் வீட்டில் இருக்கும் வயதில் மூத்தோரான தாத்தா, பாட்டி, தாய், தந்தை மற்றும் இன்ன பிற பெரியோர்களை வணங்கி, அவர்களின் நல்லாசிகளைப் பெற்றுக் கொள்ளுதல் வேண்டும். பிறகு அருகிலுள்ள கோயிலுக்கு சென்று இறைவனை வழிபட வேண்டும்.

அறுசுவை உணவு உண்டு பலவிதமான பட்சணங்களுடன் விருந்தினர்களை உபசரித்தல் புத்தாடை அணிதல், பெரியோரை வணங்கி ஆசி பெறுதல், பொங்கல் பொங்குதல் ஆகியன இரு மக்களிடையேயும் ஒரே மாதிரியாக கைக்கொள்ளப்பட்டு வருகின்றன.பௌத்த மக்களும் இந்துத் தெய்வ நம்பிக்கையுடன் வாழ்கின்றார்கள்.

புத்தாண்டு பல நன்மைகளைத் தர வேண்டும் என்ற நோக்கத்தோடு மருத்துநீர் வைத்து நீராடி, புத்தாடை அணிந்து கோவிலுக்குச் சென்று வழிபடுதல் வேண்டும்.கண்கண்ட தெய்வமாகவும் உலக இயக்க நாயகனாகவும் விளங்கும் சூரியனை அடுத்து வழிபடுதல் வேண்டும்.இல்லங்களில் சூரிய உதயத்தில் பொங்கல் பொங்கிப் படைத்து உண்பது வழக்கம். இதேநேரம் பாடசாலைகள், வியாபார ஸ்தலங்கள் போன்ற இடங்களிலும் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகள் இடம் பெறுவதுண்டு. வழிபாடுகள் முடிவடைந்ததும் உற்றார் உறவினர் நண்பர்கள் வீடுகளுக்குச் சென்று புதுவருட பலகாரங்கள் உண்டு மகிழ்வர்.புதுவருடத்தை மகிழ்ச்சியோடு வரவேற்கும் பொழுது பழைய கடன்கள் ஏதும் இருந்தால் அவற்றைத் தீர்த்துக் கொள்வர்.நல்ல சுபவேளையில் கைராசியுள்ளவர்களிடம் ஏனையவர்கள் கைவிஷேடம் பெற்றுக் கொள்வது ஒரு நல்ல பண்பாகும்.மேலும் சுபவேளையில் வியாபார ஸ்தலங்களில் பிள்ளையார் சுழிபோட்டு புதுக்கணக்கைத் தொடங்குவார்கள்.இதேநேரம் வங்கிகளிலும் புதுக்கணக்கை ஆரம்பிக்கும் போது பரிசுகளையும் வழங்குவார்கள்.பிள்ளைகள் சுபவேளை பார்த்து பாடத்தைப் படிக்கத் தொடங்குவார்கள்.

மங்களகரமான தமிழ் புத்தாண்டு தினத்தில் மனதில் மகிழ்ச்சி ஏற்படும் வண்ணம் நடந்து கொள்வதால் இந்த வருடம் முழுநாளும் மனங்கள் மகிழ்வு பெறும் என்பது எம்மவரின் ஐதீகமாகும்.தமிழ் புத்தாண்டு தினத்தில் மேற்கண்டவற்றை செய்பவர்களுக்கு துரதிர்ஷ்டங்கள், தோஷங்கள் போன்றவை நீங்கி அதிர்ஷ்டம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலை இருக்கும். கொடிய நோய்கள் ஏதும் குடும்பத்தில் உள்ள எவரையும் பாதிக்காது. வறுமை நிலை, தொழில் வியாபார நஷ்டங்கள் ஏற்படாமல் காக்கும்.

நமது முன்னோர் இரு கணிப்பு முறைகள் மூலம் வருடத்தை வகுத்தனர்.ஒன்று சௌரமானம்.சௌரம் என்றால் சூரியன்.சூரியன் மேட ராசியிலிருந்து மீனராசி வரையுள்ள பன்னிரு இராசிகளிலும் சஞ்சரிக்கும் காலங்கள் சௌர மாதங்கள் எனப்பட்டன.சூரியன் மேட ராசிக்குள் பிரவேசிக்கும் சித்திரை முதலாம் நாள் தமிழ் வருடப் பிறப்பன்று தொடங்கி மீண்டும் சூரியன் மேட ராசியில் பிரவேசிக்கும் காலம் முழுவதும் ஒரு சௌர வருடம் ஆகும்.இந்த வருடப் பிறப்பை இந்துக்களும் பௌத்தர்களும் கொண்டாடி வருகின்றனர். மற்றையது சந்திரன் பூமியை வலம் வருவதை அடிப்படையாகக் கொண்டு வரும் மாதங்களும் வருடமும் சாந்திரமானம் எனப்படும்.ஒரு பூர்வ பக்கப் பிரதமை முதல் அடுத்து வரும் அமாவாசை வரையுள்ள 30திதிகள் கொண்ட காலப் பகுதி சாந்திர மாதம் ஆகும்.இவ்வாறு ஒரு வருடத்தில் 12அமாவாசைகள் வருகின்றன. சூரியன் மேட ராசியில் சஞ்சரித்து வடக்கே செல்லும் காலம் உத்தராயணம் எனப்படும்.இதை வசந்தகாலம் என அழைப்பர்.

மாதா, பிதா, குரு ஆகியவர்களை விழுந்து கும்பிட்டு ஆசிபெறுதல் மற்றொரு சிறந்த பண்பாகும்.சித்திரை மாதம் சிறுமாரி என மழை பெய்யத் தொடங்கும்.மலர்கள் பூத்துச் சொரியும்.பயிர்கள் செழிக்கும்.வசந்த ருதுவென சோழகக் காற்று வீசத் தொடங்கும்.வேப்பம்பூ சொரியும்.தேசிய விளையாட்டுகளில் போர்த் தேங்காய் அடித்தல் சிறுவர்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் ஒரு விளையாட்டாகும்.இன்றைய காலகட்டத்தில் இவ்விளையாட்டு அருகி விட்டது.தற்போது வழுக்குமரம் ஏறுதல், கிளித்தட்டு, தயிர்முட்டி அடித்தல், மாட்டுவண்டிச் சவாரி,மஞ்சுவிரட்டுதல், தலையனை அடித்தல, கயிறு இழுத்தல் போன்றவை தேசிய விளையாட்டுக்களாக கொண்டாடப்பட்டு வருகின்றன.

ஆண்டாண்டு காலமாக, மக்கள், தமிழ்ப் புத்தாண்டை பெரும் உற்சாகத்துடன் கொண்டாடி வருகிறார்கள். பாரம்பரியப் பழக்க வழக்கங்களைப் பின்பற்றியும், வழிபாடுகளை நடத்தியும், இந்த நாளை அனுசரிக்கும் அவர்கள், அதே நேரம், பல சுவைகளும் கலந்த விருந்து உண்டும், நண்பர்கள், உறவினர்களுடன் நேரத்தை இனிமையாகச் செலவிட்டும், இந்த நாளைக் கொண்டாடுகிறார்கள்.

இளவேனிற் காலமாகிய சித்திரையையும், புத்தாண்டையும் ஒரு சேர வரவேற்கும் விதமாக, மக்கள் அதிகாலையிலேயே எழுந்து நீராடுகிறார்கள். இந்த நாளில், மருந்து நீர் எனப்படும் விசேஷமான மூலிகை நீரில் குளிப்பது, ஒரு பாரம்பரிய வழக்கமாக உள்ளது. மஞ்சள், மிளகு, துளசி இலை, வில்வ இலை போன்றவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் இந்தத் தண்ணிரில் நீராடுவது, உடல் நலத்துக்கு நன்மை விளைவிக்கும். அத்துடன் கூட, அந்த வருடம் யாருக்காவது, ஏதாவது நட்சத்திர தோஷம் ஏற்பட்டால், இந்தக் குளியல் அந்த தோஷ விளைவுகளை நீக்கும் அல்லது குறைக்கும், என்பது நம்பிக்கை.

நீராடிய பிறகு, சிலர் புத்தாடை அணிகிறார்கள். ஒரு சிலர் சிவப்பு அல்லது சிவப்பும், வெள்ளையும் கலந்த உடை அணிகிறார்கள். தூய ஆடை அணிந்த பிறகு, கடவுளை வணங்கி இறை வழிபாடு செய்கிறார்கள். பின்னர் வீட்டில் உள்ள பெரியவர்களை வணங்கி அவர்களது ஆசிகளைப் பெறுகிறார்கள். பின்னர் நண்பர்களையும், உறவினர்களையும் சந்தித்தோ, தொடர்பு கொண்டோ, அவர்களுடன் சித்திரை வருடப் பிறப்பு, தமிழ்ப் புத்தாண்டு, தமிழ் நியூ இயர் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொள்கிறார்கள்.

 
சுகம், துக்கம், சிரிப்பு, சோகம் என பலதரப்பட்ட அனுபவங்களும் நிறைந்தது தான் வாழ்க்கை. இதைக் குறிக்கும் வகையில், அனைத்து வகை சுவைகளும் இந்தப் புத்தாண்டு தினத்தின் சிறப்பு விருந்தில் இடம் பெறுகின்றன. இந்தக் கால கட்டத்தில் எங்கும் நிறைந்திருக்கும் மாந்தளிருடன் கூட, கசப்பு சுவையுடைய வேப்பம் பூவையும், இனிமையான வெல்லத்தையும் கலந்து, செய்யப்படும் விசேஷமான பச்சடி உணவு, இவ்வாறு புளிப்பு, துவர்ப்பு, கசப்பு, இனிப்பு எனப் பல சுவைகளையும், இந்தப் புத்தாண்டு நாளில் தருகிறது. இத்துடன் கூட பல வீடுகளில், வெப்பத்தைத் தணிக்கும் நீர்மோர், இனிப்பைக் கூட்டும் பானகம் ஆகியவையும் அருந்தப்படுகின்றன. பின்னர் பருப்பு, வடை பாயசம் இவற்றுடன் கூடிய பெரிய விருந்து ஒன்றை, இந்த நாளில், மக்கள், குடும்பத்தினர் மற்றும் உற்றார் உறவினருட உண்டு மகிழ்கிறார்கள்.  இவ்வாறு நம்பிக்கையுடனும், மகிழ்ச்சியுடனும் புதிய வருடத்தை மக்கள் துவக்குகிறார்கள்.

மரபுகள்

புத்தாண்டுக்கு முந்தைய நாட்களை வீடு வாசலை சுத்தம் செய்வதிலும், அலங்கரிப்பதிலும் தமிழர் செலவழிப்பர். மா, பலா, வாழை ஆகிய முக்கனிகள், வெற்றிலை, பாக்கு, நகைகள், நெல் முதலான மங்கலப்பொருட்கள் வைத்த தட்டை வழிபாட்டறையில் வைத்து, அதை புத்தாண்டு அதிகாலையில் காண்பது புனிதமாகக் கருதப்படுகின்றது. புத்தாண்டன்று அதிகாலையில் நீராடி கோலமிட்டு, புத்தாடை அணிந்து, கோயிலுக்குச் சென்று வழிபடுவர். மாலை வேளையில் உறவினர் வீடுகளுக்குச் செல்வதும், பலகாரங்களை பகிர்ந்துண்பதும் நிகழும்.வாழ்க்கை என்றாலே கசப்பும் இனிப்பும் கலந்தது தான். இப்புத்தாண்டிலும் கசப்பும் இனிப்பும் இருக்கும் என்பதன் அடையாளமாக வேப்பம்பூப்பச்சடி, மாங்காய்ப்பச்சடி என்பவற்றை உண்பது குறிப்பிடத்தக்க மரபாகும்.

சோதிடம்:

சூழலியலும், ஒருவரின் பிறப்பும் வாழ்க்கையும், வானிலுள்ள கோள்கள், நட்சத்திரங்கள் மூலம் கட்டுப்படுத்தப்படுகின்றன என்ற கருதுகோளுடன், அதற்கான சூத்திரங்களை உருவாக்கி, அதன் பலன்களை முன்மொழியும் துறையே சோதிடம்.

தமிழரின் காலக்கணிப்பு

நாம் தமிழரின் வானியல் பற்றிய சான்றுகளைச் சேகரிக்கும் அதே சமகாலத்திலேயே, வட இந்தியாவிலும், கிரேக்கம், சீனம் போன்ற பகுதிகளிலும் வானியல், காலக்கணிப்பு பற்றிய குறிப்புகள் கிடைக்க ஆரம்பிக்கின்றன.

இந்திய வானியல்:

இந்தியாவிலேயே மிகப்பழைய இலக்கியங்களான வேதங்களில் கிரகங்கள், கிரகணங்கள் பற்றிய குறிப்புகள் வருகின்றன.  பொ.மு 12 – 6ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்டதாக வரையறுக்கப்படும் “வேதாங்க ஜ்யோதிஷம்” இந்தியாவின் மிகப்பழைய வானியல் நூலாகும். எனினும் இந்திய வானியல், பொ.பி 5ஆம் நூற்றாண்டுக்குப் பிறகே மிகச்சிறப்பான வளர்ச்சியைக் காண்பித்திருக்கிறது. ஆரியபட்டரின் (பொ.பி 476 - 550) “ஆர்யபட்டீயம்”, வராகமிகிரரின் “சூரிய சித்தாந்தம்” (பொ.பி 6ஆம் நூற்.), பராசர ஓரைசாத்திரம், சாராவளி (பொ.பி 8ஆம் நூற்.) என்பன இக்காலத்தில் முகிழ்த்த முக்கியமான நூல்கள்.

தமிழ் வானியல்:

சங்க இலக்கியங்கள் (பொதுவாக பொ.மு 3 - பொ.பி 2ஆம் நூற்.) தமிழர் மத்தியில் மிகச்சிறப்பான வானியல் அறிவு விளங்கியதற்கான ஆதாரங்களாக விளங்குகின்றன.  நட்சத்திரங்களும் கோள்களும் தனித்தனியே நாண்மீன், கோள்மீன் என்று பிரித்துச் சொல்லப்படுவதால், அவற்றுக்கிடையிலான வேறுபாடுகளை சங்க காலத்தமிழர் தெளிவாகவே அறிந்திருந்தனர் எனலாம்.

ஆதிமனிதன் காலம் கணிப்பதற்கு சூரியன், சந்திரன் ஆகிய இரண்டையும் பயன்படுத்தினான். அவற்றின் நகர்வைக் கணிப்பதன் அடிப்படையில் முறையே கதிர் நாட்காட்டி (Solar Calendar), மதி நாட்காட்டி (Lunar Calendar) என்பன பயன்பாட்டில் இருந்தன. சூரியன் - சந்திரனின் இயக்கத்தோடு, சிலவேளைகளில் நட்சத்திரங்களின் சார்புநிலையும் கருத்திலெடுக்கப்பட்டது.

ஒரு இராசியை சூரியன் கடக்க எடுக்கும் காலத்தையே ஒரு மாதமாகக் கணிக்கிறோம். ஆனால் நாளொன்றைக் கணிப்பதற்கு சந்திரனின் இயக்கத்தையே கருத்தில் கொள்கிறோம். சமயரீதியில் புனிதமான நாட்களெல்லாம் சந்திரனின் அமைவை வைத்தே (விஜய”தசமி”, விநாயக “சதுர்த்தி”, சித்திரா”பௌர்ணமி”) கணிக்கப்படுவதை நாம் காணலாம். பிறப்பைக் கணிக்கப் பயன்படும் நட்சத்திரங்கள் (நீங்கள் ஒவ்வொருவரும் இந்த இராசி, இந்த நட்சத்திரம், என்று சொல்லியிருப்பார்களே, அதுதான்!முன்னோர் வழிபாட்டில் பயன்படும் “திதி”கள் முதலானவையும் மதிவழிக் கணிப்பீடுகளே.

சூரியன் ஒவ்வொரு இராசியிலும் புகும் நாள் அந்தந்த மாதங்களுக்கு உரிய மாதப் பிறப்பு எனப்படும். சூரியன் மேட இராசியுட் புகும்போது பிறக்கும் சித்திரை மாதமே தமிழ் முறைப்படி ஆண்டின் முதல் மாதம் என்பதால், இந் நிகழ்வே புத்தாண்டுப் பிறப்பும் ஆகும்.

அறுபது ஆண்டுகள்

இந்தியாவின் மிகப்பழைய வானியல் நூலான வேதாங்க சோதிடத்தில் அறுபது ஆண்டுகளின் பட்டியலைக் பிரபவ முதல் அட்சய வரை காணமுடிகின்றது. வடமொழி நூல்களில் அறுபது ஆண்டுகளும் அறுபது சம்வத்சரங்கள் என்று அழைக்கப்படுகின்றன

01.  பிரபவ   02.  விபவ    03.  சுக்ல     04.  பிரமோதூத
05.  பிரசோற்பத்தி    06.  ஆங்கீரச      07.  ஸ்ரீமுக
08.  பவ     09.  யுவ    10.  தாது       11.  ஈஸ்வர
12.  வெகுதானிய      13.  பிரமாதி       14.  விக்கிரம
15.  விஷு     16.  சித்திரபானு   17. சுபானு 18.  தாரண
19.  பார்த்திப  20. விய  21. சர்வசித்து 22.  சர்வதாரி
23.  விரோதி  24. விக்ருதி 25.  கர   26.  நந்தன
27.  விஜய  28.  ஜய  29.  மன்மத   30.  துன்முகி
31.  ஹேவிளம்பி  32.  விளம்பி  33.  விகாரி
34.  சார்வரி  35. பிலவ  36. சுபகிருது 37. சோபகிருது
38.  குரோதி  39.  விசுவாசுவ 40. பரபாவ                       
 41.  பிலவங்க  42. கீலக 43.சௌமிய 44.  சாதாரண
45.  விரோதகிருது 46.  பரிதாபி 47.  பிரமாதீச
48.  ஆனந்த 49.  ராட்சச 50.  நள 51.  பிங்கள
52.  காளயுக்தி 53.  சித்தார்த்தி 54.  ரௌத்திரி
55.  துன்மதி 56.  துந்துபி 57.  ருத்ரோத்காரி
58.  ரக்தாட்சி 59.  குரோதன  60.  அட்சய

மாதங்கள்

1     சித்திரை 
2     வைகாசி 
3     ஆனி 
4     ஆடி 
5     ஆவணி 
6     புரட்டாசி 
7     ஐப்பசி 
8     கார்த்திகை 
9     மார்கழி
10    தை 
11    மாசி 
12    பங்குனி 

தமிழர் காலக்கணிப்பு முறையின்படி ஒரு ஆண்டுக்குரிய பன்னிரெண்டு மாதங்களில் சித்திரை முதலாவது மாதமாகும். தமிழ் மாதங்கள் பூமிக்குச் சார்பாகத் தோற்றுகின்ற சூரியனுடைய இயக்கத்தை அடிப்படையாக கொண்ட சூரியமானத்தின் படி இம் மாதங்கள் கணிக்கப்படுகின்றன. இதனால் இவை சூரிய மாதங்கள் எனப்படுகின்றன.

இராசிச் சக்கரத்தில் மேட இராசிக்குள் சூரியன் நுழைவதிலிருந்து அந்த இராசியை விட்டு வெளியேறும் வரையில் உள்ள காலம் சித்திரை மாதமாகும். சித்திரை மாதம் 31 நாட்களைக் கொண்டது. ஆங்கில நாட்காட்டியில் ஏப்ரல் மாதம் 14 ஆம் நாள் முதல் மே மாதம் 14 ஆம் நாள் வரை தமிழ் சித்திரை மாதமாகும்.

சூரியன் மேட இராசிக்குள் நுழைவது சித்திரை மாதப் பிறப்பு ஆகும். அத்துடன் சித்திரை முதல் மாதம் என்பதால் இதுவே புதிய ஆண்டின் தொடக்கமும் ஆகும். இதனால் சித்திரை மாதம் முதல் நாளைத் தமிழர் புத்தாண்டாகக் கொண்டாடுவர்.

பஞ்சாங்கம்

பஞ்சாங்கம் (Panchangam) அல்லது ஐந்திறன் என்பது இந்துக் காலக் கணிப்பு முறையின் படி, கணிக்கப்படுகின்ற கால அட்டவணை எனலாம். இக் காலத்தில் பஞ்சாங்கம் சமய சம்பந்தமான விடயங்களுக்கும், சோதிடக் கணிப்புகளுக்குமே பெரிதும் பயன்படுகின்றது.

பஞ்சாங்கம் என்பது கிரக சுழற்சிகளைப் பற்றிய வானியலைக் காட்டும் குறிப்புகள் அடங்கிய புத்தகம் என்றும் வானியல் நூல் என்றும் குறிப்பிடப்படுகின்றது. நவீன காலக் கருவிகள் இல்லாத பண்டைய காலத்திலேயே மகரிஷிகள் தங்கள் ஞானத்தால் சூர்ய, சந்திர கிரகணங்கள் உட்பட்ட பல தகவல்களைத் துல்லியமாக கணித்து அளித்ததே பஞ்சாங்கம் என்றும் குறிப்பிடப்படுகின்றது.

பஞ்சாங்கத்தின் முக்கிய உறுப்புகள்

1  வாரம்
2  திதி
3  கரணம்
4  நட்சத்திரம்
5  யோகம்

என்பனவாகும்.

வாரம் என்பது ஏழு கிழமைகள் ஆகும். இவை:

1. ஞாயிற்றுக்கிழமை
2. திங்கட்கிழமை
3. செவ்வாய்க்கிழமை
4. புதன்கிழமை
5. வியாழக்கிழமை
6. வெள்ளிக்கிழமை
7. சனிக்கிழமை

என்னும் ஏழுமாகும்.

திதி என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம். அமாவாசை அன்று சூரியனும் சந்திரனும் சேர்ந்திருப்பார்கள். அதன் பின் சந்திரன் சூரியனிடம் இருந்து விலகி செல்வார். திதி எனப்படுவது பஞ்சாங்கத்தின் ஒரு முக்கிய பகுதியாகும்.

இந்துக்களின் தமிழ் நாட்காட்டியின்படி ஒவ்வொரு மாதமும் 30 திதிகள் கடைபிடிக்கப்படுகின்றன. இதில் இரண்டு பட்சங்கள் உள்ளன. அவை கிருஷ்ண பட்சம் அல்லது தேய்பிறை மற்றும் சுக்கில பட்சம் அல்லது வளர்பிறை ஆகும்.

சந்திரனின் பூமியைச் சுற்றியுள்ள சுற்றுப் பாதையின் 30 சம கோணப் பிரிவுகள் ஒவ்வொன்றையும் சந்திரன் கடக்க எடுக்கும் காலத்தைக் குறிக்கும். அமாவாசையில் இருந்து வரையான வளர்பிறைக் காலத்தில் 15 திதிகளும், பூரணை தொடக்கம் மீண்டும் அமாவாசை வரும் வரையான காலத்தில் இன்னும் 15 திதிகளும் வருகின்றன. முதற் தொகுதி சுக்கில பட்சத் திதிகள் எனவும், இரண்டாம் தொகுதி கிருஷ்ண பட்சத் திதிகள் எனவும் அழைக்கப்படும். அதன் 30 பெயர்களும் வருமாறு:

1. அமாவாசை          16. பூரணை
2. பிரதமை                 17. பிரதமை
3. துதியை                   18. துதியை
4. திருதியை               19. திருதியை
5. சதுர்த்தி                   20. சதுர்த்தி
6. பஞ்சமி                     21. பஞ்சமி
7. சஷ்டி                        22. சஷ்டி
8. சப்தமி                      23. சப்தமி
9. அட்டமி                      24. அட்டமி
10. நவமி                      25. நவமி
11. தசமி                       26. தசமி
12. ஏகாதசி                  27. ஏகாதசி
13. துவாதசி                 28. துவாதசி
14. திரயோதசி            29. திரயோதசி
15. சதுர்த்தசி               30. சதுர்த்தசி

கரணம்

ஒரு திதியின் முற்காலம், பிற்காலம் ஆகியவை கரணம் எனப்படுகின்றது. கரணம் என்பது திதியின் அரைப்பங்கு ஆகும். திதியை இரண்டாகப் பிரித்து முற்காலத்துக்கு ஒரு கரணமும், பிற்காலத்துக்கு ஒரு கரணமும் இருக்கும். அதாவது 30 திதிகளுக்கும் மொத்தமாக 60 கரணங்கள் உண்டு. ஏழு கரணங்கள் சுழல் முறையிலும், நான்கு கரணங்கள் சிறப்பான முறையிலும், மொத்தம் 11 கரணங்களின் பெயர்களை ஏற்படுத்தி, இவற்றை வைத்து ஓர் ஒழுங்கு முறையில் மொத்தமுள்ள 60 கரணங்களுக்கும் பெயர் கொடுத்துள்ளனர்.

11 கரணப் பெயர்களும் வருமாறு:
1. பவம்
2. பாலவம்
3. கௌலவம்
4. சைதுளை
5. கரசை
6. வனசை
7. பத்திரை
8. சகுனி
9. சதுஷ்பாதம்
10. நாகவம்
11. கிமிஸ்துக்கினம்

நட்சத்திரம்

நட்சத்திரங்கள் என்பது ராசிச் சக்கரத்தை ஒவ்வொன்றும் 13.33 பாகை அளவு கொண்ட 27 பகுதிகளைக் குறிக்கும். சந்திரன் பூமியைச் சுற்றிவரும் போது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் எந்தப் பிரிவில் இருக்கிறதோ அந்தப் பிரிவுக்குரிய நட்சத்திரம் அந்த நேரத்தில் நடப்பதாகச் சொல்லப்படுகிறது. 27 நட்சத்திரங்களும் பின்வருமாறு:

1. அச்சுவினி 10. மகம் 19. மூலம்
2. பரணி 11. பூரம் 20. பூராடம்
3. கார்த்திகை 12. உத்தரம் 21. உத்திராடம்
4. ரோகிணி 13. அத்தம் 22. திருவோணம்
5. மிருகசீரிடம் 14. சித்திரை 23. அவிட்டம்
6. திருவாதிரை 15. சுவாதி 24. சதயம்
7. புனர்பூசம் 16. விசாகம் 25. பூரட்டாதி
8. பூசம் 17. அனுஷம் 26. உத்திரட்டாதி
9. ஆயிலியம் 18. கேட்டை 27. ரேவதி

யோகம்

சந்திரன் ஒவ்வொரு நட்சத்திரத்தையும் கடக்க எடுக்கும் காலப்பகுதி யோகம் எனப்படும். எனவே 27 நட்சத்திரங்களையும் கடக்கும் காலப்பதிகளுக்கு 27 பெயர்களைக் கொடுத்துள்ளனர். இவற்றை யோகம் என்பர்.

யோகம் என்பது, சூரியன், சந்திரன் என்பவற்றின் இருப்பிடங்களின் கூட்டுத்தொகை 13° 20' அளவால் அதிகரிப்பதற்கான காலப் பகுதியைக் குறிக்கும். எனவே ஒரு முழுச் சுற்றான 360° யில் 13° 20' அளவு கொண்ட 27 யோகங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் தனித்தனியான பெயர்களையும் பெற்றுள்ளன. இந்த யோகத்தைத் "தின யோகம்", "நித்திய யோகம்", "சூரிய சித்தாந்த யோகம்" போன்ற பெயர்களாலும் அழைப்பது உண்டு. ஒருவர் பிறக்கும் நேரத்தில் உள்ள யோகம் அவரது பிறந்த யோகம் ஆகும். ஒருவருடைய பிறந்த யோகம் அவருடைய உள்ளார்ந்த பண்புகளை அறிவதற்கு உதவும் என்கிறது இந்திய சோதிடம்.

1. விஷ்கம்பம்,2. பிரீதி, 3. ஆயுஷ்மான், 4. சௌபாக்கியம், 5. சோபனம், 6. அதிகண்டம், 7. சுகர்மம்,  8. திருதி, 9. சூலம், 10. கண்டம்,11. விருதி,12. துருவம்,  13. வியாகதம், 14. அரிசணம்,
15. வச்சிரம், 16. சித்தி, 17. வியாதிபாதம்,18. வரியான், 19. பரிகம்,  20. சிவம் 21. சித்தம்  22. சாத்தீயம்  23. சுபம்   24. சுப்பிரம்  25. பிராமியம்  26. ஐந்திரம்  27. வைதிருதி 

யோகத்தின் வரைவிலக்கணத்துக்கு அமைய, ஒரு குறித்த நேரத்தில் என்ன யோகம் என்பதைக் கணிப்பதற்குப் பின்வரும் சூத்திரம் பயன்படுகிறது:
(சூரியனின்_இருப்பிடம் + சந்திரனின்_இருப்பிடம்) / 13° 20' இதில் கிடைக்கும் ஈவு, விஷ்கம்பத்தின் தொடக்கத்தில் இருந்து கடந்து போன யோகங்களின் எண்ணிக்கையைக் குறிக்கும். எனவே அடுத்த யோகமே குறித்த நேரத்தில் இருக்கும் யோகம் ஆகும். மீதம் அடுத்த யோகத்தில் கடந்த கோண அளவைக் குறிக்கும்.

நடைமுறையில், ஆண்டு தோறும் அச்சில் வெளிவருகின்ற பஞ்சாங்கங்கள் ஒவ்வொரு நாளும் எந்த நேரத்தில் ஒரு யோகம் தொடங்கி எந்த நேரத்தில் முடிவடையும் என்பது போன்ற தகவல்களைத் தருகின்றன. இதனால், கணிப்பு எதுவும் இல்லாமலே ஒருவர் குறித்த நேரத்தில் எந்த யோகம் உள்ளது என்பதை இலகுவாக அறிந்துகொள்ள முடியும்.

இராசி

1. மேடம் (மேஷம்)
2. இடபம் (ரிஷபம்)
3. மிதுனம்
4. கர்க்கடகம் (கடகம்)
5. சிங்கம் (சிம்மம்)
6. கன்னி
7. துலாம்
8. விருச்சிகம்
9. தனு (தனுசு)
10. மகரம்
11. கும்பம்
12. மீனம்

கோள்கள்

1. சூரியன் (ஞாயிறு Sun)
2. சந்திரன் (திங்கள் Moon)
3. செவ்வாய் (Mars)
4. புதன் (அறிவன் Mercury)
5. குரு (வியாழன் Jupiter)
6. சுக்கிரன் (வெள்ளி Venus)
7. சனி (காரி Saturn)
8. இராகு (நிழற்கோள்)
9. கேது (நிழற்கோள்)

பஞ்சாங்கத்தில் இரு வகைகள் உள்ளன. 1. திருக்கணித பஞ்சாங்கம் 2. வாக்கிய பஞ்சாங்கம். வாக்கிய பஞ்சாங்கத்திற்கும் திருக்கணித பஞ்சாங்கத்திற்கும் அதிகபட்சமாக 17 நாழிகை வரை வேறுபாடு ஏற்படுவதுண்டு. அதாவது 6 மணி 48 நிமிசம் வரை இந்த வேறுபாடு ஏற்படும். அமாவாசை, பெளர்ணமி தினங்களில் இந்த வேறுபாடு மிகக்குறைவாக இருக்கும். அஷ்டமி, நவமி தினங்களில் இந்த வேறுபாடு அதிகமாக இருக்கும். தமிழக அரசு கோவில்களில் வாக்கிய பஞ்சாங்கமே பயன்படுத்தப்படுகிறது.

நாழிகை

நட்சத்திரம் / திதி  நாழிகை இருப்பு

நாழிகை என்பது பண்டைய கால நேர அளவாகும்.
தமிழர் இந்தக் கால அளவை முறையைப் பயன்படுத்தினர்.தற்பொழுது, பெரும்பாலும் சோதிடம், பஞ்சாங்கம் முதலியவற்றில் பயன்படுத்தும் 24 நிமிடங்கள் கொண்ட ஒரு கால அளவு. பகல் முப்பது நாழிகை; இரவு முப்பது நாழிகை. எனவே, ஒரு நாளில் (பகல் + இரவு சேர்ந்து) அறுபது நாழிகைகள் உள்ளன.

ஒரு நாழிகை என்பது 24 நிமையங்கள் கொண்ட கால அளவு. பகல் 30 நாழிகைகளையும், இரவு 30 நாழிகைகளையும் கொண்டது ஓரு நாள் எனப்பட்டது.

நாம் பஞ்சாங்கத்தில் ஒரு நட்சத்திரம் அல்லது திதி ஒரு யோகம் இத்தனை நாழிகை இன்று இருக்கும் என்று ஏதாவது எண்ணை குறிப்பிட்டு இருக்கும்   ஒரு நாழிகை என்பது எவ்வளவு நேரத்தை குறிக்கும்


24 நிமிடம் = ஒரு நாழிகை
60 நாழிகை = ஒரு நாள்
60 நிமிடம் = ஒரு மணி
24 மணி ஒரு நாள்

தமிழ் தேதி: சூரிய உதயம் முதல் மறுநாள் சூரிய உதயம் வரையும் உள்ள காலமாகும்.

ஆங்கிலத் தேதி: இரவு 12 மணி தொடக்கம் மறுநாள் இரவு 12 மணி வரையும் உள்ள 24 மணிகளைக் குறிக்கும்.

ஒரே மாதத்தில் இரண்டு பவுர்ணமி வந்தால் மலமாதம் என்றும், இரண்டு அமாவாசை வந்தால் விஷ மாதம் என்றும் சொல்வர். இந்த இரண்டிலுமே சுபநிகழ்ச்சி செய்வது கூடாது

வாக்கிய பஞ்சாங்கம்

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ரிசிகள் ஒன்று கூடி அருளி செய்த சுலோகங்களில் உள்ள கணித முறையை அப்படியே ஏற்றுக்கொண்டு அதன் அடிப்படையில் எழுதப்படும் பஞ்சாங்கமாகும். திருத்தப்படாத பஞ்சாங்கமாக வாக்கிய பஞ்சாங்கம் வெளிவருகிறது. வாக்கியம் என்பது கணிதத்தில் மாறுதல் செய்யாமல் பழமையை அப்படியே பிரதிபலிப்பதாகும். தமிழ் நாட்டில் வாக்கியப் பஞ்சாங்கம் அதிகமாக பின்பற்றப்படுகிறது.

தமிழ் நாட்டில பற்பல வாக்கியப் பஞ்சாங்கங்கள் வெளியிடப்படுகின்றன: ஆற்காடு ஸ்ரீ சீதாராமையர் சர்வ முகூர்த்த பஞ்சாங்கம், திருநெல்வேலி வாக்ய பஞ்சாங்கம், ராமநாதபுரம் வாக்கியப் பஞ்சாங்கம், மஞ்சள் நிற 28-ஆம் நம்பர் பாம்புப் பஞ்சாங்கம், ஸ்ரீ காஞ்சி ஸ்ரீ ஆச்சாரியார் மடத்து பஞ்சாங்கம், சிருங்கேரி மடம் பஞ்சாங்கம், ஸ்ரீரங்கம் வாக்கிய பஞ்சாங்கம், ஸ்ரீப்ரசன்ன வெங்கடேச பெருமாள் தேவஸ்தான வாக்கியப் பஞ்சாங்கம், திருக்கோயில் அனுஷ்டான பஞ்சாங்கம் என்பவை புகழ்பெற்ற வாக்கியப் பஞ்சாங்க புத்தகங்களாகும்.

பிற மாநிலங்களில் திருக்கணிதப் பஞ்சாங்கம் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது.

அனைவருக்கும் மங்களகரமான சார்வரி வருடம்  தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
------------------------------------

படித்தேன்: பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
===========================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

7 comments:

  1. வணக்கம் ஐயா இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. தமிழ் புத்தாண்டு வணக்கங்கள் ,ஐயா!

    ReplyDelete
  3. /////Blogger Shanmugasundaram said...
    வணக்கம் ஐயா இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்/////

    நல்லது. நன்றி சண்முகசுந்தரம்!!!!!

    ReplyDelete
  4. /////Blogger kmr.krishnan said...
    தமிழ் புத்தாண்டு வணக்கங்கள் ,ஐயா!//////

    நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்!!!!!

    ReplyDelete
  5. வணக்கம் அய்யா
    இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
    ந.ராஜு

    ReplyDelete
  6. /////Blogger RAJ said...
    வணக்கம் அய்யா
    இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
    ந.ராஜு/////

    நல்லது. நன்றி நண்பரே!!!!

    ReplyDelete
  7. ஐயா எனக்கு ஒரு சந்தேகம் ஆங்கில நாட்காட்டியில் leap year(ம) தமிழ் நாட்காட்டி ககான தொடர்பு


    இரண்டிலும் ஒருநாள் அதிகமாக (28-29 Feb) ஆவது ஒரே நாளில்!?

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com