25.3.20

சீட் பெல்ட்டின் முக்கியத்துவம்!!!!

சீட் பெல்ட்டின் முக்கியத்துவம்!!!!

மருத்துவர் இளங்கோவன் 30 ஆண்டுகள் கால நண்பர். தர்மபுரிக்கு முதன் முதலாக வந்த காலத்திலிருந்து, நன்மையிலும் தீமையிலும் பங்கேற்றவர். தே.மு.தி.கவின் மாநில அவைத்தலைவராக இருக்கிறார்.

ஒரு நாள் (26.11.2019) அதிகாலை ஒரு மணி அளவில், சென்னையை நோக்கி அவரும், அவருடைய நண்பர் மூளை, நரம்பியல் அறுவைச் சிகிச்சை நிபுணர் மருத்துவர். சங்கரும் இன்னோவா காரில் பயணம் செய்து கொண்டிருந்தனர்.

ஓட்டுனர் காரை ஓட்டிக் கொண்டிருக்க, முன் இருக்கையில் மருத்துவர் சங்கர் அமர்ந்திருந்தார். நடுவில் இருக்கும் இருக்கையில் மருத்துவர் இளங்கோவன் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார். 

அவர்கள் சென்று கொண்டிருந்த வாகனம் ஸ்ரீபெரும்புதூர் அருகில் இருக்கும் சுங்கச்சாவடி முன்பாக நிதானமான போது, பின்னால் வேகமாக வந்துக் கொண்டிருந்த லாரி ஒன்று காரின் பின்புறத்தில் இடித்தது. இடித்த வேகத்தில் படித்துக்கொண்டிருந்த இளங்கோவன் புரண்டு விழுந்தார். அவர் உடனடியாக எழுந்து, வண்டிக்கு ஏற்பட்டிருந்த பாதிப்புகளைப் பார்த்தார். லாரி ஓட்டுனரிடம் சண்டையிட்டது மட்டுமல்லாமல், இழப்பீடு குறித்துப் பேசி காவல் துறைக்கும் தகவல் தெரிவித்தார்.

மீண்டும் இன்னோவா வாகனத்திலேயே சென்னையை நோக்கிப் பயணத்தைத் தொடர்ந்தார்கள். வண்டி புறப்பட்டவுடன் இளங்கோவன் "தலை கொஞ்சம்  வலிக்கிறது. சிடி ஸ்கேன் செய்து பார்த்து விடலாமா?" என்று கேட்டார்.

மருத்துவர் சங்கர் 'சரி' என்றுச் சொல்லி சிறிதுத் தொலைவில் இருந்த சவிதா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். இளங்கோவன் காரிலிருந்து இறங்கி சிடி ஸ்கேன் அறைக்கு நடந்து  சென்றார்.

சிடி ஸ்கேனில் மண்டைக்குள், மூளையைச் சுற்றி சிறிது ரத்தக் கசிவு ஏற்பட்டு இருந்தது தெரிந்தது. உடனே மருத்துவர் சங்கர் சென்னையில் இருக்கும் அவருக்குத் தெரிந்த மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவரைத் தொடர்பு கொண்டார். அவர் உடனடியாக நோயாளியை மருத்துவமனைக்கு கொண்டுவரச் சொன்னார்.

அப்பொழுது இளங்கோவனுக்கு கொஞ்சம் வாந்தி வந்தது. லேசாகத் தலைச் சுற்றுவது போல இருந்தது. எனவே ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். வண்டி போகப் போக இளங்கோவனுக்கு மயக்கம் அதிகமானது. மருத்துவமனையை நெருங்கும்போது முழு நினைவையும் இழந்தார். சிம்ஸ் மருத்துவமனையின் அவசரப் பிரிவின் வாயிலிலேயே காத்திருந்த மூளை நரம்பியல் மருத்துவர் சூரியபிரபு  நோயாளியை உடனடியாக அறுவை அரங்கத்துக்கு மாற்றச் செய்தார்.

எந்தவிதத் தயாரிப்பும் இல்லாமல் நேரடியாக கொண்டுச் செல்லப்பட்ட நோயாளிக்கு, தலையில் இருக்கும் மயிரை அகற்றுவது கூட அறுவை அரங்கிலேயே செய்யப்பட்டு உடனடியாக அறுவைச் சிகிச்சைத் தொடங்கியது. மண்டை ஓட்டிற்குள் மூளையைச் சுற்றி இருந்த 300 மில்லி ரத்தம் அகற்றப்பட்டது. ரத்தக் கசிவு காரணமாக இருந்த ரத்தக்குழாய் கண்டறியப்பட்டு ரத்தப்போக்கு நிறுத்தப்பட்டது. மிகப் பெரிய ஆபத்திலிருந்து மருத்துவர் இளங்கோவன் தப்பினார்.

அவருடன் மூளை, நரம்பியல் அறுவைச் சிகிச்சை நிபுணரான மருத்துவர் சங்கர் இல்லாமலிருந்தால், சவிதா மருத்துவமனையிலிருந்து சிம்ஸ் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் ஏதேனும் போக்குவரத்துத் தடங்கல் ஏற்பட்டிருந்தால், நரம்பியல் அறுவைச் சிகிச்சை நிபுணர் சூரிய பிரபு அவ்வளவு விரைவாக மருத்துவமனைக்கு வராமலிருந்தால், அறுவை அரங்கம் வேறு ஒரு அறுவை சிகிச்சை காரணமாக உடனடியாகக் கிடைக்காமல் இருந்தால்..... இவற்றில் ஏதேனும் ஒன்று நடந்திருந்தாலும் விளைவு விபரீதமாக இருந்திருக்கும். சரியான நேரத்தில் ஆபத்து கண்டறியப்பட்டு, மிகச் சரியான நேரத்தில் உயிர் காக்கும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

நடந்த விபத்து மிகச்சிறிய விபத்து. யாருக்கும் பெரிய வெளிக்காயம் கிடையாது. விபத்துக்குப் பின்னர் வாகனம் உடனடியாக ஒட்டப்பட்டது. இந்தச் சிறிய விபத்து உயிருக்கு ஆபத்தை உண்டாக்கும் அளவுக்கான காயத்தை ஏற்படுத்தியதன் காரணம், ஏற்பட்ட காயம் தலைக்காயம் என்பது தான்.

சீட் பெல்ட் அணிவது உயிர் காக்கும் என்பதற்காகத்தான் சீட் பெல்ட் அணிவது கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது.  வளர்ந்த நாடுகளில், காரில் இருக்கும் அனைவரும் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்பது கட்டாயம். குழந்தையாக இருந்தால், குழந்தைக்கான சீட் பெல்ட் உள்ள இருக்கையில் இருக்க வைக்க வேண்டியது கட்டாயம். நம் நாட்டில் ஓட்டுனரும், ஓட்டுனருக்கு அருகில் இருப்பவரும் சீட் பெல்ட் அணிவது மட்டுமே கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது. இளங்கோவன் சீட் பெல்ட் அணிந்து அமர்ந்து இருந்தால் இந்த விபத்தினால் சிறு காயம் கூட ஏற்பட்டிருக்காது.

அவர் சீட் பெல்ட் அணியாமல் படுத்து இருந்ததுதான் ஆபத்தை ஏற்படுத்தியது.

பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில இளைஞர் சங்கச் செயலாளராக இருந்த அறிவுச்செல்வன் இதேபோல பின்னிருக்கையில் படுத்திருந்த காரணத்தினால்தான் சிறிய விபத்தில் தலைக்காயம் ஏற்பட்டு உயிரிழந்தார். தர்மபுரி முன்னாள் நகர மன்றத் தலைவர் ஆனந்தகுமார், பின் இருக்கையில் படுத்துக் கொண்டு பயணம் செய்த போது, இதேபோல பின்னால் வந்த வாகனம் மோதி, கழுத்து நரம்புகள் பாதிக்கப்பட்டு கை கால்கள் செயலிழந்து சில ஆண்டுகள் கழித்து உயிரிழந்தார்.

இந்தியச் சாலைகளில் பயணம் செய்வது உலகத்திலேயே மிக ஆபத்தானது. சாலை அமைப்புகள், குறியீடுகள் ஆகியவற்றில் மிகப்பெரிய தவறுகள் இருக்கின்றன. இது குறித்து ஏற்கனவே முகநூலில் எழுதி இருக்கிறேன்.
ஆனால் சாலைப் பயணமில்லாமல் இந்த நூற்றாண்டில் வாழவே முடியாது.

முடிந்தவரை சாலைப் பயணத்தைப் பாதுகாப்பானதாக மாற்ற, கவனத்துடனும் பொறுமையுடனும் செல்வது அவசியம். எந்தச் சூழ்நிலையிலும் இரவு நேரப் பயணத்தைத் தவிர்க்க வேண்டும். இரயில் பயணம், சாலைப் பயணத்தை ஒப்பிடும்போது பலமடங்கு பாதுகாப்பானது.

எல்லாவற்றையும்விட, வாகனத்தில் பயணம் செய்யும் எல்லோரும் கண்டிப்பாக சீட் பெல்ட் அணிந்திருக்க வேண்டும். படுத்துக்கொண்டு போவது எந்த விதத்திலும் பாதுகாப்பில்லாதது.

தலைக் காயங்கள் சில மணித்துளிகளிலேயே மரணம் தரக்கூடியவை. இரண்டு சக்கர வாகனங்கள் ஓட்டுபவர்கள் தலைக்கவசம் அணியாமல் ஓட்டுவது தற்கொலை முயற்சி என்றே கருதப்பட வேண்டும்.

https://www.youtube.com/watch?v=y3InF19dzlM
https://www.youtube.com/watch?v=s-ARAkG3oPE

ஆக்கம்:
மருத்துவர் இரா. செந்தில்
தருமபுரி நாடாளுமன்றத் தொகுதி மேனாள் உறுப்பினர்
27.11.2019, இரவு. 9.00 மணி
-------------------------------------------------------
படித்தேன்: பகிர்ந்தேன்!!!
அன்புடன்
வாத்தியார்
============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

1 comment:

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com